முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நான் ஏன்டா உன்னெ மதிக்கணும்?

நேற்றையநீயா நானாவிவாத நிகழ்ச்சியில் சில சிக்கல்கள் இருந்தன: வடசென்னையை (ரௌடியிசம், அடிதடி, வெகுளிகள், படிக்காதவர்கள்) சாராம்சப்படுத்துவது, ஒழுக்கவாத கண்கொண்டு மட்டுமே அவர்களைப் பார்ப்பது என. ஆனாலும் எனக்குள் சமூக மரியாதை குறித்த வேறு சில கேள்விகளை அது எழுப்பியது. பொதுவாக இன்று தோன்றியுள்ள நகரமயமாக்கப்பட்ட ஊர்கள், அதை நோக்கி நகரும் சிறுநகரங்களில் மக்களால் சமூக ஏற்பை, மரியாதையை முன்பு போல அடைய முடிகிறதா? சமூக மரியாதை என ஒன்று இருக்கிறதா? அது என்னவாக மாறியிருக்கிறது?


என்னிடம் புள்ளிவிபரம் ஏதும் இல்லை. நான் கண்ட அனுபவங்களைக் கொண்டே இம்முடிவுக்கு வருகிறேன். முன்பு (அதாவது சுமார் மூன்று பத்தாண்டுகளுக்கு முன் வரை) சமூகத்தின் இடைத்தட்டை (பூர்ஷ்வாஸி + உழைக்கும் வர்க்கம்) சேர்ந்தவர்களுக்கென்று ஒரு மரியாதையும் ஏற்பும் இருந்தது. நீங்கள் என்ன வேலை செய்தாலும் உங்களுடைய சாதியையும், ஊர் சமூகத்தையும் பொறுத்து ஒரு அங்கீகாரம், அமோதிப்பு கிடைத்தது. அதாவது சமூகத்தில் நேரடியாக சிறிதளவு மரியாதையையும் அதிகாரத்தையும் கோரும் அதிகாரிகள், ஆசிரியர்கள் துவங்கி சிறிய அளவிலான விவசாயிகள், கடைக்காரர்களுக்கு அதிகப்படியாகவும், ஒரு கல்யாணம் பண்ணிக்கொண்டு வேலையையும் வாங்கி விட்டாலே சமூக ஏற்பும் இருந்தது. மனிதன் அடிப்படையில் ஒரு சமூக விலங்கு. ஆதனால் அவனுக்கு இச்சமூகத்தில் தான் எங்கிருக்கிறோம், தான் ஏற்கப்படுகிறோமா இல்லையா எனும் உத்தரவாதம் முக்கியம். அந்த அங்கீகாரம் இருந்தாலே அவன் அமைதியாகிறான். இது ஓநாய்கள் போல உள்ளிட்ட கூட்டாக வாழும் எல்லா விலங்குகளிடமும் நாம் பார்க்கும் சமூக உளவியல். ஏற்கப்படாதவர்களுக்கு உபமனதில் ஒரு பதற்றமும் வருத்தமும் அதனாலான பயமும் (சமூக வெளியேற்றம் குறித்த பதைபதைப்பு) இருந்துகொண்டிருக்கும். இதை நீங்கள் வாழும் உடனடி சமூகத்தில் யாரும் உங்களை மதிக்காதிருந்தாலோ நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உள்ள குழுக்களில் உங்களை இணைத்துக்கொள்ளவில்லை என்றாலோ உடனடியாக உணரலாம். நீங்கள் வெளியே இல்லை, உள்ளே தான் இருக்கிறீர்கள் என உணர்த்துவதற்காகவே முகமன் சொல்வது, நலம் விசாரிப்பது போன்ற சமூக சடங்குகளை பின்பற்றுகிறுகிறோம். இந்த உளவியல் எப்படியானது என்றால் நாம் ஒருவரை அன்றாட நடைமுறைகள் வழிஏற்கும்போது நாமும் ஏற்கப்பட்டதாக மகிழ்ச்சியடைகிறோம். அதனாலோ ஹலோ, ஹவ் ஆர் யூக்களும், வணக்கம் அண்ணேக்களும் இனிப்பாக / அமைதிப்படுத்தக் கூடிய / குறைந்தபட்சம் நாம் சகிக்கக் கூடிய சொற்களாக இருக்கின்றன. இன்று நான் ஆரம்பத்தில் சொன்ன சமூக இடைத்தட்டில் தான் மரியாதையும் ஏற்பும் காணாமல் போயிருக்கிறது. அதாவது நாம் நேரடியாகப் புழங்கும் வெளிகளில் உள்ள சமூக அங்கீகாரம் நமக்கு சமூகக் கட்டமைப்பில் கிடைப்பதில்லை


