ஒரு மளிகைக் கடை முன்பு ஒரு சின்ன டிரக்கில் இருந்து மூட்டைகளை ஒருவர் சுமந்து உள்ளே எடுத்துப் போய்க் கொண்டிருந்தார். மூங்கில் போன்ற மனிதர். சிக்ஸ் பேக் வைத்திருந்தார். இரண்டிரண்டு மூட்டைகளாக அநாயசமாக கமல் ஶ்ரீதேவியை உப்புமூட்டை எடுப்பதைப் போல தூக்கிக் கொண்டு போய்க் கொண்டிருந்தார். மொத்தமாக முப்பது மூட்டைகளுக்கு மேல் இருக்கும். சும்மா ஒரு மூட்டைக்கு இத்தனை என்று பார்த்தால் அந்த அரைமணியில் அவர் 600-700 ரூபாய் சம்பாதிப்பார் என்று தோன்றியது. ஒருநாளைக்கு 1000-2000 வரை சம்பாத்தியம் வரும். எனக்கு இதைக் குறித்து யோசித்தபோது தமிழ்நாட்டில் அரசுக் கல்லூரியில் உள்ள கௌரவ விரிவுரையாளர்களின் கூலிப் பிரச்சினை நினைவுக்கு வந்தது. அவர்களுக்கு மாதச் சம்பளம் 27,000. ஒரு வகுப்புக்கு ரூ 300 என்று கேள்விப்பட்டேன். அதாவது மூட்டை தூக்குபவரை விடக் குறைவான சம்பளம். சென்னையில் பிச்சைக்காரர்கள் சராசரியாக ஒருநாளைக்கு எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்று ஒரு காணொளி பார்த்தேன். அவர்கள் இந்த கௌரவப் பேராசிரியர்களை விட அதிகமாகச் சம்பாதிக்கிறார்கள்.
ஒருவர் மூட்டை தூக்க உடல் வலு மட்டும் போதும். ஆனால் விரிவுரையாளராக முனைவர் பட்டமும் சேர்த்து பத்தாண்டுகள் உழைக்க வேண்டும். தகுதித் தேர்வும் கூடுதலாக எழுதி வெல்ல வேண்டும். இந்த அறிவுக்கும் திறனுக்கும் வெறும் உடல் வலுவுக்குள்ள மதிப்பில்லை. பிச்சையெடுக்கும் கரத்துக்கு உள்ள மதிப்பில்லை. இப்போது வரைக்கும் 7000க்கும் மேலே அரசுக் கல்லூரிகளில் காலி இடங்கள் உள்ளன. அரசு இவர்களின் இடத்தில்தான் கௌரவ விரிவுரையாளர்களை வைத்து சுரண்டுகிறது. ஏனென்றால் அரசைப் பொறுத்தவரையில் கல்விக்கோ அறிவுக்கோ எந்த மதிப்பும் இல்லை. நீங்கள் அறிவுக்குச் சம்மந்தமில்லாத எந்த வேலை செய்தாலும் மதிப்புண்டு. ஆனால் படித்தவர்கள் மீது அரசுக்கு ஒருவித அலட்சியம் உண்டு. இன்னொரு பக்கம் கல்வியால் உயர்ந்த தமிழ்நாடு என்று புஜத்தை உயர்த்தி நீயா நானா போன்ற ஷோக்களில் முழங்குவார்கள். கல்வியால் உயர்ந்தவர்கள் கல்வியாளர்களை ஏன் பிச்சைக்காரரகளுக்கும் கீழாக நடத்துகிறார்கள். இன்னமும் சில தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு மாதம் 10,000 சம்பளம் கொடுக்கிறார்கள். நான் நேற்று கூட தமிழ்நாட்டுப் பள்ளியொன்றுக்கான விளம்பரத்தில் பார்த்தேன். நீங்கள் ரெண்டு வீட்டுக்குப் போய் பாத்திரம் தேய்த்தால் அப்பணத்தை பகுதி நேரத்தில் ஈட்டலாம். நீங்கள் எதற்குப் படித்து அப்பணிக்கு வர வேண்டும்? பாத்திரம் தேய்ப்பவர்களை விட குறைவானவர்களாக இச்சமூகம் ஏன் ஆசிரியர்களை நடத்துகிறது? ஏனென்றால் யாருக்கும் கல்வி மீது மரியாதை இல்லை.
