முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உறுதிப்பாடும் வளர்ச்சியும்



நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் ஒன்றிய அரசு நிதியை மாநிலங்களுக்கு எப்படி எந்த சதவீதப்படி பகிர்ந்தளிக்க வேண்டும் என்று கட்டாய விதியை உருவாக்கியிருக்க வேண்டும். அரசென்பது நீதிவான்களால் உருவாக்கப்படும், அவர்கள் எதைச் செய்தாலும் அதனால் மக்களுக்கு நன்மையே விளையும் எனும் மிகையான கற்பனையான நம்பிக்கையின் பெயரில் நமது அரசியலமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு ஒன்றிய அரசும் அதன் விருப்பப்படி முடிவெடுக்கலாம். நியாயமாக இருக்கலாம், அநீதியாகவும் இருக்கலாம். அவரவர் விருப்பம், தேர்தலின் போது மக்கள் அரசைத் தண்டிக்கலாம். ஆனால் மக்களால் அந்தளவுக்கு நுட்பமாக யோசித்து, அலசி ஆராய்ந்து முடிவெடுக்க இயல்வதில்லை என்பதால் ஒன்றிய அரசு தான்றோன்றித்தனமாக முடிவெடுப்பதற்கே அதிக சாத்தியம். எதிர்க்கட்சி பலவீனமாக இருந்தால், ஊடகங்கள் கார்ப்பரேட்டாகி, கார்ப்பரேட்டுகளை அரசு விலைக்கு வாங்கிவிட்டால், யாராலும் அரசைக் கேள்வி கேட்கவோ தடுக்கவோ முடியாது. கிட்டத்தட்ட தாந்தோன்றித்தனமான சர்வாதிகாரம். இது இந்திய மக்களாட்சி அமைப்பின் மிகப்பெரிய ஓட்டை.

எப்படி திட்டவட்டமாக நிதிப்பங்கீட்டை வரையறுக்க முடியும் என சிலர் கேட்கலாம். யோசித்துப் பார்த்தால் எளிமையாக அதைச் செய்ய முடியும். ஒரு மாநிலத்தின் நிதிப் பங்களிப்பை 50%, நிதித்தேவை 50% என்று கணக்கிட்டுச் செய்யலாம். பீஹாரின் நிதிப்பங்களிப்பு மிகவும் குறைவு, ஆனால் நிதித்தேவை மிகவும் அதிகம் என புள்ளிவிபரப்படி அம்மாநிலம் தாக்கல் செய்தால் அந்த ஆவணங்களின் படி நிதியை ஒதுக்கலாம். தமிழ்நாடும் இதையே செய்யலாம். இதை நாம் சட்டமாக உருவாக்கி கட்டாயமாகியிருக்க வேண்டும். முன்போ இப்போதோ ஒன்று கூட்டணியில் உள்ள பலமான கட்சியின் சாமர்த்தியத்தைப் பொறுத்து மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டது, ஒதுக்கப்படுகிறது. காங்கிரஸ் காலத்தைவிட பாஜக காலத்தில் இது மிகமிக மோசமாக உள்ளது. அவர்கள் இதை ஏற்றுக்கொண்டு "அப்படித்தான் செய்வோம்" எனும் திமிர்த்தனமான பாவனையை வெளிப்படுத்துகிறார்கள். தொடர்ந்து "நீங்கள் எங்களுக்கு வாக்களிக்காவிட்டால் உங்களுக்கு வளர்ச்சித் திட்டங்களோ நிதியோ தரமாட்டோம்" என்கிறார்கள். இதை பாஜகவின் தவறு என்று சாடுவதை விட இதை நமது அரசியல் சட்டத்தின் போதாமை என்றே கூறுவேன், ஆட்சியாளர்களுக்கு மிகமிக அதிகமான சுதந்திரத்தை நம் அரசியல் சட்டம் அளிக்கிறது. இதையே நாம் பல்வேறு சட்டங்களுக்கும் சொல்லலாம்.
இந்த பாஜக அரசு வந்ததும் வலதுசாரி, மிகை-கார்ப்பரேட் சார்பு முடிவுகளை எடுக்கிறது. அதற்கு முன்பிருந்த காங்கிரசோ நடுவாந்திர கார்ப்பரேட், விவசாயிகள் ஆதரவு நிலைப்பாட்டுடன் முடிவுகளை எடுத்தது. இப்படி கொள்கையைப் பொறுத்த நிலைப்பாடும், அதைப் பொறுத்து சட்டங்களும் முடிவுகளும் மாறுவது ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்துக்கும் முன்னேற்றத்துக்கும் ஊறுவிளைவிப்பதாகும். கடந்த 10 ஆண்டுகளும் இதற்கு சாட்சியம். ஒரு கட்சிகள் விவசாயிகளை ஆதரித்தால் இன்னொரு கட்சி வந்து விவசாயிகளின் உற்பத்தியை விற்கும் உரிமையைப் பறித்து கார்ப்பரேட்டிடம் கொடுக்க சட்டம் கொண்டு வரும். அதை விவசாயிகள் ஓராண்டுக்கு மேல் போராடி எதிர்த்தால் அதே அரசு அச்சட்டத்தைப் பின்வாங்கிவிட்டு அவர்களுக்கு உதவுவதற்காக திட்டங்களைக் கொண்டு வருவதாக பாவனை பண்ணும், ஆனால் அவர்களுடைய கொள்கைக்கு அது விரோதமானது என்பதால் தீர்க்கமான முடிவுகளை எடுக்கவோ நிறைவேற்ற போதுமான நிதியளிக்கவோ மாட்டார்கள். பல்வேறு தரப்பினர் வாழும் ஒரு தேசத்தில் ஒவ்வொரு தரப்பும் தம் தேவைகளை வலியுறுத்திப் போராடிக் கொண்டிருக்க முடியாது. மேலும் ஒவ்வொரு ஐந்தாண்டும் கொள்கையை மாற்றினால் குழப்பமும் சிக்கல்களும் விளைவும். மக்கள் துயருறுவார்கள். இதைவிட மேலானது ஒரு அரசு ஐம்பதாண்டுகளுக்கு ஒரு குறிப்பிட்ட விதமான கொள்கையைப் பின்பற்றப் போகிறது, அதை மாற்ற வேண்டுமெனில் நாடு முழுக்க கருத்துக்கணிப்பு நடத்தி 90% மேல் மக்களின் ஆமோதிப்பைப் பெறவேண்டும் என அரசியல் சட்டமே கூற வேண்டும். அது மக்களுக்கு பாதுகாப்பளிக்கும், வணிகத்துக்கும் உற்பத்திக்கும் உத்திரவாரம் அளிக்கும். இப்போது நாம் விவசாயிகளுக்கு அதிக சுதந்திரத்தையும் லாபத்தையும் தரும் முடிவுகளை எடுக்க வேண்டும் என முடிவெடுத்தால் ஒரு கார்ப்பரேட் சார்பான அரசு வந்தாலும் அதைப் பின்பற்றியே ஆக வேண்டும் அல்லது அவர்கள் பரவலாக மக்களின் நேரடி ஆதரவை அம்முடிவை ஒட்டிப் பெறவேண்டும் (பாராளுமன்றத்தில் உள்ள வலிமை மட்டும் போதாது எனும் நிலை வரும்).
