Skip to main content

இனிவரும் காலம் இருளின் காலம்

 


அசோகா பல்கலைக்கழக இணைப் பேராசிரியரான அலி கான் முகமதாபாத் மீதான வேடிக்கையான குற்றச்சாட்டுகளைப் பற்றி இன்று ஆல்ட் நியூஸ் இணையதளத்தில் ஒரு விரிவான கட்டுரையைப் படித்தேன். அலி கான் ஒன்றும் சாதாரண பேராசிரியர் அல்ல - அவர் ராஜ குடும்பத்தைச் சேர்ந்த பெரும் பணக்காரர். அவரது தாத்தா ஜின்னாவுடன் சேர்ந்து முஸ்லீம் லீக்கை நடத்தினார், அதன் பொருளாளராகவும், நிதியாளராகவும் இருந்தார், அதன்பின் பாகிஸ்தான் அரசுக்கு தன் சொத்துக்களை எழுதி வைத்துவிட்டு லண்டனில் வாழ்ந்து இறந்து போனார். இந்திய அரசு அதன்பிறகு இஸ்லாமிய ராஜ குடும்பங்களின் சொத்துக்களை அரசு உடைமையாக்க எதிரிச் சொத்து சட்டத்தைக் கொண்டு வந்தது. (சயிப் அலிகான் இது சம்மந்தமான வழக்கை தள்ளிவைப்பதற்காக தன் மீது கொலை முயற்சி நடந்ததாக பெரிய டிராமாவே போட்டார்.) அலி கானின் அப்பா இம்முயற்சிக்கு எதிராக நாற்பது ஆண்டுகளாகப் போராடி உச்சநீதிமன்றம் போய் வென்றார். அலி கானின் மனைவி முன்னாள் ஜம்மு காஷ்மீர் அமைச்சரின் மகள். அலி கானும் சமஜ்வாதி கட்சியில் இருக்கிறார்.

அலி கான் தன் பேஸ்புக்கில் எழுதிய பதிவு ரொம்ப கண்ணியமாக அரசை விமர்சிக்கிற குறிப்பு - அதில் அவர் கர்னல் சோபியா குரேஷியாவை பாஜக அரசு பயன்படுத்தி மத ஒற்றுமையைக் காட்டுவதைப் பாராட்டிவிட்டு அது வெறும் டோக்கனிஸம் தானே, மதக்கலவரத்தின் பெயரிலும் கும்பல் வன்முறையிலும் கொல்லப்பட்ட இஸ்லாமியர்களுக்கு இதனால் நீதி கிடைக்கப் போகிறதா என்று கேட்டார். அடுத்து அவர் போருக்காக கூவுகிற சங்கிகளைச் சாடினார். இதைவிட நூறு மடங்கு கடுமையாக பாஜகவை விமர்சித்தவர்கள் உண்டு. ஆனால் அலி கான் ராணுவத்தை அவமதித்து, நாட்டில் மதக்கலவரத்தைத் தூண்டும் விதமாக எழுதியதாக ஹரியானாவில் இருந்து பாஜககாரர் ஒருவர் புகார் அளித்தார். அடுத்து நடந்ததுதான் நேசமணி டைப் காமிடி - ஆணியைப் பிடுங்கச் சொன்னால் சுத்தியலைப் போட்ட கதையாக மகளிர் அமைப்பைச் சேர்ந்த ரேணு பாட்டியா "அலி கான் பெண்களின் கௌரவத்தை அவமதித்ததாக, மானத்துக்கு பங்கம் விளைவித்தகாக" இன்னொரு பக்கம் பொய்ப் புகார் அளித்தார். அதாவது பெண்களைப் பாலியல் ரீதியாக அசிங்கப்படுத்துவது, சீண்டுவதற்கு எதிராகத் தொடுக்கப்படும் சட்டப்பிரிவில் அலி கான் மீது வழக்குப் பதிவாகிவிட்டது. இந்த குற்றச்சாட்டுகளை அலி கான் தன் பணத்தினால் சுலபத்தில் எதிர்கொள்வார் என்றே நினைக்கிறேன். மேலும் அவர் எழுதியதை வைத்து குற்றத்தை நிரூபிக்கவே முடியாது. வழக்கு பொலபொலவென உதிர்ந்துவிடும். அவரை கொஞ்ச நாள் உள்ளே வைத்து தொந்தரவு பண்ணுவதே ஹரியானா பாஜகவின் நோக்கம் என நினைக்கிறேன். இதற்கு ஒன்றிய அரசின் பாஸிஸப் போக்குடன் உள்ளூர் அளவிலான அரசியல் விரோதமும் காரணமாக இருக்க வேண்டும். அல்லது அவரது குடும்பப் பின்னணி மீதான வெறுப்பும் மற்றொரு காரணமாக இருக்கலாம்.

