முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஊழல் ஒழிப்பில் உள்ள அபத்தம்

 


முபியில் ஒரு கொரியன் படம் பார்த்தேன். No Other Choice ("வேறு வழியே இல்லை"). அதை நான் கண்ட சிறந்த அரசியல் படங்களின் பட்டியலில் வைப்பேன். அது நேரடி கட்சி அரசியல் பற்றின படம் அல்ல. நடைமுறை உலகில் உள்ள நவமுதலீட்டிய அரசியல்தான் அதன் மையம். தனியார் காகிதத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் நல்ல பொறுப்பில் இருந்த நாயகனுக்கு நிறுவன நிர்வாகம் அமெரிக்கர்கள் வசம் போனதும் செலவு குறைப்பு நடவடிக்கையின் பகுதியாக வேலை போகிறது. அடுத்து நல்ல வேலை எவ்வளவு முயன்றும் கிடைக்கவில்லை. அவருக்கு (இப்படி பாதிக்கப்படுகிற பலரையும் போல) உண்மை புரியவில்லை - வேலையைப் பறித்தது நிர்வாகம் மட்டுமே அல்ல, புது வேலை கிடைக்காததற்குக் காரணம் தன் போட்டியாளர்கள் மட்டும் அல்லர். நிரந்தரமின்மை என்பது இந்த பொருளாதார அமைப்புக்குள் திட்டமிட்டே உருவாக்கப்பட்டு அதன் வழியாக பெருமுதலாளிகளுக்குச் சாதகமான அதிக லாபமீடும் நடைமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. சி.இ.ஓ போன்ற பெரும்பொறுப்பில் இருப்போரே அங்கு மிக அதிகமாக ஈட்டுவதாலும் நிறுவனங்கள் தொடர்ந்து உடைக்கப்பட்டு லாபமும் முதலீடும் பல இடங்களில் மீளமீள செலுத்தப்படுவதாலும் யாரிடமும் பணம் இல்லாததைப் போன்ற சூழல் ஏற்படுத்தப்படுகிறது. ஆகையால் பெரும்பணக்காரர்கள் மட்டுமே நிம்மதியாகவும் ஸ்திரமாகவும் இருக்கிறார்கள். பெரும்பகுதி மக்கள் வெள்ளம் சூழ்ந்த வீட்டில் பரணில் அமர்ந்திருப்பவர்களைப் போல காலத்தை ஓட்டுகிறார்கள். இதற்குத் தற்காலிகத் தீர்வு இந்த அமைப்புக்குள்ளே ஒருவர் முதலாளி ஆவது. நிரந்தரத் தீர்வு இந்த அமைப்பை மக்களின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவது. நடைமுறையை மக்களின் சமத்துவத்திற்காக மாற்றியமைப்பது. ஆனால் தனிமனிதர்களால் இப்படி பரந்துபட்டு யுக்திபூர்வமாகச் சிந்திக்க முடியாது. அவர்கள் தனிமனிதர்களே தம் நிலைக்குக் காரணம் என நினைக்கிறார்கள். ஆகையால் இந்த நாயகனும் அவ்வாறே நினைத்து இதற்கு ஒரு தீர்வு கண்டுபிடிக்கிறார் - பிரதான தனியார் நிறுவனத்தில் தான் வேலை தேடும்போது அங்கு தனக்குப் போட்டியாக நேர்முகத்தில் கலந்து கொள்வோரைக் கண்டுபிடித்துக் கொல்வது. அதற்காக அவர் செய்யும் அபத்தங்களும் குற்றங்களுமே மிச்சக் கதை. படத்துக்குள் இந்தப் பொருளாதார அமைப்பு நம் குடும்ப அமைப்பில் ஏற்படுத்தும் சிதைவுகள், மகக்ளின் உளவியலை அது விரோதமாக, வெறுப்பால் சூழ்ந்ததாக மாற்றுவது, அடிப்படை சுதந்திரம் கூட இல்லாமல் எல்லாருமே மாட்டிக் கொண்டிருப்பதாக உணர்வது என பல தளங்கள் உண்டு. படத்தின் முடிவில் நாயகன் எப்படியோ ஒரு கனவைப் போல பல குற்றங்களைப் பண்ணி மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்கிறார், வேலையிலும் அமர்கிறார் என்றாலும் நமக்குத் தெரியும் நிஜவுலகில் இப்படிச் செய்கிறவர்கள் சிறையில்தான் வாழ்க்கையை முடித்துக் கொள்வர் என்றும். அது போகட்டும். எனக்கு இப்படத்தைப் பார்க்கவே மிகக் கடினமாக இருந்தது - இன்றைய கார்ப்பரேட், தனியார் வேலைச் சூழலை, அது தனிமனித வாழ்க்கையில் ஏற்படுத்தும் பாதிப்புகளைப் பரிசீலிப்பது ஒரு துன்பமாக இருந்தது. இப்படம் எனக்கு இன்று நடக்கும் ஊழல் ஒழிப்பு நாடகத்தையும் நினைவுபடுத்தியது.

