Skip to main content

அறிவுஜீவி அடியாட்கள் எனு மாய ரூபங்கள்






 

இன்று நான் ருத்திரமூர்த்தி என்ற ஒரு நண்பரின் சமூகவலைதளப் பக்கத்தில் வந்த பின்னூட்டத்தைப் படித்து சிரித்துக் கொண்டிருந்தேன். நண்பர் ஒரு பிரசித்தமான அறிவுஜீவி அடியாள். பின்னூட்டத்தில் ருத்திரமூர்த்தியிடம் ஒருவர் இவ்வாறு கேட்கிறார்: "அமித் ஷா பத்திரிகை ஆரம்பித்து உங்களுக்கு எழுத வாய்ப்பளித்தால் எழுதுவீர்களா?" அதற்கு ருத்திர மூர்த்தி "ஓ எஸ், அதற்கு என்ன எழுதுவேனே. எனக்குத் தேவை என் கருத்துக்களை பொதுமக்களிடம் பரவலாக்க ஒரு வெளி. அதை யார் அளித்தாலும் பயன்படுத்திக் கொள்வேன்." என்று பதிலளிக்கிறார். ருத்திரமூர்த்தி எதையும் தன் நாவன்மையால் நியாயப்படுத்த முடியும் என நம்பக் கூடியவர். உ.தா., ஊழலால்தான் எளிய மக்கள் சமூக நீதியைப் பெறுகிறார்கள் என்று நிறைய கலைச்சொற்களுடன் ஐம்பது பக்க கட்டுரையை எழுதுவார். ஊழலால் தான் சமூக நீதி சாத்தியமாவதில்லை என்று கட்டுரை எழுதிக் கொடுங்கள் என்று கேட்டால் அதையும் அதே தீவிரத்துடன் சில கருத்துக்களை வளைத்து ஒடித்து எழுதிக் கொடுப்பார். எனக்கு இந்த பயங்கர தன்முனைப்பின் காரணமாகவே ருத்திர மூர்த்தியை ரொம்பப் பிடிக்கும். தான் செய்கிற கிறுக்குத்தனங்களை உணராத ஒரு களங்கமின்மை ருத்திரமூர்த்தியிடம் உண்டு.

அரசியலில் மட்டுமல்ல வேலையிடங்களில், நட்புக் குழுக்களில், குடும்பத்தில் கூட ருத்திர மூர்த்தியைப் போன்ற அறிவுஜீவி அடியாட்களுக்கு ஒரு இடமுண்டு. தம் ஆகிருதியை அவர்கள் எப்போதும் பெருக்கிக் காட்டுவதால் அவர்களிடம் உடனடி மதிப்பு கொண்டு ஒரு நாற்காலியைக் கொடுத்து விடுவார்கள். எல்லாவற்றையும் சந்தர்பத்துக்கு ஏற்ப வளைத்துச் சொல்லி அதற்கு ஒரு அறிவுஜீவி முகாந்திரம் கொடுப்பதே இத்தகையோரின் பணி. ஆணவக் கொலையைக் கூட நியாயப்படுத்தி ஒரு மணிநேரம் பேசுவதுடன் பத்து கட்டுரைகள் கூட எழுதிவிடுவார்கள். அதைப் போல ஒரு கரடுமுரடான விசயத்தை அப்படியே நைசாக சமூக நீதியுடன் தொடர்புபடுத்தினால் அவர்கள் கட்சிப் பணியாளர் ஆகிவிடலாம். இலக்கிய வளர்ச்சியுடன் முடிச்சிட்டால் இலக்கிய அறிவிஜீவி அடியாளாகலாம். "விலங்குப் பண்ணை" நாவலில் நாவலில் Squealer என்று ஒரு பாத்திரம் உண்டு (ஸ்டாலினிய ரஷ்யாவில் சில எழுத்தாளர்களையும் பத்திரிகையாளர்களையும் பகடி செய்ய ஆர்வல் அப்பாத்திரத்தைப் படைத்ததாகச் சொல்வார்கள்). இந்த ஸ்க்யூலர் எங்கு போனாலும் அங்கு நடக்கும் ஒரு பிரச்சினையை சர்வாதிகாரி நெப்போலியனுக்குச் சார்பாக சமத்காரமாக மாற்றி நியாயப்படுத்தி ஒரு கதையைக் கட்டி விடுவார். அதற்கென்று ஒரு தர்க்கம், அறம் எல்லாம் அவரிடம் எப்போதும் இருக்கும். சாப்பிட சோறு இல்லையா, அதுதான் தேசத்தின் வளர்ச்சிக்கு உத்தமமானது என்று அழகாக அரைமணிநேரம் பேசி விலங்குகளை நம்ப வைத்து விடுவார். இம்மாதிரியானவர்கள் இன்று தமிழில் அதிகமாகி விட்டதாக ஒரு தோற்றம் நிலவுகிறது. இது உண்மை அல்ல. அவர்கள் முன்பும் இருந்தார்கள், எப்போதும் இருப்பார்கள். அவர்களுக்கு அப்போது வேறு ஒரு பாத்திரம், இடம் இருந்தது. இன்று அது கட்சி சார்ந்ததாக மாறிவிட்டது. அவ்வளவுதான்.
