முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டி20 உலகக்கோப்பை 2026 - இந்தியாவின் வெளியேற்றம் நிகழுமா?

 


உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்களில் எதையும் கணிக்க முடியாது. ஆனாலும் இந்தியாவின் நிலைமை பால் என்று நினைத்து பால்டாயிலைக் குடித்த குடிகாரனின் நிலைதான். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகக் கிடைத்த மரண அடி அவர்களுடைய சராசரி ஓட்ட விகிதத்தை வெகுவாக இறக்கிவிட்டது. ஆகையால் அவர்கள் இனி அடுத்துள்ள இரு போட்டிகளில் வென்றால் மட்டும் போதாது. ஜிம்பாப்வேவும், மே. தீவுகள் அணி இரண்டுமே இந்தியாவைப் போன்றே மோசமான தோல்விகளைப் பெற்று சராசரி ஓட்ட விகிதத்தில் நமக்குப் பக்கத்தில் வரவேண்டும். மே. தீவுகள் ஜிம்பாப்வேவுக்கு எதிராக வென்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகத் தோற்க வேண்டும், அல்லது தென்னாப்பிரிக்கா அடுத்து ஆடும் இரு போட்டிகளையும் வெல்ல வேண்டும் என்பதான சில அம்புலிமாமா கணக்குகளை ஊடகங்கள் சொல்கின்றன. அப்படியெல்லாம் நடக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தியாவை அரை இறுதிக்குப் போக அனுமதிக்கக் கூடாது என்றே அவர்கள் ஒரு போட்டியை விட்டுக் கொடுத்தால் என்ன ஆகும்? தென்னாப்பிரிக்கப் பயிற்சியாளர் அப்படி யோசிக்கும் குசும்புக்காரர்தான். இன்னொரு சாத்தியம் இந்தியா ஜிம்பாப்வேயையும், மே. தீவுகளையும் பெரிய வித்தியாசத்தில் தோற்கடிப்பது. அது சுலபம் அல்ல. மே. தீவுகள் நல்ல ஆட்டநிலையில் உள்ளது. இந்த மெத்தனமான நின்றுவரும் ஆடுதளங்கள் அவர்களுடைய நாட்டிலுள்ள ஆடுதளங்களை ஒத்துள்ளன என்பதால் அதற்கான ஆட்டமும் பந்துவீச்சும் அவர்களிடம் உள்ளன. மட்டையாட்டத்தில் இந்தியாவைப் போன்றே அடித்துப் பிளக்கும் ஆற்றலும் உண்டு. ஜிம்பாப்வேயும் நன்றாக ஆடி வருகிறது. கடைசியாக பந்து வீச்சுக்குச் சாதகமான நம் ஆடுதளங்கள் பலவீனமான அணிகளையும் இந்தியாவையும் நெருக்கமாகக் கொண்டு வருகின்றன. ஆக, இந்த இரு அணிகளையும் (அவை குறிப்பிட்ட தினம் எதிர்பாராமல் மிக மட்டமாக ஆடினால் ஒழிய) இந்தியா கடுமையாகப் போராடியே வீழ்த்த முடியும்.


இந்தியா இப்போது வித்தியாசமாக எதையாவது செய்தாக வேண்டும். என்னுடைய சில பரிந்துரைகள்:


