முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அதுல் சுபாஷின் தற்கொலை

 அதுல் சுபாஷ் தனது தற்கொலை வாக்குமூலத்தில் குறிப்பிடும் முக்கிய காரணமொன்று அவர் விவாகரத்து வழக்குக்காகவும் பொய்வழக்குகளை எதிர்கொள்ளவும் ஆண்டுக்கு நாற்பது தடவைகளுக்கு மேல் பெங்களூருவில் இருந்து வட இந்தியாவுக்கு வழக்காடுமன்றத்தில் ஆஜராகப் பயணிக்க வேண்டியிருபது (அவர் கடந்த இரண்டாண்டுகளில் 120 முறைகள் பறக்கவும் ரயிலில் பயணிக்கவும் வேண்டியிருந்ததாக அவரது சகோதரர் சொல்கிறார்.)

இதன் செலவு, நெருக்கடி, வேலையிடத்தில் வரும் பிரச்சினைகள், கடுமையான நடைமுறைத் தொந்தரவுகள். இத்தனைக்கும் அவரது மனைவி வழக்காடுமன்றம் உள்ள ஊரில் வாழவில்லை. அவரைத் துன்புறுத்தவேண்டும் என்றே அங்கே வழக்கைத் தாக்கல் செய்திருக்கிறார். எனக்கு இதைப் படிக்கையில் இரண்டாண்டுகளுக்கு முன் நான் எழுதிய பதிவொன்று நினைவுக்கு வந்தது. நான் மாற்றுத்திறனாளி எனத் தெரிந்தும் என்னை மாதாமாதம் அலையவிட்டு இரக்கமின்றி துன்புறுத்தியது இந்த அமைப்பு.
அப்பதிவை இங்கு மீள்பிரசுரம் செய்கிறேன்:
ஒரு விருப்பம்
உலகில் நான் கடுமையாக வெறுக்கக் கூடியது மோசமான வேலையோ, காதல் முறிவோ, வியாதியோ, மரணமோ அல்ல. அது பயணம்.
ஏனென்றால் என்னிடம் கார் இல்லை. நான் சென்னைக்கோ அதைப் போன்ற பிற இடங்களுக்கோ பயணத்திற்கு பேருந்துகளையே நம்பி இருக்கிறேன். ரயில் நிலையம் என் வீட்டில் இருந்து அதிக தொலைவில் இருக்கிறது. அதில் டிக்கெட் எடுப்பதற்கும் நீண்ட நாட்களுக்கு முன்பே புக் செய்ய வேண்டும். அப்படியே கிடைத்து விட்டாலும் ரயில் நிலையத்தில் நிறைய சிரமப்பட்டே என் வண்டி நிற்கும் இடத்திற்கு நான் போக முடியும். அந்த வழியில் படிக்கட்டுகள் உள்ளிட்ட பல தடைகள் இருக்கும். விமானம் என்றால் அதன் கட்டணத்திலே என் பாதி சம்பளம் போய் விடும் என்பதால் சாத்தியமில்லை.
இந்த பேருந்துகள் விசித்திரமாக அமைக்கப்பட்டவை - பெரிய உயரமான படிக்கட்டுகளைக் கொண்டவை. என்னால் ஒரு எட்டில் ஒரு படிக்கட்டில் ஏற முடியாது. நான் பெரும்பாலும் உட்கார்ந்து உட்கார்ந்து ஊர்ந்து தான் ஏற வேண்டும். அதுவும் படிக்கட்டு முடிந்து பேருந்தின் உள்வாயில் இருக்கிறதே அப்பகுதியை சற்று வளைவாக குறுகலாக வைத்திருக்கிறார்கள். அங்கு நான் ஒரு காலில் நின்று ஒரு கையால் பேருந்தின் ஏதாவது ஒரு பகுதியைப் பற்றி நின்று தொங்கியபடி சாகசம் புரிந்து தான் ஏற முடியும். இது நடக்கையில் பேருந்து வேறு அசைந்தபடி இருக்குமா என விழுந்து இன்னொரு காலும் உடைந்திடுமா என பயமாக இருக்கும். இவ்வளவு முடிந்து உள்ளே போனால் ஸ்லீப்பர் படுக்கைகள் தாழ்வாக அமைந்திருக்கும். ஆட்டத்தின் இடையே அந்த இடத்தை அடைந்து உட்காருமுன் உயிர் போய் உயிர் வருவது போலிருக்கும். இறங்குவது இதை ஒத்த சிரமங்களை ஏற்படுத்தும் என்பதால் அவர்கள் உணவுக்காகவும் சிறுநீர் கழிப்பதற்கும் நிறுத்தும் போது நான் இறங்க மாட்டேன். மூத்திரத்தையும் பிற அவதிகளையும் பொறுத்துக் கொண்டு கிடப்பேன்.