ஊழல் ஒரு மிகப்பெரிய பிரச்சினைதான். அது அடிப்படையில் நமது தனிப்பட்ட வருமானத்திலேயே கைவைக்கிறது. சந்தைக்கு வர வேண்டிய பணம் ஆட்சியாளர்களாலும அதிகாரிகளாலும் சுரண்டப்பட்டு கறுப்புப் பணம் ஆவதால், ஒரு பக்கம் வரி குறைகிறது, இதனால் நம் மீதான மறைமுக, நேரடி வரியை அதிகரிக்கிறார்கள்; அடுத்து, பணப்புழக்கம் குறைந்து பணவீக்கம் அதிகரிக்கிறது. சமூகத்தில் ஏற்றத்தாழ்வு அதிகரிக்கிறது. கடைசியாக, நமக்குக் கிடைக்க வேண்டிய அடிப்படைச் சேவைகளின் தரம் பல மடங்கு குறைகிறது. இந்தக் கடைசி விசயமே நேரடியாக இருப்பதால் இதை மட்டுமே அதிகம் பேசுகிறோம். இதனாலே நாம் ஊழலை ஒழிப்பதற்கு முடியாவிட்டாலும் ஊழல் செய்த கட்சியைத் தண்டிப்போம் என்று ஒரு கட்சியை ஆட்சியில் இருந்து நீக்குகிறோம். புது கட்சி வந்து அதே ஊழலைத் தொடர்கிறது. அவர்களுக்கு அவகாசம் கொடுப்போமே எனப் பொறுத்திருந்து இருந்து கடைசியில் நொந்து போய் அவர்களுக்கு வாக்களிக்கவும் தயங்கி இன்னொரு கட்சியின் பக்கமோ ஆரம்பத்தில் ஆண்டவர்களிடமோ சாய்கிறோம். ஊழல் இப்போதும் தொடர்கிறது. ஏன் இது தொடர்கிறது என்று கேட்டால் தனிமனித ஒழுக்கமில்லை என்று காரணம் சொல்கிறோம். எனில் ஏன் யாரைத் தேர்ந்தெடுத்தாலும் ஊழல் கொழிக்கிறது? இக்கேள்வியை நாம் கேட்க விரும்புவதில்லை. ஏனென்றால் நான் மேற்சொன்ன படத்தைக் குறித்துச் சொன்னதைப் போல இம்மாதிரி கேள்விகள் நம்மை ஆழமாகத் துன்புறுத்துகின்றன. இவற்றை சாய்ஸில் விடவே விரும்புகிறோம். ஒருவேளை அப்படி இல்லை, அடியாழத்துக்குப் போய் ‘சிஸ்டத்தை’ மாற்ற வேண்டும் எனில் செய்ய வேண்டியதென்ன?

