முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

லட்சியவாதம் எனும் நவீன பக்தி இயக்கம்

லட்சியத்தை தூயநிலையில் மட்டும் பார்ப்பவர்கள் தூய நிலையிலே அது நிலுவைக்கு வரும் என நம்புவார்கள். ஆனால் எந்த லட்சியமும் நடப்புக்கு வர பணம் வேண்டும். பணத்தை பெரும் தொழிலதிபர்கள் அரசியல் தலைமை வழியாகக் கட்டுப்படுத்துவதால் கடைசியில் உங்கள் லட்சியம் என்னவாக உருப்பெற வேண்டும் என அவர்களே தீர்மானிப்பார்கள்.


 ஊழல் ஒழிப்பு என்பது ஒரு தூய லட்சியம். மது ஒழிப்பு என்பதும் ஒரு தூய லட்சியம் தான். இந்த இரண்டையும் வெவ்வேறு வரலாற்றுச் சூழல்களில் அரசியல் கட்சிகள் பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றவோ எதிர்த்தரப்பை பலவீனப்படுத்தவோ செய்வார்கள். ஊழல் ஒழியவில்லை, பாஜக மட்டும் ஆட்சிக்கு வந்தது. பாஜக இருந்தாலும் காங்கிரஸ் வந்தாலும், உலகமே அழிந்தாலும் கவலைப்படாத ஊழல் எதிர்ப்பு லட்சியவாதிகளோ தமது தூய லட்சியம் ஒருநாள் நடப்புக்கு வரும் என நம்பிக்கொண்டே தொடர்ந்து யார் யாரையோ ஆதரிப்பார்கள். இப்போது அவர்கள் இந்த இரண்டையும் வைத்து திமுகவை தாக்குவார்கள். வருங்காலத்தில் வேறு சிலரை எதிர்ப்பார்கள். ஒருபோதும் தமது லட்சியம் நிறைவேறாது என்பதைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள். இவர்கள் தாமும் முட்டாளாகி மக்களையும் முட்டாளாக்குவார்கள். இது அடிப்படையில்என் குழந்தைக்கு ஜுரம், ஆண்டவா காப்பாற்றுஎன வேண்டிக் கொள்வதைப் போன்றது. ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்ல மாட்டார்கள். ஏனென்றால் இது இல்லாத ஆண்டவனை நிரூபிப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் என நினைப்பார்கள்


அது மட்டுமல்ல, தம் அண்மையில், நட்பு வட்டத்தில், குடும்பத்தில், அலுவலகத்தில் நடக்கும் உடனடியாக கண்ணுக்குத் தெரியும் பலவித சீரழிவுகளை எதிர்க்க மாட்டார்கள். தன் எதிர்ப்பால் தனக்கும், தன்னுடன் இருப்பவர்களுக்கு என்ன பயன் என சிந்திக்க மாட்டார்கள். கண்ணுக்குப் புலப்பாடாததாக அது இருக்க வேண்டும், லட்சியம் என்பது தன்னைக் கடந்ததாக இருக்க வேண்டும் என்பதே இவர்களுடைய நிபந்தனை. பாரதியார் இதற்கு சிறந்த உதாரணம். அவர் எதிர்த்த விசயங்களுக்கு அடிநாதமாக இருந்ததே அவரது கடவுள் பக்தி தான், வைதீகம் தான், அத்வைதம் தான். ஆனால் அதை அவரால் பார்க்க முடியவில்லை, ஏனென்றால் அது அவருக்குள் ஆணி வேரைப் போல இருந்தது, அதைத் தூக்கிப் போடுவது அவரை அச்சுறுத்தியிருக்கும், தொலைவில் தெரிந்த பிரச்சினைகளே அவரது எதிரிகளாக, சௌகர்யமாக எதிர்ப்பிலக்குகளாக இருந்தன.

