முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிஜந்தனின் "பிறழ்" - இரு தேகங்களுக்கு இடையே


 
"பிறழ்" ஒரு தனித்துவமான நாவல். கோபிகிருஷ்ணனின் கதைகளுடன் ஒப்பிடலாம் என்றாலும் அவரது அக்கறைகள் மனபிறழ்வை அடக்கப்பட்ட காமத்தின் வெளிப்பாடுகள் எப்படி சமூக மனத்துடன் முரண்படுகின்றன என்பதே. நிஜந்தனின் நாயகனுக்கு இம்மாதிரி காமத்தையும் அது நடத்தையில் ஏற்படுத்தும் சிதைவுகளையும், தனிமனித-சமூக உறவுகளில் வெளிப்படும் அபத்தமான கணங்களையும் தள்ளி நின்று பார்க்கிற சாத்தியமோ அவசாசமோ இல்லை. கோபிகிருஷ்ணன் காமத்தை கொஞ்சம் சர்ரியலாகவும் சில இடங்களிலில் கனிவாகவும் பிரியமாகவும் பார்க்க நிஜந்தனோ ஒருவர் அதன் பகுதியாகவே மாறி துன்புறுவதை, மெல்ல மெல்ல அழிவதைக் காட்டுகிறார். கோபிகிருஷ்ணனுடையது அபத்த நகைச்சுவை நாடகம் என்றால் நிஜந்தனுடையது துன்பியல் நாடகம்.

"பிறழ்வின்" நாயகனின் பிரச்சினை வளர்ந்த பெண்ணுடல்கள் தாம். குழந்தையாக இருக்கையீல் அவர் அத்தகைய பெண்களின் (அம்மா, டியூசன் ஆசிரியை) ஏற்பையே அதிகமும் நாடுகிறார். அவர் நேசிக்கிற பெண்கள் நிதானமாகவும் பொறுப்பாகவும் தம் உணர்ச்சிகளைத் தமக்குத் தேவையானபடி வெளிப்படுத்தி பிறரையும் கையாளக் கூடியவர்களாக உள்ளார்கள் (அவர் நேசிக்கிற - டியூசன் டீச்சரை நினைவுபடுத்தி மனதைச் சிதற வைக்கும் - மலையாளிப் பெண், அவரது பிரமையாக வருகிற கோதுமை வாசம் கொண்ட பெண்). சிறுவயதில் இருந்தே அவர் எதிர்கொள்ளும் ஆண்கள் வன்முறையைப் பிரயோகிக்கிறவர்கள் (குடித்துவிட்டு அம்மாவை அடிக்கும் அப்பா, அவனை வன்புணரும் நபர், கம்யூனிஸ்ட் கட்சியில் அவனைக் கட்டுப்படுத்துகிற, ஒழுங்குபடுத்துகிற, கடைசியில் வெளியேற்றுகிற தலைவர்கள்). அவர் வன்புணரப்படும்போது கூட அது அச்சத்தையும் அருவருப்பையுமே கொண்டு வருகிறதே ஒழிய, அதனால் அவருக்கு மனப்பிறழ்வு ஏற்படுகிறதே ஒழிய, அது ஒரு நீண்டகால மனக்குழப்பத்தை ஏற்படுத்துவதில்லை. ஆனால் டியூசன் ஆசிரியை அவரை வன்புணரும்போது அவருக்கு அப்படியெல்லாம் ஆகிறது.
ஒரு சிறுவனாக அவர் தன் ஆசிரியையின் நேசத்தை, தொடுகையை விழைகிறார், ஆனால் உடலுறவாக அது மாறுவதை அல்ல, அதை எதிர்கொள்ளும் திராணி தனக்கு அப்போது இல்லை என்கிறார். இன்னொரு காரணம், அந்த காமமற்ற ஈர்ப்பே அவருக்குத் தன் தாயிடம் ஏற்படும் அடக்கப்படும் ஈர்ப்பினால் வருவதே. அதாவது தாயுடனான உறவைத் தள்ளிப் போட வேண்டிய கட்டாயம் அவருக்குள் இருக்கிறது. டியூசன் ஆசிரியை அவரை வன்புணரும்போது அவர் நாயகனின் தந்தையின் வடிவத்தை, அவரை வன்புணர்ந்த ஆணின் வடிவத்தை, எடுக்கிறார். அதாவது தாயின் காமத்தை தந்தையின் வன்முறை 'இடையூறு' செய்கிறது. ஒரு குறியீடு இன்னொரு குறியீட்டை ஆட்கொள்கிறது. அப்போது ஏற்படும் அதிர்ச்சி அவனை நிலைகுலையச் செய்கிறது.
