முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சர்வாதிகார ஆதரவாளர்கள்

 நான் அண்மைக் காலமாக சில நண்பர்களிடம் உரையாடும்போது மக்களாட்சி குறித்த கடுமையான தாக்குதலை எதிர்கொள்கிறேன். மக்களாட்சி குறித்து பல விமர்சனங்களைக் கொண்டுள்ள எனக்கே அவர்களின் வன்மத்தைப் பார்த்து அதிர்ச்சியாக இருக்கிறது. ஏனென்றால் நான் மக்களாட்சியை இன்னும் decentralize செய்ய வேண்டும், மக்களுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட வேண்டும், இந்திய ஜனநாயகத்தில் அத்தகைய போக்குகள் இல்லை எனும் கவலை கொண்டவன். ஆனால் இவர்களோ மக்களுக்கு ஜனநாயகத்தைக் கையாளத் தெரியாது, அவர்களுக்கு சர்வாதிகாரமே சிறந்தது எனும் கருத்தைக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப் பேசும் நண்பர்கள் தவறாமல் பாஜக ஆதரவாளர்களாகவும் இருக்கிறார்கள். லஞ்சம் பற்றிப் பேசினால், வளர்ச்சி பற்றிப் பேசினால் மக்களாட்சியில் லஞ்சம் மட்டுமே இருக்கும், ஆட்சியாளர்கள் பொறுப்பாக இருக்க மாட்டார்கள், மக்கள் சிந்தித்து முடிவெடுக்க மாட்டார்கள், மக்களுக்கு பகுத்தறிவே இல்லை எனக் கூறிவிட்டு, அதனால் என்று ஆரம்பித்து 'மாட்டை' இழுத்து சர்வாதிகாரத்தில் கட்டிவிடுகிறார்கள். மக்களாட்சியில் ஒரு பிரச்சினை இருக்கிறதென்றால் மக்களாட்சியே ஒரு பிரச்சினை எனப் பொருளில்லை என விளக்க வேண்டி இருக்கிறது. மக்களாட்சியை மேம்படுத்துவது பற்றி இவர்களிடம் பேச முடியாது. ஏனோ மக்களாட்சி அமைப்பை மாற்றினாலே தாம் விரும்பும் வளர்ச்சியும் ஒழுங்கும் வருமென உறுதியாக நம்புகிறார்கள்.

இவர்களுடைய இந்த எண்ணம் எங்கிருந்து வருகிறது என்று சிந்தித்தால் முற்றதிகாரம் குறித்த ஹேனா ஆரெண்டின் பார்வைதான் நினைவுக்கு வருகிறது. ஒரு சமூகத்தில் பொருளாதார, கலாச்சார நிச்சயமின்மையும் அச்சமும் நிலவும்போது அங்கு முற்றதிகாரம் பாலான ஒரு ஈர்ப்பு தோன்றுகிறது என்று அவர் சொல்கிறார். இன்றுள்ள சூழலுக்கு இது வெகுபொருத்தமாக இருக்கிறது. மனதுக்குள் பயமும் பதற்றமும் அதிகமாக உள்ளோரே 'பலவீனமான' எல்லாவற்றையும் தமக்கு எதிரியாகக் கருதுகிறார்கள். நெகிழ்வுத்தன்மை கொண்ட மக்களாட்சி அமைப்பை ஒழிக்கக் கோருகிறார்கள். நெகிழ்வான சிந்தனையாளர்களை தேசத்துரோகி என அழைக்கிறார்கள். பலம் பொருந்தியதாகத் தெரியும் பிம்பங்களை வழிபடுகிறார்கள். பொய்ச் செய்திகளை, கதையாடல்களை விரும்புகிறார்கள். தேசத்தை ஒரு தந்தை உருவாகக் கருதுகிறார்கள். தந்தை இல்லாத குடும்பத்தில் ஒரு குழந்தைத் தன்னைத் தந்தையாகக் கருதி வீட்டைப் பாதுகாக்க விழைவதைப் போல, அதிகாரத்தைப் பெருக்கி தன்னை எதிர்காலத்தி பலமான ஒரு 'தந்தையாக' மாற்றிக் கொள்வதைப் போல இவர்கள் மக்களாட்சியை எதிர்க்கிறார்கள். இவர்கள் பார்க்க மறுப்பது தம் நிச்சயமின்மையின் வேர் பொருளாதார ஏற்றத்தாழ்வில் இருக்கிறது, அது ஏற்படுத்தும் அநீதியில் இருக்கிறது என்பதையே.
