முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மூன்று மாநில தோல்விகள் சொல்வதென்ன?

 



மே.வங்கத்தில் மமதா பேனர்ஜியின் தோல்வி என்னை ஆச்சரியப்படுத்தவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே நான் பல வங்காளிகளிடம் பேசி வருகிறேன் (மாணவர்கள், சக-ஊழியர்கள், எழுத்தாளர்கள்). யாருமே மமதா மீது ஆதரவு நிலையில் இல்லை. ஒரு பிரபலமான தலைவரை எப்படி மக்கள் வெறுக்க முடியும் என எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அதுவும் பாஜகவுக்கு சரியான முட்டுக்கட்டை போடும், அதிரடி கருத்துக்களை வைக்கும் கட்சி அவர்களுடையது என்பதால் அவர்கள் மீது தமிழ்நாட்டில் ஒரு நேர்மறையான பார்வையே இருக்கும். ஆனால் சொந்த ஊரில் அப்படி இல்லை. வளர்ச்சியின்மை, ஊழல், வாரிசு அரசியல், வளர்ச்சியற்ற ஏற்றத்தாழ்வான எல்லா மாநிலங்களிலும் தோன்றும் அராஜக கும்பல்களின் வளர்ச்சி, வன்முறை, குற்றங்கள் அங்கும் உண்டு. வங்க அடையாளப் பெருமிதம் மட்டுமே மமதாவை இத்தனை நாட்கள் காப்பாற்றியது என்பது என் பார்வை. இப்போது மக்கள் தாங்க முடியாத இடத்துக்கு நகர்ந்துவிட்டார்கள். அடுத்து பல லட்சம் சிறுபான்மை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செயது. சுமார் 5% மமதா ஆதரவு வாக்காளர்களை நீக்கிவிட்டார்கள் என்று யோகேஷ் யாதவ் அண்மையில் ஒரு நேர்முகத்தில் சொன்னார், கட்டுரைகளில் எழுதவும் செய்தார். 'சிறப்பு தீவிர திருத்தம்' ஒரு பாஜக சார்பு வாக்காளர் திருத்தமாகவும் மாறிவிட்டதுதான். ஆனால் இது மட்டுமே மமதாவின் தோல்விக்கு காரணம் அல்ல. என்னதான் தேர்தல் ஆணையம், வாக்குப் பதிவு எந்திர தில்லுமுல்லுகள் நடந்தாலும் மக்கள் பெரும்பான்மை வாக்குகள் ஒரு கட்சிக்குப் போனால் அதைத் தடுக்க யாராலும் இயலாது.


இதில் ஒரு முக்கியமான பாடம் உண்டு - கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளாகவே அரசியலென்பது ஒரு பக்கம் தேசப்பாதுகாப்பு, இந்து சமூகப் பாதுகாப்பு, தேசப்பற்று என்று ஒரு பக்கமும், மாநில உரிமை, மதவாத எதிர்ப்பு, மொழியுணர்வு, எதிர்ப்பரசியல் என்று இன்னொரு பக்கமும் கதையாடல் உருவாக்கமே அரசியல் ஆகி விட்டது. கிட்டத்தட்ட இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில் இருந்ததைப் போல எதிரிகளையும், மற்றமைகளையும் தேடுவதையும் எதிர்ப்பதையும், ஒத்தவர்களுடன் இணைந்து போராடுவதையும் முன்னிலைப்படுத்துகிறோம். பாஜக ஆட்சிக்கு வரும் முன்பு இப்படி இல்லை. இரண்டு எதிர்முனைகள் உருவாக்கப்பட்டு அவற்றுக்கு இடையில் முடிவற்ற கால்பந்து போட்டி ஒன்று நடந்து வருகிறது. இதனிடையே அரசியல் என்பது மக்களுக்கு அடிப்படை வசதிகளைப் பண்ணித் தருவது, அன்றாட வாழ்க்கைக்குப் பாதுகாப்பை உறுதி செய்வது, வளர்ச்சிக்கான கட்டமைப்புகளை உருவாக்குவது, வருமானத்தை அதிகரிப்பது என்பதை ஆளுங்கட்சிகள் பெருமளவு மறந்துவிட்டன. அவ்வப்போது சில நலத்திட்டங்களை ஒன்றிய, மாநில அரசுகள் அறிவிப்பதுடன் சரி. உழைக்கிற மக்களை ஒரு திரட்சியாகப் பார்க்கத் தவறி அவர்களை அரசியல் பிரஜைகளாக்கி விட்டனர். பொருளாதாரம் தேக்க நிலை அடைந்து மக்கள் செலவுக்குப் பணமின்றி திணறிக் கொண்டிருக்கும்போதும் அரசியல் கட்சிகள் மேற்சொன்ன கால்பந்தாட்டத்தையே ஆடிக் கொண்டிருந்தனர்.

