முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆரஞ்சு தின்னும் நாய்க்குட்டி


Image result for கவிஞர் இசை 

போலீஸ் வதனம்
நான்குமுனைச் சந்திப்பொன்றில்
ஒரு போலீஸ்காரரும் ஒரு குடியானவனும்
கிட்டத்தட்ட மோதிக்கொண்டனர்
குடியானவன் வெலவெலத்துப்போனான்
கண்டோர் திகைத்து நின்றனர்
அடுத்த கணம் அறைவிழும் சத்தத்திற்காய்
எல்லோரும் காத்திருக்க
அதிகாரி குடியானவனை நேர்நோக்கி
ஒரு சிரி சிரித்தார்.

அப்போது வானத்தில் தேவர்கள் ஒன்றுகூடும்
ஓசை கேட்டது.
நகையணி வதனத்து ஒளிநறுங்கீற்றே!”
என வாழ்த்தியது வானொலி.
போலீஸ் தன் சுடரை
ஒரு கந்துவட்டிக்காரனிடம்
பற்றவைத்துவிட்டுப் போனார்.
அவன்
ரோட்டோரம் கிடந்து பழம் விற்கும் கிழவியிடம்
கந்து வசூலிக்க
வந்தவன்.
கிழவி தலையைச் சொரிந்தபடியே
நாளைக்கு…” என்றாள்.
ஒரு எழுத்துகூட ஏசாமல்
தன் ஜொலிப்பை அவளிடம் ஏற்றிவிட்டுப் போனான்.
அதில் பிரகாசித்துப்போன கிழவி
இரண்டு குட்டி ஆரஞ்சுகளைச் சேர்த்துப் போட்டாள்.
அது ஒரு குப்பைக்காரியின் முந்தானையில் விழுந்தது.
எப்போதாவது ஆரஞ்சு தின்னும் அவளை
ஒரு பிச்சைக்காரச் சிறுமி வழிமறிக்க
அதிலொன்றை ஈந்துவிட்டுப் போனாள்.
சிறுமியின் காலடியில்
நாய்க்குட்டியொன்று வாலாட்டி மன்றாடியது.
அதிலொரு சுளையை எடுத்து
அவள் அதன் முன்னே எறிய
சொறிநாய்க்குட்டி
அந்த ‘ஒளிநறுங்கீற்றை' லபக்கென்று விழுங்கியது.

