முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாவலெழுதுவது பற்றின குறிப்புகள் 1


 

'நாவலை எழுதும்போது அதைப் பின்னுக்குச் சென்று திருத்தக்கூடாது. முதல் வரைவை வருகிறபடி எழுதிவிட வேண்டும்' என்பார்கள். இது உண்மையே. ஆனாலும் விதிவிலக்குண்டு. சிலநேரங்களில் நாம் எழுதி வரும் ஒரு நாவலில் இருந்து ஒரு சிறிய இடைவேளை எடுத்து திரும்ப வரும்போது சின்னச்சின்ன குறைகள் தென்படும். அப்போது ஆரம்பத்தில் இருந்து சில திருத்தங்களைச் செய்வதே நல்லது. உ.தா., ஒரு கதாபாத்திரம் 200வது பக்கத்தில் திடீரென வந்தால்? அவருக்கான முன்கூறான விபரங்களை முதல் 50 பக்கங்களுக்குள் அங்கங்கே தூவ வேண்டும். காரண காரிய சரடு சரியாக காட்சிகளுக்குள் அமைக்கப்படவில்லை என்று தோன்றினாலும் அதையும் ஆரம்பம் முதலே அங்கங்கே செய்துவிட்டே மிச்ச கதையை எழுத முடியும். எனில் நாவலைத் திருத்தி அதன் இரண்டாவது வரைவை எழுதும்போது குழப்பங்கள் வராது. அப்போது பின்னுக்குப் போய் மீளெழுதுவதைவிட ஆரம்பத்திலே செய்வது நல்லது என்பது என் எண்ணம்.

ஒரு நாவலின் சரியான நடை, கதைசொல்ல வேண்டிய பாணி, மொழி என்ன என்பதும் முக்கியமான கண்டுபிடிப்பே. அதையும் சரியாக எப்போதும் நாம் துவக்கத்திலே கண்டறிவதில்லை. அதைச் சரியாகப் பிடிப்பதே சிலருக்கு பெரும் திகைப்பூட்டும் பணியாக இருக்கும். அங்கதமா, உருவக மொழியா, அடர்த்தியான குறியீட்டு மொழியா, இயல்புவாத மொழியா, மாந்திர்க எதார்த்தமா, உடைந்த மொழியா, முன்னுக்குப் பின் முரணான மொழியா? சொல்லப்போனால் இதைச் சரியாகப் பிடித்துவிட்டால் நாவலுக்கான பாதையும் திறந்துவிடும். ஏனென்றால் மொழிதான் நாவலைக் குறித்த நம் அகப்பார்வை.

அரிதாகத்தான் நாவல் நமக்கு வெட்டவெளிச்சமாக இருக்கும். பெரும்பாலும் எழுத எழுதத்தான் அதில் ஒளி தோன்றி பாதை தெரியும். அடுத்து என்ன வரப்போகிறது என்பது தெரியாது, ஏற்கனவே எழுத உத்தேசித்ததன் காரண காரிய உறவு புரியவில்லை என்பதே ஒரு நாவலை எழுதும்போது வரும் பெரிய நெருக்கடி. அதை எதிர்கொண்டு ஒவ்வொரு காரணமாகக் கண்டுபிடித்து கதையைத் தொகுக்கும்போதே மிகப்பெரிய உவகை கிடைக்கிறது.

நாவல் என்பது கதை அல்ல, அது அர்த்தங்களின் காரண காரியச் சரடு. வாழ்க்கை அனர்த்தமாக இருக்கையில் நாம் நாவல் எழுதுகிறோம். வாழ்க்கையின் பொருளின்மையால் துன்புறுவோருக்கு அதைப் பகிர்கிறோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.