 இன்றும் பல நவீன பாரதிகள் இருக்கிறார்கள். ஒரு உதாரணம் சொல்லுகிறேன் - நான் முன்பு பல ஆயிரங்கள் செலவு செய்து மாதாமாதம் குடும்ப நலநீதிமன்றத்துக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தேன். என்னுடைய ஊனத்தைக் கருதி அந்த பயணங்களைக் குறைக்க வேண்டும் என்று என் வக்கீலிடம் கேட்டிருந்தேன். அவர் ஒரு தீவிர இடதுசாரி. ஒருநாள் நான் கடுமையான கால் வலியுடன் நீதிமன்றத்தில் இருந்தேன். அவர் அப்போது ஒரு ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கூட்டத்தில் பேசி விட்டு தாமதமாக வந்தார். நான் என்னுடைய சிக்கலை எடுத்துச் சொன்ன போதுஅதெல்லாம் முடியாதுங்க, என்னால ஜட்ஜுகிட்ட திட்டுவாங்க முடியாதுஎன்று பிடிவாதமாக மறுத்துவிட்டார். என்ன பிரச்சினை என்றால் நான் நேரடியாக வந்தால் மட்டுமே அவரால் கட்டணத்திற்கு மேலாக ஐயாயிரம் ரூபாய் வாங்க முடியும் என அவர் நம்பினார். அதனால் எவ்வளவு வலியைத் தாங்கி ஆயினும் நான் அங்கு வருவது அவருக்கு அவசியம். அவர் ஒரு உறுதியான லட்சியவாதி தான். அவரது அரசியலில் எந்த போலித்தனமும் இல்லை. ஆனால் அவரால் தனக்கு வெகு அண்மையில் உள்ள அநியாயத்தை கண்ணெடுத்துப் பார்க்க முடியாது. ஏனென்றால் அதில் அவரது லாபமும் அடங்கியிருந்தது. இதுவும் முக்கியம் - லட்சியவாதிகள் பொதுவாக தமது சம்பாத்தியத்தையும் அரசியல் கொள்கைகளையும் இருவேறாகப் பார்க்கிறார்கள். அதைதொழில்வாழ்க்கை அறம்என நியாயப்படுத்தவும் செய்வார்கள்.


மற்றொரு வக்கீல் உதாரணம் தருகிறேன் - எனக்கு இதற்கு முன்பு மற்றொரு வக்கீல் இருந்தார். அவர் மேடை தோறும் நீதி, நியாயம் என முழங்குபவர் (எனக்கென்றே இப்படியான ஆட்களாக மாட்டுகிறார்கள்.). ஆனால் நான் எதிர்க்கட்சியுடன் பேச்சுவார்த்தைக்காக முயன்ற போது அவர் எனக்காக எதிர்க்கட்சி வக்கீலிடம் பேசுவதாக சொல்லி காலத்தை நீட்டித்தார். எந்த முன்னேற்றமும் இல்லை என நான் வருந்திய போதுஅவர்களுக்கு வழக்கை முடிக்க விருப்பமில்லை சார், நாம கோர்ட்டுல பார்த்துக்கலாம்என்றார். நானும் அதை நம்பிவிட்டேன். பின்னர் எதேச்சையாக எதிர்க்கட்சி வக்கீலிடம் நான் போய் விசாரித்த போதுஉங்க வக்கீல் எங்கிட்ட எதையும் சொல்லலையேஎன்று போட்டுடைத்தார். நான் அதன் பிறகு என் வக்கீல் வழியாக அணுகுவதை நிறுத்தி நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தினேன். என் வக்கீலுக்கு என்ன பிரச்சினை என்றால் பேச்சுவார்த்தை நடந்தால் வழக்கு சீக்கிரம் முடிந்து அவருடைய கட்டணம் குறையுமே என்பது. அவருக்கு நான் படும் பாடு பொருட்டல்ல. அவர் இப்போது மேடை தோறும் நீதி, நியாயம், சமத்துவம் பற்றி பேசுவார். அவர் அவற்றில் நிஜமாகவே நம்புகிறார். ஆனால் தன் தொழில், சம்பாத்தியம், சுயநலம் என்று வந்தால் வேறொரு ஆள் ஆகிவிடுவார். நீங்கள் அடுத்த முறை கவனித்துப் பாருங்கள் - எந்த லட்சியவாதியும் தன் தொழிலுக்குள் செயல்படும் ஊழல்களை, அநியாயங்களை விமர்சிக்க மாட்டார்கள். தொழிலுக்கும் சம்பாத்தியத்துக்கும் வெளியே மட்டுமே நீதியுணர்வு செயல்படும். இதை நான் பாசாங்கு என்று சொல்ல மாட்டேன். இது லட்சியவாத நோய்மையின் நோய்க்குறிகளில் ஒன்று.

