“போலீஸ்
வதனம்”
நான்குமுனைச்
சந்திப்பொன்றில்
ஒரு
போலீஸ்காரரும் ஒரு குடியானவனும்
கிட்டத்தட்ட
மோதிக்கொண்டனர்
குடியானவன்
வெலவெலத்துப்போனான்
கண்டோர்
திகைத்து நின்றனர்
அடுத்த
கணம் அறைவிழும் சத்தத்திற்காய்
எல்லோரும்
காத்திருக்க
அதிகாரி
குடியானவனை நேர்நோக்கி
ஒரு
சிரி சிரித்தார்.
அப்போது
வானத்தில் தேவர்கள் ஒன்றுகூடும்
ஓசை
கேட்டது.
“நகையணி வதனத்து ஒளிநறுங்கீற்றே!”
என வாழ்த்தியது வானொலி.
போலீஸ் தன் சுடரை
ஒரு கந்துவட்டிக்காரனிடம்
பற்றவைத்துவிட்டுப் போனார்.
அவன்
ரோட்டோரம் கிடந்து பழம் விற்கும் கிழவியிடம்
கந்து வசூலிக்க
வந்தவன்.
கிழவி தலையைச் சொரிந்தபடியே
“நாளைக்கு…” என்றாள்.
ஒரு எழுத்துகூட ஏசாமல்
தன் ஜொலிப்பை அவளிடம் ஏற்றிவிட்டுப் போனான்.
அதில் பிரகாசித்துப்போன கிழவி
இரண்டு குட்டி ஆரஞ்சுகளைச் சேர்த்துப் போட்டாள்.
அது ஒரு குப்பைக்காரியின் முந்தானையில் விழுந்தது.
எப்போதாவது ஆரஞ்சு தின்னும் அவளை
ஒரு பிச்சைக்காரச் சிறுமி வழிமறிக்க
அதிலொன்றை ஈந்துவிட்டுப் போனாள்.
சிறுமியின் காலடியில்
நாய்க்குட்டியொன்று வாலாட்டி மன்றாடியது.
அதிலொரு சுளையை எடுத்து
அவள் அதன் முன்னே எறிய
சொறிநாய்க்குட்டி
அந்த ‘ஒளிநறுங்கீற்றை' லபக்கென்று விழுங்கியது.
எதேச்சையாய் ஒருவர் காட்டும் கனிவு எப்படி பயணித்து பல பேர்களின்
மனங்களில் ஒளியேற்று மகிழ்ச்சியை படரவிடுகிறது என இக்கவிதை பேசுகிறது. இறுதியாக பழம்
விற்கும் பாட்டியிடம் இருந்து ஒரு குப்பைக்காரியிடம் சென்று அவளிடம் இருந்து ஒரு பிச்சைக்காரிக்கு
கருணை பயணமாகிறது. குப்பைக்காரி ஆரஞ்சு சாப்பிடும் வழக்கமற்றவள் என்பதால் அதை பிச்சையெடுக்கும்
சிறுமிக்குப் போடுகிறாள். சிறுமி தன் காலை அண்டும் நாய்க்குட்டிக்கு ஒரு ஆரஞ்சு சுளையை
வீச அது “லபக்கென்று” அதை விழுங்குகிறது.
இது ஒரு மிக வித்தியாசமான அபூர்வ கவிதை அல்ல.
வழக்கமான ஒன்றே. இதில் வரும்
“அப்போது வானத்தில் தேவர்கள்
ஒன்றுகூடும்
ஓசை கேட்டது.
“நகையணி வதனத்து ஒளிநறுங்கீற்றே!”
என வாழ்த்தியது வானொலி.”
எனும் வரிகளே இசையின் முத்திரை வரிகள்.
இவற்றை நீக்கினால் நமது ஐம்பதாண்டு நவீன கவிதை வரலாற்றில் யார் வேண்டுமானாலும்
எழுதி இருக்கக் கூடிய ஒன்றே இது.
இந்த கருப்பொருளை விடுத்துப் பார்த்தால் வேறொரு
நுணுக்கம் என்னைக் கவர்ந்தது. போலீஸ்காரர், கந்து வட்டிக்காரர் துவங்கி யாருமே
மனம் கனிந்து அடுத்தவரை கருணையோடு மன்னிப்பதில்லை. போலீஸ்காரரை ஒரு சாமான்யன்
கிட்டத்தட்ட வாகனத்தில் மோத வர அவர் சாதாரணமாய் சிரித்தபடி அதைக் கடந்து போகிறார்.
“வானத்தில் தேவர்கள்”, “ஒளிநறுங்கீற்றே” ஆகிய செவ்வியல் குறிப்புகள் ஒரு
பகடியாகவே, இசையின் வழக்கமான பாணியில், இங்கு வருகிறது. உண்மையில் தேவர்கள் ஒன்று
கூடும் அளவுக்கு இங்கு ஒன்றுமே நடக்கவில்லை. கந்துவட்டிக்காரர் தனக்கு வட்டி
வேண்டாம் என்றோ அல்லது வட்டியை குறைக்கிறேன் என்றோ பழக்கடை பாட்டியிடம்
சொல்லவில்லை. அடுத்த நாள் வாங்கிக் கொள்ளலாம் என ஒருநாள் அவகாசம் கொடுக்கிறார்;
அதனால் அவருக்கு நட்டமொன்றும் இல்லை; இது தியாகமும் அல்ல. பழக்கடைப் பாட்டியும்
கூடுதலாய் ரெண்டு சின்ன அரஞ்சுகளை குப்பைக்காரிக்கு அளிக்கிறார். இந்த “சின்ன”
முக்கியம். எல்லா பழக்கடைக்காரர்களும் இது போல் கொசுறாக ஒன்றிரண்டு பழங்கள் கூடப்
போடுவார்கள். எனக்கே பலமுறை நடந்ததுண்டு. ஓரு மாமூல் விசயம் இது. அடுத்து,
குப்பைக்காரி ஆரஞ்சில் பெரிய ஆர்வம் கொண்டவள் அல்ல. ஆகையாலே அந்த “குட்டி” ஆரஞ்சை அவள்
பிச்சைக்காரி சிறுமிக்கு அளிக்கிறாள். இதுவும் தியாகம் அல்ல. அச்சிறுமி நாய்க்கு
முழு ஆரஞ்சை அல்ல, ஒரு “குட்டி” ஆரஞ்சின் ஒரு சிறிய சுளையைத் தான் அளிக்கிறாள்.