பாஜக அரசும் மைசூர் 'பாக்' என்று கடைசியில் கேட்டவர்களைக் கூட பாக் ஆதரவாளர்கள் என மானாவரியாகக் கைது பண்ணிக்கொண்டுதான் இருக்கிறது. தேசத்தின் ஒற்றுமையைக் குலைத்தல், எதிரி நாட்டுக்கு உதவும் நோக்குடன் பேசுதல் போன்ற ஆங்கிலேயர் காலத்து தேசவிரோதத் தடுப்புப் பிரிவில் கையில் கிடைத்தவர்கள் மீதெல்லாம் வழக்குப் பதிவு பண்ணி உள்ளே தள்ளுகிறார்கள். இதற்கு சற்று காலம் காங்கிரஸ் பாஜகவை தன் பதின்பருவக் காதலியைப் போலக் கொஞ்சிக் கொண்டிருந்ததும் காரணம். எதிர்க்க யாருமில்லாதபோது ஆளுங்கட்சி உடனே சர்வாதிகார அட்டூழ்யங்களை அரங்கேற்றும். இப்போதுதான் காங்கிரஸ் மயக்கம் தெளிந்து இம்மாதிரி பொய் வழக்குகளைக் கண்டிக்கத் தொடங்கியுள்ளது. "I have read and re-read the entire tweet of Prof Ali Khan Mahmudabad.Which portion of the statement did Haryana Police find objectionable and violative of law? Will someone from Haryana Police please enlighten us?" என்று பா. சிதம்பரம் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் காங்கிரஸ் தலைமை அவ்வப்போது போர் குறித்து கேள்விவெழுப்பி ஒன்றிய அரசை லேசாக கன்னத்தில் தட்டுவதைப் போல விமர்சிக்கவும் தொடங்கியிருக்கிறது (அதற்கே பாஜக 'நகரம்' படத்தில் பெண் வேடத்தில் தோன்றும் வடிவேலு ஐயோ கையைப் பிடிச்சு இழுத்திட்டான் எனக் கதறுவதைப் போல கதறுகிறது.)

மோடி ஒருபக்கம் தரூரை திருவனந்தபுரத்தில் அன்புப் பார்வையுடன் கைகுலுக்கியபோதே காங்கிரஸ் சுதாரத்து ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவர் தினமும் பூமியில் இவரைப் போல பிரதமர் இல்லை, மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என்று சுற்றிசுற்றி நடனமாடி பாடிய போதாவது சுதாரித்திருக்க வேண்டும். ஆனால் கடைசியில் ஒன்றிய அரசு அனைத்துக் கட்சி குழுவை உருவாக்கி ஐரோப்பிய உல்லாசப் பயணத்திற்கு (அதாவது நாட்டின் பிம்பத்தை வலுப்படுத்தவாம்) அனுப்ப முடிவெடுத்தபோது காங்கிரஸ் அளித்த பட்டியலுக்கு விரோதமாக தரூரை பட்டியலில் முதலிடத்தில் தேர்வு செய்து குழுத்தலைவராகவும் நியமித்தது. அப்போதுதான் காங்கிரஸுக்கு தேசபக்தியின் பெயரில் பாஜக பக்தி ஓவராகிவிட்டதன் ஆபத்து புரிந்தது, பாஜக ஆடிப்பாடி இப்போது தன் மடியிலே கைவைத்து விட்டது விளங்கியது. ஷஷி தரூரைப் போன்ற வெட்கங்கெட்ட அரசியல்வாதியை புவியில் பார்க்க முடியாது என்று சொல்ல மாட்டேன். ஏகப்பட்ட பேர்கள் இருக்கிறர்கள். ஆனால் அவரது சிந்தனைத் திறன், ஆளுமைக்கு இந்த வீழ்ச்சி ரொம்ப மலினமாகத் தெரிகிறது. அவர் காங்கிரஸ் கட்சிக்குள் அதிகாரத்துடன் அமெரிக்க மாப்பிள்ளை போல வந்தவர், அவரால் அதிகாரம் இல்லாமல் ரொம்ப காலம் சும்மா இருக்க முடியாது. அவரது மனைவியின் மரணம் சம்மந்தமாகவும், பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளர் என்றும், உளவாளி என்றும் சொல்லப்பட்ட பெண்ணுடன் அவருடைய உறவைப் பற்றியும் தொடரப்பட்ட வழக்கில் பாஜக அவருக்குச் சார்பாக தீர்ப்பு வர உதவியதுதான் திருப்புமுனை என நினைக்கிறேன். அதன்பிறகு அவர் மோடியைப் பார்த்தால் விரைப்பாக நின்று சலூட் அடிக்கத் தொடங்கினார். தேர்தலுக்காக கொஞ்ச நாள் பொறுத்தாலும் அது ரொம்ப நாள் நிலைக்கவில்லை.
ராகுல் காந்தி மூத்த தலைவர்களில் இப்படியான அதிகார மோகிகளைப் பின்னுக்குத் தள்ளும்போது அவர்கள் அப்படியே நைசாக பாஜக மீது போய் விழுந்துவிடுகிறார்கள். இத்தனைக்கும் சில வாரங்களுக்கு முன்புவரை தனக்கு பாஜகவின் கொள்கையுடன் உடன்பட முடியாது என்றெல்லாம் சொன்னார். இப்போது பார்த்தால் வெளியுறவுத் துறை அமைச்சரை விட பயங்கரமாக பாகிஸ்தானுக்கு சவால் விடுகிறார், பல்டி அடித்து பாஜகவைப் பாராட்டுகிறார். பெரிய சர்க்கஸ் வித்தைக்காரராக இருக்கிறார் மனிதர். பா சிதம்பரமும் கிட்டத்தட்ட இந்த பாணியில்தான் பாஜகவுக்கு தூதுவிட்டுக் கொண்டிருந்தார். ஆனால் இப்போது மாறிவிட்டார். அவர் ரொம்பத் திறமையான மனிதர். பொருளாதார அறிவு மிக்கவர். அவரை தரூரைப் போல விட்டுவிடக் கூடாது.

