வாக்குக்கு பணம் கொடுப்பது, பெறுவது எல்லாமே குற்றம்தான். அதில் எவ்வித நியாயப்படுத்தலும் எடுபடாது. பத்தாண்டுகளுக்கு முன் வந்த செய்தியின்படி ஓராண்டு வரை தண்டனை வழங்கப்படலாம். ஆனால் நாம் அனேகமாக யாரும் இக்குற்றத்துக்காக கைது பண்ணப்படுவதைக் காண்பதில்லை. வாக்காளர் ஆணையத்தின் விதிமுறைகளிலும் இக்குற்றம் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. இதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுவது வாக்களிப்பு ரகசியமாக நடப்பதால் ஒரு வாக்காளர் வாக்குக்காகப் பணம் வாங்கினாலும் அவர் தன் வாக்கை தான் பெற்ற லஞ்சத்தின்படி சம்மந்தப்பட்டவருக்குத்தான் அளித்தாரா என்று உறுதிப்படுத்த இயலாது என்பது.
ஆனால் இதுவும் நீதிமன்றத்தில் நிரூபிப்பதில் உள்ள சிக்கலே. எங்கெல்லாம் பணம் வழங்குகிறார்கள் எனும் செய்தி கிட்டத்தட்ட எல்லார் காதுக்கும் வந்துவிடுகிறது. தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்தபின்னர் தேர்தல் ஆணையத்துக்கு அபரிதமான அதிகாரம் வந்துவிடுகிறது. அவர்கள் நினைத்தால் அங்கங்கே சிலரைக் கைது பண்ணலாம். அப்படி ஒன்று நடந்தாலே பணத்தைக் கொடுப்பதிலும் வாங்குவதிலும் அச்சம் நிலவும். பெயருக்காவது தேர்தல் ஆணையம் இதைச் செய்ய வேண்டும், ஆனால் செய்வதில்லை
இருவேறு மாநிலங்களில் தேர்தல் நடக்கும்போது கூட, அங்கு மாறுபட்ட கட்சிகள் போட்டியிட்டாலும் கூட, தேர்தல் கணிப்புகளையோ முடிவுகளையோ உடனடியாக வெளியிட்டு விடக் கூடாது எனும் விதிமுறையை ஆணையம் கடுமையாக நடைமறைப்படுத்துகிறது. ஆனால் இந்த தேர்தல் முடிவு வெளியாவதால் ஏற்படக்கூடிய மேலோட்டமான தாக்கத்தை விட ஆழமான தாக்கத்தை வாக்காளர் ஊழல் ஏற்படுத்தும் என்றாலும் ஆணையம் அதை சிறிய பிரச்சினையாகவே பார்க்கிறது.
இதற்குப் பிரதான காரணம் ஒன்றேதான்: ஆணையம் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஒன்றிய அரசு மாநிலத்தில் ஏதோ ஒரு கூட்டணியில் இருந்து விடுகிறது. இப்போது எல்லா கட்சிகளும் வாக்குக்காக பணம் கொடுப்பதால் ஒன்றிய கட்சியின் கூட்டணிக் கட்சியினரையும் கைது பண்ண வேண்டி வரும். ஆணையம் அதற்கு முன்வருமா என்பது சந்தேகமே!
அடுத்து சில துணைக் காரணங்கள்:
1) நீதிமன்றமோ செயல்பாட்டாளர்களோ ஊடகங்களோ பொதுஜனமோ இதை ஒரு பொருட்படுத்தத்தக்கக் குற்றமாகக் கருதவில்லை. ஆகையால் கடுமையான தண்டனைகள் இல்லை. தண்டிக்கும் அழுத்தம் பொதுவெளியில் உருவாகி வருவதில்லை.
