முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சக-எழுத்தாளர்களுடன் பழகுவது

 எழுத்தாளர்கள் நிறைய வாசிப்பது எவ்வளவு அவசியம் என பொதுவாக வலியுறுத்தப்படுவதுண்டு. எனக்கு அந்த கருத்துடன் பெரிதாக உடன்பாடில்லை. மிகையான வாசிப்பு எழுத்தாளர்களை தனிமைப்படுத்தவும், மிகையான அச்சத்தை, சுய-அபிமானத்தை ஏற்படுத்தவும் கூடும். ஒருவித ஏதிலிகளாக, தனியர்களாக மாறக் கூடும். அதனாலே சக-எழுத்தாளர்களிடம் பழகியும் பேசியும் அவர்களுடைய ஆளுமையில் இருந்து கற்றுக் கொள்வது, ஊக்கம் பெறுவது மிகவும் அவசியமானது. நான் புத்தகங்களில் இருந்து பெறுவதை விட நூறு மடங்கு அதிகமாக ஒரு சக-படைப்பாளியைக் காணும் போது கற்றுக் கொள்கிறேன். அவர்கள் உலகைப் பார்க்கும் விதத்தைப் பார்க்கையில் புதிய சிந்தனைகள், கற்பனைகள் நமக்குள் பிறக்கும், அவர்களின் செயல்பாடுகளைப் பார்க்கையில் நாம் தனியாக இல்லை, நாம் செய்வதும் சரிதான் எனும் தன்னம்பிக்கை ஏற்படும். இன்னொரு விசயம் - நான் கவனித்த வரையில் பொதுவாக, தனிமையில் இருப்பவர்களை விட சக-படைப்பாளிகளுடன் தொடர்ந்து உரையாடும் படைப்பாளிகள் மிகுந்த படைப்பாக்கத்துடன், திருப்தியுடன் இருக்கிறார்கள்


தனதுநிக்கோமேக்கியன் எத்திக்ஸ்நூலில் அரிஸ்டாட்டில் நட்பு என்பது ஒரு தனிமனிதரின் அக லட்சியத்தின் முழுமையான வெளிப்பாட்டை சாத்தியப்படுத்தும் உறவு என்கிறார். எப்படியான மனிதர்கள் இடையே அது சாத்தியமாகும் என்றும் பேசுகிறார். (இதை எத்தனை ஆயிரம் புத்தகங்கள் படித்தாலும் நாம் அடைய முடியாது, ஏனெனில் புத்தகங்களுக்குஉயிரில்லை’, ‘இருத்தல்இல்லை.) சமமான சமூக அந்தஸ்து, திறமையும் பரஸ்பரம் மரியாதையும் கொண்டவர்களும் பழகும் போது சாத்தியமாகும் ஆளுமை பரிமளிப்பு ஏற்றதாழ்வான உறவில் எதிர்மறையாக மாறுகிறது என்கிறார். அதனாலே இளம் படைப்பாளிகள் தம்மைப் போல துவக்க நிலையில் உள்ள எழுத்தாளர்களுடன் பழகுவது அவர்களுடைய படைப்பூக்கத்துக்கு நல்லது என்று கூறலாம்.

 இன்னொரு பக்கம், தாழ்வுணர்வு கொண்ட, குசும்பும் பொல்லாங்கு எண்ணமும் கொண்ட படைப்பாளிகளிடம் பழகுவது நம்மை சோர்வடைய வைத்துவிடும் தான், நான் மறுக்கவில்லை. அவர்களுடன் குடிப்பது நம்மை கிட்டத்தட்ட தற்கொலை நோக்கித் தள்ளிவிடும். சற்றே அவர்களைப் போலத்தான் தீவிரமான உணர்வுநிலையில் கொதி நிலையில் இருக்கும் படைப்பாளிகளும், எப்போதும் தன் பந்துவீச்சாளருக்கு விக்கெட் விழுந்த விராத் கோலியைப் போல இருப்பவர்களும். அவர்களைக் கையாளவும் ஒரு தனி சமநிலை, முதிர்ச்சி வேண்டும். சில படைப்பாளிகள் குழந்தையைப் போன்றும், சற்றுகோமாளித்தனமாகவும்’, மிகவும் கூருணர்வு கொண்டவர்களாகவும், எளிதில் காயப்படுபவர்களாகவும் இருப்பார்கள். அது அவர்களுடைய இயல்பான களங்கமின்மையில் இருந்து வருகிறது. அல்லது படைப்புக்காக அந்த நிலையில் வைத்துக் கொள்கிறார்கள் என்றும் கூறலாம். அவர்களிடம் பழகும் போதும் அதே களங்கமின்மையுடன் இருக்க வேண்டும் அல்லது காயப்படுத்தாமல் பழக கவனம், மென்மை வேண்டும். எப்படிப் பார்த்தாலும் இவை அன்றாட உலகில் நாம் வெகுவாக காண இயலாத இயல்புகள்.


என்னிடம் ஒரு பழக்கம் உள்ளது. நான் எழுத்தில் யாரையும் பிரதியெடுக்க மாட்டேன். பெரும்பாலும் பேச்சிலும் சிந்தனையிலும் தான். ஆனால் ஆர்வமூட்டும் எந்த படைப்பாளியைக் கண்டாலும் அவர்களுடைய நடத்தையை, அதன் வழி ஆளுமையை விலகி நின்று கவனித்துக் கொண்டிருப்பேன். அடுத்த சில நாட்கள் நான் கவனித்த விசயங்கள் என் ஆளுமைக்குள் வந்துவிடும். கிட்டத்தட்ட அவர்களாகவே என்னையறியாமல் நடந்துகொள்வேன். இது எனக்கு எழுத்து வாழ்வில் வெகுவாக உதவியுள்ளது. இது திட்டமிடாமல் எனக்குள் நிகழும் ஒன்று.


இந்த தன்னிச்சையான பழக்கம் உள்ளதாலே சில நேரங்களில் மிகவும் சாமான்யமான, அற்பமான மனிதர்களையும் பிரதியெடுக்கத் தொடங்கிவிடுகிறேன். நான் தினமும் சந்திக்கும் மனிதர்களில் 99% ஆட்கள் எந்த தீவிர லட்சியமோ சிந்தனைகளோ அற்றவர்களா, நான் கையாளும் இளையதலைமுறையினரில் சிலர் மிகவும் கிரிமினலாகவும் தந்திரமாகவும் நடக்கிறார்களா என்னையும் அவர்களையும் போல என்னையறியாமலே மாற்றிவிடுகிறார்கள். ரொம்பவும் மத்திய வர்க்க மனிதனாக சிந்திக்கத் தொடங்கிவிடுகிறேன் - எழுத்தில் அல்ல, நடத்தையில். நான் இவர்களைப் போன்றவன் அல்ல என்று மனதுக்குள் சதா சொல்லிக் கொண்டிருந்தால் பைத்தியம் பிடித்துவிடும். நான் உங்களைப் போன்றவன் அல்ல என்று சதா காட்டிக்கொண்டிருந்தால் அவர்களால் வெறுக்கப்படுவோம், தனிமைப்படுவோம். ஆனால் அவ்வப்போது சக-எழுத்தாளர்களை சந்தித்து உரையாடுவது என்னைசுத்தப்படுத்திஇயல்பாக்கி விடுகிறது. ஒரு வண்டி சர்வீஸ் ஆகி வருவதைப் போல பளிச்சென்று ஆகிவிடுகிறேன்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...