இங்கே நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும் - பெண்ணுடலை - வளர்ந்த பெண்களின் சரீரத்தை, அம்மாவின் சரீரத்தை - நேரடியாகப் பொருள்படுத்த அவசியம் இல்லை. பெண் தேகமானது இச்சமூகத்தில் பண்பாட்டின், அகத்தின் இருண்மையின் குறியீடுதான். இந்த இருண்மையை நாம் மரணமாகவும் காணலாம், பிறப்பாகவும் காணலாம், காமமாகவும் காணலாம் (மூன்றும் ஒன்றுதானே). தாயின் பிறப்புறுப்பு மானிடரின் பிறப்பும் இறப்பும் தாம். இதனால்தான் "பிறழ்" நாவலின் நாயகன் தனக்கு விடுதலையும் திறப்பும் மரணம்தான் என்கிறான். ஆனால் அப்பாக்களின் உடலோ, வளர்ந்த பிற ஆண்களின் உடல்களோ இதற்கு எதிர்-திசையில் செல்கின்றன - வலிமை, ஆதிக்கம், அதிகாரம், அதிகாரத்தில் மட்டுமே இருத்தல். நாம் இந்த இரு உடல்களுக்கும் நடுவே சமநிலையைப் பேணப் போராடுகிறோம். அன்றாட உலகை நம்மால் விடவும் முடியாது, மரணத்தின் இருள் ஆழத்தை மறுக்கவும் முடியாது. ஆனால் சில நேரங்களில் இதிலோ ஒன்று நம்மை முழுக்க ஆட்கொள்ளக் கேட்கிறது. நாம் அப்போதே பிறழ்கிறோம்.
அடக்கப்பட்ட காமமே ஒருவிதத்தில் "பிறழின்" நாயகனின் குற்றவுணர்வைச் செலுத்துகிறது. ஒருவர் தன் தாயின் உடலை நாடுவது வாழ்தலை எதிர்த்துச் செல்வதே. அது இன்பத்துக்கான நாட்டம் மட்டுமல்ல, அது எல்லாமே சென்று முடியும் சூனியத்தை நாடுவதும்தான். இயல்பாகவே இத்தகையோர் இலக்கியம், பண்பாடு, படைப்பாக்கம் என நகர்வார்கள். அங்குதான் அரூபமான ஒரு பெண்ணுடல், அம்மாவின் மீ-உடல் ஒருவருக்குக் கிடைக்கிறது. ஆனால் "பிறழ்" நாயகன் இந்த அரூபப் பெண்ணை அடையும் முன்பு இளவயது வன்புணர்வு நினைவுகள் - அம்மாவே அப்பாவாகி அவனைக் குழப்புவது - அவனை மனப்பிறழ்வுக்குள் தள்ளிவிடுகிறது. வாழ்வின் வன்முறையும் எதிர்வாழ்வின் படைப்பாக்கமும் அவனை இரு திசைகளிலாய் பிடித்தாட்டுகின்றன. காலிலும் கையிலுமாய் கயிறுகள் கட்டப்பட்டு எதிரெதிர் திசைகளில் இழுத்துச் செல்லப்பட்டு ஒருவர் கொல்லப்படுவதைப் போல.
