முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அனிதாவின் மரணம்: மருத்துவக் கல்வியும் தமிழ் செண்டிமெண்டும் – பகுதி 2


தமிழ் பொதுப்புத்தியில் “கல்வி” என்பது தமிழுணர்வு எனும் இன செண்டிமெண்டுக்கு இணையான செண்டிமெண்ட் என எனக்குப் புரிகிறது.
“சாப்பிட்டு மூணு நாளாச்சுங்க” என்றால் “அதுக்கு எனக்கென்ன?” என ஒதுங்கிக் கொள்வார்கள். ஆனால் “பன்னிரெண்டாம் வகுப்பில் 1200க்கு “1210 மதிப்பெண்” பெற்ற மாணவர், பொறியியல் படிக்க வாய்ப்பில்லாமல் தவிக்கிறார்” என்று சொன்னால் “இந்த பிடி லட்சம்” என அள்ளித் தர ஆயிரம் பேர் வருவார்கள். “படிக்க வழியில்லாத திறமையான மாணவன்” எனும் பிம்பம் நம்மை கண்ணீர் விட வைக்கும் ஒன்று. அது நம் சமூக மனதின் அடியாழத்தில் பதிந்து போன ஒன்று. “படித்து ஏழ்மையில் இருந்து விடுபட்டு வாழ்க்கையில் முன்னேறுவது” என்பது நூற்றாண்டுகளாய் நாம் கேட்டு கேட்டு நம்பின ஒரு வாக்கியம் (பிச்சை புகினும் கற்கை நன்றே). பொறியியல் படித்தால் வேலை உண்டா என்றெல்லாம் சிந்திக்க மாட்டோம்.

 அனிதாவுக்கு நீட் மூலம் மருத்துவ சீட் கிடைக்கவில்லை என்றதும் ஒரு நண்பர் தானும் வேறு இரு நண்பர்களுமாய் அனிதாவை சீனாவுக்கு அனுப்பி மருத்துவம் படிக்க வைக்கலாம் என அலோசித்ததாகவும், அதற்கு முன்பு அவர் தற்கொலை செய்து விட்டதாயும் வருந்தி எழுதி இருந்தார். அவரது நல்லெண்ணமும் துக்கமும் புரிகிறது. ஆனால் சீனாவில் மருத்துவம் படித்தால் நீங்கள் இந்தியாவுக்கு வந்து சேவை செய்ய முடியாது. அதற்கு மற்றொரு தகுதித்தேர்வு எழுதி பட்டம் வாங்க வேண்டும். அதற்கு அவர் நீட் தேர்வையே எழுதி தேர்வடையலாமே? ஏன் வளைத்து மூக்கைத் தொட வேண்டும்?
ஒரு ஏழை மாணவன், அவனுக்கு வியாபாரம் செய்ய முதலீட்டுக்கு பணம் வேண்டும் என்று கேட்டுப் பாருங்கள். அஞ்சு பைசா தர மாட்டார்கள். ஆனால் அவன் கல்லூரியில் படிக்க வேண்டும் என்று கேட்டால் நம் மக்களின் மனம் உடனே கரைந்து விடும்.
 ஏன் ஒரு ஏழை மாணவன் வியாபாரம் செய்து முன்னேற முடியாதா? முன்னேறலாம். ஆனால் நம் தமிழ் மனதின் செண்டிமெண்டில் அது இல்லை. அதனால் அதற்கெல்லாம் உதவி பண்ண மாட்டோம்!
 இதை உணர்ந்து தான் ஜெயலலிதா மாணவர்களுக்கான நலத்திட்டங்களை வழங்குவதில் தனி அக்கறை காட்டினார்.
ஒருவர் அப்துல் கலாம் ஆக வேண்டும் எனச் சொன்னால் கூட அதை ஒரு “கனவு” என என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஏனென்றால் விஞ்ஞானம் அறிவை சேகரிக்கும், மனிதகுல மேம்பாட்டுக்காய் மேம்படுத்தும் ஒரு கனவு தான். ஆனால் மருத்துவம் ஒரு தொழில் அல்லவா? அதை ஏன் கனவு என்கிறீர்கள்? மற்ற தொழில்களை விட அது எப்படி மேம்பட்டதாகிறது?
உடல் என்னும் மாய எந்திரத்தின் பாகங்களை கையாள்வதில் ஒரு த்ரில் உள்ளது தான், அது இந்த பிரபஞ்ச மாயத்தின் ஒரு துளியை அறிவதாகவே இருக்கும் தான்; ஆனால் … இன்றைய கார்ப்பரேட் மருத்துவத் துறையில் அப்படியான ஒரு த்ரில் இருக்கிறதா? ஒரு தேடலுக்கான சாத்தியம் அதில் இன்று இருக்கிறதா? அங்கு உண்மையான மக்கள் சேவை செய்ய முடியுமா? இதையெல்லாம் மருத்துவத் தொழிலில் இருக்கும் நண்பர்களிடம் விசாரித்து தெரிந்து கொள்ளுங்களேன்!
மருத்துவம் என்பது 9 முதல் 5 மணி வரை வெள்ளை அங்கியும் ஸ்டெடத்ஸ்கோப்பும் அணிந்து, அடிக்கடி அலுப்பு தீர ஐபோனில் அப்டேட் பார்த்து மூச்சு முட்ட செய்யும் எத்தனையோ கொடுமையான கார்ப்பரேட் வேலைகளில் ஒன்றல்லவா? ஆனால் மருத்துவர் என்றாலே நம் மனதில் ஒலிப்பது “எங்கிருந்தாலும் வாழ்க” பாடல் அல்லவா! அத்தகைய டாக்டர்கள் இன்று எந்த மருத்துவமனையில் உள்ளார்கள் நண்பர்களே?
