"நகுலன் கதைகள்" தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த குறுநாவல் "சில அத்தியாயங்கள்". தனது பூர்வ நிலையென்பது என்னவென்பது கதைசொல்லிக்குத் தெரியவில்லை என்பதே இங்கு கதையின் செலுத்துவிசை - அவர் தானாக நினைத்துக்கொண்டிருக்கும் பிரக்ஞை ஒன்றெனில் அதை நோக்கி உரையாடும் பிரக்ஞை மற்றொன்று, அல்லது அவை பிளவுண்ட இரு மனக்குரல்கள். அதற்கும் அப்பால் அனுபவங்களும் ஓர்மைகளும் இப்படி பிளவுண்டுதான் இருக்கின்றன. ஒரு அனுபவத்தை உணரும் போதும், நினைவுகொள்ளும்போது அது தனக்கு முற்றிலும் முரணான ஒன்றுடன் சேர்ந்து வருகிறது அல்லது மற்றொன்றாக உருமாறுகிறது. மனம் எதுவாக இருக்கிறது, எங்கிருந்து தோன்றி எங்கு செல்கிறது?
கதை அப்படியே மரணம் நோக்கிப் போகிறது. அப்பாவின், அம்மாவின் மரணம், அப்போது அவர்கள் என்னவாக இருந்தார்கள் எனும் கேள்விகள். தனக்குள் பேசிக்கொள்ளும் ஒருவர் அதை வெளியே பேசும்போது அதைப் பார்க்கும் குடும்பத்தினரும், பிடிபடும் அவர் கலவரமாவதும் ஏன் என்று நகுலன் சொல்லும் இடமும் சிறப்பானது: நாம் நமக்குள் பேசுகிறோம் என்பதே நம்மைக் கலவரப்படுத்துகிறது. ஆனால் நிஜத்தில் நாம் சிந்திப்பதும், தண்ணுணர்ச்சியுடன் இருப்பதுமே ஒரு உள்-உரையாடல்தான். அது இல்லாத ஒன்றும்தான். இது தெரிந்தால் யாருக்கும் இது வினோதமாக இருக்காது என்கிறார். அப்படியே தனிமை ஏன் நம்மை அச்சுறுத்துகிறது என்று வினவுகிறார். பாம்பு பிரமைக்கான, தோற்றங்களின் இன்மைக்கான ஒரு உருவமாக வருகிறது. பாம்பு ஏன் வீட்டுக்குள் வருகிறது என்பதற்கு கதைசொல்லியின் நண்பர் "நீ மட்டும் வீட்டில் இருப்பதும் இல்லாமல் இருப்பதும் ஒன்றுதானே, அதனால்தான் பாம்பு வருகிறது" என்று விளக்கமளிக்கிறார். நாம் 'இல்லாமல்' போகும்போது, மனம் காலியாகும்போது நமது பிரமைத் தனியாகத் துண்டாக வெளியே தெரியும் என்றும் இதைப் பொருள் கொள்ளலாம். ஆனால் ஒன்றுமில்லாத சூனியமாக இருந்தாலும் இந்த வாழ்க்கை மகிழ்ச்சியானதே என்று சில கவிதைகளில் தெரிவித்து நகுலன் குறுநாவலை முடிக்கிறார்.
நடுவில் சுசீலாவைப் பற்றின குறிப்பும் வருகிறது; அது கதைக்கு மிக அவசியமான குறிப்பும்கூட - நகுலனின் கதையுலகில் சுசீலா பரப்பிரம்மத்தின், அகவெளிச்சத்தின், மட்டற்ற தனிமை நிலையின், இப்படி எத்தனையோ விசயங்களின் குறியீடு. அவளைச் சந்தித்தால் எல்லாம் சரியாகிவிடும் எனும் நம்பிக்கை இருக்கிறது அவருக்கு. அதேநேரம் அவளைப் பார்த்தால் அவள் மிகச்சாதாரணமான வினாக்களை எழுப்பி சாமான்யப் பெண்ணாக அவரை எதிர்கொள்கிறாள். இந்த முரண் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சொல்லப்போனால் இந்த முரண்களே நகுலனின் உலகை மகிழ்ச்சியாக்குகிறது அல்லது முன்னகர்த்துகிறது.
நான் வெகுவாக ரசித்த ஒருசில வரிகளைக் கீழே தருகிறேன்:
"தனியாக இருக்கையில் அதுவும் இரவின் நிசப்தத்தில் மனம் வலைப்பின்னிக் கொண்டிருக்கையில் - நடுவில் ஒரு நினைவு. சொப்னாவஸ்தை என்பதை இரவின் பரிபூர்ண சுதந்திரத்தில் மனம் தாறுமாறாக வேலை செய்வதுதான் என்று ஒருவர் சொன்னார். அது தாறுமாறாகவே இயங்குகிறது. யாரோ பக்கத்தில் இருப்பது மாதிரி, யாரோ தன் பெயரைத் தெளிவாகச் சொல்லிக் கூப்பிடுவது மாதிரி - இவையொன்றும் அப்படி இல்லையென்று தெரிந்தும் மனக்குறளி ஏன் ஒருவனை இப்படி ஆட்டி வைக்கிறது? பிறகு அவனுக்குத் தெரியாமலேயே - அவன் பிரக்ஞை பூர்வமாக என்று சொல்ல முடியாது - அவன் அவனுடனே பேசிக்கொள்வது, அவன் அவனையே அதட்டுவது, அவன் அவனைக் கண்டுச் சிரிப்பது, போற்றுவது - எல்லாம்தான். இதை ஒரு நண்பரிடம் சொன்னதும் குடும்பத்துடன் இருக்கும் பொழுது கூட அவர் தன்னுடன் தானே பேசுவதைக் கண்டு அவர் குடும்பத்தினர் கலவரப்பட்டார்கள் என்று சொன்னது ஞாபகம் வருகிறது. ஏன் ஏன் என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. இந்த மாதிரி சந்தர்பங்களிலெல்லாம் மனம் பேசுகின்றது என்று தெரிந்தாலும், தான் தான் அது என்று ஏற்படும் குழப்பத்தினால்தான் ஒவ்வொருவனும் மிரள்கிறான் என்று தோன்றுகிறது (...) இந்த மாதிரி தனியாக இருப்பதற்குப் பயந்துதானோ என்று எவ்வளவு சகிக்க வேண்டி வந்தாலும் மனிதன் பெண்டாட்டி பிள்ளைகள் என்ற தளைகளைக் கூட ஏற்றுக்கொள்கிறானோ என்றுகூட அவனுக்குத் தோன்றாமல் இல்லை."

கருத்துகள்