முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மறுபிறவி என்பது உண்மையா?


நேற்றைய நீயா நானா நிகழ்ச்சியில் முற்பிறப்பை நம்புவதாய் பேசிய சிலரைப் பார்த்த போது வெளியே பார்க்க இயல்பாக இருந்தாலும் இயல்பற்ற உலகில் வாழ்வோர் ஏராளமானோர் உள்ளனர் எனத் தோன்றியது. ஒரு பெண் தான் முந்தைய ஜென்மத்தில் மரமாக இருந்ததாக நினைவு வந்ததாக சொல்லிய போது எனக்கு எதார்த்த கதைகூறலின் பொருள் என்ன எனும் கேள்வியே எழுந்தது. தொண்ணூறுகளில் எஸ்.ராவும், கோணங்கிய எழுதிய கதைகளை அப்படியே சிலர் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். நாம் தாம் இவர்களைப் பொருட்படுத்துவதில்லை.

எனக்கு தனிப்பட்ட முறையில் இதைப் பற்றி ஒன்றும் தெரியாது. இந்த பிறவியே எப்படி ஆரம்பித்தது, நான் கண்ணைத் திறந்து அழுது உலகை அறிந்து கொள்வதற்கு முன் எங்கிருந்தேன், உயிரற்று ஒன்றுமற்ற ஒன்றாக இருந்தேன் எனில் உயிரற்றது எப்படி உயிருள்ளவராக முடியும், காலம் இல்லாதவனாக இருந்தவன் எப்படி திடீரென காலத்துள் வந்து குதிக்க முடியும் ஆகிய ஹைடெக்கரிய கேள்விகள் எனக்கு உள்ளன. இதுவே தெரியாத போது நான் இந்த வாழ்வையோ இங்கு மிகத்தீவிரமாக நம்பப்படும் பலவற்றையும் உண்மையென நம்ப முடியாத இடத்திற்கு நகர்ந்துவிடுகிறேன். ஒருவர் உயிர்கொள்வது, பிறவியை எடுப்பதே விளக்கத்திற்கு அப்பாலானது எனும் போது அவர் உயிரிழப்பதும், அடுத்த பிறவிக்குப் போவதும் அசாத்தியம் தான். இங்கு சாத்தியம் இப்போதுள்ள ஒவ்வொரு கணமும் மட்டுமே. அதில் மட்டுமே பல பிறப்புகளைக் காண முடியும் என நினைக்கிறேன். இது என் தர்க்க மனம், என் தத்துவ அறிவு சொல்வது. அதே சமயத்தில், முற்பிறப்பு, அடுத்த பிறப்பு போன்ற கற்பனைகளில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. அச்சிந்தனைகள் இந்த வாழ்வை ஒரு முடிவற்ற விளையாட்டாகப் பார்க்கத் தூண்டுகின்றன எனும் அளவில் முக்கியமானவை என ஒரு கலைஞனாக நினைக்கிறேன்.