இதெல்லாம் போகட்டும் - இன்றைய கதியில் நாம் இரண்டாம் உலகப் போருக்கு முன்பான ஜெர்மனியைப் போல மாறி வருகிறோம். வருகிறோம் என்ன மாறியே விட்டோம். வணிக நிர்பந்தங்கள் இல்லாமல் ஒரு மாத காலம் போர் நடத்த முடிந்தால், அந்தப் பதற்றச் சூழலை பயன்படுத்தி முழுமையான சர்வாதிகாரத்தை ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்தும் என இந்த சில நாட்களில் பார்த்தோம். நல்லவேளை டிரம்ப் தலையிட்டார். தெரிந்தோ தெரியாமலோ ஒரு அமெரிக்க சர்வாதிகாரி நம் நாட்டின் குடியாட்சியைக் காப்பாற்றிவிட்டார். இந்த அரசு எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு இப்போது நடந்துவரும் 'அரசை எதிர்த்தால்' தேச துரோக வழக்கு, சிறை எனும் போக்கு சான்றாக உள்ளது.

இன்று சில நண்பர்களிடம் இதைக் குறித்து உரையாடும்போது எனக்கு ஒன்று தோன்றியது - மிலன் குந்தெரா தனது "ஜோக்" போன்ற நாவல்களில் காட்டுவதைப் போல, சர்வாதிகாரத்தை இனி தனிமனிதர்களால் நேரடியாக விமர்சிக்க இடமிருக்காது. புனைவின் ஊடாகவும், புனைப்பெயர், மறைமுகப் பகடி வழியாகவும்தான் இனி அரசை யாராலும் விமர்சிக்க முடியும். அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ளதைப் போன்ற ஜனநாயகபூர்வமான போராட்டச் சூழலோ கருத்துரிமையைக் காப்பாற்றும் அரசியல் சட்டமோ நமக்கில்லை. ஆஷிஸ் நந்தி தனது "அந்தரங்க எதிரி" (The Intimate Enemy) நூலில் சொல்வதைப் போல 1947க்குப் பிறகு நம்முடைய ஆட்சியாளர்கள் வரித்துக் கொண்டது காலனிய ஆட்சியாளர்களின் ஆட்சி அமைப்பையும் சட்டங்களையுமே. காலனிய பிரஜைகளைப் போன்றே இந்திய அரசுகளும் இதுவரை நம்மைச் சந்தேகத்துடன் விரோதத்துடன் பார்த்து வந்தன. நெருக்கடிக் காலத்தில் பாஜக அரசு அதன் உச்சபட்ச சர்வாதிகாரச் சாத்தியங்களை வெளிக்கொணர்கிறது. ஆகையால் இனிமேல் மக்கள் நேரடியாக எதையும் சொல்ல இடமிருக்காது.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...