"பிறழ்வில்" மூன்று காட்சிகள் எனக்கு மிகவும் பிடித்தவை:
1) மலம் - மனநல மருத்துவமனைக் கழிவறையில் நாயகன் இருக்கையில் ஒர் சகநோயாளி அங்கு அத்துமீறி நுழைந்து மலத்தை எடுத்து நாயகனின் வாயில் திணிக்கிறார். நாயகன் கதறிவிட்டு மயங்கி விழுகிறார். மலம் என்பது கழிவு மட்டுமல்ல ஒரு குறியீடும்தான். அது அவரது உடலின், பொருண்மையான உலகின் குறியீடு. மனம் துன்பத்தைத் தாள முடியாது போகையில் தன்னைத் தின்றும், கழிவை உட்கொண்டும் அவ்வலியைத் தாங்க முயல்கிறது. இது உலகைத் தின்று உலகை மீட்கும் மனதின் தவிப்பாக உள்ளது.
2) பேருந்து - நாயகன் பேருந்தில் செல்லும்போது அதன் சுவரெங்கும் பெண் குறிகள் வரையப்பட்டிருப்பதாக அவருக்குத் தோன்றுகிறது. அவரால் ஒரு கட்டத்திற்கு மேல் பெண்களின் மத்தியில் இருக்க முடியாமல் போகிறது. இது டியூசன் டீச்சரின் வன்முறையின் நினைவினால் ஏற்பட்ட பயமாக இருக்கலாம். பின்னர் தன் காதலியின் மயிர் மழிக்கப்பட்ட பெண்குறியும் அவரை அவ்வாறே மனநலம் பிறழ்ந்து தடுமாற வைக்கிறது. இந்த இடத்தில், ஒரு பேருந்து முழுக்க நிதம்பங்களின் சித்திரங்கள், அவற்றுக்குள் பயந்து தடுமாறும் ஒரு மனிதன் எனும் படிமமே கவித்துவமாக, சுவாரஸ்யமாக உள்ளது.
கடிகாரம் - அவர் மருத்துவமனை வார்டில் இருக்கையில் அவருக்கு அங்கு ஒரு கடிகாரம் டிக் டிக் டிக் என ஓசையெழுப்புவதாகத் தோன்றுகிறது. ஆனால் அதில் முள் நேர்கோட்டில் நகர்வதில்லை. அது நகர்வதே இல்லை. அவருக்கு இது மிகுந்தப் பதற்றத்தை உண்டாக்குகிறது. அவர் மருந்து அருந்தி மனம் சீராகித் திரும்ப அங்கு வரும்போது அது ஒரு டிஜிட்டல் கடிகாரம், அதில் முள்ளே இல்லை. எனில் இந்த பிரமை எதற்கான குறியீடு? காலமா? அவர் ஏன் காலம் நகர்ந்தும் நகராமல் தன்னைப் பிடித்துக் கொண்டிருக்கிறது என நினைக்கிறார்? எதிர்-வாழ்வின் பிடியில் இருக்கும் அவருக்கு அக்கடிகாரம் காலம் குறித்த ஒரு பக்கத்தைத் திறந்து காட்டுகிறது. அட்டகாசமான குறியீடு இது. நான் இந்நாவலைத் திருத்தி எழுதுவதானால் டியூசன் ஆசிரியை அவரை வலியுறுத்தி கூடும் காட்சியில் அவர் அந்த பிரமைக் கடிகாரத்தைப் பார்த்து திகைத்துப் போய் அதில் புகுந்து ஆசிரியையின் வீட்டை அடைவதாக எழுதியிருப்பேன். இன்பத்தை நுகரும் உடல்களில் நகரும் கடிகாரங்களைப் பற்றியும் எழுதியிருப்பேன். அந்தளவுக்கு கவித்துவ சாரம் அக்காட்சியில் உள்ளது.
இந்த நாவலின் பலம் - அதன் களத்துக்கு அடுத்தபடியாக -தன் இத்தகைய சொந்த வாழ்க்கையில் இருந்து பெற்ற குறியீடுகளை நிஜந்தன் அழகாக எழுதியுள்ளதே. அவரது நடை துண்டுத்துண்டாக, தன்னைத் தானே சிதைப்பதாக, மினிமலிஸ்டிக்காக உள்ளது. அவர் தொடர்ந்து எழுதியிருக்கும் பட்சத்தில் இதுவே அவரது தனித்துமான நடையாக உருப்பெற்றிருக்கும்.