2) வாக்காளர்களின் முடிவெடுக்கும் திறனை, முகமையை, நம் அரசியலமைப்பும், ஆணையமும் நீதிமன்றமும் சமூகமும் நம்புகின்றன. அதனாலே பணம் வாங்கினாலும் வாக்காளர்கள் தம் விருப்பப்படியே வாக்களிப்பர் என நம்புகிறார்கள் (வாக்கு ரகசியமாக தனிமையில் அளிக்கப்படுவதால்). ஆனால் நடைமுறையில் இது நிஜம் அல்ல. முதலில், பணம் ஒருவிதமான அழுத்தத்தை உருவாக்குகிறது. அடுத்து, பணத்தை யாருக்குக் கொடுக்கிறோம், யாரெல்லாம் வாக்களிக்கிறார்கள் என பூத் முகவர்கள் கணக்கு வைத்துக் கொள்கிறார்கள். ஆகையால் வாக்குகள் தம் கட்சிக்குக் குறைந்தால் அவர்களுக்கு ஓரளவுக்கு எந்தப் பகுதி மக்கள் தமக்கு அளிக்கவில்லை எனக் கணிக்க முடியும். யாரென்று சொல்ல முடியாவிட்டாலும் ஒரு ஊகம் இருக்கும். இது ஒருவித கண்காணிப்பு நிலையை ஏற்படுத்துகிறது. பணம் வாங்கினாலும் இல்லாவிட்டாலும் கட்சி விசுவாசிகளான வாக்காளர்கள் மீதுள்ள ஆதிக்கம் பணம் கொடுத்ததும் இரட்டிப்பாகும். அடுத்து குடும்பத்தில் ஒருவர் மற்றவர்களுக்காக பணம் வாங்கும்போது அவர்களின் வலியுறுத்தலை வாக்காளரால் மீற முடியாமல் போகும். இப்போது இவ்வாக்காளர்கள் கண்காணிப்பு வளையத்தை உடைக்க முடியாதவர்கள் ஆகிறார்கள். இது ஒரு உளவியல் அழுத்தம்தான் என்றாலும் இது வேலை செய்யும்.
3) கிட்டத்தட்ட எல்லா கட்சிகளுமே பணத்தைக் கொடுப்பதால் இந்த ஊழல் நடுநிலையாவதாகத் தோற்றம் வருகிறது. ஆனால் நடைமுறையில் இப்படி இல்லை. ஒரே வாக்காளருக்கு பல கட்சிகள் பணம் கொடுப்பதில்லை. பலரிடம் வாங்கிக் கொண்டு வாக்காளர்கள் வாக்களிப்பதில்லை. வேட்பாளர்கள் தமக்கு வாக்களிக்கச் சாத்தியமுள்ளவர்களிடம் கொடுக்கிறார்கள் அல்லது பரிச்சயமானவர்களிடம் கொடுக்கிறார்கள்.
4) மக்களாட்சி என்பதே பல்வேறு தரப்புகள் அரசைத் தம் தேவைக்கும் விருப்பத்துக்கும் ஏற்ப வளைக்க முயல்கிற, அதற்காகச் சமரசம் பேசுகிற ஒரு வடிவம்தான். வணிகர்கள் லாபி செய்ய முகவர்களை வைத்திருக்கிறார்கள். பல ஆயிரம் கோடிகளைச் செலவழிக்கிறார்கள். இதைப் பெரும்பாலான மக்களாட்சி அமைப்புகள் தடுப்பதில்லை. மதத்தையும் சாதியையும் கொண்டு பெரும்பான்மை அழுத்தத்தாலோ (பெரும்பான்மை இந்து அமைப்புகள்) தனித்திரட்சி வலிமையாலோ (சிறுபான்மையினர், தலித்துகள்) அரசைக் கட்டுப்படுத்த இயலும், கூட்டணியில் தாக்கம் செலுத்த இயலும். இந்த கொடுக்கல் வாங்கல் நியாயப்படுத்தப்படுவதால் அதன் நீட்சியாக பணம் கொடுப்பதும் மக்களால் பார்க்கப்படுகிறது. அதாவது ஒரு ஒப்பந்தத்துக்காக லஞ்சம் கொடுக்கும்போது அங்கு மற்ற விண்ணப்பதாரர்கள் பாதிக்கப்படுவது போல ஒருவர் தன் வாக்கை விற்கும்போதோ அரசியல் தலைவர்களை மீது மறைமுகமாக (சாதி / மதம் வழியாக) செல்வாக்கு செலுத்தும்போதோ நடப்பதில்லை என்று ஒரு சல்ஜாப்பு உள்ளது. அடிப்படையில் இது ஊழல் அல்ல, தார்மீகப் பிறழ்வு மட்டுமே என நினைக்கிறோம். என்னைப் பொறுத்தமட்டில் பொருண்மையான பாதிப்பை (பணம் கொள்ளையடிக்கப்படுவது) விட தார்மீகப் பிறழ்வே மிகப்பெரிய பிரச்சினை. அது ஆட்சிக்கும் மக்களுக்குமான அரூபமான உறவை அறுத்துவிடுகிறது.
