இன்று புத்தக தினம். நண்பர்களுக்கு என் வாழ்த்துக்கள். இதை ஒட்டி வாசிப்பு குறித்த எனது சில நம்பிக்கைகள், கருத்துக்கள், பார்வைகளை எட்டாக சுருக்கி கீழே தருகிறேன். 1) பரிந்துரை பட்டியல்களை பின்பற்றாதீர்கள். புத்தகத் தேர்வு ஒரு நண்பனை, காதலியை தேர்வதைப் போன்றது. அது ஒரு உறவு. உங்கள் சிந்தனையை, மொழியை, தோரணையை மாற்றப் போகிற உறவாடல். உங்கள் உள்ளுணர்வு, நம்பிக்கைகள், தனிப்பட்ட தேடல் ஆகியவை ஒட்டி ஒரு நூலை தேர்ந்தெடுங்கள். யாருமே பொருட்படுத்தாத ஒரு நூல் கூட உங்களுக்கு முக்கியமானதாக இருக்கலாம். உ.தா., தமிழ் இலக்கிய உலகில் யாரும் ருத்ரனை பொருட்படுத்தி படிக்க பரிந்துரைக்க மாட்டார்கள். ஆனால் பதின் வயதில் நான் வாசிக்க நேர்ந்த அவரது கட்டுரை நூல்கள் இன்று வரை என்னை என்னையறியாது வழிநடத்துகின்றன. ஒரு நட்பு எப்படி இருக்க வேண்டும் என அவர் விளக்கியதையே இன்றும் பின்பற்றுகிறேன். அவரது டெஸிடெரட்டா கவிதை மொழியாக்கம் மற்றும் விளக்கத்தை நான் என்றும் மறக்க முடியாது. ருத்ரனை விட சு.ரா பல மடங்கு மேலான எழுத்தாளர்; சிந்தனையாளர்; கட்டுரையாளர். ஆனால் சு.ராவின் கட்டுரைகளை சுலபத்தில் மறந்து விட்டேன். ருத...