நீங்கள் ஸ்க்யூலரையே எடுத்துக் கொள்ளலாம். "விலங்குப் பண்ணை" நாவலில் ஒரு புரட்சி வெடித்து ஆட்சி மாற்றம் வந்து விலங்குகளில் பன்றிகள் அதிகாரத்துக்கு வருகிறார்கள். அப்போதுதான் ஸ்க்யூலர் எனும் பன்றி நரேட்டிவ் செட் செய்கிற, கதை கட்டுகிற பணியை எடுத்துக் கொள்கிறார். அதற்கு முன்பு அவர் மற்ற பன்றிகளைப் போல தன் வேலையைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தார். ஆட்சி அதிகாரம் வந்ததும் அவரது உறங்கிக் கொண்டிருந்த 'திறமைக்கு' புதிய வேலை வந்துவிட்டது. 2014க்குப் பிறகு பாஜக ஆட்சிக்கு வரும் முன்பே நம் ஊரில் உள்ள ஸ்க்யூலர்களுக்கு 'வேலை' கிடைத்துவிட்டது. இலக்கியவாதிகளில் இருந்தும் சிலர் அப்பணிகளை சிரமேற்கொண்டார்கள். அன்னா ஹசாரே பற்றி புத்தகம் எழுதினார்கள். மதவாதத்தை இலக்கிய மொழியில் பேசி அதற்கு ஒரு குழுவைத் திரட்டி அதற்கு அறிவுஜீவி முகாந்திரத்தை உருவாக்கினார்கள். திமுக இங்கு ஆட்சிக்கு வந்ததும் கூட சில ஸ்க்யூலர்கள் தோன்றினார்கள். இடம், வலமென்றெல்லாம் வித்தியாசம் இல்லை. இத்தகையோரை நீங்கள் குடும்பங்களில், திண்ணையில் அமர்ந்து அரட்டை அடிப்போரில், அலுவலக அதிகார கோஷ்டிகளில் என எல்லா தளங்களிலும் காணலாம். இலக்கியத்திலும் ஊடகங்களிலும் மட்டும் ஒரு உன்னதமான கொள்கையை, கோட்பாட்டை முன்னெடுத்து வெகுமக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக தாம் கட்சியுடனோ அதிகாரத்துடனோ கைகோர்த்திருப்பதாக, பண்பாட்டு அமைப்புகளில் கலந்திருப்பதாக, அவற்றை உருவாக்கி இருப்பதாகக் கூறுவார்கள். குற்றங்களுக்கும் ஊழலுக்கும் ஒரு நியாயமான விளக்கத்தை உருவாக்குவதும் கதையாடல்களை சளைக்காமல் உற்பத்தி செய்வதுமே இவர்களுடைய ஒரே இலக்கு. என் நண்பர் ருத்திரமூர்த்தியை எடுத்துக் கொண்டால் அவர் செல்லாத இயக்கங்களோ கட்சிகளோ எழுதாத பத்திரிகைகளோ கைவைக்காத கோட்பாடுகளோ இல்லை. எந்த விருந்தென்றாலும் அங்கு விளம்பப்படும் சோற்றில் அவர் கை வைத்திருப்பார். அதன்பிறகே இங்கு எதற்கு வந்தோம் என்று யோசித்து அதற்கு ஒரு காரணமும் கண்டுபிடித்து அதைப் பற்றி பத்து பக்கங்கள் எழுதுவார். எழுதி பலரையும் நம்பவும் வைப்பார். அவரை விருந்திற்கு அழைத்து வந்ததும் தானே என்று நான் நீ என்று பலரும் சண்டை போடுவார்கள்.