 

பாலின பேதத்தை ஒழிப்பது, அதற்காக குடும்பத்தை பலவீனப்படுத்துவது, கூட்டுக்குடும்பத்தை ஒழிப்பது போன்றவை தூய லட்சியங்கள். நம் ஊரில் என்ன நடந்தது? இந்த லட்சியத்துக்காக ஆண்களும் பெண்களும் குரல் கொடுத்தார்கள். அரசு என்ன செய்தது? இதனால் தொழிலதிபர்களுக்கும் பொருளாதாரத்துக்கும் என்ன லாபம் என யோசித்தது. சொத்து பிரிக்கப்பட்டு பெண்கள் குடும்பப் பொறுப்புகளில் இருந்து வெளியேற்றப்படுவது பொருளாதார வளர்ச்சிக்கும், முதலீடுகளும் உற்பத்தியும் பெருகுவதற்கு நல்லது எனக் கண்டுபிடித்தது. அதற்கு ஏற்ப குடும்ப நலச் சட்டங்கள் எனப்படும் விவாகரத்து ஆதரவு, பாலின பேத சட்டங்களைக் கொண்டு வந்தது. ஆண்கள் தெருவுக்கு வந்து தம் குழந்தைகளை இழந்தார்கள். பெற்றோர்கள் தனிமையில் வாடி வயோதிகர் இல்லத்துக்கு குடிபெயர்ந்தார்கள். குழந்தைகள் அப்பா இன்றி வளர்ந்தார்கள்.


 இந்திய சுதந்திரப் போராட்டமும் சுதந்திரம், தற்சார்பு, சுயமரியாதை, தன்னாட்சி, தேசியவாதம் எனும் தூய லட்சியங்களின் அடிப்படையில் நடத்தப்பட்டது தான். 1947இல்சுதந்திரம்கிடைத்த பிறகு இவற்றில் எந்த தூய லட்சியமும் நிறைவேறவில்லை (சுயாட்சி ஒரு கட்சியின் ஆட்சியின், அதன் வழியே சில சாதிகள், வர்க்கங்களின் அதிகாரப் பரவலாகவும் மாறியது). மாறாக பணமும் அதிகாரமும் படைத்தவர்கள் தமக்கு ஏற்றவாறு இந்த லட்சியங்களை பயன்படுத்தி நடப்புக்கு கொண்டு வந்தார்கள். ஒரு பெரும் மக்கள் திரள் ஏமாற்றப்பட்டார்கள். இப்படி நூறு நூறு உதாரணங்களை நம்மால் காண முடியும்.


இந்த லட்சியங்கள் கடவுளற்ற நவீன உலகில் கடவுளுக்கு பதிலீடாகத் தோன்றவை. எப்படி கடவுள் இல்லையோ அப்படியே லட்சியங்களும் அடிப்படையில் இல்லாதவை. எப்படி கடவுளை வைத்து கோடானுகோடி மக்களை அடிமையாக வைத்திருந்தார்களோ அப்படியே லட்சியங்களை வைத்து இன்றும் அடிமைப்படுத்துகிறார்கள்.


 இதை நன்கு புரிந்து கொண்டவர்கள் சமூகத்தின் அடிமட்டத்தில் உள்ளவர்களும் பெண்களுமே. அவர்கள் ஆட்சியாளர்களிடமும் அதிகார மையத்திடமும்எனக்கு லட்சியமொன்றும் வேண்டாம், உடனடியாக பயன்படத்தக்க எதையாவது கொடுஎனக் கேட்டுப் பெற்றுக் கொள்கிறார்கள். அவர்களிடம் இருந்து பிறரும் கற்றுக் கொள்ள வேண்டும். முதலாளித்துவ, பெரும்பணக்கார வர்க்கத்தினரும் பெரும்பாலும் தூய லட்சியத்தை நம்புவதில்லை. ஆனால் மத்திய, கீழ்மத்திய வர்க்க ஆண்களே அதிகமாக இந்தசமூக லட்சிய பக்தி இயக்கத்தில்பங்கெடுக்கிறார்கள். ஏன் லட்சியவாதம் ஒரு மத்திய, மேல்மத்திய வர்க்கஆண் நோயாகஇருக்கிறது என்பதற்கு என்னிடம் விடையில்லை.


