சமகால கவிதை மொழியில் ஸ்கூல் பெண்ணின் தலை ரிப்பன் போல் பளிச்சென தெரிவது உவமைகள். கவிதையில் உவமை ரொம்ப பழைய உதிரிபாகம். அதாவது மிகப்பழைய கவிதைகளான சங்கப்பாடல்களில் நீங்கள் குறியீடு படிமம் எல்லாம் பார்க்க முடியாது. ஆனால் உவமைகள் விரவிக் கிடக்கும். பள்ளியிலும் படித்திருப்போம். ”செம்புலப் பெயல் நீர் போல்” நினைவிருக்கும். நவீன கவிதை வந்ததும் குறியீடுகளும் படிமங்களும் மேற்சொன்ன ஸ்கூல் சீருடை போல் ஆயின. குறியீடு என்றால் இன்னதென அர்த்தமில்லாத, ஆனால் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் நிற்கிற ஒரு கவிதை உறுப்பு. சு.ராவின் “கதவைத் திற காற்று வரட்டும்” ஒரு குறியீடு. கதவு பல அர்த்தங்கள் கொண்டது. அதேவேளை அது “இறுக்கம்” எனும் ஒரு பொது அர்த்தம் கொண்டது. இதற்குள் மனதின் இறுக்கம், பண்பாட்டின் இறுக்கம், கோபித்த காதலியின் மன இறுக்கம் என எப்படியும் பொருள் கொள்ளலாம்.