முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆண்களின் பிரச்சினை

 


இணையத் தாக்குதல்கள் இன்று தற்செயலாக ஒருவர் மீது நிகழ்த்தப்படுவதாக நான் நம்பவில்லை. அக்காலம் மலையேறி விட்டது. இன்று இதையே தொழிலாகக் கொண்டோர் நிறைய பேர் இருக்கிறார்கள். வாடகைக்குத்தான். இவர்களை ஒருங்கிணைக்கும் ரூட்ஸ் மீடியா போன்ற சில நிறுவனங்களே உள்ளன. பணம் கொடுத்தால் இணைய வெறிநாய்களை அவிழ்த்து விடுவார்கள்கெனிஷா-ரவி மோகன் விவகாரக்த்திலும் இத்தகைய நிறுவனம் எதுவோ பின்னணியில் இருக்கும் என்பதே என் கணிப்பு. இது நமக்குத் தெரியும்போது அவர்களுக்குத் தெரியாதா? அவர்களுடைய உணர்ச்சிக் குமுறல் நேர்காணல், காணொளிகளைக் கண்டபோது விசயம் வேறெதுவோ என்று தோன்றியது. அதில் வெளிநபர்களுக்குக் கருத்து சொல்ல ஒன்றுமே இல்லை.


நம்மைப் போன்றோருக்கு விர்ச்சுவல் உலக்கு வெளியே மிகப்பெரிய உலகம் உள்ளது. தினசரி வேலை, வீட்டுப் பிரச்சினைகள், தனிப்பற்ற பயிற்சிகள். நம் பிரக்ஞைக்குள் இணையம் ஒரு மிகச்சிறிய இடத்தையே பிடிக்க முடியும். ஆனால் நம்மில் சமூகவலைதளத்தை ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொள்வோரும் உண்டு. இன்று பல பிரபலங்கள், பிரபலங்களாக விரும்புவோர் அப்படியே வாழ்கிறார்கள். என்னால் அவர்களைப் புரிந்துகொள்ள இயன்றதில்லை


நான் நேற்று முழுக்க ஜிம்மில் முந்தா நாள் எனக்குப் பயிற்சியளித்த இளம்பெண்ணின் குத்துக்களை என்னால் parry செய்ய முடியவில்லை, ஏன் அவ்வளவு வேகமாக மின்னலென வருகின்றன, தப்பு எங்கிருக்கிறது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். கூடவே சின்னச்சின்ன முன்னேற்றங்களை எண்ணி மனதுக்குள் தற்புகழ்ச்சி செய்து கொண்டிருந்தேன். இதற்கு நடுவே வேலையிடத்தில் என்னிடம் யாராவது சொல்வது கூட என் காதுக்குள் நுழைவதில்லை. சமூக வலைதளப்பில் நடப்பவை என் பிரக்ஞைக்குள் நுழைவதே இல்லை. வெறுமனே ரியாக்ட் செய்வதோடு சரி


 வெர்ர்சுவல் உலகையே தம் தொழிலாகக் கொண்டோரும், அதில் ஒரு பிம்பத்தைக் கட்டமைத்து அதைக் கொண்டு சம்பாதித்து வளர்ந்தோரும் உண்டு. அவர்கள் ஒரு தனி உலகில் வாழ்கிறார்கள்: நான் சில நாட்களுக்கு முன் ஜி.பி முத்து வெளியிட்ட ஒரு காணொளியைக் கண்டேன். ஏதோ சொத்து தகராறு. எதிர்க்கட்சிக்காரர் இவரை அடித்துவிட்டார்கள். கண்ணுக்கு மேல் ரத்தம் எட்டிப் பார்க்கிறது. அது அவ்வளவு அழகாக இருந்தது. அவர் அதற்கு ஏன் அவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு கத்துகிறார் எனப் புரியவில்லை. அடிபடுவதில் ஒரு சுகம் உண்டு. திரும்ப ரெண்டு கொடுக்க முடிந்தால் இன்னும் இனிமையாக இருக்கும். ஆனால் இந்த காவல்துறை போன்ற பஞ்சாயத்துக்குளே பிரச்சினை. இந்த காவல்துறை, நீதிமன்றம், சொத்துப் பதிவு, இணையவழி பணப்பரிமாற்றம் எல்லாம் இல்லாத காலத்தில் உலகம் இன்னும் ஜாலியாக இருந்திருக்கும்


இரண்டு பேர்களுக்கு நடுவே பிரச்சினை என்றால் காவல்துறை, நீதிமன்றம், சமூகவலைதளம், வீடியோ என்று களேபரம் செய்கிறார்கள். கடைசி வரை நேருக்கு நேர் ஒன்றுமே பண்ணிக் கொள்வதில்லை


