முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாதி பாலத்தைத் தாண்டியதன் பிரச்சினைகள்



கடந்த முறை பாகிஸ்தானை இந்தியா முறியடித்தபோதும் இது நடந்தது - ஏதோ உலகத்தையே வென்றது போல மக்கள் சமூகவலைதளங்களில் கொண்டாடினார்கள். ஊடகங்களும் அதை ஊக்கப்படுத்தின. இது இந்திய அணியின் அடுத்தடுத்த ஆட்டங்களின் தரத்தை பாதித்தது. அவர்கள் கவனம் சிதறியவர்களாகவும், அதிக அழுத்தத்தினால் தடுமாறுகிறவர்களாகவும் தோன்றினார்கள். அரை இறுதிப் போட்டியை நாம் அடைகிற இத்தருணத்திலும் அத்தகைய கொண்டாட்டங்களின் மிகையை நோக்கிச் செல்கிறோம். இதுவும் நம்மை பாதிக்கும் என்றே நம்புகிறேன். ஆகையால் இது நல்லதல்ல. மிகையை விட மட்டுப்படுத்தப்பட்ட கொண்டாட்டங்களே ஏற்றவை. தொடர்ச்சியாக சஞ்சு சாம்ஸன் உலகையே வென்றுவிட்டதாக நாம் பாவிப்பது, அந்த உணர்வை மிகைப்படுத்துவது அவரை மிகுந்த நெருக்கடிக்குள் தள்ளும். நம் அணி வீரர்கள் அதிகமாக சமூக வலைதளங்களைப் பின் தொடர்கிறார்கள்.

நாம் ஏன் ஒன்று முடியும் முன்பே அது நிறைவுற்றுவிட்டதாகப் பாவித்து கொண்டாட ஆரம்பிக்கிறோம்? இது என்ன மாதிரி மனநிலை? இதை நான் முன்பு கண்டதில்லை? இதற்கு சமூகவலைதளங்கள் மட்டுமே காரணமா? இல்லை, சமூகவலைதளங்கள் இந்தப் போக்கின் வெளிப்பாடு மட்டுமே. வெவ்வேறு சமூகக் காரணிகள் நம்மை இந்நிலையை நோக்கித் தள்ளி உள்ளன என நினைக்கிறேன்.

ஒன்றால் நிறைவு கொள்ளுதலும் ஒன்றை 'அடைதலும்' இருவேறு சங்கதிகள்:
அடைதலை ஒருவித கைப்பற்றுதலாக நாம் பார்க்கலாம். அதாவது ஒரு மொபைல் விளையாட்டில் எதிரியை, எதிரியின் கோட்டையைக் கைப்பற்றுவது, ஒரு உணவுப் பொருளை அடைவது, ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணை அடைவது. ஆனால் எதை அடைந்தாலும் அதில் நிறைவு வரவில்லை எனும் உண்மை முதலில் நம்மை இடிபோலத் தாக்கும்.

நிறைவு என்பது முழுமை அல்ல, நிறைவு ஒரு ஆழமான பற்றுதல். பற்றுதல் என்பது இங்கு இல்லாத ஒன்றை நோக்கி மனதளவில் பாய்தல். ஆக, நிறைவு என்பது முழுமை அல்ல, முழுமையின்மையைக் கொண்டாடுதல், ரசித்தல், அதில் பெரும் திளைப்பை உணர்தல் (கீர்க்கெகாட் சொல்லும் விசுவாசத்தின் பேரிலான முன்னோக்கிய பாய்ச்சல்). இன்றைய தாராளவாதப் பொருளாதாரத்தில் நாம் நிறைவின்மையைக் கண்டு வெகுவாக அஞ்சுகிறோம். ஒவ்வொன்றையும் பொருண்மையாக நிறுவ வேண்டிய கட்டாயம் இன்று உள்ளது. அன்பா, திகைப்பா, வெறுப்பா அதை ஒரு பொருளாகக் காட்டு என்பதே தாராளவாதப் பொருளாதாரத்தின் விழைவு, வழிமுறை, மதிப்பீடு எல்லாம். காதலர் தினத்தன்று இவ்வளவு பரிசுப் பொருட்கள் அதனாலே விற்கப்படுகின்றன. வெறுப்பை மிகுதியாக்கி ஒரு மற்றமையைக் கண்டறிந்து அவர்களைக் கொன்று அவர்களுடைய குருதியைக் காணத் தவிக்கிறோம். இது ஒரு காட்டுமிராண்டி, நாகரிகமற்ற மனநிலை அல்ல. இது முதிரா அகவிழைவு அல்ல. இதுதான் தாராளவாதத்தின் ‘விபத்து’. எல்லாவற்றையும் பொருண்மைப்படுத்தி கண்முன் காட்ட வேண்டிய அழுத்தத்தின் விபத்து. இது எல்லா தளங்களிலும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

நாம் வாழ்கிற பின்நவீனக் காலமானது இச்சிக்கலை இன்னொரு விதத்தில் எதிர்கொள்கிறது - அது தள்ளிப் போட முயல்கிறது. தள்ளிப் போடுதலைத் தன் இருத்தலின் அடிப்படையாக்குகிறது. தள்ளிப் போடும் ஒவ்வொரு சிறு தருணத்திலும் அது நம்மைத் திளைக்க வைக்கிறது. நாம் அடைய வேண்டிய இலக்கு அடைய இயலாத ஒன்று என நாம் ‘உணர்வதிலும்’ மிகுந்த உவகை உண்டு என நம்மை நினைக்க வைக்கிறது.

இடைப்பட்ட வேளையின் மகத்துவத்தில் நாம் மகிழ்கிறோம். இதன் அடிப்படையானது எதற்கும் அடிப்படையில்லை என நம்புவதாகும்; சாராம்சத்தை மறுப்பதாகும். உலகக்கோப்பையானது, அதை வெல்வதானது ‘கிரிக்கெட் விளையாட்டின் உச்சத்தைத் தொடுவது’ எனும் அர்த்தத்தை வெல்வதாகும். நாம் இதை முடிந்தளவுக்குத் தள்ளிப் போட்டு அந்த மகத்துவத்தை அடைய முயல்கிறோம். மனதுக்குள் ஒவ்வொரு சிறு போட்டியின் வெற்றியையும் பேரனுபவமாக பாவிக்கிறோம். ஒவ்வொரு நெருக்கடியான வெற்றியும் ஒரு உலகக்கோப்பை இறுதிப் போட்டி வெற்றியாகிறது. அதே நேரம் நாம் இதை முழுமையாகத் தள்ளிப் போடவும் இயலாது என்பதால் முன்கூறான திருப்தியும் பரவசமும் நம்மை இலக்கைத் தொடும் முன்பே தளர்ச்சியடைய வைக்கும் அல்லது அதை மேலும் அஞ்சி விலகி ஓட வைக்கும்.

இதுதான் பாதி பாலத்தைத் தாண்டியதும் ஆற்றில் குதிக்க வைக்கிற மனநிலை. இதைத் தவிர்க்க ஏதோ ஒன்றின் மீது தீவிர பற்றுதல் கொண்டு, இல்லாத ஒன்றின் மீதான, ஒருபோதும் சென்றடைய இயலாத ஒன்றின் மீதான பற்றுதல் மட்டுமே வெற்றியெனக் கருதும் மனநிலையை வளர்க்க வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...