முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மனுஷுக்கு வாழ்த்துகள்

 மனுஷ்ய புத்திரன் - Tamil Wiki

திமுக ஆட்சிக் காலத்தில் சில இலக்கியவாதிகளுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் பல்வேறு குழுக்களில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டன. எனக்குத் தெரிந்தே சிறப்பாகச் செயல்பட்டவர்கள் உள்ளவர்கள் இருக்கிறார்கள். (எனக்கு அங்கு நடந்தவற்றில் நேரடியாகத் தெரிந்தது குறைவு என்பதால் சொல்கிறேன்.) அவர்களில் நூலகக ஆணைக் குழுவின் தலைவராக மனுஷ்ய புத்திரன் சிறப்பாகச் செயலாற்றினார் என்று நான் தனியாகச் சொல்லத் தேவையில்லை. ஊருக்கே தெரிந்த உண்மை அது. குறைவான அதிகாரமும் எல்லையும் கொண்ட சிறிய பொறுப்புதான். அதை வைத்தே என்னவெல்லாம் செய்தார் என்று யோசித்துப் பார்க்க வியப்பாக உள்ளது. நூலக அரங்குகளை கூட்டங்களுக்காகச் சிறப்பாக நடத்தினார். அதற்கு ஒரு எழுத்தாளர் அங்கு பொறுப்பில் இருக்க வேண்டியிருக்கிறது. (இனி பாருங்கள். தூங்க ஆரம்பித்துவிடுவார்கள்.)

நான் கவனித்ததை மட்டும் சொல்கிறேன்: இன்ஸ்டாவில் மாணவர்களை கவிதை வாசிக்க வைத்தது, அதற்குப் பயிற்சி அளித்தது, எழுத்தாளர்களையும் சிந்தனையாளர்களையும் அவர்களுடன் தொடர்ந்து உரையாட வைத்தது, கவிதை தினமன்று கூட்டங்கள் நடத்தியது, பல கல்லூரிகளில் பேசி அங்குள்ள அரங்குகளில் கூட்டங்கள் நடத்தியது என ஒரு சலனத்தை நிகழ்த்திக் கொண்டே இருந்தார். பெரும்பாலும் தன் அண்மையில் உள்ள, தொடர்பில் உள்ள படைப்பாளிகளை இதற்குப் பயன்படுத்திக் கொண்டார்.

அரசு சார்ந்த ஒரு பொறுப்பில் இருக்கையில் சமூகத்துடன் பரவலாகத் தொடர்புறுத்தவும், அனைவருக்கும் சென்று சேரத்தக்க விதத்தில் நிகழ்ச்சிகளை நடத்தும் கட்டாயம் இருக்கும். ஒரு தனியார் அமைப்பு சிறிய அளவில் நபர்களை வைத்து நடத்தும் கூட்டங்களில் இருக்கும் ஆழமும் தீவிரமும் சாத்தியப்படாது. இந்த எல்லைகளுக்குள் ஒரு சமநிலையைப் பேண முயன்றார். நான் கடந்த சில ஆண்டுகள் சென்னையில் பணி செய்திருந்தால் எந்த விதத்திலும் என்னால் அவருக்கு உதவ இயலவில்லை என்று அவ்வப்போது வருத்தப்படுவேன்.

அவர் இப்போது அப்பதவியில் இருந்து விலகுகிறார். அவருடன் பயணித்தவர்களுக்கு இது பெரும் துக்கமாக இருக்கும் என அறிவேன். அற்புதமான மனிதர். யார் அவருடன் இருந்தாலும் ஒரு தனி செயலூக்கம் வந்துவிடும். யாருடைய முடிவுகளிலும் குறுக்கிடாமல் கட்டுப்படுத்தாமல் நிறைய சுதந்திரம் அளிப்பார்.