ஒவ்வொரு மதத்தினருக்கும் ஒரு குறிப்பிட்ட விதமான திருமணச் சட்டமே இருக்க வேண்டும் என அரசியல் சட்டம் தெளிவாகக் கூறுகிறதெனில் அதை மாற்றுவதற்கும் சீரான உரிமையியல் நடைமுறைத் தொகுப்பை நடைமுறைப்படுத்தவும் அரசு கடுமையாக பிரயத்தனிக்க வேண்டி வர வேண்டும். வரிவிதிப்பிலும் தீர்மானமான நீண்ட காலத் திட்டம் இருக்க வேண்டும். அரசு இந்தளவுக்கு மேல் கூட்டவோ குறைக்கவோ கூடாது என நிச்சயத்தன்மை இருந்தால் கார்ப்பரேட்டுகளுக்கான வரியை இந்தளவுக்கு இஷ்டத்துக்கு குறைக்க இயலாது. நீண்ட காலத்திற்கு பயன் தரக்கூடிய முடிவொன்று சந்தர்ப்பத்துக்கு ஏற்ப மாற இயலாது. பொருளாதாரம் பலவீனமாக உள்ளதால், கார்ப்பரேட்டுகளின் வரியைக் குறைத்தால் அவர்கள் அப்பணத்தை திரும்ப முதலீடு செய்வார்கள் என்று அனுமானிப்பதை விட அவர்கள் அப்படிச் செய்தே ஆகவேண்டும் எனச் சட்டமிட்டுவிட்டு வரிகுறைப்புச் செய்தால் சரியாக இருக்கும். தேசியமாக்கப்பட்ட ஸ்தாபனங்களைத் தனியாருக்கு விற்பதிலும் ஒரு தடையை நாம் அரசியல் சட்டத்தில் கொண்டு வந்திருக்க வேண்டும்.
தேர்தலின்போது ஒரு கட்சி வெளியிடும் கொள்கை அறிக்கையை எல்லாரும் முழுமையாகப் படிப்பதில்லை எனும்போது வெற்றிபெற்ற கட்சி தன் விருப்பத்தின்படி எதையும் செய்யலாம் என்பது மக்களாட்சி அல்ல, அதுதான் உண்மையான சர்வாதிகாரம். அதனால் தான் மக்களாட்சி அமைப்புக்குள்ளே சர்வாதிகாரச் சாத்தியம் நிறைந்திருக்கிறது.
சுருக்கமாக சொல்வதானால், மதசார்பின்மை, பொருளாதாரம், வறுமை ஒழிப்பு, சமத்துவம், தனிமனித உரிமை, நியாயம், அறம் என்பதற்கு ஒரு நாட்டுக்கென்று உறுதியான அடிப்படையான கொள்கையும் நீண்ட காலத் திட்டமும் இருக்க வேண்டும். அதை நாட்டின் பெரும்பான்மை மக்கள் கருத்துக்கணிப்பின் வழி உறுதிசெய்ய வேண்டும். அதை ஒட்டி மட்டுமே ஆட்சிக்கு வரும் அரசால் மாற்றங்ககள் செய்ய இயலவேண்டும். இஷ்டத்துக்கு மாற்ற முடியக் கூடாது. உ.தா., பத்தாண்டுகள் சோஷலிஸ கொள்கை (நேரு-இந்திரா), அதன்பிறகு சோஷலிஸ விரோதக் கொள்கை (ராஜீவுக்குப் பிறகு) என்றிருக்கக் கூடாது. பத்தாண்டுகள் உலகமயமாதலை முழுமையாக ஆதரிப்பது (மன்மோகன் சிங் வரை), அதன்பிறகு ஆத்மநிர்பாண், உள்ளூர் வணிகர்களையே ஆதரிப்போம் என்று வெளிநாட்டு முதலீட்டாளர்களைத் துரத்துவது (மோடி) என்றிருக்கக் கூடாது. பத்தாண்டுகள் மதசார்பின்மை, அதன் பிறகு பத்தாண்டுகள் மதப்பெரும்பான்மைவாதம், சிறுபான்மை எதிர்ப்பு என்றிருக்கக் கூடாது. தேசியமயமாதலைப் பிரதானமாகக் கொண்ட உலகமயமாதல் அல்லது தேச முதலீட்டியம் (state capitalism) அல்லது (அமெரிக்காவைப் போல) முதலீட்டிய சார்பு பொருளாதாரம் எனில் அதிலேயே உறுதியாக இருக்க வேண்டும். வைத்தால் குடுமி அடித்தால் மொட்டை என்று தீவிர எதிர்நிலைகளுக்குள் தாவுவதற்கு அனுமதிக்கக் கூடாது.
ஒரு தேசத்தின் நிறுவனர்களும் மக்களுமாக இணைந்து உருவாக்கும் அடிப்படை இலக்குகள், நம்பிக்கைகளை சுலபத்தில் ஒரு கட்சி மாற்றுவதற்கு அரசியல் சட்டம் இடமளிக்கக் கூடாது (அதாவது போர் போன்ற நெருக்கடி நிலை வராதவரை). இப்படி இருந்தால் யார் ஆட்சிக்கு வந்தாலும் நிர்வாகத்தைத் தவிர வேறெதையும் அவர்களால் செய்ய முடியாதென்பதால் தொடர்ச்சியும் வளர்ச்சியும் இருக்கும்.
