முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குழந்தைகள் குறித்த குறிப்புகள் 1 - கருணையை இழப்பது


குழந்தைகள் விசயத்தை உணர்வுரீதியாகப் பார்க்கலாம். யாராலும் குழந்தைகள் தரும் மகிழ்ச்சியை மறுக்கமுடியாது. அதேநேரத்தில் சற்று நடைமுறை உணர்வுடன் பார்த்தோமானால் அவர்கள் ஒருவித ஒட்டுண்ணிகள். நாய்கள் காட்டுவிலங்குகளாக இருந்து மனிதர்களுடன் வாழ முடிவெடுத்தபின்னர் எப்படி மனிதர்களின் உளவியலை தமக்கேற்ப மாற்றி பயன்படுத்திக்கொள்கின்றன என்று விவரிக்கும் நூல் ஒன்றைப் படித்தேன் (How the Dog Became the Dog: From Wolves to Our Best Friends - Mark Derr). இது குழந்தைகளுக்கும் பொருந்தும் - பெரமோன்களும் பண்பாட்டு விசைகளுமாக சேர்ந்து நம்மை குழந்தைகளிடம் கட்டிப்போடுகின்றன. மிகப்பெரிய அறிவாளிகள், கலைஞர்கள், விஞ்ஞானிகள் கூட குழந்தைகள் விசயத்தில் மண்டியிட்டு கண்ணீர்விடுவது இந்த பலவீனத்தால்தான். அடுத்து, குழந்தையெனும் உருவகம் நம் பண்பாட்டு மனத்துக்கு களங்கமின்மையைச் சுட்டுகிறது; மனதளவில் களங்கப்பட்டவர்களாக உணரும் நாம் குழந்தைகளிடம் அதனாலே வழிபடுகிறோம். குழந்தையும் தெய்வமும் ஒன்று என்கிறோம். ஆனால் குழந்தைகள் அப்படி நம்மைப்பற்றி நினைப்பதில்லை. குழந்தைகளுக்கு முதல் மூன்று வருடங்கள்வரை மூளையின் முன்பகுதியில் (frontal lobe) நரம்பணு வளர்ச்சிப் போதுமானதாக இல்லாததால் கருணை, பரிவு, அடுத்தவர்களுடைய கண்ணோட்டத்தில் இருந்து சிந்திக்கும் திறன் இருப்பதில்லை என்று உளவியலில் மனத்தின் கோட்பாடு (theory of the mind) எனக்கூறப்படும் ஆய்வுப்புலம் நிரூபித்திருக்கிறது


சாலி மற்றும் ஆன் எனும் இரு குழந்தைகளைப் பாத்திரங்களாக வைத்து உருவாக்கிய ஒரு கதையை உளவியல் ஆய்வாளர்கள் குழந்தைகளிம் சொல்கிறார்கள்; அக்கதையில் சாலியும் ஆனும் ஒரு அறையில் இருக்கிறார்கள். சாலி ஒரு கோலிக்குண்டை வைத்து விளையாடுகிறாள். அவள் அறையைவிட்டு வெளியே போகும்போது கோலிக்குண்டை தன் கூடைக்குள் வைக்கிறாள். அவள் போனதும் ஆன் அதை எடுத்து தன் பெட்டிக்குள் வைக்கிறாள். சற்று நேரத்தில் சாலி திரும்பவந்ததும் எங்கே பார்ப்பாள்? இந்தக் கேள்விக்கு சாலியின் கண்ணோட்டத்தில் இருந்து யோசிப்பவர்கள் அவள் தனது கூடைக்குள் பார்ப்பாள் என்று சொல்வார்கள். ஆனால் தான் கதையைக் கேட்டதை வைத்து தன் பார்வையிலிருந்து மட்டும் சிந்திப்பவர்கள் அவள் ஆனின் பெட்டிக்குள் பார்ப்பாள் என்று சொல்வார்கள். இந்த கேள்விக்குப் பதிலளிக்கும் மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள் பிந்தைய பதிலையே அளித்தார்கள். குழந்தைகளுக்கு அடுத்தவர் கண்ணோட்டத்தைப் பரிசீலிக்கும் திறன் இல்லை எனும் முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்தார்கள். அதனாலே அவர்களாலே கருணைகாட்ட முடிவதில்லை


