முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

 மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும்.

இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன:
1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.
2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது.
3) தொழில்கள் நசிந்தும், வேலை கிடைக்காமலும் ஊதியம் குறைந்தும் சிரமப்படும் மக்கள் இதைக் கண்டு எரிச்சலடைகிறார்கள்.
4) பெண்களுக்கு அளிக்கப்படும் தொகை ஒரு குடும்பத்தையே காப்பாற்றுகிறது என்று கடந்த ஆட்சியின்போது செண்டிமெண்டாகச் சொன்னார்கள். அது முழு உண்மையல்ல. அத்தொகை ஒரு கூடுதல் வருமானம். எல்லா பயனர்களுக்கும் அது குடும்ப உதவித் தொகை ஆவதில்லை. அப்படி ஆனாலும் அது சரியான பார்வை அல்ல. ஒரு குடிநர் குடும்பஸ்தராக இருக்க அவசியம் இல்லை. இத்திட்டத்தின் பயனரான ஒரு பெண் தனிநபராகவும் இருக்கலாம். குடும்பம் இல்லாததால் அவருக்கு கிடைக்கும் தொகை அர்த்தமற்றுப் போகாது. எந்த முகாந்திரத்தின் அடிப்படையில் பெண்களுக்கான நலத்திட்ட உதவியை நியாயப்படுத்துவது எனத் தெரியாமல் கடந்த அரசு இந்தக் கொணத்தைக் கொண்டு வந்தது என நினைக்கிறேன்.
5) ஒருவர் சாதியாலோ ஏழ்மையாலோ வரலாற்றுரீதியாகப் பாதிக்கப்பட்டு அவரால் தரமான வாழ்க்கையை வாழவும் சாதிக்க இயலாலும் போகும்போதே affirmative action அவசியப்படுகிறது. பாலினத்தை இதில் கொண்டு வருவதன் பிரச்சினை வர்க்கம், சாதி, கல்வி ஆகியனவற்றின் அடிப்படையில் பாலின பேதத்தினால் விளையும் ஏற்றத்தாழ்வை நாம் பார்க்க வேண்டியுள்ளது என்பதே. இப்போதைக்கு அரசு நிதி நிலையையே பிரதான அளவுகோலாக வைத்து பயனராகும் தகுதியை முடிவு செய்கிறது. துரதிஷ்டவசமாக இது சரியாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. //வருமான வரம்பு: குடும்பத்தின் ஆண்டு வருமானம் ₹ 2.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.// - இந்த வரம்புக்கு அப்பால் இருக்கிற பெண்களே உரிமைத்தொகையைப் பெற்றுள்ளதை அறிவேன். அரசு அதிகப் பயனர்களுக்குப் போய்ச் சேர வேண்டும் என நினைக்கிறதே ஒழிய சரியானவர்களுக்குப் போக வேண்டும் என நினைப்பதில்லை.
6) அடுத்து ஒருவருடைய ஏழ்மையையும் பாலினத்தையும் மட்டுமே கருதி உரிமைத் தொகை அளிப்பது சரி அல்ல. அவர் என்ன காரணத்தினால் சிரமப்படுகிறார் - பெண்ணாகவும் மாற்றுத்திறனாளிககவும் இருப்பதாலோ, நோயினாலா, வயதின் காரணமாகவா, வேலைக்கு முயன்றும் கிடைக்காததாலா? நான் இதையே இலவசப் பேருந்து திட்டத்திற்கும் சொல்வேன். வர்க்க அடிப்படையில் இதை வரையறுப்பது அவசியம் - உறவினரின் வீட்டுக்கோ கோயிலுக்கோ செல்லும் பெண்ணுக்கும் மீன் சுமந்துகொண்டு விற்பதற்குச் செல்லும் பெண்ணுக்கும் வித்தியாசம் உண்டு.