இந்நாவலின் பலவீனம் சரியான முடிவு இல்லாமையும், படிமங்களை நீட்டித்து சில காட்சிகளை வலுப்படுத்தாததும், உளவியல் எதார்த்தக் கதைகூறலுக்குள் (psychological realism) அவர் சிக்கிக் கொண்டது. மேற்சொன்ன படிமங்களும் குறியீடுகளும் அந்த கோதுமை வாசத்துப் பெண்ணும் வரும்வரையில் கதை ஒரேயிடத்தில் சிக்கிக் கொள்கிறது. மேலும், எதார்த்தமாகக் கதையைச் சொல்ல நிஜந்தன் சற்று சிரமப்படுகிறார். எதிலும் சிக்காமல் அத்துமீறிப் போகும் வாழ்க்கையை ஒரு இலக்கிய வடிவத்துக்குள் அடைக்கப் பார்க்கிறார். ஒரு பின்நவீன நாவலாக இதை எழுதியிருந்தால் இன்னும் சுதந்திரமாக அவரால் பயணித்திருக்க முடிந்திருக்கும்.
நோய்மை காரணமாக நிஜந்தனால் நாவலில் அந்தளவுக்கு வேலை செய்ய இயலவில்லை என்பதையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு கலைப் படைப்பாக மட்டுமன்றி இதை ஒரு சுயதேடல் முயற்சியாகவும் பார்க்கலாம். தன் உடல் சார்ந்த அத்தனைச் சரிவுகளுக்கும் மத்தியில் அவர் இதை எழுதியதே தன் வாழ்வு குறித்த ஒரு கேள்விக்கு விடை காணத்தான் என்றும் விளங்குகிறது - அதை அவரால் செவ்வனே செய்யவும் முடிந்திருக்கிறது. அவ்விதத்தில் "பிறழ்" அவருக்கு ஒரு வெற்றிதான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

  மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும். இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன: 1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது. 3) தொழில்...

மக்களாட்சியின் தோல்வியும் மதிப்பிடுகளின் வீழ்ச்சியும் எப்படி முதலீட்டியத்தால் விளைந்தன?

ஏலியன்களே நம் நாட்டுக்கு வந்து கட்சி தொடங்கி ஆட்சியமைத்தாலும் ரௌடிகள், நில முகவர்கள், திடீர் பணக்காரர்கள், மோசடிக்காரர்கள் எம்.எல்.ஏ, அமைச்சர்கள் ஆவதையும், பெரும்பணக்காரர்கள் ஆட்சியைக் கையில் வைத்து தம் விருப்பப்படி உருட்டுவதையும் தவிர்க்க முடியாது என்று நினைக்கிறேன். நம் அதிகாரக் கட்டமைப்பு அப்படி. ஒரு செய்தி பார்த்தேன். எளியவர்களுக்கு வாய்ப்பளிப்போம் என்று கூறிய தவெகவின் எம்.எல்.ஏக்களில் 80% மேல் கோடீஸ்வரர்கள். குற்றவாளிகள், போலி சான்றிதழ் பேர்வழிகள், புரோக்கர்களும் உண்டு. கட்சியே ஒரு பக்கம் பாஜக கொடுத்த நிதியையும் இன்னொரு பக்கம் லாட்டரி குடும்பத்தின் நிதியையும் வைத்தே இத்தனை நாட்கள் நடந்தது. இனிமேல் டெண்டர் முறைகேடு, பல தளங்களில் ஊழல் என்று கொள்ளையடித்து 'தன்னிறைவு' ஆக முயல்வார்கள். அமைச்சர்கள் பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்து பெரிய நிறுவனங்களை ஆரம்பிப்பார்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்வார்கள், கறுப்புப் பணத்தைப் பதுக்குவார்கள். ஏன் எந்த ஆட்சி வந்தாலும் இந்த டெம்பிளேட் மாறுவதில்லை என்றே நாம் கேட்க வேண்டும்? யார் நல்லவர், யார் கொஞ்சம் குறைவாகக் கெட்டவர் என்பது அல்ல. நமது இப்போத...