  1. பந்துவீச்சைப் பலப்படுத்துவது. கொல்கொத்தாவில் ஈடன் கார்டன்ஸில் அண்மையில் நடந்த உலகக்கோப்பைப் போட்டிகளில் சராசரி ஸ்கோர் 160-180தான். பெரும்பாலான போட்டிகளில் இத்தாலி ஆடியதால்தான் இந்தளவுக்காவது ஸ்கோரை எதிரணியால் அடிக்க முடிந்தது. நான் ரஞ்சிக் கோப்பைப் போட்டிகள் இந்த மைதானத்தில் நடந்ததையும் பார்த்தேன். இந்த ஆடுதளமானது வேகவீச்சாளர்களுக்கு எதையாவது எப்போதுமே வைத்திருக்கும். சுழலர்களுக்கும் சிறிது உதவும் என்றாலும் வேகவீச்சாளர்களே அதிகமாக விக்கெட் எடுக்கிறார்கள். மே. தீவுகளின் ரோமிரோ ஷெப்பர்ட் ஐந்து விக்கெட்டுகளை ஒரு போட்டியில் இங்கு எடுத்துள்ளார். சென்னையின் ஆடுதளமும் இப்படித்தான். இப்போதெல்லாம் சுழலர்கள் அங்கு அதிகமாக விக்கெட் எடுப்பதில்லை. இந்தியா ஹர்த்திக்கை மட்டும் நம்பி இரண்டு பிரதான வேகவீச்சாளர்களை எடுத்துப் போவது சில நேரங்களில் கைகொடுக்காது. அதனால் மோசமான ஆட்டநிலையில் இருக்கும் திலக்கை நீக்கிவிட்டு சிராஜையும், வாஷிங்டனின் இடத்தில் அக்ஸரையும் கொண்டு வரலாம். ஹர்த்திக்கையும் சேர்த்து 6 வலுவான வீச்சாளர்கள் இருந்தால் நம்மால் சில போட்டிகளில் தேவைப்படி வேகவீச்சையோ சுழலையோ கூடக் குறைய வீசி எதிரணியைத் திணறடிக்க முடியும். ஓரிருவர் அடிபட்டாலும் அது  (தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்ததைப் போல) அணியை நிலைகுலைய வைக்காது. எதிரணியை 140க்குள் தூக்க முடிந்தால் நம்மால் 15வது ஓவருக்குள் போட்டியை வென்று ஒட்டுமொத்த ஓட்ட சராசரியை அதிகரிக்கலாம். எப்படியும் இந்த ஆடுதளங்கள் மட்டையாட்டத்துக்கு ரொம்ப சாதகமாக இருக்காது என்பதால் 8 வரை மட்டையாடுவதால் பலனிருக்காது. அது வெல்ல உதவலாம், ஆனால் பெரிய வித்தியாசத்தில் வெல்ல உதவாது. 
  2. இப்போது இந்திய அணியின் துவக்க மட்டையாளரான அபிஷேக்கும் சாம்ஸனும் மூன்றாவது எண்ணில் ஆடும் திலக்கும் மோசமான ஆட்டநிலையில் இருப்பதால் திலக்கைக் காயம் என்று சொல்லி நீக்கிவிட்டு அவரிடத்தில் பிரியன்ஷ் ஆர்யாவைக் கொண்டு வரலாம். மற்ற மட்டையாளர்களின் பலவீனத்தைப் புரிந்து எதிரணியினர் சரியாகத் திட்டமிட்டு விட்டனர். அபிஷேக்குக்கும், திலக்குக்கும் பந்தை முழுநீளத்தில் வைடாகவும் குறைந்த வேகத்திலும் வீசிக் கட்டுப்படுத்துகிறார்கள். அவர்களும் சரியான ஆட்டநிலையில் இல்லாததால் சிக்கிக் கொள்கிறார்கள். ஆகையால் யாரும் எதிர்பாராதபோது பிரியன்ஷ் ஆர்யாவைக் கொண்டு வந்தால் அவரது எதிர்த்தாக்குதலில் எதிரணி வீச்சாளர்கள் சிக்கிக் கொள்வார்கள். இது இந்தியாவுக்கு சிறிது ஆசுவாசத்தைக் கொடுக்கும். முதல் 7 ஓவர்கள் எதிரணி வீச்சாளர்கள் குழம்பிப் போய்விட்டால் நம் மத்திய வரிசையால் ரன் குவிக்க முடியும். (வைபவ்வைக் கொண்டு வரலாம் என்றால் அவருக்கு இன்னும் 15 வயதாகவில்லை.)


இந்தியா ஒருவேளை தொடரில் இருந்து வெளியேறினால் அது இத்தொடரின் வருமானத்தைப் பெருமளவில் பாதிக்கும். ஒளிபரப்பும் சேனலும் விளம்பரதாரர்களும் நிலைகுலைந்து போவார்கள். நமக்கும் கல்யாண வீட்டில் சாவு விழுந்ததைப் போலும் நிலைமையாகும். அதனால் நம்புவோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...