5) முற்போக்காளர்களும் தாராளவாதிகளும் (லிபரல்கள்) தொடர்ச்சியாக இது ஊழல் அல்ல, மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் மக்களிடம் திரும்ப வருவதே என நியாயப்படுத்த முயல்கிறார்கள். இது கொள்ளையை நியாயப்படுத்தி விடுகிறது (அதான் திரும்பக் கொடுத்திட்டோமில்ல). பணத்துக்கு வாக்கு ஊழலையும் இது நியாயப்படுத்துகிறது. அனைத்துத் தரப்பினரும் பணம் வாங்குவதில்லை எனும்போது ஒரு தரப்பு மட்டுமே பணம் பெற்று வாக்களிப்பது தேர்தலை ஒருபக்கச் சார்பாக்கி மற்றவர்களின் வாக்குகளைப் பலமிழக்கச் செய்கிறது (வாக்களிப்பதில் சீரற்ற தன்மை (randomness) பறிபோய் சீராகிவிடுவதால்).
6) இது சற்று சர்ச்சைக்குரிய கருத்துதான். ஆனாலும் பரிசீலித்துப் பாருங்கள்: மக்களுக்கு வழங்கப்படும் உரிமைத் தொகை / உதவித் தொகை மேற்சொன்ன லஞ்சத் தொகையை மறைமுகமாக நியாயப்படுத்துகிறது, இயல்பாக்குகிறது. அதாவது ஒன்று ஆளும் கட்சிக்கான சட்டபூர்வமான லஞ்சமாகவும் மற்றொன்று எல்லா பெரிய கட்சிகளும் தரும் சட்டவிரோதமான லஞ்சமாகவும் ஒரு தோரணை ஏற்படுகிறது.
7) இப்பணத்தால் ஏழைகளுக்கு ஓரளவுக்கு 'ஆறுதல்' கிடைப்பதாக பொதுச்சமூகத்தில் ஒரு நம்பிக்கை நிலவுகிறது. அதாவது ஒரு குடும்பத்தில் ஐவருக்குப் பணம் தரப்பட்டால் அதுவே ஒரு கீழ்மத்திய வர்க்கத்துக்கு ஊழியரின் பாதி மாதச் சம்பளம் ஆகிவிடும். இது ஒருவித 'போனஸாகப்' பார்க்கப்படும்போது சமூகம் இதை மென்மையாகக் கையாள்கிறது.
8) தேர்தலுக்கு வெளியே பெரும்பாலும் லஞ்சம் அதிகாரம் படைத்தவரால் வாங்கப்படுகிறது. அவர்களைப் பார்த்தால் - கார், வீடு என வாழ்வதைப் பார்த்தால் - மற்றவர்களுக்கு வயிறெரிகிறது. தேர்தல் சமயத்தில் மட்டுமே அதிகாரமற்றவர்கள் தற்காலிகமாக அந்த இடத்துக்கு நகர்கிறார்கள். பணம் வாங்கியதும் சட்டென அந்த அதிகாரத்தை இழக்கிறார்கள். அதனால் நமக்கு இவர்களிடத்து பொறாமை வருவதில்லை. ஒருவர் வாக்குக்கு பத்தாயிரமே வாங்கினால் கூட ஒரு அரசு அதிகாரியோ போலீஸ்காரரோ பொதுஜனத்திடம் இருந்து அத்தொகையைப் பெறும்போது வரும் எரிச்சலும் கோபமும் பொறாமையும் நமக்கு வருவதில்லை. அவர் தன் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து சம்பாதிக்கிறார் என அதிகாரியை நோக்கி யோசிக்கும் நாம் இவர் தன் வாக்கதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து சம்பாதிக்கிறார் என வாக்காளரை நோக்கி யோசிப்பதில்லை. ஏனென்றால், ஒன்று, வாக்கதிகாரம் அரூபமாக, மறைமுகமாக உள்ளது. ஒரு தேர்தல் முடிந்து ஒரு வேட்பாளர் வென்றதும் அவருக்கு வாக்களித்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டால் நமக்கு இந்த வாக்கு ஊழல் சுடும். ஏனென்றால் அப்போது இந்த நடைமுறை நேரடியான தன்மையைப் பெறும். வாக்கின் ரகசியத்தன்மை காரணமாக இந்த வாக்கு ஊழல் நிகழ்வது கண்ணுக்குப் படாது. வாக்காளர் ஊழல் - சிகரெட் பிடிப்பது, ஊதாரியாக இருப்பது, பிறழ் உறவில் இருப்பது போல - ஒருவித அந்தரங்கக் குற்றம். இதை நாம் (பங்கேற்பவர்களுடன் செய்யும்) தொடர்ச்சியான விவாதங்கள் வழியாக மட்டுமே தடுக்க முடியும் என நினைக்கிறோம். அடுத்து, மற்ற ஊழல்களைப் போல் அல்லாது பணம் வாங்குகிறவரின் கை இங்கு தாழ்ந்திருக்கிறது. இது ஒரு வினோதமான நிலை.
