முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீயா நானாவும் நாமும் ஒருசேர மாறிய கதை


 

நேற்றைய நீயா நானாவைப் பார்த்துக் கொண்டிருக்கையில் ஒன்று தோன்றியது: நீயா நானா ஆரம்பிக்கப்பட்டு முதல் பத்தாண்டுகளுக்கு மேல் சமூகத்தில் நடக்கும் மாற்றங்களை, அவற்றின் வினோதங்களை, சமூகவியல் தலைப்புகளை, மனித நடத்தையின் புதிர்களை, புதிது புதிதாக நடக்கும் அபத்தங்களை விவாதிக்கக் கூடியதாக இருந்தது. அதாவது ஒரு சமூகப் சுயபரிசீலனைக் காலகட்டம் அது. பரவலாக பலரும் பார்த்து அதைக் குறித்து விவாதித்தார்கள், சமூகத்தின் நாடியைப் பிடித்துச் சொல்லும் அதன் பண்பை வியந்தோதினார்கள். அடுத்து 8-9 ஆண்டுகளாக நீயா நானா சமூகத்தை ஒரு பழங்காலத்துக்கு எடுத்துச் சென்று உறைய வைத்து அதன் பெருமைகளைப் பேசத் தொடங்கியது. அதாவது ஒரேயடியாக மாறிவிட்டது என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் மெல்ல மெல்ல அது ஒரு பழம்பெருமை நிகழ்ச்சியாக மாறியது. கூடவே நிகழ்ச்சியை ஆண்களை விட அதிகம் பெண்களே இப்போது பார்ப்பதால் ஏதோ பெமினா பத்திரிகையைப் போல மாறிவிட்டது. அதில் ஒரு woke தன்மையும் அதிகரித்துவிட்டது. சமூகப் பிரச்சினைகளில் அது நாம் தமிழர் கட்சி, திமுகவுக்குள் சுருங்கியது என்றால் பாலினத்தில் பெண்களிடத்து சுருங்கியது. (நான் இங்கு நாதக, திமுக என்பது ஒரு குறியீடாகத்தான்.)