இப்போதுள்ள ஊழியர்கள், அதிகாரிகள், அவர்களுக்கு மேல் ஐ.ஏ.எஸ் தலைமை, அவர்களுக்கு மேல் அமைச்சர்கள் எனும் படிநிலை மாறி ஊழியர்கள், அதிகாரிகள், அவர்களை அவர்களுடைய சேவைக்கு ரேட்டிங் வழங்கி நிர்வகிக்கும் வாடிக்கையாளர்கள் (பொதுமக்கள்) என்று மாற வேண்டும். இந்த ரேட்டிங் இறங்கினால் சம்மந்தப்பட்ட ஊழியர், அவருக்கு மேலுள்ள அதிகாரிகள் வரை சம்பளம் தன்னியக்கமாக குறைக்கப்பட்டு, ரேட்டிங் ஒரு குறிப்பிட்ட புள்ளிக்கு மேல் இறங்கினால் மூன்று மாத வேலை நீக்கம், ஒரேயடியான வேலை நீக்கம் என நடவடிக்கைகள் தன்னியக்கமாக நடக்க வேண்டும். சம்பளம், வேலை உயர்வு ஆகியவை இதை நம்பியே இருக்க வேண்டும். ஊழியர்களின் லகான் மேலதிகாரிகளிடம் இருந்தும், மேலதிகாரிகளின் லகான் அமைச்சர்களிடம் இருந்து பறிக்கப்பட்டு ஊரோ பெயரோ சொல்லாமல் பொதுமக்களான பயனர்கள் வழங்கும் ரேட்டிங்கைச் சார்ந்ததாக மாற்றப்பட வேண்டும். இப்போது ஒருவர் உயரதிகாரிக்குப் பயந்து வேலை செய்ய மாட்டார். பயனர்களைப் பார்த்து மட்டும் வேலை செய்வார். இரண்டுக்கும் பாரித்த வேறுபாடு உண்டு. இன்று கணினி வழியாக இதைச் சுலபத்தில் செய்ய இயலும். இதில் திருப்தி இல்லாத ஊழியர்களும் அதிகாரிகளும் நீதிமன்றம் சென்று போராட வேண்டியதுதான். மக்களுக்குத் தம் ரகசியத்தன்மையைப் பாதுகாக்கும் உரிமை உள்ளதால் அவர்கள் நீதிமன்றத்திற்கு அலையவும் வேண்டியிருக்காது. இது ஊழலைப் பெருமளவில் ஒழித்துவிடும். நீங்கள் பத்திரப் பதிவு செய்யவும்ம், ஒப்புதல் வாங்கவும் சிரமப்பட்டால் உங்களைப் போல சிரமப்படுவோரிடம் பேசி ஒருங்கிணைத்து ஒரு குறிப்பிட்ட ஊழியரை மட்டுமல்ல அவருக்கு மேலுள்ள பலரையும் கடும் சிரமங்களுக்கு உள்ளாக்கலாம். சாலை அமைப்பு, ஊராட்சி, நகராட்சி எங்குமே தரம் குறைந்தால் மக்களே நேரடியாக நடவடிக்கை எடுக்க முடிய வேண்டும். அப்போது ஊழல் தானாகவே நின்றுவிடும்.

இந்த அமைப்புகளை அமைச்சர்களும் ஆளுங்கட்சியும் கட்டுப்படுத்துகிற நிலைமை மாறினாலே டெண்டர் ஊழல்கள் முடிந்துவிடும். அரசின் வேலை என்பது நிர்வாகமாக அல்லாமல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதாகவே இருக்க வேண்டும். பொருளாதாரம், குறிப்பாக தனிமனித வருமானம் குறைந்தால், அவர்களுக்கும் தண்டனை (அடுத்தடுத்து தேர்தல்களில் பங்கேற்க தடை) இருக்க வேண்டும்.

இது அரசையும் அரசின் பல துறைகளையும் தனியாரைப் போல பயனர்களின் அங்கீகாரத்தை நாடி, அவர்களுடைய மதிப்பீட்டை நம்பிச் செயல்படுவதாக மாற்றும். தனியாரிலும் ஊழல் உள்ளது. ஆனால் அது பெரும்பாலும் மக்கள் பணத்தைச் சுரண்டுவதாகவோ கறுப்புப் பணத்தைப் பதுக்குவதாகவோ தான் இருக்கிறது. அதாவது ஏற்கனவே ஊழல் மலிந்துள்ள அரசின் அமைப்புகளைப் பயன்படுத்தித் திருடுவது. அந்த ஓட்டையை அடைத்தால் இதுவும் அடைந்துவிடும். இவ்வளவு ஊழல் நடக்காவிட்டால் இவ்வளவு திடீர் பெரும்பணக்காரர்கள், திடீர் ரௌடிகள் தோன்ற முடியாது.