9) நான் ஒரு அலுவலகத்திற்கு ஒரு நலத்திட்ட உதவி நாடியோ கடனுக்காகவோ போகிறேன். அல்லது வேலைக்கு விண்ணப்பிக்கிறேன். எனக்கு 'வேலை' நடக்க வேண்டிய அவசியம் எனக்கு உள்ளதால் லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழல் என்னை எரிச்சலூட்டுகிறது. கோபம் எழுகிறது. இன்னொருவர் லஞ்சம் கொடுத்து எனக்கு வர வேண்டியதை நான் கண்கூடாகப் பார்ப்பதால் வரும் கோபம் இது. ஆனால் தேர்தலின் போது மட்டுமே நான் ஒரு குடிமகனாக நேரடியாக பங்காற்றுகிறேன், பேரம் பேசுகிறேன். மற்ற சமயங்களிலோ குடிமக்கள் இந்த அமைப்பில் இருந்து அந்நியப்பட்டே இருக்கிறார்கள். எதுவும் அவர்களிடம் கேட்டு முடிவெடுக்கப்படுவதில்லை. அவர்களுக்கு எதிரான சட்டத்தை அரசு அவர்களுடைய பிரதிநிதிகளை வைத்தே நிறைவேற்றினால் அவர்களால் தெருவில் நின்று போராடி சிறைசெல்ல மட்டுமே முடியும். அப்போதும் ஒரு பிரதிநிதிக்கு உள்ள சட்டவிலக்களிப்பு குடிமக்களுக்கு இல்லை. அரசின் முடிவுகள் மட்டுமல்ல நடைமுறையுமே கூட மக்களுக்கு அந்நியமாகவே உள்ளன. ஆகையால் அவர்கள் கட்சித் தலைவர்கள், உள்ளூர் பிரதிநிதிகளைச் சார்ந்திருக்கிறார்கள். அப்போதும்கூட அவர்களுக்கு அதிகாரம் இருப்பதாகச் சொல்ல முடியாது. இதனாலே தேர்தலின்போது மக்களுக்கு அங்கு 'வேலை' இருப்பதில்லை. அவர்களை வரவழைக்க, ஊடகங்களும் தேர்தல் ஆணையமும் பிரபலங்களுமே (இப்போது சமூகவலைதளங்கள்) தொடர்ந்து வாக்களிக்கும் அழுத்தத்தைச் செலுத்த வேண்டியுள்ளது. வாக்குச் செலுத்தும்போதுள்ள அதிகாரம் வாக்குச் செலுத்தப்பட்ட பின்னர் இருப்பதில்லை. ஏனென்றால் வாக்கைத் திரும்பப் பெறும் அதிகாரம் மக்களுக்கு இல்லை. அதாவது ஒரு பொருளை நீங்கள் பணம் செலுத்தி வாங்கும்போது பொருள் வராவிட்டால் பணத்தைத் திரும்பக் கேட்கலாம். லஞ்சம் கொடுத்தாலும் கூட இந்த உத்தரவாதம் இருக்கும். ஆனால் இது வாக்கில் இல்லை. ஒரு குருட்டுத்தனமான நம்பிக்கைதான். ஆகையால் எல்லா செல்லக்கூடிய வாக்குகளும் செல்லாத வாக்குகளும்தான். எல்லா பிரதிநிதிகளும் அ-பிரதிநிதிகளும்தாம். வாக்காளருக்கான பணம் என்பது இதை ஈடு செய்வதற்கானதும்தான் என்பது என் பார்வை. அதனால்தான் இந்தியாவில் முதல் தேர்தல் முதற்கொண்டே இந்த வாக்காளர் ஊழல் நடைபெற்று வருகிறது என்று சொல்கிறார்கள்.