அடுத்தவர்களுக்காக சிந்திக்கிறேன் பேர்வழி என்பதைப் போல பத்தாம்பசலித்தனம், கயவாளித்தனம் மற்றொன்றில்லை. அடுத்தவர்களுக்கு மூளை உண்டு, சொந்தமாக முடிவெடுக்கும் திறன் உண்டு என்பதை நாம் நம்ப வேண்டும். ஏனென்றால் அடுத்தவர்களுக்காக கற்பனை கண்ணீர் வடிக்கும் நொடியே நாம் அவர்களை அடிமையாக்கி விடுகிறோம். உண்மையான சுயநலம் இந்தகடப்புநிலைவாத சிந்தனைதான். (அதாவது ஒரு பெண்ணின் துன்பத்தைப் பற்றி பேசும் போதே அதை பெண்ணினத்தின் பிரச்சினையாகக் கருதி அதை மனித குலத்தின் பிரச்சினையாக்கி கடந்து சென்று அதன் வழியாக மானுட விடுதலையையும் முடிந்தால் அதன் வழியாக முக்தியையும் சிந்திப்பது.) 


இது கடவுளுக்காக ஒன்றை செய்வதைப் போன்றது. எப்படி கடவுள் இல்லையோ அப்படியே இங்கு அடுத்தவர்களும் இல்லை. நீங்களும் உங்கள் உடலும் மட்டுமே நிதர்சனம். நாம் நமக்காக நம்மை சார்ந்தவர்களுக்காக, உடனடி பௌதீக லாபம் என்ன என்று சிந்தித்து செயல்பட்டால் அது அடுத்தவர்களையும் காப்பாற்றும்.


வாடின பயிரைக் கண்ட போதெல்லாம் ஏன் வாட வேண்டும்? நீங்கள் பசியில் வாடினால் பதிலுக்கு அந்த பயிர் வாடுமா? நீங்கள் வாடுவதைக் கண்டு அந்த பயிரின் தாகம் தீருமா? பசித்தவர்களுக்கு உணவளிப்பதும் வெறும் உணவளிப்பதே. அதில் எந்த ஆன்மீகமும் இல்லை. நீங்கள் அதைச் செய்வதை விட அவரவர் தத்தமது தேவையை நிறைவேற்றுவதற்கான கட்டமைப்புகளை உருவாக்க பங்களிப்பதே சரி. அதையும் அவர்களுடைய பங்களிப்புடன் செய்வதே இன்னும் சரி.


அதனால் அடுத்த முறை செய்தியில் ஒரு துயரத்தைப் பார்த்ததும் உணர்ச்சி வசப்படாமல் இது ஏன் எவ்வாறு நடந்தது, இதனால் யாருக்கு பொருளியல் லாபம், யாருக்கு நட்டம், இது எனக்கோ என்னை சார்ந்தவருக்கோ நடக்குமா, நடந்தால் என்ன செய்ய வேண்டும் என சிந்தியுங்கள். போதும். துயரப்படுபவருக்காக ரத்தக் கண்ணீர் வடிக்காதீர்கள். அது அவர்களை அவமதிக்கும் செயல்


தூய லட்சியவாதம் என்பது ஒரு நவீன பக்தி மார்க்கம். (மேற்கில் அது நவீன கடவுள் மறுப்பு இறையியல்; அங்கு கிறிஸ்துவுக்கு பதில் சமூக லட்சியம்.) அது பல படிநிலைகளை உண்டு பண்ணி எதிர்மைகளை ஏற்படுத்தி உடனடி நிலையில் இருந்து நம் கவனத்தைச் சிதறடித்து இல்லாத பிரச்சினைகளுக்காக யோசிக்க வைத்து நம்மை அடிமைப்படுத்தும் என்பதை மறந்துவிட வேண்டாம். கையில் உள்ள ஒரு பறவையே கிளையில் அமர்ந்திருக்கும் இரு பறவைகளை மேல்.


