Skip to main content

விமர்சனத்தின் முடிவுக்கு வந்து விட்டீர்கள்

சி. சரவணகார்த்திகேயன் தனது இணையதளத்தில் “கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்” நாவலுக்கு எழுதியுள்ள மதிப்புரை இது. சரவணகார்த்திகேயனின் மொழி அழகானது. விரிவான வாசிப்பு பின்புலம் அவரது அலசலுக்கு பெரும் வலு. அவரது பதிவை இங்கு மீள்பதிவு செய்கிறேன்:

ஆர். அபிலாஷ் எழுதிய‌ 'கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்' நாவலை சற்று முன் தான் வாசித்து முடித்தேன். எனக்கு மிகப் பிடித்திருக்கிறது. நல்ல‌ வாசிப்பின்பம் கொண்ட எழுத்து. பொருட்படுத்ததக்க சீரியஸ் உள்ளடக்கம் கொண்டது என்றாலும் துப்பறியும் நாவல் என்பதற்கு நியாயம் செய்யும் வகையிலான‌ சுவாரஸ்யமான‌ ஆக்கம். 2008 நொய்டா இரட்டைக் கொலை வழக்கு, 2014 சென்னை மென்பொருள் ஊழியை கொலை வழக்கு, (நாவல் வந்த பின் சமீபத்தில் நிகழ்ந்த ஜிஷா கொலை வழக்கும் கூட‌) என நிஜ சம்பவங்களின் வலுவான சாயைகள் இப்புதினத்தில் இடம் பெறுகின்றன. சில திரைப்படங்களின் வாசனை கூட மனதில் நிழலாடியது - அமீர் கான் நடித்த‌ 'Talaash' மற்றும் மிஷ்கினின் 'யுத்தம் செய்'.


துப்பறியும் நாவல்கள் அல்லது சாகசப் புனைகதைகளில் சிந்தனைக்கு உரியவை தமிழில் மிக அரிது. அவை சம்பவங்கள் மற்றும் உரையாடல்களின் தொகுப்பாகவே அமைகின்றன. அதிகம் போனால் நேர்த்தியான வர்ணனைகள் இருக்கும். போக அரிதாய்ச் சில கவிதைத் தருணங்கள் தென்படும். அவை லேசாய் வாசகனை யோசிக்கத் தூண்டும். சுஜாதாவின் நாவல்களில் அவ்வப்போது இத்தகைய இடங்களைக் காணலாம். (சட்டென நினைவுக்கு வருவது 'ஒரு நடுப்பகல் மரணம்' நாவலில் புதிதாய்க் கல்யாணம் ஆன பெண்ணொருத்தி தன் கணவனைக் கொலையில் இழக்கும் அறிமுகப் பக்கங்கள்.)

அது போக நாவல் நெடுகவும் இது போன்ற விஷயங்களைத் தீவிரமாய்ப் பேசுபவை என என் வாசிப்பில் சொல்ல முடிவது நான்கு - தமிழவனின் 'ஜிகே எழுதிய மர்ம நாவல்', எம்ஜி சுரேஷின் 'சிலந்தி', யுவன் சந்திரசேகரின் 'பகடையாட்டம்' மற்றும் ஜெயமோகனின் 'உலோகம்'. இப்போது அந்த வரிசையில் அபிலாஷின் நாவலையும் சேர்த்துக் கொள்ளலாம்.

நவீன இலக்கியம் தான் என்றாலும் ஒரு துப்பறியும் நாவலுக்கான விமர்சனத்தில் அதன் கதைச் சுருக்கத்தை நல்குவது பாவக் கணக்கில் சேரும். அதனால் வேண்டாம். ஆனால் கதை இறுதியில் பனிமூட்டமாகவே முடிகிறது என்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். அதுவே யதார்த்தம் என்பதால் ஒருவகையில் அது நாவலுக்கு பலமாகவும் மாறி விடுகிறது.

இந்நாவலின் பாத்திரங்கள் அனைத்துமே நமக்கு ஒரு கட்டத்தில் அதிர்ச்சி ஊட்டுகிறார்கள். அதுவும் நாடகத்தனமாக அல்லாமல் இயல்பான, சாத்தியமான அதிர்ச்சிகள். கயல்விழி, முண்டா, மோகனா கதைகள் அப்படிப்பட்டவை தாம். கதையின் பிரதானப் பாத்திரமான ஜார்ஜ் கூட இதற்கு விலக்கல்ல. ஷீனா, ஸ்ரீதர், மோகன் போன்ற சிறுபாத்திரங்கள் கூட அதையே செய்கின்றன. எல்லோருக்கும் ஒரு பின்புலம் இருக்கிறது. நாவலின் வசீகரம் என இதைச் சொல்வேன்.