10) ஆபத்தோ (ரிஸ்க்) கைமாறோ (returns) இல்லாத நிலையில் இதை ஊழல் என்று எப்படி அழைக்க முடியும் என ஒருவர் கேட்டால் நம்மால் அதற்குப் நியாயமாக பதிலளிக்க இயலாது. அதாவது ஒரு அரசியல்வாதியோ அதிகாரியோ லஞ்சம் வாங்கிக்கொண்டு எதையாவது திரும்ப அளிக்கிறார். அவர் தன் தொழிலையே அடமானம் வைத்துத்தான் அச்செயலைச் செய்கிறார். ஏனென்றால் தொழிலில் அவருக்கு வருமானமும் கௌரவமும் உள்ளது. ஒரு வாக்காளரின் வாக்குக்கு அப்படியான 'மதிப்பு' இல்லை. அவர் அளிக்கும் வாக்கை வைத்து மற்றொருவர் சம்பாதிக்க முடியும் என்றாலும் அவர் அதை ஒருவருக்கு அளிக்க மறுத்தால் மற்றொருவர் அவ்வாக்கைப் பெற்றுக்கொண்டு ஊழல் செய்ய மாட்டார் என்றில்லை. எதுவுமே உத்தரவாதமில்லை. அவர் அளிக்கும் வாக்குதான் ஒருவரது தேர்வை முடிவு செய்கிறதா என்பதும் நிச்சயமில்லை. வாக்காளர் பணம் வாங்கி வாக்களிக்கும்போது பெரிய அபாயங்களை எதிர்கொள்ளும் அவசியம் இல்லை. அவரது வாக்குக்கு தேர்தலுக்குப் பின்னர் எந்த கைமாறும் இருப்பதில்லை. அதாவது அது செல்வாக்கு இழந்து விடுகிறது. ஊழல் செய்யும் அதிகாரியின், அரசியல்வாதியின் அதிகாரம் என்பது அவர்கள் தம் அதிகாரம் நிரந்தரம், நடைமுறையில் 'காணத்தக்கது' என்பதே. உ.தா., ஒரு வீடு கட்டவோ வேறு ஆவணத்துக்காகவோ ஒப்புதல் பெற நீங்கள் லஞ்சம் கொடுக்கிறீர்கள். பெற்று விடுகிறீர்கள். ஆனால் அதே அதிகாரியோ இன்னொருவரோ வந்து பின்னர் உங்களிடம் உள்ள போதாமையைக் காட்டி மிரட்டி மீண்டும் பண்ம பெற முடியும். ஆக ஊழல் செய்வோரின் அதிகாரம் என்பது தொடர்ச்சியானது, அசலானது. வாக்காளரின் அதிகாரம் அப்படியானது அல்ல.
ஒருவிதத்தில் இதை அதிகார துஷ்பிரயோகம் என்று நிரூபித்து குற்றம் சாட்ட முடியாது, இது குற்றமே அல்லவென்று ஒருவர் வாதிட முடியும்.
வாக்காளர் ஊழலை முடிவுக்குக் கொண்டுவர ஒரு வழி - இது என் தனிப்பட்ட பரிந்துரை மட்டுமே - வாக்குகளைப் பகிங்கரமாக்குவது. அடுத்து சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் பிரதிநிதிகள் சட்டம் இயற்றும்போது மக்களிடம் ஒவ்வொரு கட்டத்திலும் கருத்துக் கணிப்பு நடத்துவதை கட்டாயமாக்குவது (அதாவது இந்தியாவை ஒரு பங்கேற்பு மக்களாட்சியாக்குவது). கூடுதலாக, அரசு அதிகாரிகள் தம் ஊதியத்தையும் பதவி உயர்வையும் பெற சம்மந்தப்பட்ட பகுதியில் உள்ள பயனர்கள் (மக்கள்) போதுமான அளவுக்கு தரமதிப்பீட்டை அவர்களுக்கு அளிக்க வேண்டும் என நடைமுறையை மாற்ற வேண்டும். (அதாவது தனியாரில் உள்ள நடைமுறையை அரசிலும் கொண்டு வர வேண்டும்.) ஒரு காவலர் (மேலதிகாரியும் உள்ளிட்டே) நன்றாகப் பணி செய்வதாக அவரது பகுதி மக்கள் தரமதிப்பீடு அளிக்காவிடில் அவர் சம்பளம் இழப்பார், வேலையும் இழப்பார். இதில் மக்களுக்கு வேலையதிகம் என்றாலும் பலனுண்டு. இப்போது பிரதிநிதிகளின் முகமை குறைந்து, அதிகாரம் பாதியாகி மக்கள் அதிகாரம் பெறுவார்கள். மக்களால் போராடாமலே எதையும் பெற இயலும். இப்போது மக்கள் எடுக்கும் முடிவுகள் மதிப்பு கூடியதாகவும் தண்டிக்கத்தக்கதாகவும் மாறும். அதாவது மக்கள் மக்களாட்சிக்குள் ஊழல் செய்தால் (பணம் வாங்கி தரமதிப்பீடு அளித்தால்) அவர்களைச் சுலபத்தில் தண்டிக்க இயலும்.
நான் மேலே சொல்லியிருப்பது இந்தியா போன்ற ஒரு தேசத்தில் சாத்தியமில்லை என அறிவேன். இது விவாதத்திற்காக நான் பயன்படுத்துகிற ஒரு கருதுகோள் (hypothetical) மட்டுமே.
Comments