அதேநேரம் இத்தகைய பணிகள் ஒரு எழுத்தாளருக்கு தண்டனைதாம். எழுத்தாளர்கள் இவற்றை எடுத்துக் கொள்ளவே கூடாது என நினைக்கிறேன். தினம் தினம் நிறைய பேர்களுடன் பேச வேண்டும், பொறுப்புகள், கவலைகள், ஒருங்கிணைக்கும் அழுத்தம் நம் மனதில் அமர்ந்து அழுத்தும். நேரத்தை முழுமையாகத் தின்றுவிடும். உடல் ஆற்றலைவிட மீட்க முடியாதது அக ஆற்றல்தாம். தொடர்ச்சியாக கூட்டங்களில் கலந்துகொள்ளும்போதும் அவற்றை நடத்தும்போதும் நாம் அதனைத்தான் அதிகமாக இழக்கிறோம். ஒரு எழுத்தாளருக்கு அகத்தனிமையும் அவசியமானது - கூட்டத்தின் நடுவே இருந்தாலும் நாம் உள்ளுக்குள் எதிலும் பட்டுக்கொள்ளாமல் சிந்தித்துக் கொண்டும் மொழிக்குள் ஒரு பந்தைப் போல உருண்டு சென்று கொண்டும் இருப்போம். இத்தனிமை வரும் அமைதியில் இருந்தே நம் அமைதியின்மையின் சொற்கள் பிறக்கின்றன. இப்பணி இல்லாவிட்டால் மனுஷ்ய புத்திரன் கடந்த ஐந்தாண்டுகளில் 4-5 நாவல்களையாவது எழுதியிருப்பார். தனக்கென ஒரு வடிவத்தையும் மொழியையும் நாவலில் கண்டடைந்திருப்பார். கொஞ்சம் அதி-செயலூக்கத்துடன் புற உலகில் இருந்துவிட்டார். வரும் ஐந்தாண்டுகளில் அவர் புனைவெழுத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இது ஒரு நல்வாய்ப்பு.

அதிகமாக கூட்டங்கள் நடத்துவதும் கலந்துகொள்வதும் படைப்பாற்றலும் சிந்தனையாற்றலும் இல்லாதவர்களோ அதை இழந்து விட்டவர்களோ செய்ய வேண்டியது. மனுஷ்ய புத்திரன் தன் படைப்பாற்றலின் உச்சத்தில் இருக்கிறார்.

இன்னொரு விசயம் அவர் கடந்த ஐந்தாண்டுகளை, தனக்குள்ள வாய்ப்புகளைக் கொண்டு, தன் படைப்புகளை ஆங்கிலத்தில் கொண்டு வரவும், இந்தியா முழுக்க நடக்கும் இலக்கிய விழாக்களில் கலந்துகொள்ளவும் பயன்படுத்தி இருக்க முடியும். ஆனால் துளி கூட முயலவில்லை. அதேபோலத்தான் உயிர்மைப் பதிப்பகத்தையும் அதில் எழுதுகிறவர்களையும் பாதி கட்டி முடித்த கட்டிடத்தைப் போல விட்டுவிட்டார். எனக்கு இது குறித்து வருத்தமுண்டு. அவர் தன்னை சார்பற்றவராகக் காட்டிக் கொள்ள அதீதமாக முயன்றார். காலச்சுவடு படைப்பாளிகளுக்கு (ஒரு சிலருக்காவது) கண்ணன் என்னவெல்லாம் வாய்ப்புகளைப் பெற்றுத் தருகிறார். ஜெயமோகன் தாய்க் கோழி தன் குஞ்சுகளை அழைத்துச் செல்வதைப் போல தன்னை ஒருநாள் வந்து பார்த்தவர்களைக் கூட நோபல் பரிசுக்கு பரிந்துரைப்பதாகக் கனவு கண்டுவிட்டு அதைச் செய்ததாக அறிவிக்கிறார்; சைக்கிள் கூட விடத் தெரியாதவர்களை விண்கலனில் ஏற்றி தண்ணீரில்லாத கிரகத்துக்கு அனுப்பி விடுகிறார். அவ்விதத்தில் மனுஷ்ய புத்திரன் தனக்குக் கிடைத்த வாய்ப்பை தன் பதிப்பக படைப்பாளிகளுக்காக சரிவரப் பயன்படுத்தவில்லை என்றே சொல்வேன். நீங்கள் எந்த அமைப்பில், பதிப்பகம் / இதழ்-சார்ந்த குழுவில் இருந்தலும் எதாவது ஒரு பலனிருக்கும் - ஆனால் உயிர்மை எழுத்தாளர்கள் உயிர்மையில் இருப்பதாலே எங்கும் அழைக்கப்பட மாட்டார்கள். இதுவே ஜெயமோகனாக இருந்திருந்தால் தமிழ்நாட்டையே 'விஷ்ணுபுர நாடாக்கியிருப்பார்'. இந்த ஐந்தாண்டுகள் மிகக்குறைவான விருது பெற்றவரும் மனுஷ்தான். எங்கள் மண்ணின் மகனான ஒரு படைப்பாளி இருக்கிறார். அவர் மட்டும் நூலக ஆணைக்குழுத் தலைவராக இருந்திருந்தால் ஐந்தாண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு, தனியார் விருதுகளை வாங்கிக் குவித்திருப்பார். எனக்குத் தெரிந்து மனுஷ் அரசு அதிகாரிகளுக்கான அரசாங்கக் குடியிருப்பில் ஒரு வீட்டை வாடகைக்குப் பெற்றார் என்பதைத் தாண்டி எதையும் அனுபவிக்கவில்லை. மனுஷுக்குள் ஒரு பயங்கர காந்தியவாதி இருக்கிறார். அவரதை மாற்றிக் கொண்டால் நன்றாக இருக்கும்.