குறை என்று யோசித்தால் மூன்று விஷயங்களைச் சுட்டலாம். ஒன்று ஜார்ஜின் மனக்குறளியாக வரும் பகுதிகள் சற்று தேவைக்கதிகமாகப் பட்டன. மோகனா குழந்தை காணாமல் போனதை வர்ணிப்பதும் அப்படியே தோன்றியது. அது கதைப்போக்கின் ஆற்றொழுக்கைத் தடை செய்வதாக, அதன் இயல்பிலிருந்து பிடுங்குவதாகத் தோன்றியது. அடுத்து முந்தைய அத்தியாயத்துக்கும் பிந்தைய அத்தியாத்துக்குமான முரண்கள். உதாரணமாய் கோகிலா மோகனாவின் குழந்தை அல்ல எனத் திடீரெனக் கடைசியில் சொல்லப்படுகிறது, வேலைக்காரி குழந்தையை இரவு வரை பார்த்ததான தகவல் விசாரிக்கும் இடத்தில் சொல்லப்படவில்லை. கடைசியாய் முதல் சில அத்தியாயங்களிலும் இறுதி சில அத்தியாயங்களிலும் அதிக எண்ணிக்கையிலான (அதாவது வாசிப்பை உறுத்துமளவு) எழுத்துப் பிழைகள் தென்பட்டன. 

விமர்சனத்துக்கு வெளியே ஒரு விஷயத்தைப் பகிர நினைக்கிறேன். இந்த நாவலை கிட்டத்தட்ட அப்படியே மிஷ்கின் திரைப்படமாகச் செய்யலாம். 'அஞ்சாதே', 'யுத்தம் செய்' இவற்றின் தர்க்கத் தொடர்ச்சியாக அமையக்கூடும். இன்னும் சொல்லப் போனால் மிஷ்கின் திரையில் நிகழ்த்தியிருக்கும் சாதனை என்ன என்பதை இந்த நாவல் வாசிக்கையில் மேலும் துல்லிமாய் உணர முடிகிறது. (பொதுவாய் நான் சினிமாவை எப்போதும் இலக்கியத்துக்கு ஒரு படி கீழ் தான் பாவிப்பேன் என்பதைக் கொண்டு இவ்வாக்கியம் முன்வைக்கும் கருத்தின் முக்கியத்துவத்தை அணுகலாம்.)

நூறு பக்கங்கள், நூறு ரூபாய். ஒரு சினிமாவிற்குப் போவதை விட சுலபம். ஒரே நாளில் அலுவலம் - வீடு இடையிலான இரு திசைப் பயண தூரத்தில் வாசித்து முடித்தேன். நீங்களும் வாங்கி வாசியுங்கள். தவற விடக்கூடாத அனுபவம்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

தமிழ்நாட்டின் வளர்ச்சியும் ஏற்றத்தாழ்வும்

  முதல்வர் ஸ்டாலின் தேர்தலுக்கு முன் கடைசியாக வெளியிட்ட காணொளியைப் பார்த்தேன். அதில் அவர் தன் ஆட்சியின் சாதனைகளைக் குறிப்பிட்டு சில குறைகள் உள்ளதையும் தான் ஒப்புக்கொள்வதாகத் தெரிவிக்கிறார். கண்ணியமான நிதானமான பேச்சு. அவர் குறிப்பிடும் ஒரு தகவல் உண்மையானது - தமிழ்நாடு வேறு எந்த ஆட்சியிலும் காணாத பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளது (11.9%). இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் இல்லாத வளர்ச்சி இது. வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளைக் கொணர்வதிலும் புது நிறுவனங்களை அமைப்பதிலும் திமுக முன்னின்று செயல்பட்டுள்ளது. (விஜய் திமுக அரசு மாநிலத்தை கடனில் வீழ்த்தியுள்ளதாகச் சொல்லியிருப்பது ஒரு பொய்.) ஸ்டாலின் சொல்லும் இத்தகவல் இந்த ஆண்டின் துவக்கம் முதலே பல ஆங்கில நாளிதழ்களிலும் காணொளிகளிலும் பேசப்பட்டு வந்துள்ளது. ஒருவிதத்தில் பாஜக தமிழ்நாட்டில் காலூன்ற விரும்புவதும் இதனால்தான் எனத் தோன்றுகிறது. அவர்கள் வந்தால் அவர்களுடைய தரப்பு முதலாளித்துவ வர்க்கம் உள்ளூர் முதலாளிகளைக் காலி பண்ணுவார்கள். ஊழலில் அவர்களுடைய உள்ளூர் தலைவர்களுக்கு பங்கு போகும். அவர்களால் இங்குள்ள வர்த்தகப் போக்குகளைக் கட்டுப்படுத்த இய...