எதேச்சையாய் ஒருவர் காட்டும் கனிவு எப்படி பயணித்து பல பேர்களின் மனங்களில் ஒளியேற்று மகிழ்ச்சியை படரவிடுகிறது என இக்கவிதை பேசுகிறது. இறுதியாக பழம் விற்கும் பாட்டியிடம் இருந்து ஒரு குப்பைக்காரியிடம் சென்று அவளிடம் இருந்து ஒரு பிச்சைக்காரிக்கு கருணை பயணமாகிறது. குப்பைக்காரி ஆரஞ்சு சாப்பிடும் வழக்கமற்றவள் என்பதால் அதை பிச்சையெடுக்கும் சிறுமிக்குப் போடுகிறாள். சிறுமி தன் காலை அண்டும் நாய்க்குட்டிக்கு ஒரு ஆரஞ்சு சுளையை வீச அது “லபக்கென்று” அதை விழுங்குகிறது.
இது ஒரு மிக வித்தியாசமான அபூர்வ கவிதை அல்ல. வழக்கமான ஒன்றே. இதில் வரும்
அப்போது வானத்தில் தேவர்கள் ஒன்றுகூடும்
ஓசை கேட்டது.
நகையணி வதனத்து ஒளிநறுங்கீற்றே!”
என வாழ்த்தியது வானொலி.
எனும் வரிகளே இசையின் முத்திரை வரிகள். இவற்றை நீக்கினால் நமது ஐம்பதாண்டு நவீன கவிதை வரலாற்றில் யார் வேண்டுமானாலும் எழுதி இருக்கக் கூடிய ஒன்றே இது.
இந்த கருப்பொருளை விடுத்துப் பார்த்தால் வேறொரு நுணுக்கம் என்னைக் கவர்ந்தது. போலீஸ்காரர், கந்து வட்டிக்காரர் துவங்கி யாருமே மனம் கனிந்து அடுத்தவரை கருணையோடு மன்னிப்பதில்லை. போலீஸ்காரரை ஒரு சாமான்யன் கிட்டத்தட்ட வாகனத்தில் மோத வர அவர் சாதாரணமாய் சிரித்தபடி அதைக் கடந்து போகிறார். “வானத்தில் தேவர்கள்”, “ஒளிநறுங்கீற்றே” ஆகிய செவ்வியல் குறிப்புகள் ஒரு பகடியாகவே, இசையின் வழக்கமான பாணியில், இங்கு வருகிறது. உண்மையில் தேவர்கள் ஒன்று கூடும் அளவுக்கு இங்கு ஒன்றுமே நடக்கவில்லை. கந்துவட்டிக்காரர் தனக்கு வட்டி வேண்டாம் என்றோ அல்லது வட்டியை குறைக்கிறேன் என்றோ பழக்கடை பாட்டியிடம் சொல்லவில்லை. அடுத்த நாள் வாங்கிக் கொள்ளலாம் என ஒருநாள் அவகாசம் கொடுக்கிறார்; அதனால் அவருக்கு நட்டமொன்றும் இல்லை; இது தியாகமும் அல்ல. பழக்கடைப் பாட்டியும் கூடுதலாய் ரெண்டு சின்ன அரஞ்சுகளை குப்பைக்காரிக்கு அளிக்கிறார். இந்த “சின்ன” முக்கியம். எல்லா பழக்கடைக்காரர்களும் இது போல் கொசுறாக ஒன்றிரண்டு பழங்கள் கூடப் போடுவார்கள். எனக்கே பலமுறை நடந்ததுண்டு. ஓரு மாமூல் விசயம் இது. அடுத்து, குப்பைக்காரி ஆரஞ்சில் பெரிய ஆர்வம் கொண்டவள் அல்ல. ஆகையாலே அந்த “குட்டி” ஆரஞ்சை அவள் பிச்சைக்காரி சிறுமிக்கு அளிக்கிறாள். இதுவும் தியாகம் அல்ல. அச்சிறுமி நாய்க்கு முழு ஆரஞ்சை அல்ல, ஒரு “குட்டி” ஆரஞ்சின் ஒரு சிறிய சுளையைத் தான் அளிக்கிறாள்.
இப்படி இந்த ஒவ்வொரு செயலிலும் ஒரு மெல்லிய கருணை ஜொலிக்கிறது தான், ஆனால் இச்சம்பவங்கள் மிக மாமூலானவையும் தாம். அந்த கந்துவட்டிக்காரர் கொஞ்சம் சத்தம் போட்டிருக்கலாம்; அந்த பழக்கடை பாட்டி இதனால் மனம் சோர்ந்து கடுகடுப்பாய் குப்பைக்காரியிடம் நடந்து கொண்டிருக்கலாம். அப்படி நடந்திருக்குமெனில் இறுதியில் நாய்க்குட்டிக்கு சுளை கிடைத்திருக்காது. ஆனால் இவர்கள் யாருமே இச்செயல்களுக்காய் எந்த பிரத்யேக முயற்சியோ தியாகமோ செய்வதில்லை. தமக்குத் தேவையில்லை அல்லது பாதிப்பில்லை என்பதாலே சிரிக்கிறார்கள், மன்னிக்கிறார்கள், ஒரு கூடுதல் பழத்தைக் கொடுக்கிறார்கள், பிச்சையிடுகிறாரக்ள், ஒரு விள்ளல் ஆரஞ்சை நாய்க்குட்டிக்கு கொடுக்கிறார்கள். இக்கவிதையில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான குறிப்பு இது. நம் காலத்தின் கருணை இப்படி மிக மாமூலாய், யாருக்கும் நட்டமில்லாமலே இருக்க முடியும் என்கிறார் இசை.
இந்த மாமூலான மெல்லிய கருணையின் இனிப்பையே நாய்க்குட்டி சுவைக்கிறது. நம் அன்றாட வாழ்க்கையில் இது போல் பல அழகிய தருணங்கள் உண்டு; அவை மாமூலானவை என்பதாலே நம் பார்வையில் படுவதில்லை. இதை சித்தரித்தால் இது ஒரு வண்ணதாசன் படைப்பாகி விடும். ஆனால் இசை இதனோடு கருணையை ஒரு மகத்துவமான செயலாக மிகையாக காண்பதையும் “லைட்டாய்” கிண்டலடிக்கிறார். இந்த லைட் பகடியினூடே ஒரு மிக மிக சாதாரணமான, தியாகமே இல்லாத, எதேச்சையாய் நிகழ்கிற கருணையே அன்றாடத்தின் கருணை என நம் முன்வைக்கிறார். அசோகமித்திரனின் தொனியில் வண்ணதாசன் எழுதியது போன்ற கவிதை இது எனத் தோன்றுகிறது.
அந்த ஆரஞ்சு சுளை எதார்த்தமாய் இல்லை என ஒரு கருத்து உள்ளது. ஷங்கர்ராமசுப்பிரமணியன் இக்கவிதை பற்றின தன் தி ஹிந்து கட்டுரையில் “பழம் சாப்பிடும் நாய்களையோ நாய்க்குட்டிகளையோ எனது இதுவரையிலான ‘கள’ அனுபவத்தில் பார்த்ததில்லை. அருளின் சோதி சுடரும் ‘ஒளிநறுங்கீற்று’ அல்லவா அந்தப் பழம். அதைச் சாப்பிட்டுத்தான் மீட்சியைப் பெறட்டுமே அந்தக் குட்டிச் சொறிநாய்.” என்கிறார். (இக்கட்டுரையை படிக்க https://tamil.thehindu.com/general/literature/article24907111.ece?homepage) ஒளிநறுங்கீற்று என்பதன் காட்சிபூர்வமான ஒரு தொடர்ச்சியாய் ஆரஞ்சு சுளை எனக்குத் தெரிகிறது. ஆரஞ்சு சுளை என்பது ஒரு கனல் துண்டைப் போலத் தெரிகிறது. உறைய வைத்த ஒளிக்கதிரைப் போலவும் அதை கற்பனை செய்ய முடிகிறது. ஆம், ஆரஞ்சு சாப்பிடும் நாயை நானும் பார்த்ததில்லை தான். ஆனால் ஒரு உருவகமாய் இந்த ஒளிக்கதிர் – ஆரஞ்சு சுளை தொடர்ச்சி களிப்பூட்டுகிறது. கவிதையில் எதார்த்தத்தை விட காட்சிபூர்வம் முக்கியம். பாரதியின் “ஆடி வரும் தேனே” கூட எதார்த்தம் அல்ல தானே.



கருத்துகள்

ஸ்ரீராம். இவ்வாறு கூறியுள்ளார்…
கவிதையையும் ரசித்தேன். அலசலையும் ரசித்தேன்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.