முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முதிர்ச்சியற்ற அணி



 இந்தியா தெ.ஆ அணியிடம் டி20 உலகக்கோப்பைப் போட்டியில் தோற்றதற்கு பல்வேறு காரணங்களை நிபுணர்கள் ஆராய்ந்து கூறியுள்ளார்கள். எனக்கு அவற்றில் ரொம்ப முக்கியமாகப் பட்டது அவர்கள் 'தெனாவட்டாக ஆடினார்கள்' என்பது. பாகிஸ்தானுக்கு எதிராக மட்டுமே இந்தியாவின் மட்டையாட்டம் உருப்படியாக இருந்தது என முன்னாள் பாக் வீச்சாளர் முகம்மது அமீர் சொல்லியுள்ளது சரிதான். பாகிஸ்தானுக்கு எதிராக வென்றதுமே நாம் உலகக்கோப்பையை ஜெயித்துவிட்டோம் எனும் திருப்தி வந்துவிடுகிறது. அடுத்து நாம் எப்படியும் அரை இறுதியை அடைந்துவிடுவோம் எனும் மனப்பான்மை. தெ.ஆ அணியை ஏற்கனவே இரு பக்க டி20 தொடரில் முறியடித்ததால் என்ன நடந்தாலும் கடைசியில் ஜெயிப்போம் எனும் மிகை நம்பிக்கையும் இருந்திருக்கக் கூடும். கூடவே தோல்வி பயமும் பதற்றமும். ஆனால் தெ. ஆ இந்தக் குழப்பங்கள் இல்லாமல் தெளிவாகத் திட்டமிட்டு வந்து தம் இலக்கை நோக்கிப் பயணித்தார்கள். 3 விக்கெட்டுகள் இழந்த பின்னரும் கூட வருண் சக்கரவர்த்தியை அடிக்க வேண்டும் என இட்டத் திட்டத்தை நிறைவேற்றினார்கள். ஸ்டப்ஸ் கடைசி ஓவர் வரை ஆட வேண்டும் எனும் கடமையைச் செய்தார். மார்க்ரம், இங்கிடி, யான்சனும் புள்ளிவிபரப்படி வைடாக முழுநீளத்தில் வீசினார்கள், மெதுப்பந்துகளை பூச்சொரிவது போல போட்டுக் கொண்டே இருந்தார்கள். இப்படி ஒவ்வொருவரும் தமக்கு அளிக்கப்பட்ட பணிகளைச் செய்தனர். இந்தியாவிடம் இத்தகைய அணுகுமுறை இல்லை. அபிஷேக், இஷான் தம் ஈகோவுக்காக ஆடினர். திலக் தன் மீதுள்ள அழுத்தத்தினால் அடித்தாடும் திட்டத்துடன் வந்து சுற்றி அவுட் ஆனார். அதாவது அவர் அணியின் செயல்திட்டத்துக்கு ஏற்ப ஆடவில்லை. இணையத்தில் ரசிகர்கள் வைக்கும் ஸ்டிரைக் ரேட் விமர்சனத்துக்குப் பதிலளிக்க ஆடினார். இவர்கள் இப்படி ஆடுவதைக் கண்டு பயந்து கம்பீர் வாஷிங்டனை அனுப்பினார். ஆட்டத்தை வெல்வதற்காக அல்ல, ஆட்டம் கைவிட்டுப் போகக் கூடாதே எனும் எதிர்மறை எண்ணத்தில் அனுப்பினார்.

இப்படி தெனாவட்டு + பயம் இந்தியாவைச் செலுத்தியது. முதலில் ஆட்டத்தை மதிக்க வேண்டும். அடுத்து ஒவ்வொரு நிலையிலும் எங்கு உள்ளோமோ அதை மதித்து நடந்து கொள்ள வேண்டும். இருப்பதை விட்டுப் பறக்கக் கூடாது. இந்த அணி தட்டையான ஆடுதளங்களில் சரவெடியாக ஆடும்தான். ஆனால் உலகக்கோப்பை ஆட்டத்தொடரை வெல்வதற்கான முதிர்ச்சி அவர்களிடம் இல்லை. எதற்கெடுத்தாலும் எகத்தாளமாகப் பதில் சொல்வது, அக்ஸர் போன்ற சிறந்த வீச்சாளரை அமர வைப்பது என முதிராச் சிறுவர்களைப் போல நடந்துகொள்கிறார்கள். தம் தவறை ஒருபோதும் ஒப்புக் கொள்வதும் இல்லை. இவர்களுடைய உடல்மொழி அப்படியே குட்டி ஷாவினுடையதைப் போன்றே உள்ளது. தெ.ஆப்பிரிக்காவைப் பாருங்கள், என்னவொரு கண்ணியம், பொறுப்பு, பணிவு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...