முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அஞ்சலிப் பாப்பா கிரிக்கெட்

எனக்கு ஆரம்பத்தில் தமிழ் கிரிக்கெட் வர்ணனை பிடிக்கவில்லை. ஆனால் போகப் போக அது கொண்டு வரும் கொண்டாட்ட மனநிலை, குதூகலம், விளையாட்டுத்தனம், கன்னாபின்னா கலாட்டா பிடித்தது. அதற்கு முக்கிய காரணம் ஆர். ஜெ பாலாஜி. அவருக்கு முன் தமிழ் வர்ணனை உண்மையிலேயே மரண மொக்கையாக இருந்தது. பெரிதாக அலசலோ விவாதமோ இராது, சரளமான தமிழின்றி கொச்சைத் தமிழில் அரட்டை அடிப்பார்கள். ஆர். ஜெ அதை கிரிக்கெட்டுக்கு சம்மந்தமில்லாத கலாய்ப்பு தமிழாக மாற்றினார். இதன் அனுகூலம் மிக அலுப்பான ஆட்டமோ, பரபரப்பான நெருக்கடியான ஆட்டமோ நம்மால் லகுவாக, மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது. இது தமிழ் வர்ணனையில் மட்டுமே உள்ளது. ஆங்கில வர்ணனை இன்றும் துளி கூட நகைச்சுவையே இல்லாத தீவிரமான உரையாடலாகவே சற்று உலர்வாக இருக்கிறது. அதுவா இதுவா எனில் நான் இதுவே போதும் என்பேன். ஏனென்றால் ஆங்கில வர்ணனையில் அரசியலும் நாடகமும் அதிகமாகி விட்டது. அவ்வளவு உணர்ச்சி மேலிடல், லட்சியவாதம் தேவையில்லையே, இது ஒரு பொழுதுபோக்கு தானே, நீங்கள் காசுக்குத் தானே பேசுகிறீர்கள் என்று தோன்றுகிறது.

 முன்பு ஆங்கில வர்ணனையில் ஒரு கல்வி புகட்டும் போக்கு இருந்தது (கவாஸ்கர், கிரெக் சாப்பல்). அதற்காகவே நான் கவனித்துக் கேட்டேன். இப்போது மிகச்சிலர் மட்டுமே பார்வையாளர்களைப் பயிற்றுவிக்கிறார்கள். சும்மா டிராமா தான். மேலும் இன்று முன்பை விட பார்வையாளர்களின் கிரிக்கெட் அறிவு அதிகமாகி விட்டது. முன்பு சைனாமேன் பந்துவீச்சு, ரிவர்ஸ் ஸ்விங், ஸ்லிப் பொஸிஷனிங், நுட்பமான ஷாட்களை வர்ணனையாளர்கள் சுட்டிக்காட்டத் தேவையிருந்தது. இன்று பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கிறது. அந்தளவுக்கு தகவல்கள் மலிந்திருக்கின்றன. ஓரளவுக்கு கிரிக்கெட்டை கவனிக்கிறவர்களுக்கு வர்ணனையின் வழிகாட்டுதல் தேவையில்லை. இன்னும் சொல்லப் போனால் கொஞ்சம் ஆய்வு செய்தால் ஒரு ஆட்டத்தின் ஸ்கோரை ஒவ்வொரு பத்து ஓவருக்கும் நம்மால் கணிக்க முடிகிறது. கொஞ்சம் கவனித்தால் அடுத்தடுத்து பந்துகள் எங்கு விழப் போகிறது, பெரிய ஷாட்கள் எப்போது வரப்போகின்றன என நிகழும் முன்பே கண்ணில் தெரிகிறது. வர்ணனை நம் சந்தோஷத்துக்கு மட்டுமே

பழைய ஆங்கில வர்ணனையாளர்களிடம் மொழி அழகு இருந்தது. ஷாட்களை வர்ணிப்பதைக் கேட்க அவ்வளவு சிலாக்கியமாக இருக்கும். அது ஒரு தனி புலனனுபவத்தைத் தரும். இன்றைய ஆங்கில வர்ணனையாளர்களுக்கு அந்த மொழி வளம் இல்லை.


மேலும் ஆங்கிலத்தில் உள்ள ஒரு எரிச்சல், பொறாமை, கசப்பு, கோபம், ஏகப்பட்ட அரசியல் அவரவர் பிராந்திய, தேசிய அடையாளம் சார்ந்து இருக்கும். தமிழில் அது இல்லை. தமிழ் வர்ணனை சற்று பத்தாம்பசலியாக, வேடிக்கையாக, களங்கமற்றதாக உள்ளது. எப்போதாவது ஶ்ரீகாந்த்ஓத்த கோலிஎன்று மிக இயல்பாக சொல்வார். அதுவும் எனக்குப் பிடித்திருக்கிறது. ஆங்கிலத்தில் யாரும்பக்கிங் கோலிஎன்று சொல்லப் போவதில்லை. சொன்னால் அது பெரிய சர்ச்சையாகி அவரை சிலுவையில் ஏற்றிவிடுவார்கள். தமிழில் அந்தளவுக்கு இல்லை. கிரிக்கெட்டை அவ்வளவு சீரியஸாக பார்க்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன். திரையில் சண்டையிடும் எம்.ஜி.ஆரை நோக்கிவாத்யாரே பிடிச்சுக்கோஎன கத்தியை வீசியவர்களின் மரபில் வந்தவர்கள் அல்லவா நாம்!