குறிப்பாக நகரங்களில். அதுவும் சமூகங்கள் வர்க்க நிலையில் மேலே உயர உயர தத்தமது சமூகத்தால் வெளியேற்றப்பட்டவர்களாக மாறுகிறார்கள். எடுத்துக்காட்டுக்கு, நான் வாழும் பகுதிக்கு பக்கத்திலேயே தமிழர்கள் வாழும் ஒரு மத்திய வர்க்க சேரியைப் போன்ற பகுதி உள்ளது. ஏன்சேரிஎன சொல்கிறேன் என்றால் பெங்களூரு நகராட்சி அதை மட்டும் குப்பைக்கூளமாக வைத்திருக்கும். அருகில் உள்ள குப்பையை எரித்து உருமாற்றும் தொழிற்சாலைகளில் இருந்து கெட்ட நெடி அடித்தபடி இருக்கும். ஆனால் அங்கு தான் அதிகமாக கோயில் விழாக்கள், சடங்குகள் அடிக்கடி நடக்கும். அங்கு தான் மக்கள் தமக்கு எதிராக வருகிறவர்கள், பக்கத்து வீட்டாரிடம் மிக பிணைப்பாக, பிரியமாக இருப்பார்கள். பரஸ்பரம் மரியாதை அளிப்பார்கள். அப்படியே சில நூறு மீட்டர்கள் கடந்து வந்தால் உயர்மத்திய வர்க்கத்தை சேர்ந்த கன்னடர்களும் மலையாளிகளும் அதிகமாக வசிக்கும் பகுதியும், அதைக் கடந்தால் மத்திய, கீழ்மத்திய வர்க்க இஸ்லாமியர்கள் கூட்டாக வாழும் பகுதிகளும் வரும். இதில் அந்த கன்னட, மலையாள பகுதியில் தான் மக்கள் பரஸ்பரம்யார்ரா நீ, நான் ஏண்டா உன்னை மதிக்கணும்?” எனும் கணக்கில் நடந்துகொள்வார்கள். இஸ்லாமியர்கள் மிக நெருக்கமாக வாழும் பகுதிகளில் உள்ள சமூக இணக்கத்தை நான் மத்திய வர்க்க இஸ்லாமியர்கள் மற்ற சமூகத்தவருடன் கலந்து வாழ்கையில் காண்பதில்லை. அதாவது வன்மம், வெறுப்பு ஒன்றும் இருக்காது, ஆனால் பக்கத்தில் இருப்பவர் ஒரு மாயாவி, அவரது இருப்பை நான் ஏற்க வேண்டியதில்லை, அவர் மீது எனக்கு எந்த மரியாதையும் இல்லை, ஆனால் அவரிடம் எனக்கு சற்று சந்தேகம் உள்ளது, அவர் ஒரு கேவலமான மனிதராகவே இருக்க வேண்டும் எனும் எண்ணப்பாடு அவர்களிடையே பரவலாக இருக்கும். எதிர்வீட்டுக்காரரிடம் ஹலோ சொல்வது போக தம் வீட்டில் உள்ளோரிடம் கூட அன்பாகப் பேசிப் பார்க்க முடியாது. பால்கனியில் கணவனும் மனைவியும் குழந்தையும் நிற்கிறார்கள் எனில் அவர்களிடம் ஒரு பிணைப்பு, பிரியம் இருக்காது, ஆளுக்கு ஒரு திசையில் திரும்பி நிற்பார்கள். சேர்ந்து வெளியே போகும் போதும் தனித்தனியே இருப்பார்கள், எல்லாருடைய முகத்தில் இரண்டாம் உலக யுத்த யூதர்களின் பாவனை, ஒரு சவக்களை இருக்கும். ‘நான் தூங்கியே பல ஆண்டுகள் ஆகின்றன, எனக்கு கடுமையான மன அழுத்தம், தனிமைஎன்பதான ஒரு மனநிலை. இந்த தனிமை சகமனிதரிடம் ஒரு கசப்பை, அவநம்பிக்கையை, மென்மையான கோபத்தை விளைவிக்கிறது. நீச்சல் தெரியாமல் நீரில் விழுந்து கைகால்களைப் போட்டு அடிக்கிறவர்களைப் போன்ற ஒரு சமூகம். அதனாலே மனிதரிடம் பணமும் வசதிகளும் அதிகமாக ஆக ஒருவித மகிழ்ச்சியின்மை சமூக அளவில் நிலவுவதாக எனக்குத் தோன்றுகிறது. ஆனால் இப்பிரச்சினைக்கு மேற்தட்டு என வந்துவிட்டால் ஒரு கூரை வந்துவிடுகிறது. மேற்தட்டினருக்கு, பணக்காரர்களுக்கு சமூகமாக்கல் செய்யவும் கேளிக்கையில் ஈடுபடவும் சமூக வெளிகளும் வாய்ப்புகளும் அதிகம். முக்கியமாக அவர்களுக்கு போலி ஒழுக்க வரையறைகள் குறைவு. மிக முக்கியமாக பணம் மற்றும் அதிகாரத்தை அவர்களால் நேரடியாக கட்டுப்படுத்த முடியும். இந்த இடைப்பட்ட வர்க்கத்தில், சமூக நிலையில் தான் ஒரு கூட்டு உளவியல் நிலைகுலைவு, போதாமை, பதற்றம் இன்று அதிகமாக நிலவுகிறது. இதை நமது காலத்தின் பெரும் மத்திய, உயர்மத்திய வர்க்க நெருக்கடி என்று அழைக்கலாம் என நினைக்கிறேன்.


சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தன் கீழுள்ள நிறுவனங்களின் தன்னிகரற்ற சக்கரவர்த்தியாக இருந்த ஒருவர். அவருக்கு கீழ் பல நூறு கோடிகள் பணத்தின் நதியோட்டம் இருந்தது. அவருடைய ஒரு சொல்லால் சிலருடைய வாழ்க்கையே மாறிப் போகும் எனும் அளவுக்கு அதிகாரம் இருந்தது. அவரைப் பார்க்க காவல் அதிகாரிகளும், பணக்காரர்களும் காத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். அவர் நடந்து போகையில் மக்கள் வரிசையில் காத்து நின்று வணங்குவார்கள். எல்லாரிடமும் பிரியமாக நியாயமாக இருந்த ஒரு மனிதர். அவருக்கும் ஓய்வு நாள் வந்தது. அதன் பிறகு ஒரு சிறிய பொறுப்பை அளித்து அவரை வேறு ஊருக்கு அனுப்பி விட்டார்கள். அண்மையில் நான் அவரைப் பார்க்க நேர்ந்தது. ஒருவர் கூட அவரை மதிக்கவில்லை. அவரால் பயன்பெற்றவர்கள் கூட அவர் ஏதோ மாயாவி என்பதைப் போல கடந்து போனார்கள். நானும் ஒன்றிரண்டு பேர்களுமே அவரிடம் போய் முகமன் சொல்லி நலம் விசாரித்தோம். அவரிடம் ஒரு கட்டற்ற பேச்சார்வம் இருந்தது. பேச ஆளே இல்லாத ஒரு முதியவரைப் போல பேசிக்கொண்டே இருந்தார். எனக்கு பாவமாக இருந்தது. இது அவர் மூன்று, நான்கு பத்தாண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றிருந்தால் நடந்திருக்காது. ஏனென்றால் அன்று ஒரு மனிதரும் அவருக்கான சமூக மரியாதையும் ரூபாய் நாணயமும் மதிப்பும் போல ஒன்றாக இருந்தது. இன்று ஒரு மனிதர் வெறும் குறியீடு மட்டுமே. அவர் எதைக் குறிக்கிறாரோ அதற்கு மட்டுமே ஏற்பு, ‘அவருக்கு இல்லைஎனும் மனநிலை பரவலாகி விட்டது


இம்மனநிலை உறுக்கத்தை தளர்த்தி சமத்துவத்துக்கு வழிவகுக்குமா என்றால் இல்லை, இது ஒரு அச்சத்தையும் பதற்றத்தையுமே அதிகப்படுத்தி இருக்கிறது. என்றுமே அடைய முடியாத ஒரு மாய இரும்புக் கையை அடைவதால் மட்டும் எந்த பயமும் இல்லையெனில் அது என்ன சமத்துவத்தை தர முடியும்? ஒரு ஊரில் மனிதர்கள் ஒவ்வொருவராக காணாமல் போவதைப் போன்ற பண்பாட்டு நிலை இது. (இதை இன்றைய இளைஞர்களில் ஒரு பகுதியினர் ஸ்தூலமாக உணர்வதாலே அவர்கள் வன்முறை, குற்றங்கள் வழியாக பணம், அதிகாரம், அங்கீகாரத்தைப் பெறுவதில் தப்பில்லை எனும் முடிவுக்கு வருகிறார்கள்.)