கௌரவ விரிவுரையாளர்களுக்கு வருவோம். அவர்களுக்கு அரசு 11 மாதங்கள் ஒப்பந்தம் போடுகிறது. 12 மாதங்கள் என்றால் ஓராண்டு அனுபவச் சான்றிதழ் கேட்பார்கள் என்று இப்படி ஒரு நயவஞ்சக ஏற்பாடு. இந்த அப்பாவிகள் தொடர்ந்து தம்மை பணி நிரந்தரம் பண்ணக் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அரசுகளும் நீதிமன்றங்களும் தொடர்ந்து 19ஆம் நூற்றாண்டின் கொத்தடிமை முதலாளிகளைப் போன்றே பேசுகிறார்கள். ஒப்பந்தப்படி இது தற்காலிக வேலை, இவ்வளவு தான் சம்பளம் என்று சொல்லித்தானே எடுக்கிறோம், 11 மாதங்களுக்குத்தான் என்று சொல்லியிருக்கிறோமே என்கிறார்கள். இது அப்படியே முன்பு அடிமைகளை பண்ணை வேலைக்கு அழைத்துப் போகும்போது தரகர்கள் பேசியதைப் போன்றே இருக்கிறது. "நீங்களாகத்தானே வந்தீங்க? நாங்க என்ன உங்களைக் கடத்தியா கொண்டு வந்தோம்? ஹா".
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமாவளவன் ஒரு அறிக்கையில் இவ்வாறு சொல்கிறார்: "தமிழ்நாட்டில் 173 அரசு கலை அறிவியல் கல்லூரிகள், 7 கலைக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. ஆனால் இக்கல்லூரிகள் அனைத்தும் 'guest lecture' எனப்படும் கௌரவ விரிவுரையாளர்களை நம்பியே இயங்கி வருகின்றன. அதாவது முழுமையாக 30% சதவிகிதம் கூட இக்கல்லூரிகளில் நிரந்தர பேராசிரியர்கள் கிடையாது. இவ்வாறு இருக்கையில் இந்த கௌரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரத்திற்காக கடுமையாக சுரண்டப்படுவதாக அவ்வப்போது செய்திகள் வருகின்றன."
சரி, நீதிமன்றம் ஏன் தொடர்ந்து இவர்களின் நிரந்தரமாக்கலை எதிர்க்கிறது? இந்த கௌரவ விரிவுரையாளர்கள் முறையான போட்டித்தேர்வை எழுதி வராததால் அவர்களை இப்போது 'குறுக்குவழியில்' நிரந்தரமாக்கினால் அது கல்வியின் தரத்தைக் குறைக்கும் என அஞ்சுகிறார்களாம். யார் அவர்களை அவ்வாறு 'குறுக்குவழியில்' எடுக்கச் சொன்னது? அரசுக்கு ஒரு பிச்சைக்காரரை விடக் குறைவான சம்பளத்தைக் கொடுக்க வேண்டும். அதனாலே அது முறையாக போட்டித் தேர்வை நடத்துவதில்லை. அப்படி நடத்தினால் முறையாக சம்பளம் கொடுக்க வேண்டுமே. போட்டித் தேர்வில் கடுமையாக முயன்று அதிக மதிப்பெண் பெற்று வருகிற ஒருவர் 27,000 பணத்தை ஏற்க மாட்டார். அத்தொகையை நீதிமன்றமும் ஏற்காது. அதனால் அரசு ஒரு குறுக்குவழியைக் கண்டுபிடிக்கிறது. அதில் இந்த விரிவுரையாளர்கள் சிக்கிச் சீரழிகிறார்கள்.
மேலும், அரசு இந்த 7000 சொச்சம் இடங்களை நிரப்பினாலே போட்டித் தேர்வில் தகுதி மதிப்பெண் வரம்பு குறையும், கௌரவ விரிவுரையாளர்களால் கூட அதில் தேர்வாகி வேலையைப் பெற முடியும். ஆனால் 2000 இடங்களையே அரசு நிரப்புவதால் போட்டி அதிகமாகி பலருக்கும் வேலை கிடைக்காத நிலை ஏற்படுகிறது.
நவீனக் கொத்தடிமை முறையை இப்படிப் பின்பற்றும் குற்றத்தைச் செய்ததற்குப் பரிகாரமாக அரசுக்கு இவர்களை நிரந்தரமாக்க அவசியம் உள்ளது. நீதிமன்றம் எப்போதுமே நீதியுணர்வோ அறவுணர்வோ இல்லாமல் தான் பேசும். சட்டம் படிக்கும்போது முதல் தகுதியாக இதயத்தைப் பறித்து அங்கு ஒரு கருங்கல்லை வைத்துத் தைத்து அனுப்பி விடுவார்கள். ஆகையால் நீதிமன்றத்தால் அவ்வாறு மட்டுமே பேச முடியும். ஆனால் அரசுக்கு இதயமும் கொஞ்சம் ஈரமும் இருக்க வேண்டும்.
