முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"ஏன் வாசிக்க வேண்டும்?" குறித்து மா. அண்ணாமலை

 நூலனுபவம் ( 21 )



நூல் : "ஏன் வாசிக்க வேண்டும்?"
ஆசிரியர் : ஆர். அபிலாஷ்
வெளியீடு : எழுத்து பிரசுரம்
பக்கங்கள் : 176
வகை : கட்டுரை
நூலின் தலைப்பினைக் கொண்டு இந்நூல் என்ன சொல்ல வருகிறது என ஒற்றை முடிவிற்கு என்னால் உடனடியாக வர முடியவில்லை. காரணம் அபிலாஷ். தான் எடுத்தாளும் எந்தக் கருத்தையும் அதன் பின்புலத்தோடு விசாரணைக்குட்படுத்துவது அபிலாஷின் பாணி. செடிகளாய் விதைகளிலிருந்து முளைத்து கிளை பரப்பும் விருட்சங்கள். அபிலாஷின் படைப்புகளோ கிளை பரப்பும் மரங்களை படைப்பெனும் விதைகளுக்குள்ளேயே கொண்டவை. அம்மாதிரியான படைப்புதான், ஏன் வாசிக்க வேண்டும்? என்பதும். பொது, இலக்கியம், தத்துவம், உளவியல் என பிரித்து எழுதியுள்ளார். ஆனால் நூலின் பெரும்பான்மையை பொதுவாசிப்பும் இலக்கியவாசிப்புமே எடுத்துக் கொண்டுள்ளன.
வாசிக்க யாரேனும் சொல்லித் தர வேண்டுமா? என நாம் வினவினால் அபிலாஷ் ஆமாம் என்கிறார். வாசிப்பு பற்றிய நான்கு கேள்விகள் - பகுதியில் அவர் எழுப்பும் எந்த வினாக்களுக்கும் தீர்க்கமான பதில் இல்லை. ஆனால் அக் கேள்விகளுக்கு உறுதியற்ற பதில்களை அளிப்பதன் மூலம் வாசகனை அக் கேள்விகளுக்கான பதிலை தானே கண்டறிய பணிக்கிறார். அப்பகுதியில் வரும் ஒரு கேள்வி இது.
கேள்வி: வாசிப்பினால் வாழ்க்கைக்கு பயன் இல்லையா?
பதில்: ஒரு முறை மனுஷ்யபுத்திரன் என்னிடம் சொன்னார் " இலக்கியம் வாழ்க்கை பற்றி கற்பிக்கும் பாடங்களை வைத்து வாழவே இயலாது. இலக்கியத்தின் அவதானிப்புகள் நடைமுறை வாழ்க்கைக்கு அப்பாலானவை."
இதில் எனக்கு உடன்பாடு இல்லை. காரணம் வாசகன் வாசிப்பின் மூலம், தான் ஏற்றுக்கொண்ட வாழ்வியல் முறைகளுக்கு வலுவூட்டவே முற்படுகிறான். அப்படி இருக்க அவன் வாசிப்பினால் எப்படி பயனடையாமல் இருக்க முடியும். நம்மால் தனித்த வாழ்வை இங்கு வாழ முடியாது. வாழ்வு என்பது கூட்டு முயற்சியே. பரஸ்பரம் ஒவ்வொருவரின் உதவியால்தான் நம்மால் அன்றாடங்களைச் சிரமமின்றி நகர்த்த முடிகிறது. மனித சமூகம் குழுவாக வாழவே தயார்படுத்தப்பட்டது; அக்குழுவின் ஏற்ற இறக்கங்களை கணித்து நிகழ்வாழ்வை இலகுவாக வாழ/ அக்குழுவை எதிர்த்து தன் போக்கில் பயணிக்க வாசிப்பு ஒருவனுக்கு பயன்படுகிறது என்பது என் எண்ணம்.
வாசிப்பின் போது ஏற்படும் சுணக்கங்களை களைய வாசகன் தனக்கு முற்றிலும் புதிய துறைசார் நூல்களை வாசிக்க பரிந்துரைக்கிறார் அபிலாஷ். இது ஒரு விதத்தில் சரிதான். ஆனால் அதன் கலைச்சொற்களுக்கு பழக்கப்படாத மனது அந்நூலை வாசிப்பதில் தடையை கண்டறிந்து விடுமே என்ற ஐயமும் எனக்கு எழுகிறது. அதற்கு மாற்று வழியாக நான் பயன்படுத்தியது. மற்றவர்களுக்கு பொருந்துமா எனத் தெரியவில்லை. 2012ல் நான் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் போது அறிவியல் பகுதிகளை படிக்கும் போது மனம் பெரிதும் அயர்வுறும். அதைப்போக்க எனக்கு இலகுவான ஏற்கனவே வாசித்த தமிழை மீள வாசிப்பேன். அது மனதை லேசாக்குவதுடன் அடுத்து படிக்க வேண்டியவமைக்குமான எரிபொருளை கொடுக்கும். இதைப்போல வாசிக்க கடினமான நூலை தேர்ந்தெடுக்கும் போது நமக்கு பிடித்த நூலையும் அவ்வப்போது வாசிக்க பக்கத்தில் வைத்துக் கொள்ளலாம்.
அதேபோல் வாசிப்பின் முழு இன்பத்தையும் அடைய குழுவாக வாசிப்பதை அபிலாஷ் பரிந்துரைக்கிறார். அது உண்மையில் பயனளிக்கக் கூடியதுதான். சமீபத்தில் நானும் தம்பி மதனும் கவிஞர் இசையின் கவிதைகளின் மீது பெருவிருப்பம் கொண்டு வாசித்தோம். அவன், இசையின் கவிதைகளை பற்றி சொல்லும் வார்த்தை " அண்ணா... இசை என்பவர் நாம சோகமாக இருக்கும்போது வாடா ஒரு டீ குடிச்சிட்டு வரலாம் என்று ஆசுவாசப்படுத்தும் நண்பன் போன்றவர்" என்றான். எவ்வளவு அற்புதமான புரிதல். அவ்வார்த்தையை கேட்கும் வரை நம்மிடம் வேடிக்கையாய் பேசும் நண்பன் என்றே இசையை எண்ணியிருந்தேன். நம் துன்பகரமான நிகழ்வுகளின் வடிகால் அவர் என்பது எனக்குப் புதிது. ஆனால் குழுவாக வாசிப்பதில் பயணிக்க நம் அருகாமையில் ஒருவருமே இல்லை என்பதே இங்கு நிதர்சனம்.
எனக்கு இது அபிலாஷின் நான்காவது நூல். நூல்களின் தலைப்புகளில் எளிமையை தேர்ந்தெடுத்தாலும் நூலின் உள்ளடக்கம் ஆழ்ந்த வாசிப்பை வேண்டுகிறது. அது தேவையும் கூட. ஏனெனில் அபிலாஷ் மீனை சமைத்து தருபவர் அல்ல; மீன்பிடிக்கக் கற்றுத் தருபவர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...