முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எனக்கொரு கவலை இல்லே!



என்னுடைய சில நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மிக உயர்ந்த இடத்தில் வைத்திருப்பவர்களிடம் சில நேரங்களில் மரியாதை நிமித்தமாக காலில் விழுந்துவிடுவார்கள். இன்னும் சிலர் திட்டமிட்டே செய்வார்கள். இரண்டையும் நான் புரிந்து கொள்கிறேன். ஒன்று உளவியல் தேவை, இன்னொன்று பொருளியல் / அதிகாரத் தேவை. ஒரு பெட்டிக்கடைக்குப் போய் பத்து ரூபாய்க்கு வாழைப் பழம் வாங்கித் தின்பதைப் போன்றதுதான் இது. ஆகையால் ரஜினி யோகி காலில் விழுந்ததை வைத்து முற்போக்காளர்களும் ரசிகர்களும் கொந்தளித்து ஏன் நேரத்தை வீணடிக்கிறார்கள் எனப் புரியவில்லை. அவர் உடல், இன்னொருவர் கால், அவர் காலில் பணிகிறார். அதை ஏன் குறியீடாகப் பார்த்து அர்த்தப்படுத்தி மனம் நோக வேண்டும்? ஒருவேளை இந்த செயலை நீங்கள் பார்க்கும்விதமாக காணொளி, புகைப்படம் கிடைக்கவில்லை எனில் அது குறியீடாகாதா? இது பின்நவீன ஊடக கலாச்சாரத்தின் சாபக்கேடு.
யோகி அடுத்த பிரதமர் என அறியப்படுகிறவர். ரஜினிக்கும் அவரும், அவருக்கு ரஜினியும் தேவைப்படுகிறார்கள். கூடவே அதிகாரத்தின் முன் சட்டென பணிகிற சுபாவம். நாம் இதை மட்டமாக எடை போடுகிறோம். ரஜினியிடம் அதிகாரத்திடம் பணியும் இயல்பு ஆரம்பத்திலேயே உண்டு. அதை நான் ஒரு மோசமான குணமாக கருதவில்லை. அதுவே அவரது 'நல்லியல்பு'. (ரஜினி எதிர்கொண்ட அதிகாரம் என்பதை முதலீட்டியம், ஊடகம், வெகுஜன மனநிலை, கடைசியாக வலதுசாரி அரசியல் எனப் புரிந்து கொள்ளலாம்.) இந்த நல்லியல்பைக் கொண்டே அவர் அவர் இவ்வளவு பெரிய இடத்துக்கு வந்து சேர்ந்து அதை தக்க வைத்துக் கொள்ளவும் செய்கிறார்.
ரஜினியின் 'உறுதியற்ற அரசியல்', ரஜினியின் 'சந்தர்ப்பவாதம்' நம்மை ஏன் எரிச்சல்படுத்துகிறதென்றால் அது நமது பலவீனத்தை அம்பலப்படுத்துகிறது என்பதால் தான். நம்மில் சித்தாந்த உறுதியுடன், கொள்கையுடன் இருப்பவர்களாக நினைப்பவர்கள் பலரும் சின்னச்சின்ன மத்திய வர்க்க வளைகளுக்குள் ஏகப்பட்ட சமரசங்கள், அவமானங்கள் மத்தியில் வாழ்பவர்கள். அந்த தாழ்வுணர்வை இம்மாதிரியான அரசியல் சரித்தன்மை, கொள்கைக் குன்று மனப்பான்மையைக் கொண்டு சரிசெய்ய நினைக்கிறோம். இன்னொரு பக்கம் நமது நம்பிக்கைகளும் விழுமியங்களும் வாழ்க்கையில் 'எதிரொலிக்க' வேண்டும் என ஆசைப்பட்டுக் கொண்டே அது நிகழாத போது முகத்தைத் திருப்பிக் கொண்டு நடக்கிறோம். ஊடகங்களில் நமது ஏமாற்றத்துக்கான வடிகாலாக இது போன்ற செய்திகளை பயன்படுத்திக் கொள்கிறோம். அதற்குப் பதிலாக இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் கடந்து போவதோ அல்லது வெற்றி பெற்றவர்களின் இத்தகைய சாகசங்களின் நோக்கம், பலன் என்னவென கவனித்துப் புரிந்து கொள்வதோ, முடிந்தால் அதை வைத்து நம் வாழ்வில் முன்னேறுவதோ, நம் பிள்ளைகளுக்கு சொல்லித் தருவதுவோ தான் சாலச்சிறந்தது.
உலகின் தலைசிறந்த நலம் சுயநலம். உலகம் சுயநலவாதிகளையே நேசிக்கிறது. அவர்களையே சுற்றியே மக்கள் திரள்கிறார்கள். அது மட்டுமல்ல, நம்மைத் தாண்டி இந்த உலகில் நிகழும் எந்தவொரு பிரச்சினைக்கும் நம்மால் ஒன்றுமே செய்யவியலாது. நம்முடைய பிரச்சினைகளை கவனித்து சரிசெய்வது மட்டுமே நமது லட்சியமாக இருக்க வேண்டும். ஏனென்றால் அடுத்தவர்களைப் பற்றி நாம் கவலைப்படுவதால் அவர்களுக்கும் பிரயோஜனமில்லை. நம் பிரச்சினைகளை அடுத்தவர்கள் வந்து சரிசெய்யவும் போவதில்லை. சமூக ஊடகங்கள் வந்ததும் இந்த எளிய உண்மை, தெருவில் வடை சுட்டு விற்கும் பாட்டிக்குத் தெரிந்த இந்த எளிய உண்மை பெரிய படிப்பு படித்தவர்களுக்கு தெரியாமல் போகிறது.
இன்னொருவரின் சுயநலத்தை தர்மாவேசம் கொண்டு விமர்சிப்பதும் கிண்டலடிப்பதும் வெறும் சுயஏமாற்று மட்டுமே. நமது காலம் அப்படியான சுயஏமாற்றுதலின் பெரும் கேளிக்கையாக இருக்கிறது. ரஜினி யோகியின் காலில் விழுவதை விட இதுவே பெரிய அவலம்.
என் உலகில் ரஜினியோ, யோகியோ, காலில் விழும், காலைக் கழுவும், காலை சொறியும், காலால் மிதிக்கும், காலை மிதிக்கும், காலை முத்தமிடும் யாரும் இல்லை. எனக்கு யாரைப் பற்றியும் கவலையில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...