அதிகாரம் எப்போதும் நம்மை அகத்துள்ளே வேட்டையாடவே உத்தேசிக்கிறது, அதன் நோக்கம் நம்மை அதன் முகவராக மாற்றுவதுதான்; சட்டவிதிகளும் நடைமுறைகளும் அதிகார வர்க்க கேள்விகளும் சந்தேகங்களும் குறுக்கீடுகளும் கடைசியில் நம்மையும் அவர்களைப்போல மாற்றுகின்றன. ஆனால் நான் ரகுவின் பார்வையிலிருந்து சிந்திக்கையில் அவன் ஒரேசமயத்தில் தந்திரமாகவும் களங்கமற்றவனாகவும் மாறவே வாய்ப்பதிகம் எனத் தோன்றியது. “விசாரணையின்” ‘கே’வைப் போலவே ரகுவும் தண்டனையிலிருந்து தப்பிக்க குற்றத்தை தவிர்க்காமல் தண்டனையின்பொருட்டு குற்றத்தை நாடுகிறான்; எப்போதென்றே தெரியாமல் ஆரம்பிக்கும் விசாரணைக்குள் நாம் எப்போதும்தானே இருக்கிறோம். அது ரகு முற்றதிகாரத்தை முதன்முதலின் எதிர்கொள்ளும் தருணமாக இருக்கலாம். அப்போதிலிருந்தே அவனது சுபாவம் மாறத் துவங்குகிறது. அவனே குற்றமிழைப்பவனாகவும் விசாரணையாளனாகவும் தனக்குள்ளேயே பதுங்கியிருக்கிறான் என்பதை மட்டுமே நான் காப்காவிடம் இருந்து பெற்றுக்கொண்டேன். காப்காவுக்கு இறைவன் யார், இருண்ட உலகில் அவர் எங்கிருக்கிறார், அவருக்கான தேடல் எப்படி இன்மையையும் கைவிடப்படுதலையும் நோக்கி இட்டுச்செல்கிறது என்பவை முக்கியமான கேள்விகள். அவரது “விசாரணையில்” யாருக்கும் யாருமில்லாத இருண்ட உலகில் அகவிசாரணை புறவிசாரணையாகி பெரும் சிக்கலாக திடீர் மரணத் தண்டனையுடன் முடியும். மரணம் அங்கே கடவுளுக்கான குறியீடு. ஆனால் எனக்கு இந்த குறிப்பிட்ட கதையுலகில் அப்படியொன்று நிகழமுடியாது, மரணத்துடன் சட்டென கைகுலுக்குவதல்ல, மரணத்துடன் சமரசம் பண்ணியபடி அதை ஏமாற்றிவிட்டதாக நம்புவதும், சின்னச்சின்ன மரணங்களை அன்றாடத்தின் இருத்தலில் உணர்வதுமே இன்றைய உலகம் என்று தோன்றியது. ஆகையால் கதையின் முடிவெனும் ‘தூக்குக்கயிற்றின்’ சுருக்கை திறந்தநிலையிலே விட்டுவிட்டேன்.
மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

கருத்துகள்