எனக்குப் பயிற்சியளித்த பெண்ணைப் பற்றி சொன்னேன் அல்லவா, முதல் நாள் நான் அவருடன் பயின்றபோது அவர் மட்டும் வேகமாக என் முகத்தை நோக்கிக் குத்திக் கொண்டிருந்தார். நான் கடுப்பில் திரும்ப நாலு குத்துவிட்டதும் அவர் பின்னுக்குப் போய்விட்டு "வேகமா குத்தக் கூடாது, இது பயிற்சிதான், ஜஸ்ட் கையை நீட்டினா போதும்" என்றுவிட்டு மீண்டும் என் முகத்தை நோக்கி வேகமாகக் குத்தத் தொடங்கினார். நான் மேலும் கடுப்பாகி இன்னும் வலுவாகக் குத்த அவர் என்னிடம் "நான் உங்களுக்குக் குத்தி காமிக்கிறேன்" என்று கும்மென்று குத்தினார். நான் பின்னுக்குச் சரிந்து விழப் போய் சமாளித்தேன். உடனே மலர்ந்த சிரிப்பில் லைட் போட்டதைப் போல அவரது முகம் ஒளிர்கிறது. இவரென்ன குத்துகிறேன் என்று தள்ளுகிறாரே, யாரும்மா உனக்கு பாக்ஸிங் கத்துத் தந்தது என்று பயிற்சியைத் தொடர்ந்தேன். முந்தா நாள் அதே பெண் வந்தார். நான் கவனமாக என் குத்துக்களை மிகமிக லேசாக வைத்துக் கொண்டேன். குழந்தையுடன் விளையாடுவோமே அப்படி. அவரும் என் அணுகுமுறையைப் புரிந்துகொண்டு புன்னகையுடன் பூவால் ஒத்துவதைப் போல குத்தினார். கொஞ்சம் நேரம் இப்படி விளையாடிக் கொண்டிருந்துவிட்டு நாங்கள் புன்னகையுடன் பிரிந்தோம். அடுத்த முறை பயிற்சிக்கு வந்தபோது மீண்டும் என்னைச் சீண்டத் தொடங்கினார். ஒருமாதிரி நடித்து சமாளித்தேன். அவ்வப்போது நான் சொதப்பிட அவர் பெரிய மனது பண்ணி அதை ஏற்பதாக ஒரு பாவனை செய்தார். சில சந்தர்பங்களில் நானும் கும்மென்று சில குத்துக்களை இறக்கினேன்.  


ஆண்கள் இன்னும் ஜாலியானவர்கள் - ஒருவர் ஜாப் அடித்துவிட்டு கிராஸை இங்கே விடுங்க என்று தன் வலுவான வயிற்றைக் காட்டுகிறார். நான் ஆரம்பத்தில் லேசாகத் தொடுவதைப் போல குத்திவிட்டு பிறகு லேசாக குத்துவிட்டுப் பார்க்கிறேன். அடுத்தமுறை கும்மென ஒரு குத்துவிட வேண்டும் என இருக்கிறேன். மனிசன் கோவித்துக் கொள்ளக் கூடாது. பெண்களால் ஒருபோதும் இப்படி "வயிற்றில் குத்து" என்று தட்டையான வயிற்றைக் காட்ட மாட்டார்கள் என்று நினைக்கிறேன். அவர்களுடனானது பூப்பந்து விளையாட்டு. அவர்கள் தம் உடலைக் குறித்து ரொம்ப அதிகமாகக் வலைப்படுகிறார்கள்


இப்படி இருக்கையில் இவ்வுலகம் எவ்வளவு ஜாலியாக இருக்கிறது


இதனால்தான் நான் வெர்ச்சுவல் உலகைப் பொருட்படுத்துவதில்லை. கூடவே, காவல்துறை, நீதிமன்றம், குடும்பம் (மூன்றுமே ஒன்றுதானே) சார்ந்த சட்டதிட்டத்தால் கழுத்தை நெரித்து பிளாக்மெயிலிங் செய்து பேரம் பேசி காசைப் பிடுங்கி விடுவிக்கும் உலகையும் வெறுக்கிறேன். அவை ஆபீஸ் போவதைப் போல ஒரே போல இருக்கின்றன. அங்கு நியாயம், நீதி, பாசம் எல்லாமே பணத்தைப் பிடுங்கத்தான். அங்கு யாரும் எதையும் தியாகம் பண்ணுவதில்லை. பெரிய விசயங்களுக்காக செயல்படுவதில்லை. எவ்வளவு பெரிய சண்டையையும் நீங்கள் உடைத்துப் பார்த்தால் கடைசியில் "எனக்குப் பணம் கொடு" என்ற ஒற்றை வாக்கியமே இருக்கும். பல ஆண்களின் பிரச்சினை அவர்கள் இந்த தப்பான உலகில் இருக்கிறார்கள். மெல்ல மெல்ல பெண்வயமாகி தம் ஆண்மையை அதற்குள் திணிக்க முடியாமல் தடுமாறுகிறார்கள்


 இதிலிருந்து ஆண்கள் முக்கியமாகத் தப்பிக்க வேண்டும் என்பதே என் விருப்பம். வியர்வையாலும் வலியாலும் அபாயங்களாலும் ஆனதே ஆண்களின் உலகம். அங்கே அவர்கள் தம்மைக் கண்டடைய முடியும்


மிஷல் வெல்பெக் தன் நேர்முகம் ஒன்றில் இந்தப் போலியான உலகில் இருந்து தப்பிக்கவே தான் தேவாலயத்துக்குச் சென்று வழிபாட்டுக் கூட்டத்தில் கலந்துகொள்வதாகச் சொல்கிறார். ஒரு திரளாக இறைவனை நினைக்கும்போது கிடைக்கும் ஆற்றல் தனக்குப் பிடித்திருப்பதாகவும் ஆனால் அதேசமயம் அதுவும் போதுமானதாக இருப்பதில்லை - வழிபாடு முடிந்து வெளியேறியதும் பொருளுலகம் நம் பிரக்ஞைக்குள் புகுந்து கொண்டு சோர்வடைய வைக்கிறது என்கிறார். அதனாலே தான் துறவியாக ஒரு காலத்தில் நினைத்ததாகவும் சொல்கிறார். நான் மேலே குறிப்பிட்டவர்களிடமும் ஜிம்மில் இருக்கையில் தூய்மையான ஒன்று இருக்கிறது. ஜிம்மை விட்டு வெளியே வந்ததும் அவர்களும் இச்சாக்கடையில் கலந்துவிடுவார்கள். தூய உணர்வு சகதியாகிவிடும். ஆகையால் இதற்குள் நம்மால் என்ன செய்ய முடியுமென்பதே ஒரே யோசிக்க வேண்டியது.     

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...