இத்தகையோருக்கு தாம் பெறுகிற அதிகாரமும் பணமும் கூட (விருந்தில் பரிமாறப்படும் சோறு) இரண்டாம் பட்சமே எனத் தோன்றுகிறது. ஏனென்றால் அதிகாரத்தையும் பணத்தையும் வேறுவழிகளில் கூட அவர்கள் ஈட்ட முடியும். பொய்யை உற்பத்தி செய்து மக்களைக் கட்டுப்படுத்துவதில் ஒருவித இன்பம் உள்ளது. அதில் திளைக்கவே அவர்கள் விரும்புகிறார்கள். அது ஒரு அபரிதமான போதை. அதில் அவர்கள் ஜென்ம சாபல்யம் அடைவார்கள். தமிழில் சில ஊடகவியலாளர்கள் இதனால் பல கோடி மதிப்பிலான வீடுகளையும் சொத்துக்களையும் பெறுகிறார்கள், வேறு சிலர் விருதுகளைப் பெறுகிறார்கள். ஆனால் இவை கிடைக்காவிட்டாலும் கூட இப்பணிகளைச் செய்ய அவர்கள் தயங்க மாட்டார்கள் என்பதே நிஜம்.
ஸ்க்யூலர்கள் ஆக விரும்பாதவர்களே அதிகம். அவர்கள் எல்லார் கண்ணிலும் பட மாட்டார்கள். அவர்கள் அறிவுஜீவி அடியாட்களாவதில்லை. அதில் அவர்களுக்கு இன்பமோ நிறைவோ கிடைக்காது. என்ன பிரச்சினை என்றால் அறிவுஜீவியாக இருந்தாலோ படைப்பாளியாக விளங்கினாலோ கேட்காமலே அவர்களுக்கும் 'அடியாள்' பட்டம் கிடைத்துவிடும். எதாவது ஒரு பக்கம் அவர்கள் அடியாளாக இருப்பதாக பிறர் நம்ப ஆரம்பிப்பார்கள். இந்த 'அடியாள் மயக்கம்' ரொம்ப காலமாகவே நம் சூழலைப் பிடித்தாட்டுகிறது - நமது பழைய சிறுபத்திரிகைகளை எடுத்துப் படித்த்ப் பார்த்தால் 'யார் யாருடைய அடியாள்' என்று விவாதித்துக் கொண்டிருப்பார்கள். சிலரை அமெரிக்காவின் அறிவுஜீவி அடியாள் என்றெல்லாம் நம்பியிருக்கிறார்கள். ஆனால் "விக்ரம்" படத்தில் வருவதைப் போல உண்மையான 'ஏஜெண்டுகள்' மிகச்சிலரே. அவர்கள் பிறவியில் இருந்தே ஏஜெண்டுகளாக இருப்பார்கள். அவர்கள் இலக்கியம் பக்கம் வருவார்கள், ஊடகத்தில் இருப்பார்கள், கல்யாணம் பண்ணி குழந்தை பெற்றுக் கொள்வார்கள், அரசியல் பேசுவார்கள், ஆனால் இவற்றின் ஊடாக அவர்கள் எப்போதும் ஏஜெண்டாக இருப்பதையே ரசிப்பார்கள். அவர்கள் தம்மைப் போல் அல்லாதவர்களை வெட்டி ஆபீஸர், பொறுப்பற்றவர்கள், செயலற்றவர்கள், வரலாற்றில் இடமற்றவர்கள் என்று ஏசுவார்கள். இப்பேச்சுக்குப் பயந்து சில நிழல் அசைவுகள் தோன்றும். அதனால் எங்கும் 'அறிவிஜீவி அடியாட்கள்' நிரம்பி இருப்பதாக ஒரு தோரணை ஏற்படும். உண்மையில், அறிவுஜீவிகளும் படைப்பாளிகளும் இவர்களையும் இவர்கள் வீசும் வலையையும் (விருது, அமைப்பு, வீடு, சொத்து) பொருட்படுத்தாமல் செயல்பட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள். நான் ஆரம்பத்தில் சொன்ன