தமிழ் வர்ணனையில் பிராமண கொச்சையும் இன்று வெகுவாக குறைந்து வருகிறது. “காற்று வெளியிடைஎன பத்ரி நம்மை கொடுமைப்படுத்திக் கொண்டிருந்தார். அங்கிருந்து பச்சைப் புல்லு பத்திக்கிச்சுக்கு வந்திருக்கிறார். ஓரளவுக்கு தமிழ் சொற்களைப் பேச முயல்கிறார்கள். இது ஒரு முன்னேற்றம் தான். போகப் போக தமிழ் வர்ணனை இன்னும் மேம்படும் என நினைக்கிறேன்.


இன்னொன்று - கிட்டத்த ஒன்பது பத்து மணிநேரத்தில் ஆளாளுக்கு மாற்றி மாற்றி பேசினாலும் தலா 2-3 மணிநேரங்கள் இடைவிடாமல் பேச வேண்டியிருக்கும். தொடர்ச்சியாக ஒன்றை விவாதிக்க முடியாது. சுருக்கமாக மேலதிகமாக ஓரிரு நிமிடங்களில் சொல்லிவிட்டு விவரணை, கேள்வி, பதில், புள்ளி விபரங்கள் எனப் போய்க்கொண்டே இருக்க வேண்டும், சுவாரஸ்யத்தை தக்க வைக்க வேண்டும். போட்டி குறித்த விபரங்களில் அப்டேட்டாக இருக்க வேண்டும். காதில் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் சொல்வதைக் கேட்டு தடுமாறாமல் போகிற போக்கில் தமக்குத் தெரிந்ததைப் போல சொல்ல வேண்டும். வார்த்தை பிசிறக் கூடாது. இதெல்லாம் எளிதல்ல. கேட்க வெட்டி அரட்டை போலத் தோன்றும். ஆனால் நிறைய உழைப்பு இருக்கிறது. (நல்ல ஊதியமும் உண்டு தான்!)


எனக்கு ஒரே ஒரு புகார் தான் - ஆட்டத்தின் போக்கை, கள அமைப்பை, அணித்தலைவரின் வியூகத்தை, அடுத்து விழப்போகும் பந்தை தமிழ் வர்ணனையாளர்கள் கணித்துப் பேசுவது இல்லை. சில நேரங்களில் அரட்டையின் சுவாரஸ்யத்தில் பந்து எங்கே போகிறது என்றே கவனிப்பதில்லை. அது வர்ணனையாளர்களின் தவறு அல்ல. முரளி விஜய் கூர்மையானவர். ரமேஷும் தான். நானி கிட்டத்தட்ட துல்லியமாக பந்து வீச்சாளரின் வியூகத்தை, திசை, நீளத்தை பந்து விழும் முன்பே கணித்து சொல்வதைக் கண்டிருக்கிறேன். ஆனால் அத்தகைய புத்தி கூர்மைக்கு போதுமான இடமிருப்பதில்லை. அதற்கு நாம் ஆர்.ஜெ பாலாஜியைப் பழிக்க முடியாது. நிகழ்ச்சியின் இயக்குநர் கேளிக்கையையே அறிவினடத்தில் தேர்வு செய்கிறார். அதனாலே அவர் பாலாஜியை மொத்த ஷோவையும் வழிநடத்த விடுகிறார். மெல்ல மெல்ல மற்ற வர்ணனையாளர்கள் அவருடைய பாணியில் பேச ஆரம்பித்ததும் இதனாலே. இது தமிழ் வர்ணனையின் குணநலன் மட்டுமே. நான் மலையாள, இந்தி வர்ணனைகளை கவனிப்பதுண்டு. கொஞ்சம் தெலுங்கு வர்ணனையைக் கூடக் கேட்டு தக்கணூண்டு புரிந்துகொள்வேன். இங்குள்ள வேடிக்கை வினோத விக்கல் நக்கல் அங்கு இல்லை. அதுவும் ஶ்ரீகாந்தும் பாலாஜியும் வந்தால் நான் சிரித்துக்கொண்டே இருப்பேன். இந்தியாவே தோற்றாலும் அவர்கள் நம்மை அழ விட மாட்டார்கள். ஒரு களத்தடுப்பு சொதப்பலுக்கு கொந்தளிக்க விடமாட்டார்கள். மோசமான ஷாட் ஆடி அவுட் ஆனாலும் அதையும் அஞ்சலி பாப்பாவின் சேஷ்டைகளைப் போல் காட்டி புன்னகைக்க வைப்பார்கள். சிரிப்பை விட அருமருந்து வேறுண்டா?  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...