"நிழல் பொம்மையை" அதன் கரட்டு வடிவத்தில் படித்து தம் நுட்பமான அறிவார்ந்த கருத்துக்களைச் சொல்லிய விமர்சகர் சரவணன் மாணிக்கவாசகத்துக்கும், எழுத்தாளர்கள் தயா ஜிக்கும் பாலுவுக்கும் விஜயலட்சுமிக்கும் எனது மனமார்ந்த நன்றி. வாசக நண்பர் பா. கணேஷ் இந்நாவலைப் படிக்கப்படிக்க வாட்ஸாப்பில் குறிப்புகளாக அனுப்பிக்கொண்டிருந்தார். போனில் விவாதித்தார். நாவலில் முக்கியமான திருத்தங்களை செய்ய உதவினார். அவருக்கு என் அன்பு. விமர்சகர் நா. முருகேச பாண்டியன் இந்நாவலை நுணுக்கமாகப் படித்து செம்மைப்படுத்தித் தந்தார். அவர் இதற்காக செலுத்திய உழைப்பு அபாரமானது. அவரது பங்களிப்பை வணங்குகிறேன். அவர் நாவலைப் படித்து முடித்ததும் என்னைப் போனில் அழைத்து தொடர்ந்து ஒரு மணிநேரமாக உணர்ச்சிகரமாக உரையாடினார். அந்த மாலைப்பொழுதை என்னால் மறக்கவே முடியாது. அவரது சொற்களும் கருத்துக்களும் முக்கியமானவை என்றாலும், அவரால் படித்து முடித்ததும் தன் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதே எனக்குப் பெரும் உவகையை அளித்தது. தஸ்னீம் நசீர் நாவலைக் குறித்த தன் நுட்பமானக் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். இவர்களுக்கு என் பிரியத்தையும் ஆழமான நன்றியையும் மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

கருத்துகள்