முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

யார் வீட்டு எழவோ...


சாகித்ய அகாடெமி விருது முன்பு அறிவிக்கப்படும்போது பலத்த எதிர்ப்பு, விமர்சனம் தோன்றும், அல்லது எழுத்தாள வர்க்கமே மகிழ்ச்சி கொண்டு ஆதரிக்கும். இன்று நிமைமை அப்படியில்லை. இன்று எழுத்துலகில் கார்ப்பரேட் கலாச்சாரத்தில் உள்ள அத்தனை சங்கதிகளும், விதிமுறைகளும் வேலை செய்கின்றன - முதலீடு செய்வது, பிராண்டிங் செய்வது, லாபியிங், நெர்வொர்க்கிங், அதன் பலன்களைக் கொண்டாடுவது, வெற்றியை தனிநபருக்கானதாகப் பார்ப்பது. இந்த கடைசி இயல்புதான் சவப்பெட்டியின் மிகப்பெரிய ஆணியாகிவிட்டது. இலக்கிய குழுவின் தலைவராக, பிரதிநிதியாக, பகுதியாக உள்ளவருக்கு விருது கிடைக்கும்போது சந்தோஷமாக இருக்கும், ஆனால் அதற்குள் பொறாமையும், பாதுகாப்பின்மையும் கூட இருக்கும்.
முன்பு நமக்குப் பிடித்த படைப்பாளிக்கு விருது வரும்போது அது நமக்கான விருதென்று தோன்றும். இப்போது இது நமக்கு கிடைத்திருக்க வேண்டியது என்று தோன்றுவதில்லை (நீங்கள் குறும்பட்டியலில் இல்லாதபட்சத்தில்). மாறாக, இதற்கும் நமக்கும் சம்மந்தமில்லை, இது நமக்கு அந்நியமானது (அப்பாலானது என்றல்ல) என்று தோன்றுகிறது. என் சமகால எழுத்தாளர்களுடன் உரையாடும்போது மறைமுகமாக நான் உணர்ந்த விசயம் இது.
சாகித்ய அகாடெமி விருது முழுக்கமுழுக்க பண்பாட்டு அடையாளக் குறியாக, சமூக / தேசிய அங்கீகாரமாக இருந்தபோது அதில் பலராலும் பங்குபெற முடிந்தது. விருதுபெற்றவர்களுக்கு அகாடெமி வழங்கும் தொகை சொற்பமானது (ஒரு லட்சம்). வேறெந்த வெகுமதியும் வாழ்வில் கிடைக்காத தமிழ் எழுத்தாளர் இதை வாழ்நாள் வெகுமதியாகப் பார்க்கும்பட்சத்தில் இது மிகமிகக் குறைவே. ஆனால் இன்று தமிழ்நாட்டு அரசு கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டை வெகுமதியாக விருதாளருக்கு அளிக்கும்போது அது சாகித்ய அகாடெமி விருதின் பொருளை முழுக்க மாற்றிவிட்டது. இன்று விருதென்பதே ஒரு கோடியாகப் பார்க்கப்படுகிறது. (பார்க்கப்படுகிறது என்றே சொல்கிறேன், நிஜத்தில் என்றல்ல. அந்த வீட்டை விற்கமுடியாது.) இன்று விருதுக்காக நாம் லாபியிங் செய்யவேண்டி உள்ளது. ஒரு ஆண்டின் விருதாளர் அடுத்த ஆண்டின் மூவர் தேர்வுக்குழுவின் பகுதியாக இருப்பது நிலையை இன்னும் சிக்கலாக்குகிறது. எனக்கு நீ வாங்கிக்கொடுத்தால் உனக்கு நான் வாங்கித் தருவேன் என அவர் நினைப்பார் என மக்கள் நினைக்கிறார்கள். இது சிக்கலை இயல்பாக்குகிறது. இந்த தேர்வுக்குழுவுக்குள் ஒருவர் தன் ஆட்களை அனுப்பி விருதைத் தீர்மானிக்க முடியும் எனக் கூறுகிறார்கள். உளவுத்துறையும், எதிரணியும் ஒற்றர்களை ஒரு குழுவுக்குள் அனுப்பி கட்டுப்படுத்துவதைப் போல, "காட்பாதர்" முதல்பாகத்தில் முதற்காட்சியில் மூத்த காட் பாதர் சவ அடக்க நிபுணரிடம் சொல்வதைப் போல. இன்னொரு பக்கம், விஷ்ணுபுரம் போன்ற விருதுகளும் நிலைமைச் சிக்கலாக்கிவிட்டன. உள்ளே வராவிட்டால் நீ இலக்கியத்துக்கு வெளியேதான் என மறைமுகமாக பயமுறுத்துகிறார்கள். ஒழுங்குக்கு சினிமா வாய்ப்பு, இலக்கிய பயண வாய்ப்பு என உடனடியான சின்னச்சின்ன பரிசுகள் தரப்படுகின்றன. இப்படித்தான் எழுத்தாளர்கள் கார்ப்பரேட்டாகிறார்கள்.
இன்று விருதுபெற்ற, விருது பெற வாய்ப்புள்ள எழுத்தாளர் ஒருவரைப் பார்க்கையில் அமெரிக்காவில் மென்பொருள் துறையில் வேலைபார்ப்பவரைப் போல இருக்கிறது. நாம் சொற்ப சம்பளத்தில் வாழும்போது அவர் கைநிறையப் பணத்துடன் போட்கிளப்பில் வசிக்கிறவர் எனத் தோன்றுகிறது. இதுவும் தோற்றம்தான், நிஜமல்ல என்றாலும் இது தோற்றத்தின் காலமாக இருப்பதால், நிஜம் பொருடல்ல. இது எழுத்துக்கும் நமக்குமான இடைவெளியை உருவாக்குகிறது. எழுத்தென்பது என்னைப் பொறுத்தவரையில் நான் எழுதுவதல்ல, என்னோடு ஆயிரம் பேரோ நூறு பேரோ எழுதுவது. அது கூட்டு உழைப்பு. சகபடைப்பாளிகளுடன் முரண்பட்டோ உடன்பட்டோ இருக்கிறோம், ஆனால் அது ஒற்றை நதி, அதில் எல்லாரும் மூழ்கி நீந்துகிறோம். இந்த உணர்வு இன்று காணாமல் போகிறது. எழுத்தென்பது நமது உழைப்பு, நமது ஆன்ம வெளிப்பாடு, நமது கனவு. ஆனால் எழுத்துக்கும் நமக்குமான அந்நியமாதல் இன்று மனதளவில் வெகுவேகமாக நிகழ்ந்து வருகிறது.
நான் சொல்லும் அந்த ஒற்றை நதி என்பது இலக்கிய குழு அல்ல. அது ஒரு உணர்வு. அதை மொழியென்றோ பண்பாடென்றோ இலக்கிய ஆன்மாவென்றோ புரிந்துகொள்ளலாம். அதனுடன் நாம் பிணைந்திருக்கையில் வேறெதுவுமே பொருட்டாக இருக்காது. ஆனால் அதற்கு பொருள் மதிப்பு வருகையில் இயல்பாகவே நமக்கும் நம் மொழிக்கும், பண்பாட்டுக்கும், அந்த நதிக்கும் இடைவெளி தோன்றும். (ஏனென்றால் பணத்தின் வேலையே தனிமனிதனுக்கும் அவன் செயலுக்கும் இடைவெளியை தோற்றுவிப்பதுதானே).