நாம் ஒரு லட்சியத்தை ஆதரிக்கிறோம் எனில் அங்கு மூன்று கேள்விகளை எழுப்ப வேண்டும்:


  1. இதனால் எனக்கோ என்னை சார்ந்த குழுவுக்கோ என்ன நேரடி லாபம்? நேரடி லாபம் எனக் கூறுவது உங்களால் புலன்வழி நுகரத்தக்க லாபம் (கற்பனையான அரூபமான மாற்றம் அல்ல). 
  2. இந்த லட்சியத்தை நடப்பில் கொண்டு வருபவர்கள் யார்? அவர்களுக்கு இதனால் என்ன பொருளியல் லாபம்? அவர்கள் எனக்கு சாதகமாக செயல்படுவார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அதை எப்படி உறுதிசெய்வது?
  3. இந்த லட்சியத்துக்கு என்னுடைய சூழலில், என் வாழிடத்தில் என்ன இடமுள்ளது? ஊழலை ஒழிப்பது என் லட்சியம் எனில் ஊழல் எனக்கு அண்மையில் உள்ளவர்களிடம் எப்படி செயல்படுகிறது, அதன் பின்னுள்ள பணப் போக்குவரத்து என்ன, அதனால் யார் பொருள் சார்ந்து பலனடைகிறார்கள், யார் அதே போல பொருள் சார்ந்து பாதிக்கப்படுகிறார்கள், குறிப்பாக அதனால் நான் எப்படி பாதிக்கப்படுகிறேன், அதற்கு எதிராக நான் என்ன செய்வது எனக் கேளுங்கள்ஒடுக்குமுறையை எதிர்க்க வேண்டுமா அதற்கும் இதுதான் வழி - என்னுடைய வாழ்விடத்தில் யார் யாரை ஒடுக்குகிறார்கள்? அவர்கள் எனக்கு யார்? என்னை யார் ஒடுக்குகிறார்கள்? அதற்கான நோக்கமும் லாபமும் ஒடுக்குவோருக்கு என்ன உள்ளது?


இவ்வாறு சிந்திக்கும்படி மனிதர்களை ஊக்குவித்தால் போதும். அதுவே பொதுநலன்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...

ஒரு வாசகர் (நிஜ) கடிதம்

// எழுத்தாளர் ஆர் அபிலாஷ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மாதம் தோறும் வெளிவரும் உயிர்மை மாத இதழில் பல்வேறு கட்டுரைகள் மிகவும் சிறப்பானதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் தற்கால சூழ்நிலைக்கு ஏற்ற வகையிலும் இருப்பது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தொடர்க இருப்பினும் கூடுதலாக ஆர்.அபிலாஸஷ் அவர்கள் எழுதி வரும் கட்டுரைகள் என்னை பெரிதும் ஈர்க்கின்றன காரணம் எண்ணி ஏற்பட்டுள்ள குழப்பங்களை சந்தேகங்களையும் தெளிவடைவதற்கும் விரக்த்தியிலிருந்து தெளிவான சிந்தனைகளை வளர்ப்பதற்கும் கட்டுரையில் அவர் வழங்கும் ஆய்வு அடிப்படையிலான தகவல்களும் வார்த்தை பிரயோகங்களும் பெரும் உதவியாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா தொடரட்டும் தங்கள் பணி தொடர்ந்து பயணிப்போம் நன்றி! கோபாலசமுத்திரம் இ.கோபாலகிருஷ்ணன் திருநெல்வேலி// மின்னஞ்சலில் வந்தது. வாசகர்கள் இம்மாதிரி அடிக்கடி கடிதங்கள் எழுதி என்னை உற்சாகப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இல்லாவிட்டால் ஏதோ சிறையில் இருப்பதைப் போல உள்ளது.