முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என் 'வினோத' ஏக்கங்கள்




நான் கடந்த இரு ஆண்டுகளாக குத்துச்சண்டை பயில்கிறேன். ஆனால் ஒரு அமெச்சூர் கிளப் போட்டியில் என்னால் இத்தனை நாட்களாகப் பங்கேற்க முடியவில்லை. ஏனென்றால் இங்கு சக்கரநாற்காலி குத்துச்சண்டைப் போட்டிகளே இல்லை. கிரிக்கெட், பென்ஸிங் போன்ற மிகச்சில போட்டிகள் மட்டுமே ஆண்டுக்கொரு முறைமுறை அங்கங்கே நடக்கின்றன. பவர் லிப்டிங்கில் கூட நிறைய வாய்ப்புகள் உளன. ஆனால் குத்துச்சண்டைக்கு இடமேயில்லை. நான் இதை இன்று கர்நாடக அமெச்சூர் குத்துச்சண்டை அமைப்பின் செயலரிடம் விசாரித்து உறுதிசெய்தேன். ஆக நான் வெறுமனே குத்தும்பையில் பயிலலாம், ஸ்பாரிங் பண்ணலாம். ஆனால் ஒருபோட்டி வாய்ப்புகூட கிடைக்காது.
நான் நேற்று ஒரு கிளப் அளவிலான போட்டித்தொடரைப் பார்க்கப் போயிருந்தேன். ஒரு பக்கம் அப்போட்டிகளைப் பார்க்க ஜாலியாக இருந்தாலும் வெளியே வந்ததும் என்னையும் அவர்களையும் ஒப்பிட்டு மனம் துவண்டுவிட்டது. சுத்தமாகப் பயிற்சியே இல்லாதவர்கள், ஒழுங்காக ஒரு குத்துவிட முடியாதவர்கள் கூட ஆடினார்கள். பத்து வினாடி கூட தாக்குப்பிடிக்க முடியாதவர்கள் கூட ஆடினார்கள். சுமாராக ஆடுபவர்கள் கூட எதிராளியின் திறமைமையின்மையைக் கொண்டு வென்றார்கள். ஒருவரை நான் ஸ்பாரிங்கில் முறியடித்திருக்கிறேன். ரொம்ப நல்ல நண்பர். அவருக்கே ஆடுவதற்கு வாய்ப்பு கிடைக்கிறது, எனக்கு கிடைக்கவில்லை, என்னைப் போன்றவர்களுக்கு அடிப்படைக் கட்டமைப்போ, ஏற்பாடோ இல்லையெனப் பார்த்தபோது மனம் கசந்துவிட்டது. இயல்புடலாளர்களுக்கு எந்த அடிப்படைத் தகுதியில்லாதபோதே கிடைக்கும், மிக சுலபத்தில் கிடைக்கும் வாய்ப்புகளுக்காக என்னைப் போன்றவர்கள் ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டிவரும். அதன்பிறகு அது வெறும் கனவாகவே முடியும்.
நான் இதைச் சொல்லும்போதே எவ்வளவு அபத்தமாகப் பிறருக்குப் படும் என்பதைப் புரிந்துகொள்கிறேன். உலக அளவிலேயே எந்த எழுத்தாளரும் இப்படியொரு விசயத்துக்காக வருத்தப்பட்டுப் புலம்பியிருக்க மாட்டார்கள். மேலும், இயல்புடலாளர்களுக்கான விளையாட்டு ஏற்பாடுகளை மாற்றுத்திறனாளிகளின் ஏற்பாடின்மையுடன் ஒப்பிடலாகாது என்பதையும் அறிவேன். ஆனால் வருத்தமும் கோபமும் மேலிடும் போது இந்த பகுத்தறிவு வேலை செய்யாது. அவருக்கு எளிதில் கிடைப்பது, கேட்காமலே கிடைப்பது, விரும்பாமலே கிடைப்பது கேட்கிற, விரும்புகிற, உழைக்கிற எனக்குக் கிடைக்கவில்லையே என்றே முதலில் யோசிக்கத் தோன்றுகிறது. நான் இப்படியெல்லாம் நினைப்பேன் என்று தெரிந்துதானோ என் மனம் இத்தனை ஆண்டுகளாக இத்தகைய விசயங்கள் பக்கம் ஆர்வம் கொள்ளாமல் எழுத்து வாசிப்பு என்றே இருந்துவிட்டதோ? என் எழுத்து லௌகீக உலகின் போதாமைகள் குறித்த ஏமாற்றங்களிலிருந்து என் தற்பாதுகாப்பு நடவடிக்கையோ?
எனக்கே இத்தகைய ஆசைகள் சில வருடங்களுக்கு முன்பு இல்லை. குத்துச்சண்டை மீதுள்ள ஆசையினாலே நான் பயிற்சியெடுக்கத் தொடங்கினேன். ஆனால் திடீரென்று போட்டியில் பங்கேற்கவேண்டும் என ஆசை ஒருநாள் தோன்றியது. ஆசை எப்போது ஏன் வருகிறது என்று யாராலும் சொல்லமுடியாது என நினைக்கிறேன். அதற்கு இடமிருக்கிறதா என்று கூட யோசிக்கமுடியாது. ஆசை நம்மை ஆட்கொண்டுவிடும், கூடவே ஏமாற்றமும் வருத்தமும் அழையா விருந்தாளியாக வரும்.
எனக்கு இன்னும் சில இலக்குகள் உள்ளன - இன்னும் தோள்வலிமையை அதிகரிக்கவேண்டும், தடுப்பாட்டத்தைக் கற்க வேண்டும், 5-10-15 நிமிடங்கள் என நான் ஆட்டத்தில் தாக்குப்பிடிக்கும் நேரத்தை பயிற்சிமூலம் அதிகரிக்க வேண்டும். அதன்பிறகு என்னால் எந்த போட்டி வாய்ப்புமின்றி தொடர்ந்து இதிலேயே இருக்கமுடியுமா எனத் தெரியவில்லை. நல்லவேளை எனக்கு இலக்கியம் என ஒரு துறை இருக்கிறது என்று நிம்மதியாக இருக்கிறது. எனக்கு அதில் சற்று ஆறுதலும் முழுமையாக சமமாகப் பங்கேற்பு வாய்ப்பும் எப்போதும் உண்டு.
நேற்றைய போட்டிகளில் பதக்கங்களை வென்ற என் நண்பர்களுக்கு இப்போதைக்கு என் அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...