இதை இன்று இரு விதங்களிலே கடந்து போக முடியும் என மக்கள் நம்புகிறார்கள் - மிகப்பெரிய பணத்தையும் உச்சபட்ச அதிகாரத்தையும் கொண்டு. அதாவது அடிப்படையான சமூக ஏற்பைப் பெறவே நீங்கள் கார் வைத்திருந்தாலோ நல்ல வேலையில் இருந்தாலோ போதாது நடிகர்கள், விளையாட்டு வீரர்களின் புகழும், கார்ப்பரேட் முதலாளிகளின் பணமும், ஆட்சியில் உள்ள அரசியல் தலைவர்களின் பெரும் அதிகாரமும் வேண்டும். எல்லாருக்கும் செலிபிரிட்டியாக வேண்டும், அதானி ஆக வேண்டும், முதல்வர், அமைச்சர் (குறைந்தது ஒரு வட்டச்செயலாளர்) ஆக வேண்டும். ஆனால் அது சாத்தியமில்லை என்பதால் பணத்தையும் அதிகாரத்தையும் சொத்தை சேர்ப்பதன் வழி அடைய முயல்கிறோம். ஆனால் இவை மாயாவின் இரும்புக் கையை போல உள்ளன. அவற்றை நீங்கள் முழுமையாகப் பார்க்க முடியாது. கையை மட்டுமே காண முடியும். கை மட்டுமே அதிகாரம். ஆள் முழுமையாக வந்தால் மதிப்பில்லை. அதிகாரமும் பணமும் இன்று தன்னளவில் நிலையான மதிப்பில்லாத (வெற்றுக்குறிப்பான் என பின்நவீனத்தில் சொல்லபடுகிற) குறியீடாகி விட்டன. ஆனால் இதை சமூக மேல்நிலையாக்கத்திற்கான முயற்சி என்றும் கூற முடியாது


மூன்றாவதாக, ஒரு சாத்தியமும் உண்டு - உங்களிடம் பெரும் பணமும் பணமும் ஒரே சமயம் இருந்து (ஒரு பிரபல ஆண் நடிகராகவோ செலிபிரிட்டியாகவோ இருந்து) நிறைய தொண்டு நடவடிக்கைகளில் பணத்தை செலவிட்டால் அதனால் பயன்பெறும் மக்களும், அதை அறிந்த சமூகமும் உங்களைக் கொண்டாடும். ஆனால் இதே உதவிகளை நீங்கள் சற்று குறைவான அளவில் உங்கள் பதவியையோ அதிகாரத்தையோ வைத்து இதே மக்களுக்கு செய்தால் நீங்கள் சுரண்டி சம்பாதித்ததில் ஒரு சிறுபகுதியையே கொடுப்பதாக நினைப்பார்கள். ஆனால் ஈகையில் ஈடுபடும் ஒரு செலிபிரிட்டியும் இதே மாதிரி ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தி சுரண்டியும், வரியை ஏய்த்துமே சம்பாதித்த பணத்தையே தமக்குத் தருகிறார்கள் என நினைக்க மாட்டார்கள். ஏனென்றால் பொறுப்பு, வேலை, அதனாலான சமூக அடையாளம் இன்று வெற்றுக் குறியீடாக உள்ளது; அதை மக்கள் தம்மால் அடைய முடியும் அல்லது அது தமக்கு அணுக்கமானது என நினைக்கிறார்கள். பெரும் பணமும் அதிகாரமும் அப்படி இல்லை. அது அவர்களை மீறிய ஒரு மீபொருண்மைக் குறியீடு (கடவுளைப் போல). அவர்களால் ஒரு போதும் எட்ட முடியாத வானம். அதிலிருந்து கிடைக்கும் ஈகை உதவி ஒருவிதஅருளாகஅவர்களுக்குத் தோன்றுகிறது. அத்தகையஅருளாளர்கள்எப்போதும் போற்றத்தக்கவர்களாக இருப்பதும், அவர்கள் காலமானதும் நாம் பெரும் கூட்டமாகத் திரண்டு நெக்குருகி அழுவதும் அதனாலே.


இந்த சமூகப்பொருளாதார மாற்றத்தினால் ஆதிக்க சாதிகளும் பெரும்பான்மை மதங்களும் பெரும் அதிகாரத்தையும் பணத்தையும் பெற்று இன்னும் இறுகிப் போயிருக்கின்றன, அதே சமயம் இடைநிலையில் அவர்கள் வேட்டையாடப்படுகிறவர்களாகவும், ஒன்றுமில்லாத ஏதிலிகளாகவும் உணர்கிறார்கள்.


பணத்தினாலும் அதிகாரத்தாலும் மட்டுமே பெறத்தக்க, ஆனால் ஒரு போதும் அவர்களுக்கு கிடைக்காத சமூக ஏற்பு நிலையை நோக்கி செல்ல எல்லாரும் தவித்தபடி இருக்கும் ஒரு சூழல் ஒரு சித்திரத்தை தருகிறது - கோடி கரங்கள் நீருக்கு வெளியே நீண்டு என்னைக் காப்பாற்றுங்கள் எனக் கோரும் சித்திரம் அது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...