7) நலத்திட்டங்கள் தேவைப்படுகிற அனைவருக்குமானதாக இருக்க வேண்டும். பெட்ரோல் விலை உயர்வினால் பாதிக்கப்பட்ட ஒரு ஆட்டோக்காரர் இருப்பார். அவருக்கு இத்திட்டத்தால் கூடுதல் பாதிப்பு வரும்போது அவர் பயனர்களையும் அரசையும் வெறுப்பார். கர்நாடகத்தில் பால் உற்பத்தியாளர்கள் விலைவாசியை சமாளிக்க பால்விலையை ஏற்ற நினைத்தபோது அரசு அவர்களைக் கட்டுப்படுத்தியது. அரசு தமக்கு உதவ வேண்டும் என அவர்கள் கோரினர். ஆனால் அரசு கண்டுகொள்ளவில்லை. ஏனென்றால் அரசின் நலத்திட்ட பார்வையில் அத்தகையோர் இல்லை. அவர்கள் மகளிருக்கான உரிமைத் தொகையை எதிர்த்ததைக் கண்கூடாகக் கண்டேன். நலத்திட்டங்களை குறுகலான வரையறைக்குள் வைத்துப் பார்ப்பதால் விளையும் அவலங்கள் இவை.
பொத்தாம்பொதுவாக கொடுக்கப்படுவதாலே இத்தகைய திட்டங்களை பொதுமக்கள் தேர்தலில் வாக்கு கிடைப்பதற்கான லஞ்சமாகப் பார்க்கிறார்கள். பயனர் அல்லாதோருக்கு கசப்பும் ஏற்படுகிறது. மேலும் அரசு என்பது பாலினத்தின், சாதியின், மதத்தின் அடிப்படையில் நடப்பது அல்ல. அது உழைப்போர் வழங்கும் நேரடி, ம்றைமுக வரியினால் நடப்பது. துரதிஷ்டவசமாக அரசு குடிமக்களை உழைத்து உற்பத்தி செய்து வரிவழங்குவோர் எனப் பார்ப்பதில்லை. அது வரியை ஒரு கடமையாகப் பார்க்கிறது, ஆனால் அதை நாட்டின் ஜீவநாடியெனக் கருதி அதற்கு ஏற்ப திட்டங்களை வகுப்பதில்லை. குடிமையை அரசு ontologicalஆக (நான் இன்னதாக இருக்கிறோம் - பெண்ணாக, குறிப்பிட்ட சாதி, மதத்தைச் சேர்ந்தவராக) வகுக்கிறது. சமூக நலத்திட்டங்களும் இவ்வாறே பரிசீலிக்கப்படுகின்றன. ஆனால் இந்த இன்னவாக இருக்கிறேன் எனும் இருப்பு நிபந்தனைக்கு உட்பட்டது. நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ வரிசெலுத்தாவிடில் என்னால் ஒரு தேநீர் அருந்தவோ மலஜலம் கழிகக் கூட முடியாது (திருடவோ வெளியை அசிங்கப்படுத்தவோ செய்யாமல்). ஆக, பணமே நிபந்தனைக்கு அப்பாறட்டு நம் இருப்பைத் தீர்மானிக்கிறது (unconditional existence). ஒரு நல்ல அரசு இந்த இருப்பை பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கவே பிரறதானமாக முயல வேண்டும். நான் உழைப்பதால் இந்த சாதிக்குள், இந்த பாலினத்துக்குள் இருக்கிறேன், நான் என் வரையறைக்குள் இன்னும் அதிகமாகப் பணம் ஈட்டி, சமத்துவத்தை எட்ட முயன்று இன்னும் சிறப்பாக வாழ வேண்டும் என்பதே சரியான அணுகுமுறை.
மக்களாட்சி உணர்வுகளின் அடிப்படையில் செயல்படுவதால் பொருளாதார அலகை விட பண்பாட்டு வரலாற்று அலகையே அரசு அதிகமாகப் பொருட்படுத்துகிறது. இது நலத்திட்டங்களை ஒரு முடிவற்ற சுழலுக்குள் செலுத்துகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...