பொருளாதார நிச்சயமின்மையும், அதனாலான ஏற்றத்தாழ்வுகளும் அச்சமும், பெருவளர்ச்சியும் ஒருசேரத் தோன்றுவதே நவதாராளவாதத்தின் தன்மை. அதாவது உற்பத்தியும் சந்தைப் பெருக்கமும் நடந்துகொண்டே இருக்கும், வேலை இழப்பும் பணவீக்கமும் அதிகரித்தபடி இருக்கும். இதன் விளைவாக கறுப்புப் பணமும் ஊழலும் பெருகும். இதற்குத் தீர்வாக சர்வாதிகாரம் இருந்தால் நன்றாக இருக்கும் என ஒரு சிலர் நம்புவார்கள். இச்சிந்தனை சமூகத்தின் ஒரு மூலையில் தோன்றி அது வளர்ந்து ஒருநாள் வெகுஜன ஊடகத்தில் ஒரு ஏற்கப்பட்ட 'சிந்தனையாக' மலரும். இதனால் மக்களாட்சி ஒழியாது. மக்களாட்சி இதை செரித்துக் கொண்டு முற்றதிகார தன்மை கொண்ட மக்களாட்சியாகும். நிச்சயமின்மைக்கு எதிரான போராட்டங்கள் நிகழாமல் இது தடுக்கும். ஏற்றத்தாழ்வை இன்னும் தீவிரமாக்க இது உதவும்.
இதனால்தான் சமூகத்தின் எல்லா பிரச்சினைகளுக்கும் சில அடிப்படைகள் உண்டெனக் கருதுகிறேன். அவற்றில் ஒன்றுதான் பொருளாதார ஏற்றத்தாழ்வு. பொருளாதார ஏற்றத்தாழ்வைக் குறைக்க நாம் எதைச் செய்தாலும் அது மக்களாட்சியை மேம்படுத்தும், ஊழலையும் அநீதியையும் குறைக்கும். சமூகத்தின் எல்லா தளங்களிலும் நல்ல விளைவுகள் ஏற்படும். சர்வாதிகார எதிர்ப்பு பொருளாதாரத்திலே துவங்குகிறது. அதற்கு தனிமனித உழைப்பினாலே வளம் உருவாகிறது எனும் கருத்தை மறுக்க வேண்டும். மூலதனம் அனைவருக்கும் பொதுவானது எனும் கருத்தை நோக்கிச் செல்ல வேண்டும். இது நம் மதிப்பீடுகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் - வாக்குக்கு பணம் வாங்குகிற தனிநபர் ஊழலைப் பற்றி நாம் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். இந்த பணம் வாங்கும் செயலே "என்னிடம் பணமில்லை, அவனிடம் அதிகமாக இருக்கிறது, இச்சந்தர்பத்தில் எனக்கு அவன் அதைத் தருவதற்கு முகாந்திரம் உள்ளது. தரட்டுமே" எனும் நினைப்பில் இருந்து தோன்றுகிறது. ஏற்றத்தாழ்வை ஊழலின் வழியாக (தற்காலிகமாக) சீர் செய்யப் பார்க்கிறோம். ஏழ்மையைக் கொண்டாடி இதை நாம் சரியாக்க முடியாது. ஏற்றத்தாழ்வை ஒரு குற்றமாகக் கருதிப் பேசினால் மட்டுமே ஊழலை நியாயப்படும் எண்ணம் மறையும். ஏற்றத்தாழ்வை ஒரு குற்றமாகப் பார்க்க நாம் முதலீட்டியத்தின் அடிமடியில் கைவைக்க வேண்டும். தனிநபர் சொத்திற்கான உச்சபட்ச வரைமுறையைப் பற்றிப் பேச வேண்டும். இப்படி ஊழலை நமது சமகாலப் பொருளாதார அமைப்பே உருவாக்கும்போது அதைச் சரிசெய்ய திராணி இல்லாதபோது நாம் அங்கே சுற்றி இங்கே சுற்றி மக்களாட்சி முறையை ஒழித்தால் சரியாகி விடும் எனக் கூறுகிறோம். இப்படிப் பணம் வாங்கும் மக்களை ஒழுக்கமற்றவர்கள் எனக் கூறித் தப்பிக்கிறோம். இப்படிப் பேசுகிறவர்களும் ஏதோ ஒருவிதத்தில் இந்த ஏற்றத்தாழ்வினால் பாதிக்கப்படுகிறவர்கள் என்பதே வேடிக்கை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...