கேரளத்தில் இடதுசாரி ஆட்சி அமைந்தபோது கூட அவர்களும் 'வளர்ச்சி' எனும் கார்ப்பரேட் சித்தாந்தத்தைக் கொண்டு வந்து முதலீட்டை இழுக்கப் பார்த்தார்கள். அந்த வருமானத்தை மக்களுக்கு முகமை அளிப்பது, உரிமைகளைப் பாதுகாப்பதன் வழியாக பகிர்ந்து கொடுக்க முயலவில்லை. கூடுதலாக, அவர்களுடைய கட்சி ஊழியர்களின் அராஜகச் செயல்கள் மீது மக்களுக்கு கசப்பு ஏற்பட்டுள்ளது. பினராய் கட்சியை அரசாகவும், அரசையே மாநிலமாகவும் கருதுகிற ஒரு பண்பாட்டை ஏற்படுத்தினார். கட்சியை விமர்சிப்போர் துன்புறுத்தப்பட்டனர். விளைவாக இம்முறை தேர்தலில் தோற்றுள்ளார்கள்.
அதுவே தமிழ்நாட்டிலும் வேறொரு விதத்தில் நடந்தது - இங்கும் தொழ்ல்வளர்ச்சி அபாரம், ஆனால் வருமானம் கிராமங்கள், சிறுநகரங்கள், ஏழைகள், கீழ்மத்திய வர்க்கத்தினர் நோக்கி வளர்ச்சியின் பயன்கள் போகவில்லை. சிறுதொழில்களுக்கு தொடர்ச்சியாக உதவிகளைச் செய்து, கூட்டுறவுகளை உருவாக்கி கீழ்மட்டத்தில் வளர்ச்சியை ஏற்படுத்துவது, தொழிலாளர் நலன்களைக் காப்பது, தரமான இலவசக் கல்வியை உத்தரவாதம் செய்வது, கல்வியில் தனியாரைப் பின்னிலைப்படுத்துவது, வரிகளைக் குறைப்பதன் வழியாகவும், இலவசங்களைக் குறைப்பதன் வழியாகவும் இதற்கான வருமானத்தை உத்தரவாதம் செய்வதை திமுக பிரதானப்படுத்தவில்லை. ஒருபக்கம் இலவசங்கள், இன்னொரு பக்கம் மாணவர் பயிற்சி, தொழிற்சாலைகளுக்கு கட்டமைப்பு வசதிகள், முதலீட்டாளர்களுக்கு உவப்பான ஏற்பாடுகள் என்று ஒரு மேல்மத்திய, உயர்த்தட்டு கார்ப்பரேட் அரசியலை நோக்கியே திமுக தன்னையறியாமலே நகர்ந்து கொண்டிருந்தது. நான் கடந்த முறை சென்னை வந்திருந்தபோது எனக்கும் நண்பர் கண்ணனுக்கும் ஒரு உரையாடல் நடந்தது. நாங்கள் மாநிலத்தில் உள்ள வளர்ச்சியைப் பற்றியும் உள்கட்டமைப்புகளைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது நான் அவரிடம் "இவையெல்லாம் புறமே நடப்பன. உங்கள் வாழ்க்கையில் உங்களால் தொட்டுணரக் கூடிய மாற்றம் என்று எதைச் சொல்வீர்கள்? தெருவில் அழுக்கு ஆடையுடன் நடந்து போகிறவனுக்கு கிடைத்த மாற்றம் என்ன? ஒவ்வொருவரும் இக்கேள்வியைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். நாம் அரசியல் உணர்வு சார்ந்து பெருமிதப்படலாம். ஆனால் நடைமுறையில் உங்கள் கையில் வருவதென்ன?" அவர் எதுவும் இல்லை என்றுவிட்டு "ஆனால் அண்ணே...." என்று நியாயப்படுத்த தொடங்கினார். லட்சியவாதம், கருத்துமுதல்வாதம் கட்சியின் கருத்தியலாக நம்மை ஆட்கொள்ளும்போது நடப்புலகில் நம் இருத்தலை நாம் அறியாமல் இல்லாத ஒன்றுக்காக பெருமிதம் கொள்ளவும் வருந்தவும் தொடங்குவோம், அது நல்லதல்ல என்று அவரிடம் நான் சொன்னேன்.

மாநிலத்தில் உள்ள வளர்ச்சியைப் பற்றி நானும் பாராட்டுவேன். ஆனால் வளர்ச்சியின் பயன் கருத்தாகவோ தரவாகவோ அல்லாமல் பொருளாக நம் கையிலும் ஜேப்பிலும் இருக்க வேண்டும். அனைவருக்கும் இது சாத்தியமாவதே வளர்ச்சி. கொள்கை, அரசியல், சமூகத்திற்குப் போய்ச் சேரும் நலத்திட்டங்கள் இரண்டாம் பட்சமே. மாநிலம், தேசம் ஆகியவை நமது புலன்களால் அறிய முடியாதபோது பயனற்ற கருத்தமைவுகளே. மாநில, தேச வளர்ச்சியும்தான். கர்நாடகத்தில் பாஜக ஆட்சி விலகி காங்கிரஸ் ஆட்சி அமைத்தது ஒரு நிம்மதியைத் தந்தது. எப்போதுமே சூழலில் உள்ள ஒரு பயம், கலவரம் வெடிக்கும் பயம், வெறுப்பு மனநிலை குறைந்தது. ஆனால் அதைத் தாண்டி மக்களின் அன்றாட வாழ்க்கையை காங்கிரஸ் மேம்படுத்தவில்லை. காங்கிரஸ் மட்டுமல்ல கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாகவே ஆட்சியையும் நிர்வாகத்தையும் நாம் பார்க்கும் விதமே தவறாக உள்ளது. உ.தா., ஒரு தனியார் நிறுவனம் தன் லாபத்தைப் பெருக்குவதில் கட்டும் இடையறாத முயற்சி, மும்முரத்தை அரசுகள் இன்று மக்களின் வருமானத்தை, சொத்துக்களைப் பெருக்குவதில் காட்டுவதில்லை. அவர்களுடைய கவனமெல்லாம் சொந்த சொத்தைப் பெருக்குவதிலும் 'அரசியல்' செய்வதிலும் உள்ளது. அதன் விளைவே அரசியல் நிச்சயமின்மை.

பாஜகவின் இந்துத்துவத்துக்கு எதிரான மூன்று அரசுகளின் வீழ்ச்சியை நான் இவ்வாறுதான் பார்க்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...