முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாக்கைக் குறித்த ஒரு புனைகதை


 
நண்பர்: நீங்க என்னதான் சொல்லுங்க பாஸ் விஷ்ணுபுரம் கட்சியைப் போல வராது.

நான்: ஏன் பாஸ்?

நண்பர்: ஐந்து பேர் நாவல் எழுதுகிறார்கள் என்றால் சுலபத்தில் தலா நான்கு விமர்சனங்கள் உடனடியாக வந்துவிடும்.

நான்: அதான் எப்படி? ஒரு மதிப்புரை வாங்கவே நிறைய காத்திருக்க வேண்டியிருக்கே...

நண்பர்: அவங்களே மாறி மாறி எழுதிப்பாங்க. உலகத்தரம்னு சொல்லுவாங்க. நீங்க யாரைப் பத்தியாவது அப்படிச் சொல்லுவீங்களா? உங்களுக்கு பிரண்டா இருக்கிறது வேஸ்டு.

நான்: அதுக்காக ஆன்மாவைப் பணயம் வைக்க மாட்டேன் ...

நண்பர்: இருங்க இருங்க. இன்னும் முடியல. வெளிநாட்டுப் பயணம், விஷ்ணுபுரத்தின் துணைக் கட்சிகளின் விருதுகள் இப்படி ஏராளமான வாய்ப்புகள்.

நான்: அதுக்கும் எழுத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

நண்பர்: நீங்க ஒரு எழுத்தாளரா உருவாக பல வருடங்கள் எழுதணும். அப்பவும் கண்டுக்க மாட்டாங்க. ஆனால் ஜெயமோகனுக்கு கடிதம் மட்டும் எழுதிப் பாருங்க, தமிழ் விக்கியில் மாய்ந்து மாய்ந்து உங்களைப் பற்றி குறிப்பு வரும்.

நான்: தமிழ் விக்கிக்கு எந்த மரியாதையும் இல்ல. வாசக மனத்தில்தான் எழுத்தாளனுக்கு எப்போதுமான இடம். அதுக்காக கட்சியில் உறுப்பினர் ஆக முடியாதுங்க.

நண்பர்: ஜெயமோகன் பாராட்டி எழுதினா உங்க புக் நூற்றுக்கணக்கில் பிரதிகள் விற்கும்.

நான்: கமல் யாருக்கும் புரியாமல் பேசினாலும் விற்கும். இன்ஸ்டாவில் எவனாவது தறுதலை நம்மைப் புரமோட் பண்ணினாலும் விற்கும். புத்தகம் மட்டுமில்ல டூத் பேஸ்ட் கூடத்தான் புரொமோட் பண்ணினால் விற்கும். அது எழுத்தாளனின் பிரச்சினை இல்லை. வாசகர்கள் கவனித்து நம்மை உள்வாங்கணும், நாம் அவர்களின் ஆன்மாவைத் தொடணும். அதுதான் அசல் எழுத்தாளரின் இலக்கு.

நண்பர்: நீங்க விஷ்ணுபுரம் கட்சி மேடையில் புத்தகத்தோட வந்து நின்னா பரபரன்னு அங்க வரும் பங்கேற்பாளர்களே வாங்கிக் குவிப்பாங்கன்னு சொல்லலாமுன்னு நினைச்சேன். இல்ல வேணாம். ஒண்ணு சொல்றேன், நீங்க நாளைக்கு கைகால் வெளங்காம கஷ்டப்பட்டீங்கன்னு ஜெயமோகன் உங்களுக்குப் பணம் தந்து காப்பாற்றுவார். அதை வேறு யார் செய்வாங்க?

நான்: ஆமாம், அதோட 'என்னிடம் இரந்து பெற்றவன்' என்று நம்மைப் பற்றி பக்கம் பக்கமாக ஊர் ஊராக அசிங்கப்படுத்தி கேவலமாக உணர வைப்பார். சமத்துவம் இல்லாதபோது உதவி என்பது பிச்சை வாங்குவதற்குச் சமம். அதன்பிறகு அவர் அஞ்சலிக் கட்டுரை எழுதுவார், நம் பெயரில் விருதளிப்பார் எனும் பயத்திலேயே நம்மால் நிம்மதியாகச் சாகவும் முடியாது. வாழவும் முடியாது.

நண்பர்: சமூகமும் அரசும் கைவிட்ட படைப்பாளிகளுக்கு அவர் விருதளித்துக் கொண்டாடுவார். ஆவணப்படம், புத்தகம் ஆகியவை உங்களைக் குறித்து வெளியிடுவார். இதெல்லாம் வேறெங்க கிடைக்கும்?

