நம் சமூகம் திறந்தநிலை / தாராளவாத செக்ஸை அனுமதிக்காததால் ஆண் அந்த இச்சையை மட்டுப்படுத்தி, அமுக்கி வைத்து கலை, அரசியல், சிந்தனை, எழுத்து, சமூக மேம்பாடு என வெளிப்படுத்துகிறான் என்றார் பிராயிட்.
ஆனால் பிராயிடின் பார்வையில் ஒரு கிறுத்துவ கத்தோலிக்க குற்றவுணர்வு செயல்படுவதாய் பிற சிந்தனையாளர்கள் கருதுகிறார்கள். செக்ஸ் ஒரு பாவம் எனும் கிறித்துவ நம்பிக்கையே அவரை இப்படி அதை வகைப்படுத்த செய்திருப்பதாய் சொல்கிறார்கள்.
பிராயிடுடன் எனக்கு ஏன் உடன்பாடில்லை எனச் சொல்கிறேன்:
ஒரு ஆணை நீங்கள் நூறு பெண்களுடன் ஒரு வீட்டில் அடைத்தால் அவன் சதா எப்படி அந்த நூறு பேருடனும் உறவு கொள்ளலாம் என நினைக்க மாட்டான். பிக்பாஸ் வீட்டில் கூட எல்லா காமிராக்களும் பழுதானால் கூட அப்படி நடக்காது. ஒரு சிலருடன் அவனுக்கு நிச்சயம் உறவு ஏற்படும். ஆனால் அவன் செக்ஸைக் கடந்து வாழவும் சிந்திக்கவும் நிச்சயம் முயல்வான்.
இசையில் துவங்கி சிற்பம், கட்டிடவியல், கோட்பாடுகள், எழுத்து என ஒவ்வொன்றால் அடிப்பனையான உடல் இச்சையின் வெளிப்பாடு மட்டுமல்ல – தனது ரசனையை, கனவை, இச்சையை பலமடங்கு பெருக்கு மட்டற்று அனுபவிக்க அவன் கண்டறிந்த மார்க்கமே மேற்சொன்னவை. உ.தா., இன்றைய உலகில் செக்ஸில் அரைமணி நேர சுகம் உண்டெனில் எழுதுவதிலோ, பாடுவதிலோ, பணம் சம்பாதிப்பதிலோ பல மடங்கு அதிக சுகம் உண்டு. நீங்கள் செக்ஸ் இன்றி வாழ முடியாது, ஆனால் செக்ஸ் மட்டுமே கொண்டும் வாழ முடியாது. மனிதன் புத்திசாலி – அரை-ஸ்பூன் இன்பத்தை அவன் அளவற்ற இன்பமாய் மாற்ற கற்றிருக்கிறான்.
இந்த நிலையில் தான் நாம் மீண்டும் ஆணை அடிப்படையில் ஒரு செக்ஸ் மிருகம், யார் மாட்டினாலும் குதறி வைப்பவன் என அற்பமாய் நினைக்கும் இடத்துக்கு வந்திருக்கிறோம் என்பது வருந்தத்தக்கது.
ஏனென்று தெரியவில்லை எந்த ஒரு மனிதன் பெரும் சாதனைகள் செய்து வாழ்வை உன்னதமாய் வாழ்ந்து அனுபவிக்க முயன்றாலும் அவனைப் பற்றின செக்ஸ் சர்ச்சைகள் கிளம்பும், மக்களும் அதை ஆர்வமாய் படிப்பார்கள். காந்தியடிகள் மீதான பாலியல் அவதூறுகள் ஒரு நல்ல உதாரணம். “டாவின்ஸி கோட்” நினைவுள்ளதா? கர்த்தரும் சாதாரண மனிதரே, அவரும் செக்ஸ் வைத்துக் கொண்டவரே என சொல்வதே அந்நாவலின் நோக்கம். அந்நோக்கம் பல கோடி பேருக்கும் இருந்ததாலே அந்நாவல் ஒரே சமயம் சர்ச்சைக்கும் பெரும் புகழுக்கும் உள்ளானது. எந்த ஒரு மாமனிதனையும் நீ ஒரு மிருகமே என முத்திரை குத்துவதில் நமக்கு ஒரு தனி சந்தோஷம்.
செக்ஸ் விசயத்தில் மட்டுமே இப்படி நடக்கிறது என்பது தான் விசித்திரம்!