ஷோவில் சிறப்பு விருந்தினராக வந்த போகன் சங்கர் சிறப்பாக பேசினார். அவர் ஒரு அசல் கவிஞனாக சிந்தித்து சொன்ன சில விசயங்கள் பிடித்திருந்தன என்றாலும் வேறு சில கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடு இல்லை. போகன் சொல்வதைப் போன்ற புத்தர் முற்பிறப்பை நம்பினாரா, அடுத்தடுத்த பிறவிகளை போதித்தாரா? ஆம், பல புத்தர்களில் அவரும் ஒருவர். புத்தரின் பிறப்புக் கதையிலே இந்த செண்டிமெண்ட் உண்டே. ஆனால் இன்னொரு புத்தர், நான் ஆர்வம் கொள்ளும் புத்தர், இந்த பிறப்புகளை மானுட இருப்பு, பிரக்ஞை உருவாக்கம், மறைவு சார்ந்து விளக்கியவர். ஒன்று சூனியவாத மரபு, மற்றொன்று யோகாச்சார மரபு. ஒவ்வொரு நிமிடமும் நம் அகம் பிறந்து பிறந்து மடியும் போது அங்கு ஒரு நினைவின் சரடு இருக்கிறது தானே, அதையே பின்னர் வைதீகர்கள் ஆன்மா என்று மீசை தாடி வரைந்து உபநிடங்களையும், கீதையையும் எழுதி குழப்பமாக விளக்கினார்கள். பௌத்தம் ஒரு உளவியல் அல்லது இருத்தலியல் தத்துவம். ஒரு ontological system. புத்தர் இந்த உலகில் மட்டுமே இருந்தார், அவர் எங்கும் போக முடியாது, அவரது பூதவுடலுக்கு அப்பால் அவருக்கு இருப்பு இல்லை எனக் காட்டவே பௌத்தர்கள் புத்தரின் பாதத்தை வழிபடுகிறார்கள். போகன் குறிப்பிட்ட மணிமேகலையின் வரிகளும் இவ்விதத்திலே பொருள் கொள்கின்றன.
உதயகுமரன் கஞ்சணனால் கொல்லப்பட்ட பிறகு வருந்தி அழும் அவன் தாயிடம் மணிமேகலை ‘உங்கள் மகனின் உடலுக்காக வருந்துகிறீர்கள் எனில் அதை பாதுகாத்து வைக்க வேண்டியதுதானே, அவன் ஆன்மாவுக்காக வருந்துகிறீர்கள் எனில் அது யாராகவும் எதுவாகவும் மறுபிறப்பெடுக்கக் கூடும் எனும் போது உங்கள் மகன் இங்கு உள்ள எந்த உயிராகவும் இருக்கலாம் எனும் போது நீங்கள் அனைவரையும் நேசிப்பதன் வழியாக உங்கள் மகனைத் தொடர்ந்து நேசிக்கலாமே’ என்று கூறி தெளிவுபடுத்துகிறாள். [உடற்கழு தனையோ உயிர்க்கழு தனையோ உடற்கழு தனையேல் உன்மகன் தன்னை எடுத்துப் புறங்காட் டிட்டனர் யாரோ உயிர்க்கழு தனையேல் உயிர்புகும் புக்கில் செயப்பாட்டு வினையால் தெரிந்துணர்வு அரியது அவ்வுயிர்க் கன்பினை யாயின் ஆய்தொடி எவ்வுயிர்க் காயினும் இரங்கல் வேண்டும். (சிறைவிடு காதை, 73 - 79)]
கவனித்தால் மணிமேகலையின் கூற்றில் நாம் நாகார்ஜுனரின் தர்க்கத்தின் வழி ஒரு கூற்றை அபத்தத்தை நோக்கி பின்நகர்த்தி முறியடிக்கும் விவாத முறைமையை (reductio ad absurdum) காண முடியும். உங்கள் மகனின் ஆன்மா மறுபிறப்பெடுத்து யாராக வந்துள்ளது எனத் தெரியாது என்பதை உங்கள் மகன் இங்கு யாராகவும் இருக்கலாம் என்பதைப் போலவே யாராகவும் இருக்க முடியாது என்றும் புரிந்துகொள்ளலாம். இன்னதென்று தெரிய முடியாத ஒன்று இல்லாததற்கு சமம் தானே. யாராகவும் மறுபடி பிறக்க கூடிய ஒருவராகிய உதயகுமரன் உங்கள் மகன் எனும் சிறப்பு இயல்பு, அடையாளம் இல்லாதவராகிறார், அப்போது அவர் உங்கள் மகனே இல்லை தானே? சாராம்சமாக இல்லாத ஒருவருக்காக ஏன் இரங்க வேண்டும்? இப்படி மணிமேகலையின் கூற்றே மறுபிறப்புக்கு, முற்பிறப்புக்கு எதிரானதுதான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...