 பொதுவாக குழந்தைகளின் குரூரத்தை அவர்கள் பிராணிகளை நடத்தும்விதத்திலும், விளையாட்டுப் பொருட்கள், உணவுக்காக பெற்றோர்களைப் படுத்தும்பாட்டைப் பார்க்கையிலும் உணர்ந்திருக்கிறோம். ஆனால் அவர்களுடைய தோற்றத்தாலும் மேற்சொன்ன பண்பாட்டு விசைகளாலும் அந்த களங்கமற்ற இரக்கமின்மையை மன்னித்துவிடுவோம். குழந்தைகள் வளரவளரத்தான் அவர்களிடம்நற்குணங்கள்தோன்றுகின்றன - அவர்களுடைய மூளையின் முன்பகுதி முழுமையாக வளர்கிறது, பண்பாட்டுப் பயிற்சி, கல்வி அவர்களை முதிர்ச்சியடைய வைக்கிறது. அடுத்தவர்களுக்காக விட்டுக்கொடுக்க, இரங்கிட, பொறுமைகாக்க, அடிபணிய கற்றுக்கொள்கிறார்கள்

குழந்தைகளிடம் இன்னொரு வினோதம் அவர்கள் எப்போதுமே முதிர்வதில்லை என்பது; அதாவது, அவர்கள் எந்தளவுக்கு குழந்தைமையைத் தக்கவைக்கிறார்களோ அந்தளவுக்கு அதீத குரூரத்துடன், வஞ்சகமாக அடுத்தவர்களைச் சுரண்டுபவர்களாக நீடிப்பார்கள். இதற்கு சமகாலத்துக் குழந்தைகள் நல்ல உதாரணம். ஏனென்றால் அவர்கள் முதிர்வதை, நற்குணங்களை வளர்ப்பதை இன்றையப் பண்பாடு அனுமதிப்பதில்லை. குழந்தைத்தனம் என்று சொல்கிறோமே அந்த மூளை வளர்ச்சியின்மையை இன்று தனிமனித சுதந்திரமாக, துணிச்சலாக, ரசிக்கத்தக்க குணமாக முன்வைக்கிறோம். விளைவாக நமது குழந்தைகள் வளர்ந்தபின்னரும் மூன்று வயதுக் குழந்தையாகயே நடக்கத் தலைப்படுகிறார்கள். சதா தம்மைப் பற்றி மட்டுமே சிந்திப்பது, நெறியின்றி பிடிவதமாக அடுத்தவர்களை சுரண்டுவது தமது பிறப்புரிமை எனக் கருதுவது, பாதுகாப்பின்மையினால் அனைவரையும் வெறுப்பது, தம்மை எல்லாரும் பாராட்டிக்கொண்டே இருக்கவேண்டும் என நினைப்பது, தனிமையை அஞ்சுவது, நார்ச்சத்து இல்லாத மிருதுவான உணவை மட்டும் உண்பது என வளர வளர வயதில் பின்னுக்குச் செல்கிறார்கள். குழந்தைகள் சதா தம் பெற்றோரிடம் இருந்து எதையாவது எதிர்பார்த்தபடியும், தமக்கு சுயமாக முடிவெடுக்க சுதந்திரம் வேண்டுமெனக் கோரியபடியும் இருக்கும். இது ஒரு மோதல் மனப்பான்மையை உருவாக்குகிறது - இதனாலே வளர்ந்த பிள்ளைகள் இன்று தொடர்ந்து பெற்றோரில் அதிகாரமிக்கவரை (அப்பாவை) வெறுத்தும் கோபித்தும்கொண்டு இருக்கிறார்கள். நான் சந்தித்து உரையாடும் பெரும்பாலான மேல்மத்திய வர்க்கப் பிள்ளைகளுக்கு அப்பா மீது இந்த கசப்பும், அதனாலான ஒருவித மனச்சிக்கலும் உள்ளது.


 இன்னொரு சுவாரஸ்யமான விசயம், இன்றைய இளைஞர்களும் தம்மைக் குழந்தையாகவே பாவிக்கிறார்கள். நாற்பது வயதுக்கு மேலானவர்களோ தாமும் குழந்தையாகிவிட மாட்டோமா, குரூரமாக, தன்னலமாக நடந்துகொள்ள முடியாதோ என்று ஏங்குகிறார்கள். வயோதிகம் வந்ததும் சிலருக்கு மெல்ல மெல்ல மூளையின் முன்பகுதி தேய்மானம் அடைகிறது, அவர்களும் குழந்தையாகிறார்கள். இப்படி ஒட்டுமொத்த சமூகமே சாலியின் கண்ணோட்டத்தைக் கருத முடியாத குழந்தையாக மாறுவதே நவதாராளவாத சந்தையின் காலமாக இருக்கிறது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...