ஒருநாள் விடிகாலையில் நான் தனியாக சென்னைக்கு வர நேர்ந்தது. அன்று எனக்கு ரத்த சர்க்கரை அளவுக்கு ஐம்பதுக்கு கீழே குறைந்து விட்டது. பேருந்துக்காரர்கள் “உங்க இடம் வந்திருச்சு” என எழுப்பி விட்ட போது நான் hypoglycaemia ஏற்படுத்திய அரை-பிரக்ஞையில் இருந்தேன். ஒன்றுமே புரியாமல் அதே போல ஊர்ந்து சிரமப்பட்டு இறங்கி என் காலிப்பரின் முட்டியில் உள்ள லாக்கைப் போடும் போது கவனமற்று இருந்து விட்டேன். நான் சில அடிகள் தான் நடந்திருப்பேன். என் காலிப்பர் உடைந்து விட்டது. ஒரு வாடித் தளர்ந்த மாலையில் இருந்து காய்ந்த மலர்கள் உதிர்வதைப் போல நான் குலைந்து விழுந்து போனேன். என் காலிப்பரின் கம்பிகள் முடிச்சுப் போட்ட கயிறைப் போல நெளிந்து கிடக்கிறது. அதில் இருந்து என் காலை விடுவிக்கவும் சிரமப்பட்டேன். நல்ல வேளை அன்று என்னை அழைத்துப் போக எழுத்தாளர் தமயந்தியும் நண்பர்கள் தினேஷும் வளனும் இருந்தார்கள். அதனால் தப்பித்தேன். இல்லாவிட்டால் அப்படியே சாலையில் கிடந்திருப்பேன். நல்லவேளை, அன்று என் கால் உடைய வில்லை. என்னைப் போன்றோருக்கு எலும்புகள் osteoporatic ஆக இருக்கும் என்பதால் சிறிய கீறல் விழுந்தாலே குணமாக ஆறு மாதங்கள் ஆகும், உடைந்தால் ஒரு வருடத்திற்கு மேல் நான் படுத்த படுக்கைதான், என் எல்லா வேலைகளும் முடங்கிப் போகும்.
போராட்டம் இத்துடன் முடிவதில்லை. ஒவ்வொரு முறை பயணிக்கும் போதும் நான் பல வாகனங்களில் ஏறி இறங்கியாக வேண்டும். தங்கும் இடங்களில் உள்ள படிக்கட்டுகளில் மூச்சைப் பிடித்துக் கொண்டு ஏற வேண்டும். இன்னொரு பிரச்சனை ஒரு முறை நெடிய பயணம் மேற்கொண்டால் அதன் மோசமான தாக்கம் என் உடல்நிலையில் இருந்து மறைய ஐந்து நாட்களாவது பிடிக்கிறது என்பது. இதனால் நான் தீவிரமாக எழுதிக் கொண்டிருக்கும் வேலையும் நின்று போகிறது.
இந்த விவாகரத்து வழக்கு ஆரம்பித்த பிறகு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒவ்வொரு மாதமும் நான் இந்த அவலங்களை அனுபவித்து வருகிறேன். இதில் என்ன கொடுமை என்றால் இதை நான் யாரிடம் நேரில் கூறினாலும் அவர்களுக்கு என் பிரச்சனை சுத்தமாகப் புரியவில்லை என்பது. மக்களிடம் இன்று வெகுவாக அடுத்தவர் துன்பத்தை தமதாக உணரும் empathy எனும் திறன் குறைந்து வருகிறது. “தான் தான்” என மக்கள் சுயஆட்கொள்ளலில் இருக்கிறார்கள் அல்லது அவர்கள் எதைப் பற்றியும் யோசிக்க முடியாதபடி வேலை அழுத்தத்தில் இருக்கிறார்கள் அல்லது அடுத்தவர்களுடைய இன்பங்களில் மட்டுமே பங்குபெற வேண்டும், துன்பங்களில் அல்ல எனும் மனநிலையில் இருக்கிறார்கள்.
நியாயமாக வழக்காடு மன்றங்கள் என்னைப் போன்ற ஒருவரை ஒவ்வொரு முறையும் பஸ்ஸைப் பிடிந்து உருண்டு புரண்டு எப்பாடு பட்டேனும் வந்து முகம் காட்டு என்று கேட்கக் கூடாது. இணையவழி ஆஜராக வசதியை அனுமதிக்க வேண்டும். ஆனால் இப்போதைக்கு ஊனமுற்றோரிடத்து கரிசனம் கொண்ட சட்டம் இல்லை. ரெண்டு கையும் காலும் இல்லாவிட்டாலும் நீங்க சட்டத்தின் முன் “சமம்” அல்லவா?
ஆனால் வாசிக்கையில் உங்களுக்கு நிச்சயம் எனது அனுபவம் கடத்தப்படும் என நம்புகிறேன், அதனாலே எழுதுகிறேன்.
என்னுடைய விருப்பமெல்லாம் ஒன்று தான் - இப்படி வருடக்கணக்காக நான் அனுபவித்த சித்திரவதைக்கு ஈடாக இந்த அமைப்பும் அதன் நடைமுறையும் ஒருநாள் மாறவேண்டும். அதை நான் இக்கண்களால் காணவேண்டும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...