நம் பிள்ளைகள் நீட் தேர்வினால் மருத்துவர் ஆக முடியாமல் போகிறதே என நெஞ்சில் அடித்துக் கொள்கிறோமே … மருத்துவர் ஆவதில் அப்படி என்ன தான் சிறப்பு என யோசிக்கக் கூடாதா? ஏன் அந்த செண்டிமெண்டையே கட்டிக் கொண்டு அழ வேண்டும்? (இந்த செண்டிமெண்டும் தான் அனிதாவின் உயிரை பலி வாங்கியது. நீட் எனும் கொடூரம் மட்டுமல்ல.)
ஏன் நம் பிள்ளைகள் பெரும் வணிக நிறுவனங்களை கட்டி எழுப்புகிறவர்களாக, அரசியல் தலைவர்களாக, கலைஞர்களாக, சமூக விஞ்ஞானிகளாக, தத்துவஞானிகளாக, மீடியா நாயகர்களாக ஆவதை விரும்பக் கூடாது? என் மகன் ஒரு மருத்துவராக ஆவதை விட ஒரு அர்னாப் கோஸ்வாமியாகவோ (எனக்கு அவரை பிடிக்காது என்றாலும்) நெல்சன் சேவியராகவோ இருப்பதையே நான் விரும்புவேன். ஒரு மருத்துவரின் கருத்துக்களை கோடிக்கணக்கான பேர் செவிகொடுப்பார்களா? நான் என் மகன் ஒரு எம்.எல்.ஏ ஆகி சட்டமன்றத்தில் பேசுவதை கேட்க விரும்புவேன். அல்லது அவன் தனக்குக் கீழ் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றும்படி ஒரு தொழில் நிறுவனம் நடத்துவதை விரும்புவேன். ஒரு கிரிக்கெட் வீரனாய் டிவியில் ஆடுவதை காண விரும்புவேன். ஒரு டாக்டராய் அவன் ஆவதும் ஏதோ ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை செய்வதும் எனக்கு ஒன்று தான்.
என்னால் உணர்வுரீதியாய் ஒன்ற முடியாத இன்னொரு செண்டிமெண்ட் வடக்கத்தியர்களுக்கு ராணுவ வீரர்களாவதில் உள்ள ஆவேசம். ராணுவ சீருடை அணிவது அவர்களைப் பொறுத்த மட்டில் சமூகத்தை ரத்தம் சிந்தி காப்பாற்றும் தியாகியாவது, உன்னத போராளியாவது, பாதுகாவலனாவது – தேசமே மெச்சும் வீரனாவது. ஆண்மையின் அடையாளமே அவர்களுக்கு ராணுவ சீருடை தான். ராணுவத் தேர்வை தமிழில் தான் எழுத வேண்டும் என ஒரு மாற்றம் கொண்டு வந்து பாருங்கள்! ஆயிரக்கணக்கான வடக்கத்தி இளைஞர்கள் உடனடியாய் தற்கொலை செய்வார்கள்.
போன வாரம் என்னுடன் ஒரு மாணவன் மின்தூக்கி அருகே காத்து நின்றான். அவன் திடீரென என்னிடம் சொன்னான் “சார் எனக்கு இப்படி லிப்டுக்காக நிற்பது அவமானமாய் இருக்கிறது?”
“ஏன்?”
“அது அப்படித் தான் சார். உறுதியான உடம்பு இருக்க, நாமெல்லாம் இப்படி லிப்டில் ஏறிப் போவதே ஒரு அசிங்கம். நம் கல்லூரியில் இத்தனை நூறு பேர் லிப்டுக்காக வரிசையில் நிற்பது காண எனக்கு பற்றிக் கொண்டு வரும்.”
“எனக்கு புரியவில்லை”
“சார் என் தாத்தா காலத்தில் இருந்தே எங்கள் குடும்பம் ராணுவக் குடும்பம். என் அப்பா லெப்டினெண்ட் ஜெனரெல். நான் ராணுவப் பள்ளியில் படித்தேன். ராணுவ குடியிருப்பில் வளர்ந்தேன். ராணுவத்தில் எப்படியாவது நுழைவதே என் கனவு.”
“ஓஹ்”
“ஆனால் இப்போது என் நிலையும் இப்படி லிப்டில் ஏறிப் போகும்படியாய் ஆகி விட்டதே”
அந்த பையனின் கண்ணில் நீர் நிறைந்தது. விட்டால் அழுது விடுவான் போல் இருந்தது.
“போகட்டும் பரவாயில்லை. நீ சீக்கிரம் மாடிப் படிக்கட்டில் ஏறிப் போகலாம்.”
அவனுக்கு விபத்தில் ஒரு கால் உடைந்து மாவுக்கட்டு போட்டிருந்தது. அவன் அருகே நான் சக்கர நாற்காலியில். எனக்கு இந்த மொத்த உரையாடலுமே படு அபத்தமாய் தோன்றியது வேறு விசயம். ஆனால் அப்போது அவன் மனநிலையை எண்ணினால் மனம் சற்று கலங்கியது. ஒவ்வொரு மாநில மக்களையும் அலைகழிக்க ஒவ்வொரு விதமான நம்பிக்கைகள்!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...