இப்படி அரசு தொடர்ந்து கல்வி விசயத்தில் அநீதியாகவே நடந்து வருகிறது. இதைச் சரி செய்யும் நோக்கிலேயே 2020இல் அப்போதைய அதிமுக அரசு ஒரு அரசாணை வெளியிட்டு கௌரவ விரிவுரையாளர்களை தனியாக போட்டித் தேர்வு நடத்தி நிரந்தரமாக்குவதாக அறிவித்தது. திமுக அரசு ஆட்சிக்கு வந்தது. அது நீதிமன்றத்தின் கருங்கல் இதயத்தைக் கடன் வாங்கிப் பொருத்திக் கொண்டு அந்த ஆணையை ரத்து பண்ணி புதிய ஆணையைப் பிறப்பித்தது. இதை எதிர்த்து கௌரவ விரிவுரையாளர்கள் சங்கம் வழக்குத் தொடுத்தது. ஒரு ஆணையின் படி நியமனங்கள் நடத்தப்பட வேண்டி இருக்கும்போது குறுக்கே புகுந்து இன்னொரு ஆணைப் பிறப்பித்து அதைத் தடுக்கலாகாது என்று நீதிமன்றம் கூறி விளக்கம் கேட்டது. இந்தப் பிரச்சினை இப்படியே இழுத்துக் கொண்டு போகிறது. கடந்த மாதம் இதற்காகத்தான் கௌரவ விரிவுரையாளர்கள் சென்னை வந்து தர்ணா செய்தார்கள். அரசு அவர்களைக் கைது பண்ணி அவமதித்தது. கடந்த டிசம்பர் மாதம் அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியர் போட்டித் தேர்வு நடந்தது. அதற்கான முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் மேற்சொன்ன வழக்கு குறுக்கே வந்தது. முடிவுகளை ஒத்தி வைத்தார்கள். அப்போது கருங்கல் இதயம் பொருத்தாத நீதிபதிகள் "நீங்கள் ஏன் 7000க்கு மேல் இடங்கள் காலியாக இருக்கும்போது அவற்றில் பாதியைக் கூட நிரப்பவில்லை?" என விளக்கம் கேட்டிருக்கிறார்கள். அதிக இடங்கள் நிரப்பப்பட்டால் அதிகம் பேர்களுக்கு வேலை கிடைக்கும், கௌர விரிவுரையாளர்களின் நிலையையும் பரிசீலிக்க இயலும்.
இன்னொரு சிக்கல் மாநில அரசுகள் இன்று இந்தியா முழுக்கவே அரசுக் கல்லூரிகளை மூடிவிட்டு மொத்தமாக தனியாரிடம் ஒப்படைக்கலாமா எனும் மனநிலையில் உள்ளன. அதனால்தான் விதிவிலக்கில்லாமல் இந்த 'கௌரவக் கொத்தடிமைகள்' முறையைப் பின்பற்றுகிறார்கள். அரசுக் கல்லூரிகள் இல்லாமல் ஆனால் கல்விச் செலவு கன்னாபின்னாவென எகிறி உயர்கல்வி எட்டாக்கனியாகும். ஆகையால் இது சில ஆயிரம் பேர்களின் தனிப்பட்ட பிரச்சினை மட்டுமல்ல. இது உயர்கல்வியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிற முடிவு.
கௌரவ விரிவுரையாளர் நடைமுறை எதிர்காலத்தில் ஒழிக்கப்பட வேண்டும். அப்படியே தொடரப்பட்டாலும் கேரளாவில் நடப்பதைப் போல மாதம் 55,000 மேல் ஊதியம் கொடுக்க வேண்டும் கர்நாடகாவில் மாதம் 35,000 கொடுக்கிறார்கள். அடிப்படையான பாதுகாப்பு, அனுபவச் சான்றிதழ் இல்லாமல் பணி செய்கிறவர்களுக்கு ஊதியத்திலாவாது ஈடுகட்ட வேண்டும்.
விதவைகளுக்கு உதவித் தொகை, பெண்கள் பேருந்தில் இலவசமாகப் பயணிக்க செலவு என அள்ளிச் செலவழிக்க இந்த அரசால் முடியும், தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே உச்ச மாநிலமாக இருக்கிறது, சாலைகள் தரமாக அமைக்கப்படுகின்றன, ஆனால் அரசுக் கல்லூரி மாணவர்களின் கல்வித் தரத்துக்காக நிதியைச் செலவிட முடியாதா? ஒரு சமூக நீதி அரசு அப்படித்தான் செய்ய வேண்டும். ஏஸியில் இருக்கிற அதிகாரிகளின் பேச்சைக் கேட்காமல் அரசு தெருவுக்கு வந்து எளியவர்களின் மனநிலையில் இருந்து யோசிக்க வேண்டும். அரசுக்கு உண்மையிலேயே கல்வித் தரத்தில் நம்பிக்கை இருந்தால் அதிக காலி இடங்களை நிரப்பும். அறத்தில் நம்பிக்கை இருந்தால் சுரண்டப்படுவோருக்கு ஆதரவாக நிற்கும்.
Comments