எனக்கு மிகப்பிடித்தமான ஹெமிங்வேயின் சிறுகதை ஒன்றுண்டு - “ஒரு சுத்தமான நன்கு ஒளியூட்டப்பட்ட அறை”. அதில் அந்த சுத்தமான ஒளிநிறைந்த அறை மனிதப் பிரக்ஞையின் / இருத்தலின் உருவகமாக இருக்கும். ஆனால் நான் ஒளியைப்பற்றி ஒரு சிறுகதை எழுதியபோது அதில் ஒளியென்பதை சதா நம்மைக் கண்காணிக்கும், ஒடுக்கும் விழிகளின் பார்வையாகவே நான் உருவகித்தேன். ஒளியென்பது நமது அகவிழியென்றே என் படைப்பு மனம் சிந்திக்கிறது என அதை எழுதியபோது புரிந்துகொண்டேன். பேராசிரியர் அழகரசனைப் பற்றி நினைக்கையில் அவர் ஒரு மென்மையான வெளிச்சம் என்றே எனக்குத் தோன்றுகிறது. துன்புறுத்தாத, தன் இடமே இதுவென்று காட்டிக்கொள்ளாத வெளிச்சம். தன்னைக்கொண்டு பிறரது உலகை திறந்துகாட்டத் தெரிந்த வெளிச்சம். எனக்கு ரெண்டாயிரத்தின் பிற்பகுதியில் ஒரு உண்மை உறைத்தது - என் முதுகலைப் படிப்பிற்குப் பிறகு நான் மொழிபெயர்ப்பாளர், காப்பி எடிட்டர், தொழில்நுட்ப எழுத்தர் என பல பணிகளைச் செய்து வந்தேன். என்னுடைய இலக்கு எழுத்தில் செம்மையடைவது மட்டுமேயென்று இருந்ததால் நான் தொழில்ரீதியாக வேலையில் கவனம் செலுத்தியிருக்கவில்லை. தொழில் வாழ்க்கை எனக்குப் பெரும் துன்பமாக இருந்தது. உரு...