இப்படி இந்த ஒவ்வொரு செயலிலும் ஒரு மெல்லிய
கருணை ஜொலிக்கிறது தான், ஆனால் இச்சம்பவங்கள் மிக மாமூலானவையும் தாம். அந்த
கந்துவட்டிக்காரர் கொஞ்சம் சத்தம் போட்டிருக்கலாம்; அந்த பழக்கடை பாட்டி இதனால்
மனம் சோர்ந்து கடுகடுப்பாய் குப்பைக்காரியிடம் நடந்து கொண்டிருக்கலாம். அப்படி
நடந்திருக்குமெனில் இறுதியில் நாய்க்குட்டிக்கு சுளை கிடைத்திருக்காது. ஆனால்
இவர்கள் யாருமே இச்செயல்களுக்காய் எந்த பிரத்யேக முயற்சியோ தியாகமோ செய்வதில்லை.
தமக்குத் தேவையில்லை அல்லது பாதிப்பில்லை என்பதாலே சிரிக்கிறார்கள்,
மன்னிக்கிறார்கள், ஒரு கூடுதல் பழத்தைக் கொடுக்கிறார்கள், பிச்சையிடுகிறாரக்ள்,
ஒரு விள்ளல் ஆரஞ்சை நாய்க்குட்டிக்கு கொடுக்கிறார்கள். இக்கவிதையில் நாம் கவனிக்க
வேண்டிய முக்கியமான குறிப்பு இது. நம் காலத்தின் கருணை இப்படி மிக மாமூலாய்,
யாருக்கும் நட்டமில்லாமலே இருக்க முடியும் என்கிறார் இசை.
இந்த மாமூலான மெல்லிய கருணையின் இனிப்பையே
நாய்க்குட்டி சுவைக்கிறது. நம் அன்றாட வாழ்க்கையில் இது போல் பல அழகிய தருணங்கள்
உண்டு; அவை மாமூலானவை என்பதாலே நம் பார்வையில் படுவதில்லை. இதை சித்தரித்தால் இது
ஒரு வண்ணதாசன் படைப்பாகி விடும். ஆனால் இசை இதனோடு கருணையை ஒரு மகத்துவமான செயலாக
மிகையாக காண்பதையும் “லைட்டாய்” கிண்டலடிக்கிறார். இந்த லைட் பகடியினூடே ஒரு மிக
மிக சாதாரணமான, தியாகமே இல்லாத, எதேச்சையாய் நிகழ்கிற கருணையே அன்றாடத்தின் கருணை
என நம் முன்வைக்கிறார். அசோகமித்திரனின் தொனியில் வண்ணதாசன் எழுதியது போன்ற கவிதை
இது எனத் தோன்றுகிறது.
அந்த ஆரஞ்சு சுளை எதார்த்தமாய் இல்லை என ஒரு
கருத்து உள்ளது. ஷங்கர்ராமசுப்பிரமணியன் இக்கவிதை பற்றின தன் தி ஹிந்து
கட்டுரையில் “பழம் சாப்பிடும் நாய்களையோ
நாய்க்குட்டிகளையோ எனது இதுவரையிலான ‘கள’ அனுபவத்தில் பார்த்ததில்லை. அருளின் சோதி
சுடரும் ‘ஒளிநறுங்கீற்று’ அல்லவா அந்தப் பழம். அதைச் சாப்பிட்டுத்தான் மீட்சியைப்
பெறட்டுமே அந்தக் குட்டிச் சொறிநாய்.” என்கிறார். (இக்கட்டுரையை படிக்க https://tamil.thehindu.com/general/literature/article24907111.ece?homepage)
ஒளிநறுங்கீற்று என்பதன் காட்சிபூர்வமான ஒரு தொடர்ச்சியாய் ஆரஞ்சு சுளை எனக்குத்
தெரிகிறது. ஆரஞ்சு சுளை என்பது ஒரு கனல் துண்டைப் போலத் தெரிகிறது. உறைய வைத்த
ஒளிக்கதிரைப் போலவும் அதை கற்பனை செய்ய முடிகிறது. ஆம், ஆரஞ்சு சாப்பிடும் நாயை
நானும் பார்த்ததில்லை தான். ஆனால் ஒரு உருவகமாய் இந்த ஒளிக்கதிர் – ஆரஞ்சு சுளை
தொடர்ச்சி களிப்பூட்டுகிறது. கவிதையில் எதார்த்தத்தை விட காட்சிபூர்வம் முக்கியம்.
பாரதியின் “ஆடி வரும் தேனே” கூட எதார்த்தம் அல்ல தானே.
கருத்துகள்