இன்று அகாடெமி விருது யாருக்கு கிடைத்தால் என்ன, கிடைக்காவிட்டால் என்ன எனும் மனநிலை 'எனக்கு வரும்போது பார்த்துக்கொள்ளலாம்' எனும் எண்ணத்தின் மற்றொரு வடிவம்தான். இது நல்லதல்ல, ஆனால் இதுதான் இன்றைய எதார்த்தம். பொறாமை கூட நல்லது, ஆனால் அந்நியமாவது, விட்டேந்தியாக இருப்பது ஆபத்தானது.
சாகித்ய அகாடெமி விருதுடன் வீடு, அதை ஒட்டிய வெகுமதிகள், பெயர், நூல் விற்பனை ஆகிய எதிர்பார்ப்புகள், ஒன்றிய அரசின் தாய்க்கழகத்தின் குறுக்கீடு, பல்வேறு அரசியல் இடையீடுகள் ஆகியன நம்மை மேலும்மேலும் விருதிடம் இருந்து அந்நியப்படுத்துகின்றன. எழுத்தாளர்களுக்கு கூடுதலாக இன்னும் பரவலான அங்கீகாரமும், வெகுமதிகளும், வசதிகளும் கிடைக்கவேண்டும் என நாம் கோரும்போதே அவற்றின் உபவிளைவு எழுத்தாளரை எழுத்தில் இருந்து விலக்கமாக உணர வைப்பதுதான், நம்மை 'அரசியல்படுத்துவதுதான்' என்பதையும் இன்று உணர்கிறோம். அரசியல்படும்போது நாம் எழுத்திலிருந்து விலகிவிடுகிறோம் என்பதையும் நான் கவனித்திருக்கிறேன். அதன் ஒரு பகுதிதான் மௌனமாக இருப்பது. நமது சொல்லை, செயலை குறிப்பிட்ட நோக்கத்துடன் செலுத்துவது. கட்சி ஊழியரைப் போல மாறுவது. அதனாலே நீங்கள் இன்று எதனுடனும் உடன்படாத படைப்பாளிகளை அமைதியாக திரளின் பகுதியாக விழாக்களில் அமரவைக்க முடிகிறது. பெரும் இலக்கியத் தலைமைகளை நோக்கி எழுத்தாளர்கள் ஈர்க்கப்படுகிறார்கள். அல்லது இதற்கும் நமக்கும் சம்மந்தமில்லை என்று ஒதுங்கியிருக்க வைக்கிறது. அபுனைவில் வரலாறுசார்ந்த நூலொன்றுக்காக விருது கொடுக்கப்படும்போது (இலக்கியம் என்பதை நாம் கற்பனை எழுத்து சார்ந்ததாக மட்டுமே பார்க்கலாகாது என்பது என் பார்வை; நான் அதையொட்டியே அவரை வாழ்த்தி எழுதினேன். எனக்கு தனிமனிதர்கள் முக்கியமல்லர்.) அது பெருத்த அமைதியை உண்டுபண்ணுவது அந்நியத்தன்மையை அது அதிகப்படுத்துவதாலே. ஏனென்றால் அவரை எந்த வகைமைக்குள் குழுவுக்குள் கொண்டு வந்து அரசியல்செய்வதெனத் தெரியவில்லை நமக்கு.
இந்த மனநிலை மெல்லமெல்ல விருதை இலக்கியத்துக்கு சம்மந்தமில்லாதவர்களின், எழுத்துலகுக்கு வெளியே உள்ள பொதுசமூகத்துக்கு மட்டும் ஈடுபாடு கொள்வதாக மாற்றிவிடும். இதை யாராலும் மாற்றவோ தடுக்கவோ முடியாது, விலகி நின்று பார்க்க மட்டுமே முடியும்.
அ. ராமசாமி B&W யுடியூப் சேனலில் சாகித்ய அகாடெமி விருதின் நடைமுறை, விதிமுறை, அரசியல் பற்றிப் பேசிய காணொளிகளைப் பார்க்கையில் எனக்கு இதுதான் தோன்றியது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...