நாம் இப்போது பயன்படுத்துவது பிரதிநுத்துவ மக்களாட்சி. நான் பரிந்துரைப்பது பங்கேற்பு மக்களாட்சி. ஊழல் என்பது பிரதிநுத்துவ மக்களாட்சியின் நோய். அது கண்டுபிடித்த கருவி. தார்மீக அடிப்படையில் ஒரு பிரதிநிதியோ ஊழியரோ ஒழுங்காக இருந்தால் கட்டமைப்பு சிறப்பாக இருக்கும் என்பது உண்மையல்ல. மனிதர்கள் அடிப்படையில் தன்னலமானவர்கள். வாய்ப்புக் கிடைத்தால் சிலர் திருடுவார்கள். ஒரு அமைப்பே மனிதர் திருடுவதை ஊக்கப்படுத்தும் வண்ணம் ‘தன்னிச்சையாக’ கட்டுப்பாடின்றி அமைக்கப்பட்டால் திருட்டு ஒழுங்குபடுத்தப்பட்டு ஊழலாகும். தனியாரிடம் நிதியளித்து அரசு சேவைகளைப் பெறும் நிலை வந்தபின் இந்த ஊழல் பன்மடங்கு அதிகரிக்கிறது. அதாவது ஊழலை தனியார் முதலீட்டாளர்கள் வானுயரத்துக்குக் கொண்டு போய் அவர்களும் திருடிப் பெரும்பணக்காரர்கள் ஆகிறார்கள். இதற்கான ஒரு தனி தொழில்துறையே, தனி வர்க்கமே தோன்றிவிட்டது. பிரதிநுத்துவ மக்களாட்சி இதைக் கட்டுப்படுத்துவதற்கான யுக்தியை வகுக்கவில்லை. அதை மாற்றினால் மட்டுமே ஊழல் ஒழியும். கட்சியை ஆட்சியில் இருந்து அகற்றுவது நமக்கு ஒரு திருப்தி கொடுக்கும். ஆனால் ஒரு குழுவிடம் இருந்து ஊழல் மற்றொரு குழுவுக்குப் போகும். மாறி மாறி பல குழுக்கள் திருடுவதால் மக்களுக்கு ஒரு பயனும் இல்லை. இது மக்களுக்கும் தெரியும். அவர்களுக்கு சரியான நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பை இந்த மக்களாட்சி அமைப்பு வழங்கினால் அவர்கள் ஊழலைத் தண்டிப்பார்கள். இப்போது அப்படி ஒன்று இல்லை. அதுவரை ஊழல் ஒழிப்பு என்பதே - No Other Choice படத்தில் வருவதைப் போல - மக்கள் முகத்தில் மக்களைக் கொண்டே கரியைப் பூசும் ஒரு நடவடிக்கை மட்டுமே.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

  மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும். இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன: 1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது. 3) தொழில்...

மக்களாட்சியின் தோல்வியும் மதிப்பிடுகளின் வீழ்ச்சியும் எப்படி முதலீட்டியத்தால் விளைந்தன?

ஏலியன்களே நம் நாட்டுக்கு வந்து கட்சி தொடங்கி ஆட்சியமைத்தாலும் ரௌடிகள், நில முகவர்கள், திடீர் பணக்காரர்கள், மோசடிக்காரர்கள் எம்.எல்.ஏ, அமைச்சர்கள் ஆவதையும், பெரும்பணக்காரர்கள் ஆட்சியைக் கையில் வைத்து தம் விருப்பப்படி உருட்டுவதையும் தவிர்க்க முடியாது என்று நினைக்கிறேன். நம் அதிகாரக் கட்டமைப்பு அப்படி. ஒரு செய்தி பார்த்தேன். எளியவர்களுக்கு வாய்ப்பளிப்போம் என்று கூறிய தவெகவின் எம்.எல்.ஏக்களில் 80% மேல் கோடீஸ்வரர்கள். குற்றவாளிகள், போலி சான்றிதழ் பேர்வழிகள், புரோக்கர்களும் உண்டு. கட்சியே ஒரு பக்கம் பாஜக கொடுத்த நிதியையும் இன்னொரு பக்கம் லாட்டரி குடும்பத்தின் நிதியையும் வைத்தே இத்தனை நாட்கள் நடந்தது. இனிமேல் டெண்டர் முறைகேடு, பல தளங்களில் ஊழல் என்று கொள்ளையடித்து 'தன்னிறைவு' ஆக முயல்வார்கள். அமைச்சர்கள் பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்து பெரிய நிறுவனங்களை ஆரம்பிப்பார்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்வார்கள், கறுப்புப் பணத்தைப் பதுக்குவார்கள். ஏன் எந்த ஆட்சி வந்தாலும் இந்த டெம்பிளேட் மாறுவதில்லை என்றே நாம் கேட்க வேண்டும்? யார் நல்லவர், யார் கொஞ்சம் குறைவாகக் கெட்டவர் என்பது அல்ல. நமது இப்போத...