இதை அந்நிகழ்ச்சி மீதான விமர்சனமாக வைக்கவில்லை. வெகுஜன ஊடக வடிவங்களில் வரும் மாற்றங்கள் சமூக மனத்தின் அடியாழத்தில் நிகழும் மாற்றங்களை வெளிப்படுத்தும் அல்லது(மெக்லூஹன் சொன்னது போல) ஊடகங்களே இத்தகைய மாற்றங்களைத் தோற்றுவிக்கும். இப்படிப் பார்க்கையில் நம் சமூகமும் கடந்த பத்தாண்டுக்குள் மெல்லமெல்ல பழம்பெருமைக்குள் உறைகிற போலித்தனம் மிகுந்த ஒரு மனநிலைக்குள் சென்றுவிட்டது, பெருங்கதையாடல்களில் ஊறி கனவு காண அது விரும்புகிறது, உதிரிகளைக் கூட அது woke ஆகவே பார்க்க விரும்புகிறது (அந்த கிளி ஜோசியக்காரரைப் பாருங்கள், அவரது சமூக ஒடுக்குமுறையைக் கண்டு கொந்தளியுங்கள், அவரைச் இச்சமூகம் ஒதுக்கிவிட்டதா, அவர் என்னவொரு அற்புதமான மனிதரெனப் பாருங்கள், அவரது மனித நேயத்தைக் கொண்டாடுங்கள்! ஐயோ நெஞ்சம் துடிக்கிறதே ஆ ஓ!). உதிரிகளை ஆராயக் கூடிய, அவர்களுடன் உரையாடக் கூடிய மனநிலையை இழந்து விட்டிருக்கிறோம். நாம் நம்மை ஒரு உயர்ந்த இடத்தில் வைத்துக் கொண்டு மற்றமையைப் பார்த்துக் கருத்துச் சொல்ல இன்று விரும்புகிறோம். உ.தா., நீயா நானாவில் முன்பு ஒரு திருமணமாகாத ஆண்கள் குறித்த நிகழ்ச்சியென்றால் அதன் அத்தனை சமூக உளவியல் கோணங்களும் அலசப்படும், பல புதிய திறப்புகள் ஏற்படும். அதிலிருந்து ஒரு சமத்துவக் கண்ணோட்டமும் அக்கறையும் விட்டேந்தியான அறிவார்ந்த மனமும் வெளிப்படும். இப்போது அவர்களுடைய கண்ணீரை முன்னிறுத்தி விட்டு அவர்களது கனவை நிறைவேற்றுவதாக ஒரு ஏற்பாட்டைச் செய்கிறோம். அவர்களை வரிசையாக நிற்க வைத்து ஒரு நாடகக் கல்யாணம் போல ஒன்றை நிகழ்த்திக் காட்டுவார்கள். சும்மா யாரையாவது மாலையிடுவதற்காவது அழைப்பார்கள். இது ஒரு அரசதிகார மனநிலைதான். இதை நாம் இன்று உள்ளுக்குள் ரசிக்கிறோம். நீயா நானா மட்டுமல்ல இன்று அரசாங்கமே நிகழ்த்து கலையாக மாறிவிட்டது. மீனவர்களைத் தேடிப் போய் அவர்களுடன் முதல்வரோ கட்சித் தலைவரோ மீன் பிடித்து அதைச் சமைத்து உண்டால் அத்துடன் மீனவர்களின் பிரச்சினை முடிந்தது. அடுத்து பனையேறிகள் பிரச்சினையா? தலைவர்கள் அவர்களுடன் பனையில் ஏறி அவர்களுடைய சிரமங்களைப் புரிந்துகொள்வார். அவர்களை வரிசையாக நிறுத்தி கட்டிப பிடித்து பின்னணி இசையை ஒலிக்க விடுவார். இதை நாம் மக்களாட்சி விழுமியம் எனப் பார்த்து உணர்ச்சிவசப்படுவோம். ஆனால் இது மக்களாட்சி விழுமியம் அல்ல, இது அரசதிகார மனநிலை. மனிதர்களை மற்றமையாக மாற்றி அவர்களுடன் மேலே இருந்து உறவாடி அதிகாரத்தைக் கடத்துவதாக அபிநயிப்பது.
நாம் என்ன செய்கிறோம்? நட்பு, குடும்ப வாழ்க்கை எல்லாவற்றையும் சமூக வலைதளங்களில் நிகழ்த்தி நம்மில் இருந்தே உடைந்து நம்மையே மற்றமையாக்கி விடுகிறோம். "என்னைப் பார், நான் எவ்வளவு நல்லவன், என்னைப் பார், நான் எவ்வளவு பரிதாபத்துக்கு உரியவன், உனக்கு இதைப் பார்த்து கண்ணீர் வரவில்லையா? நான் இன்னும் அதிகமாக நடிக்க வேண்டுமா?"
இப்படி பல தளங்களில் நாம் இவ்வாறு போலி விழுமியங்களைப் பேசி கிளுகிளுப்பவர்களாகவோ அதை நிகழ்த்திக் காட்டி அடுத்தவரிடம் பெருமைப்படுகிறவர்களாகவோ மாறிவிட்டோம். நீயா நானா அதையே பிரதிபலிக்கிறது. சமகாலத்தில் நடக்கிற பல பிரச்சினைகளை, குளறுபடிகளை நாம் பேச விரும்புவதில்லை. இன்று பொறியியல் படித்தவர்களிலேயே 20% மேல் வேலையில்லாமல் திரிகிறார்கள் என ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது. பட்டதாரிகள் பலரும் 10,000-20,000 வேலையில் அல்லாடுகிறார்கள். நாம் இதைவிட கல்வியில் சிறந்த தமிழ்நாடு, பீகாரிகள் கேவலமானவர்கள், படிப்பறிவு இல்லாதவர்கள் எனத் திரும்பத் திரும்பப் பேசவே விரும்புகிறோம். சுயபரிசீலனைக்கான ஆற்றலோ பொறுமையோ சகிப்புத்தன்மையோ இன்று நமக்கு இல்லை. ஊன்றி கவனித்து அலசி ஆராயும் திறனையும் இழந்து வருகிறோம்.
என்னை ஆச்சரியப்படுத்தியது தனிமனிதர்களான நம் மனமும் நீயா நானா போன்ற ஒரு ரியாலிட்டி ஷோவின் மனமும் ஒரே அலைவரிசையில் எப்படிச் செயல்படுகிறது என்பதுதான். நாம் கடைசியில் தயாரிக்கப்படும் ஒரு நிகழ்ச்சியைப் போல யோசிக்கவும் செயல்படவும் தொடங்கிவிட்டோம் என நினைக்க சற்று பயங்கரமாக இருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...