முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என் வாழ்வின் சிறந்த ஐந்து நூல்கள் சவால்






போரும் அமைதியும் – தல்ஸ்தாய்
தெய்வம் உண்மையில் இருந்து அவரை தரிசிப்பது போன்றதே இந்நாவல். இதைப் படித்த பின் நாம் படிக்கிற நாவல்கள் இதன் சுருக்க வடிவம் / துண்டு துக்கடா போல தோன்றுவதை தவிர்க்க முடியாது.


நார்வேஜியன் வுட் – முராகாமி
இதை முராகாமியின் சிறந்த நாவல் என சொல்ல மாட்டேன். எனிலும் ஆத்மார்த்தமான, நிர்மலமான காதல் கதை என்கிற வகையில், கைவிடப்பட்ட வாழ்க்கையின், கையாலாகாத உறவுநிலைகளின் தத்தளிப்புகளை அவ்வளவு கவித்துவமாய், நகைச்சுவையாய் அவர் சித்தரித்ததை கருதுகையில் இந்நாவலை மறக்க முடியாது.



விஷ்ணுபுரம் – ஜெயமோகன்
தமிழின் ஆகச்சிறந்த நாவல் இது என்பதில் எனக்கு ஐயமில்லை. புதுவிதமான மொழிகளை கையாள்வது, முழுக்க ஒன்றோறொண்டு முரண்கொள்ளும் உணர்வுநிலைகளுக்குள் விளையாடுவது, காட்சிபூர்வமான சித்தரிப்புகளால் நம்மை திகைக்கவும் பதறவும் வைப்பது, சுயதேடல் எனும் உன்மத்தத்தை உரைநடையிலும் கையாள முடியும் என நிரூபித்தது, கற்பனையிலும் அறிவார்ந்தும் இது மேற்கொள்ளும் விரிவு ஆகியவை மேற்சொன்ன தகுதியை இதற்கு அளிக்கிறது. இதை செவ்வியல் / வரலாற்று நாவல் என்பதை விட இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு பின்பான லட்சியத்தின் அந்த பொற்காலம், அதன் சீரழிவு, மார்க்ஸியவாதிகளும் காந்தியவாதிகளும் கொண்டாடிய நம்பிக்கைகளின் தத்தளிப்பு, அறம் பற்றின விவாதங்கள், அவற்றின் இறுதி வீழ்ச்சி ஆகியவை பற்றின ஒரு நீதிக்கதை (parable) எனச் சொல்லலாம்.


நெடுங்குருதி – எஸ். ராமகிருஷ்ணன்
கால ஓட்டம் மிகத் தனியானது. அது ஒரு சக்கரவியூகம். அதில் இருந்து நாம் தப்பிக்க முடியாது. உடைக்க முடியாது. அதன் போக்கை தீர்மானிக்கவும் முடியாது. இதை உணரும் மனிதர்களின் தீவிரமான தனிமையை தொட்டுக் காட்டும் தமிழ் நாவல்களில் இது முதன்மையானது. எஸ்.ராவை லத்தீன் அமெரிக்க இலக்கியம் பாதித்ததன் உன்னதமான விளைவு என இந்நாவலை சொல்லலாம். ரெண்டு நாட்கள் விடுப்பெடுத்து இந்நாவலை படித்து லயித்த நாட்களை மறக்க முடியாது. படித்ததுமே நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன், “இதோ தமிழின் ஆகச்சிறந்த நாவல்களில் ஒன்று. இதை இவராலே இனி மீற முடியுமா?”.


Fear of Freedom – எரிக் புரோம்
கட்டுரை நூல்களில் இதை தேர்ந்தெடுக்கக் காரணம் தனிப்பட்டது. நான் மன அழுத்தத்தில் இருந்த சந்தர்பத்தில் இந்நூலை எதேச்சையாய் படித்தேன். இது அளித்த தர்க்கம், அவதானிப்புகள், மனித சுபாவம் பற்றின ஆழமான பார்வை என்னை அழுத்திய துக்கத்தை துடைத்து அகற்றின. துக்கம் என்பது அச்சம், அச்சம் என்பது பிழையான பார்வையில் இருந்து வருவது, சிந்தனை சீரானால் துக்கம் போம் என்று நான் அன்று இதை வாசித்து கண்டு கொண்டேன். நான் 2007இல் எழுதின முதல் கட்டுரை முதல் எரிக் புரோமை தொடர்ந்து மேற்கோள் காட்டி வருகிறேன். ஒரு புத்தகம் உங்களுக்கு மனநலம் அளிக்கும் என யார் சொன்னாலும் நான் நம்ப மாட்டேன். ஆனால் எனக்கு அப்படி ஒன்று நடந்தது – ஆகையால் நம்ப வேண்டி இருக்கிறது. முக்கியமான நூல்.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.