நான்: ஆம், அதை ஏற்றால் நம்மைக் குறித்து அவர் வைக்கும் மனப்பதிவு சரியென்றாகும். அவரது மதிப்பீடுகளை சிலுவையாகச் சுமக்க வேண்டும். சாகித்ய அகாடெமி விருது வாங்கியவர்கள் அந்த அமைப்பை கன்னாபின்னாவென விமர்சித்திருக்கிறார்கள். அரசைக் கூட விமர்சிக்கிறோம். ஆனால் விஷ்ண்புரம் விருது பெற்றவர்கள் தம் நாக்கைப் பறிகொடுத்திருக்கிறார்கள். அவர்கள் நீண்ட மௌனத்திற்கு ஆட்படுகிறார்கள். அவர்கள் அதன்பின் பேசியதே இல்லை.

நண்பர்: எழுத்தாளர் ஏன் நினைத்ததை எல்லாம் சொல்லணும்? நாக்கை வச்சு என்ன பயன்? நாம வீட்டிலயும் வேலையிடத்திலயும் நினைச்சதை சொல்றோமோ?

நான்: எழுத்தாளராக இருப்பதே சுதந்திரம்தான். அதில்லாமல் எழுத்தில்லை. நினைத்ததை எழுதும் சொல்லும் சுதந்திரம். ஜெயமோகன் சொல்லும் பல அபத்தமான கருத்துக்களை மறுக்கும் சுதந்திரம். அவரது எழுத்து பாணியை, அழகியலை, கருத்தியலை மறுத்து புதிதாக எழுதும் சுதந்திரம். சுருக்கமா சொல்றதுன்னா நம் அரசியலமைப்பு நமக்கு அளிக்கும் உரிமை. அந்த நாக்கைத்தான் பிடுங்கி விடுகிறார்கள். விருது மேடைக்குத்தான் போக வேண்டுமென்றில்லை. அந்தக் கட்சியின் நிகழ்ச்சி நடக்கும் அரங்குக்குள் போகவே நாக்கை செருப்புடன் வெளியே கழற்றி வைத்துவிட வேண்டும்.

நண்பர்: அவர் மீதான மரியாதையால் அப்படி இருக்கிறார்கள்.

நான்: அதன் பெயர் மரியாதை இல்ல, பயம். இதைக் கட்சி ஒழுங்குன்னும் சொல்வாங்க. அவர்கள் தமக்குள் மட்டும் பேசிக் கொள்வார்கள். வெளியே சொல்ல பயம். யாராவது சொன்னால் கோபம்.

நண்பர்: அது அன்புங்க. தீவிரமான பற்று.

நான்: ஜெயமோகன் "சொல்லாமலே" கவுசல்யாவைப் போல. அவர் ஊமையை மட்டும்தான் காதலிப்பார். அவருக்குப் பிடிக்குமே என்று நாம ஊமையா நடிச்சா பிறகு அவருக்கு பயந்து ஒருநாள் நாக்கை வெட்டிக்கணும். ஆனால் அவருக்கு அது தெரிஞ்சா கண்ணீர் விட்டு அழுவார். அவருக்காக நாக்கை வெட்டிக்கொண்டு ஆயுள் பரியந்ததும் ஊமை பாஷையில் பேசிக்கொண்டு இருப்பதெல்லாம் ஒரு வாழ்க்கையா?
என்னைப் பாருங்கள். நான் என் நண்பர்களைக் குறித்து சுதந்திரமாக என் கருத்துக்களைச் சொல்கிறேன். அவர்கள் என்னை வெளியேற்றுவதில்லை. அவர்களும் என்னை விமர்சிக்கலாம். நான் பிளாக் செய்வதோ கட்சியில் இருந்து வெளியேற்றுவேன் என மிரட்டுவதோ இல்லை. அற்ப மனம் படைத்த பதர்கள் என்று ஏசுவதில்லை.

எனக்கு வெளிநாட்டுப் பயண வாய்ப்பு, மொழிபெயர்ப்பு வாய்ப்பு, மதிப்புரைகள், விற்பனை, விருது கிடைக்காமல் இருக்கும். ஆனால் ஒப்பற்ற ஒன்று என்னிடம் உள்ளது - என்னால் அதிகாரத்தை நோக்கி உண்மையைப் பேச முடியும்.

கடைசியாக ஒன்றைச் சொல்கிறேன் - எழுத்தாளர்கள் தனியர்கள். அவர்கள் குழு விலங்குகள் அல்லர். அளிக்கப்பட்ட இலக்குகளை கூட்டாக நிறைவேற்றுவோர் தனிப்பட்ட கனவுகளும் சுதந்திரமும் இல்லாதவர்கள். எழுத்தாளர்கள் ஒருபோதும் குழு, அமைப்பு, கட்சியில் உறுப்பினர்களாக இருக்கலாகாது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...