தமிழ்நாட்டைப் போன்ற ஒற்றைக் கொள்கையின் கீழ் கட்சிகள் மாறிமாறி ஆளும் மாநிலங்களுக்கு இச்சிக்கல் இல்லை. அதிமுக வலதுசாரித்தனம் கொண்ட திராவிடக் கட்சியென்றாலும் அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் அகோரியாக மாற மாட்டார்கள். எங்கள் கொள்கை கோழிகளுக்கு எதிரானது, அதனால் கோழிகளுக்குத் தடை என்று சொல்ல மாட்டார்கள் யார் வந்தாலும் இல்லாவிடினும் 'கோழி' தமிழ்நாட்டில் இருந்தே ஆகும் (கோழி ஒரு குறியீடு). தேசிய அளவிலும் இதைப் போல ஒற்றைக் கொள்கை கொண்ட கட்சிகளே இருக்க முடியும் என அரசியலைமைப்பில் உறுதிப்படுத்தினால் (சோஷலிச, சோஷலிச மையவாத / தாராளண்மைவாத மக்களாட்சி கொள்கையை மட்டுமே கட்சிகள் கொண்டிருக்க வேண்டும். காந்தியைப் பின்பற்றுகிறவர்களும் ஆளலாம், கொன்றவர்களும் ஆளலாம் என்பது சுத்த அபத்தமாகும்.) தமிழ்நாட்டைப் போன்ற நிம்மதியும் தொடர்ச்சியும் வளர்ச்சியும் இருக்கும். கரன் தாப்பரின் யுடியூப் சேனலில் ஆனந்த் சுப்பிரமணியம் ஒரு விசயத்தை தமிழ்நாட்டு அரசைப் பற்றிச் சொகிறார் - போர்ட் நிறுவனம் வெளியேறுவதாகச் சொன்னதும் அரசு அதற்கான உதவிகளைச் செய்து கண்ணியமாக நடத்துகிறார். சில ஆண்டுகளிலேயே திரும்ப இந்தியாவில் முதலீடு செய்வதாக நினைக்கும் போர்டு நிறுவனம் தமிழ்நாட்டைத் தேர்வு பண்ணுகிறது. இதுவே இங்கு இரண்டு எதிரெதிரான கொள்கைகளும் திட்டங்களும் கொண்ட கட்சிகள் ஆண்டிருந்தால் திரும்ப வரும் போர்டு நிறுவனம் அடுத்த ஆட்சியில் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என ஓடிவிடுவார்கள். பழைய கட்சி திரும்பினாலும் இவர்கள் வரமாட்டார்கள். ஒன்றிய அளவில் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அதுவே நடக்கிறது. வெளிநாட்டில் தயாரிப்போம், இறக்குமதி செய்வோம் என ஒரு கட்சி (காங்கிரஸ்) சொன்னது. நேரெதிரான கொள்கை கொண்ட அடுத்த கட்சி (பாஜக) வந்ததும் இந்தியாவிலேயே தயாரிப்போம் என உள்ளூர் முதலாளிகளை மொனோபொலைஸ் செய்ய அனுமதித்து இறக்குமதியை ஒழித்துக் கட்டினார்கள். அதனால் மின்னணு பொருட்களின் விலை அதிகமாகி, அதனாலே அதற்கான சந்தை அடிபட்டது. லாபம் குறைந்து, விலை உயர்ந்து மக்கள் பாதிக்கப்பட்டார்கள். இது சாதாரண ஏற்றுமதி, இறக்குமதி முடிவல்ல, இதைப் போன்ற முடிவுகள் சமூகத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவனவாகும். இப்படி நாளொரு மேனி பொழுதொரு வண்னம் என கொள்கை முடிவுகள் இருந்தால் விளங்காது.
இதுவே என் பார்வை. உங்கள் கருத்தென்ன?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...