முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கருத்தை தூக்கிக் கடாசு

சமூகவலைதளங்களில் அரசியல் கதையாடல்களை முன்னெடுப்பது, அதன் வழி மக்கள் அதிகாரத்தைத் திரட்டுவது நல்லதே. ஆனால் சோற்றில் உப்பைப் போல ஓரளவுக்குத் தான் அது நம் வாழ்வில் இருக்க வேண்டும். சின்மயானந்தாவின் "பகவத் கீதையின்" பதவுரையில் முதல் அத்தியாயத்தின் முடிவில் ஒரு சுவாரஸ்யமான கருத்தைச் சொல்கிறார்: "இந்து தத்துவம் சிறப்பானது என்றாலும் அதை நேரடி வாழ்வில் பரிசீலித்துப் பார்க்கையில் பல்லிளித்து விடக் கூடும். அப்போது நாம் தத்தளித்து குழம்பிப் போய் நிற்போம், அர்ஜுனனைப் போல. அப்போது மீண்டும் தத்துவத்தில் அல்ல வாழ்வில், செயலிலே விடையைத் தேட வேண்டும். செயலே தத்துவம், தத்துவம் செயல் அல்ல." (அவரது கருத்தை என் மொழியில் தந்திருக்கிறேன்.) இது தத்துவத்தில் மிகவும் செல்லுபடியாகும் கருத்து. நானும் என் நண்பர்கள் சிலரும் முன்பு நாகார்ஜுனரை படிக்கையில் ஒவ்வொரு சுலோகத்துக்கும் நடப்புலகில் என்ன அர்த்தம் என பரிசீலிப்போம். எங்கள் கண்முன் யார் வந்தாலும், எது நடந்தாலும் உடனே நாகார்ஜுனரின் கருத்தை அதில் செலுத்தி ஆராய்வோம். அப்போது தான் அது எவ்வளவு சிக்கலானது, அதைப் புரிந்துகொள்வது எவ்வளவு சிரமமானது என விளங்கும்.

இதை நான் அரசியல் கதையாடலுக்கும் சொல்வேன். சமூக வலைதளங்கள் வந்த பின்னர் அரசியல் கதையாடல் நமது அன்றாட உரையாடல்களிலும் பரவலாகியுள்ளது. இதை நான் என் மாணவர்களை உற்று கவனிக்கையிலும் பிறரிடம் பேசும் போது உணர்கிறேன். ஆனால் இதை வெகுஜனத்தின் அரசியல் பங்களிப்பு என்று கூற முடியாது என்பதே சிக்கல். முன்னெப்போதையும் விட வாழ்வில் இருந்தும், அரசியலில் இருந்தும் அந்நீயப்பட்டு நிற்கிறோம். அதாவது நாம் பங்கேற்க பங்கேற்க அதிகமாக விலகிப் போகிறோம். இன்னொரு பக்கம் நாம் அணுக்கமாக இருப்பதாக ஒரு பிம்பமும் கட்டமைய அதில் மயங்குகிறோம். இது ஒரு ஆபத்தான போக்கு என நினைக்கிறேன்.
இதற்குத் தீர்வு சின்மயானந்தா சொல்வது தான் (அவரது பல கருத்துக்களை ஏற்காவிடினும் இதை ஏற்கிறேன்): நாம் பேசும் கருத்துக்களுக்கு / கதையாடல்களுக்கு நேரடி வாழ்வில் இடமுண்டா எனப் பார்க்க வேண்டும். இல்லாவிடில் அவற்றை கடாசி விட வேண்டும். அரசியல்மயப்படுவது என்பது நேரடி வாழ்வில் தானே தவிர பேச்சிலும் எழுத்திலும் அல்ல.
இன்னொரு விசயத்தையும் செய்யலாம். எளிய மக்களை / படிப்பு குறைவான மக்களை அணுகி கவனிக்கலாம், அவர்கள் எப்படி அரசியல்மயப்படுகிறார்கள், அதிகார வர்க்கத்திடம் பலன்களைப் பெற என்ன செய்கிறார்கள் என சிந்திக்கலாம். ஒரு உதாரணத்திற்கு சொல்கிறேன். நான் எழுதிய அரசியல் கருத்துக்கள், நூல்களுக்கு ஆயிரம் மடங்கில் ஒன்றைக் கூட என் அம்மா பேசியதோ எழுதியதோ இல்லை. நான் மோடியைப் பற்றி முன்னூறு பக்கத்து புத்தகம் எழுதியிருக்கிறேன். என் அம்மாவுக்கு அதில் என்ன இருக்கிறதென்றே தெரியாது. ஆனால் உள்ளூர் கவுன்சிலரிடம் அவரால் நேரடியாக உரையாடவும், அவரைப் பற்றி அறிந்து வைத்திருக்கவும், விமர்சிக்கவும், தேவையானதை கேட்டுப் பெற்றுக்கொள்ளவும் அவரால் முடியும். அவருக்கு அடுத்த தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும், தன் நண்பர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்று தெரியும். எனக்கு இந்த ஊரின் கவுன்சிலர் யாரென்றும் தெரியாது, தெரிந்தாலும் அவரிடம் உரையாடும் மொழியோ பரிச்சயமோ இல்லை. நான் இந்த நகரத்தில் இருந்து விரைவில் இன்னொரு மொழியறியா நகரத்துக்கு செல்கிறேன் எனில் அங்கும் இப்படி அந்நியப்பட்டே இருப்பேன். என்னைப் போன்ற எத்தனையோ மிதக்கும் மக்கள் தொகையை இப்போது பார்க்கிறேன்.
என் அம்மா பத்திரிகையும் நூல்களும் படிக்காதவர் என்றாலும் அரசியல்பட்டு இருக்கிறார். நாங்கள் அந்நியப்பட்டு இருக்கிறோம். பேஸ்புக்கில் அரசியல் பேசும் முன் பிரச்சினை எங்கிருக்கிறது என நாம் சிந்திக்க வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...