ருத்திர மூர்த்திக்கும் பதவி, பணம் எல்லாம் ஒரு பொருட்டல்ல. அவரைச் செலுத்துவது ஒரு தீவிர அதிகார ருசி. புலியின் நாவில் ரத்த ருசி எப்போதும் வீற்றிருப்பதைப் போல இவர்களின் நாவில் ஒரு ருசி பிறவியில் இருந்தே இருக்கும். ஏனென்றால் இத்தகைய மிதமிதஞ்சிய ருசி ஒரு மனப்பிறழ்வு. அது எல்லாரையும் பிடித்தாட்டுவதில்லை. அப்பிறழ்வு இலக்கியத்திலும் அறிவுப்புலங்களிலும் எப்போதுமே ஒரு விதிவிலக்குதான். இவர்கள் மாயத்தோற்றங்கள் மட்டுமே. இவர்கள் என்னதான் தம்பட்டம் அடித்து நிறுவ முயன்றாலும் அந்த புகைமூட்டம் விரைவில் கலைந்து விடும். பொய் அச்சமூட்டும்படி பெரிதாகத் தோன்றினாலும் விரைவில் பல்லிளித்துவிடும்.
அசல் இலக்கியமும் அறிவுத் தேடலும் எப்போதும் தன் போக்கில் சென்று கொண்டே இருக்கும். அதற்கு அரசு, அதிகாரம், பணம், திரள், சத்தம் ஒரு பொருட்டல்ல.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

தமிழ்நாட்டின் வளர்ச்சியும் ஏற்றத்தாழ்வும்

  முதல்வர் ஸ்டாலின் தேர்தலுக்கு முன் கடைசியாக வெளியிட்ட காணொளியைப் பார்த்தேன். அதில் அவர் தன் ஆட்சியின் சாதனைகளைக் குறிப்பிட்டு சில குறைகள் உள்ளதையும் தான் ஒப்புக்கொள்வதாகத் தெரிவிக்கிறார். கண்ணியமான நிதானமான பேச்சு. அவர் குறிப்பிடும் ஒரு தகவல் உண்மையானது - தமிழ்நாடு வேறு எந்த ஆட்சியிலும் காணாத பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளது (11.9%). இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் இல்லாத வளர்ச்சி இது. வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளைக் கொணர்வதிலும் புது நிறுவனங்களை அமைப்பதிலும் திமுக முன்னின்று செயல்பட்டுள்ளது. (விஜய் திமுக அரசு மாநிலத்தை கடனில் வீழ்த்தியுள்ளதாகச் சொல்லியிருப்பது ஒரு பொய்.) ஸ்டாலின் சொல்லும் இத்தகவல் இந்த ஆண்டின் துவக்கம் முதலே பல ஆங்கில நாளிதழ்களிலும் காணொளிகளிலும் பேசப்பட்டு வந்துள்ளது. ஒருவிதத்தில் பாஜக தமிழ்நாட்டில் காலூன்ற விரும்புவதும் இதனால்தான் எனத் தோன்றுகிறது. அவர்கள் வந்தால் அவர்களுடைய தரப்பு முதலாளித்துவ வர்க்கம் உள்ளூர் முதலாளிகளைக் காலி பண்ணுவார்கள். ஊழலில் அவர்களுடைய உள்ளூர் தலைவர்களுக்கு பங்கு போகும். அவர்களால் இங்குள்ள வர்த்தகப் போக்குகளைக் கட்டுப்படுத்த இய...