கடந்த முறை சர்வதேசப் புத்தக விழாவுக்குச் சென்றபோது உயிர்மை நூல்கள் மற்ற பதிப்பக நூல்களை விட குறைவாகவே மொழியாக்கப்பட்டுள்ளன என்பதை கவனித்தேன். சர்வதேசப் பதிப்பாளர்களுடன் பேசுவது, விருந்துகளில் கலந்துகொள்வது, சர்வதேசப் படைப்பாளிகளுடன், முகவர்களுடன் லாபி செய்வது, அதைக் கொண்டு தனக்காக எழுதுவோரின் நாவல்களை, கதைகளை பிரெஞ்சிலோ ஜெர்மனிலோ கொண்டு போவது என எதையும் அவர் செய்யவில்லை. காலை 5 முயல் 10 வரை கட்சிப் பணி, 10இல் இருந்து இரவு பன்னிரெண்டு வரை நூலக ஆணைக்குழு பணி, இரவு பன்னிரெண்டில் இருந்து காலை 5 வரை மாணவர் பயிற்றுவிப்புப் பணிகளுக்கான திட்டமிடல் ஒருங்கிணைப்பு என்று கிறிஸ்துவ ஊழியக்காரர்கள் தன்னலமற்று பணியாற்றுவதைப் போல இருந்தார். இப்படியெல்லாம் ரொம்பவும் அனைவருக்குமானவராகப் பணியாற்றத் தேவையில்லை. அவர் கொஞ்சம் instrumental ஆக இருக்கலாம். இவ்வளவு நல்லவராக, "கௌரவம்" சிவாஜி போல இருக்கத் தேவையில்லை.

முக்கியமாகப் பாராட்டத்தக்க வேண்டிய விசயம் அவர் இப்படி தூங்காமல் பணி செய்ததல்ல. அவர் ஒரு நண்பராகவோ சக எழுத்தாளராகவோ துளியும் மாறாமல் இருந்ததே. டிவி விவாதங்களில் தலையை வெட்டி வெட்டி அவர் பேசும்போது அதிலொரு அதிகார மமமதை உள்ளதாகத் தோன்றும். ஆனால் அது அவரது தற்பாதுபாதுகாப்பு எத்தனம்தான். அதிகாரம் அவரைச் சற்றும் நிலைமாற்றவில்லை, தடம் மாறச் செய்யவில்லை. இதுவே ஆகக் கடினமான செயல். எப்போதாவது கோபித்துக் கொண்டு மாதக்கணக்காகப் போனை எடுக்காமல் இருப்பாரே தவிர அதுவும் அசல் கோபமாக இருக்காது. பெரும்பாலும் எல்லாருக்கும் அணுக்கமாக இருந்தார். ஒரு போனைப் போட்டால் தன்னால் எதையாவது செய்ய இயலுமா என்றே முதலில் யோசிப்பார். அவர் பொறுப்புக்கு வரும் முன்பும் அப்படியே இருந்தார், பிறகும் கூட அப்படியே. இது பெரிய விசயம் - எனக்குத் தெரிந்து பலர் அதிகாரம் கிடைத்ததும் புத்தருக்கு ஞானம் கிடைத்ததைப் போல மோன நிலைக்குள் சென்றுவிடுவர். மனுஷ் அப்படி அல்லர் என்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. திமுக ஆட்சி இழந்து தன் பதவியையும் அவர் துறந்தபிறகே மோன நிலைக்குள் போய்விட்டார். பலமுறை அழைத்தும் எடுக்கவில்லை.

இப்படி அபாரமாகப் பணியாற்றி நம் நெஞ்சங்களை வென்ற மனுஷ்ய புத்திரனுக்கு இந்த பணி விலகல் தருணத்தில் அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...