சின்ன வயதில் இருந்து நான் நடக்கும் போது அடிக்கடி விழுந்து கொண்டிருப்பேன். வீட்டுக்குள் விழுந்து காயம் ஏற்படுவதை தவிர்க்க நான் வீட்டுக்குள் சக்கர நாற்காலி பயன்படுத்த துவங்கினேன். வெளியில் நடக்கையில் என் காலில் அணிந்திருக்கும் காலிப்பரின் லாக் சரியாக பொருந்தாமல் விழுந்து விடுவேன். இதில் ஒரு விசயம் என்னவென்றால் விழும் போது அந்த அரைநொடி எனக்கு இரண்டு மூன்று நிமிடங்களாய் ஸ்லோமோஷனில் போகும். அப்போது நான் “விழுந்து காலிப்பர் ஒடியக் கூடாதே” என மனதுக்குள் கவலைப்படுவேன். கவலைப்பட்டு முடிக்குமுன் கீழே கிடப்பேன். சரியாய் கீழே விழுந்து தரையில் தொடுகிற தருணம் என் நினைவில் இருக்காது.