ஒரு பெண் குற்றம் சுமத்தியதும் ஊரே கேள்வியின்றி ஆணை பழிக்க தயாராவது மேற்சொன்ன பிழையான எண்ணத்தையே காட்டுகிறது. பெண் பலவீனமானவள், அவள் எப்போதும் ஒடுக்கப்படுபவள் என்பதால் அல்ல நாம் ஆணைப் பழிப்பது. எல்லா சந்தர்பங்களிலும் நாம் இது போல் பாதிக்கப்பட்டோரை கண்ணை மூடி ஆதரிப்பதில்லையே!
பெண் என்பதாலா? ஆம், ஆனால் ஆண்-பெண் சம்மந்தப்பட்ட எல்லா விவகாரங்களிலும் செக்ஸ் கூடவே வருகிறதே! ஆனால் செக்ஸ் சம்மந்தப்படாத எந்த விசயத்திலாவது நாம் இப்படியான நிபந்தனையற்ற ஆதரவு கொடுக்கிறோமா? உ.தா., ஒரு 100 வயதுப் பாட்டி. அவர் வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. “என்னை பழிவாங்க வேண்டுமென்று வேண்டுமென்றே வீட்டு உரிமையாளர் மின்சாரத்தை துண்டிக்கிறார்” எனச் சொன்னால் நாம் நம்பத் தயங்குவோம். வீட்டு உரிமையாளர் குற்றச்சாட்டை மறுத்தால் அதை பரிசீலிப்போம். ஆனால் இப்போது 100 வயதை 20 வயதாக மாற்றுங்கள். உடனே “ஆமா அந்த வீட்டு உரிமையாளருக்கும் இளம்பெண்ணுக்கும் ஏதோ விவகாரம் போல. இவளை முயன்று பார்த்து அவள் மறுத்ததால் அதான் அந்தாள் மின்சாரத்தை துண்டித்திருக்கிறார். கொடூரமானவன்” என யோசிப்போம். செக்ஸ் என்று வந்து விட்டால் நாம் ஆதாரம், லாஜிக் எதுவும் தேடுவதில்லை.
ஒரு ஆண் தன் வாழ்வில் பல விசயங்களில் சமநிலை தவறுவது போல செக்ஸிலும் செய்கிறான். ஆனால் எப்போதும் அல்ல. நூறில் ஒரு ஆண் நூறில் ஒருமுறை பிறழ்கிறான். ஆனால் நீங்களோ நூற்றுக்கு நூறு ஆண்கள் நூற்றுக்கு நூறு முறை பிறழ்கிறார்கள் என்கிறீர்கள்! ஆணுக்கு இதுவே வேலை என்கிறீர்கள்.
பெண்களைத் துரத்துவதே வைரமுத்துவின் அடிப்படையான, தவிர்க்க முடியாத, கட்டுப்பாட்டைக் கடந்த இயல்பென்றால் அவர் இவ்வளவு ஆயிரம் பாடல்களை எழுதி இருக்க மாட்டார். அப்படி செக்ஸ் அவரது கட்டுப்பாட்டை மீறிய, மிக மிக ஆதரமான இயல்பு அல்ல எனில் அவர் நிச்சயம் குற்றவாளியே என நாம் கூற முடியாது.
எப்படிப் பார்த்தாலும் ஆதாரமின்றி ஆண் மீது கண்ணை மூடி முத்திரை குத்துவது நியாயமல்ல.
பாதிக்கப்படும் பெண்களால் எப்போதும் ஆதாரத்தை காட்ட முடியாதே என்கிறார்கள். இதையே நீங்கள் எல்லா குற்றங்களுக்கும் சொல்லலாமே.
என்னை கூட்டமாய் சேர்ந்து சிலர் ஒரு தனியான இடத்தில் வைத்து தாக்குகிறார்கள். நான் பயந்து பின்வாங்குகிறேன். அதன் பிறகு புகார் தெரிவிக்கிறேன். “என் வசம் ஆதாரம் இல்லை, ஆனால் நான் பாதிக்கப்பட்டவன், நம்புங்கள்” என்றால் நம்புவார்களா? புகார் சொல்பவள் பெண் என்றாலும் கூட (அதில் பாலியல் அரசல்புரசலாய் தொனிக்கவில்லை என்றால்) ஆதாரம் கேட்போம். ஆனால் பாலியல் என்றால் மட்டும் ஏன் ஆதாரம் எல்லாம் வேண்டாம் என அவ்வளவு அவசரமாய் நம்பத் தலைப்படுகிறோம்?
இது தவறல்லவா? முரண் அல்லவா?
Comments
சின்மயி இந்த விசயத்தில் ஒரு கருவி.
இதே சின்மயி ஜெயேந்திரன் மற்ற பெண்களுக்கு செய்தது தவறு என்று கூறுவாரா? நிச்சயம் மாட்டார். அது தான் பார்ப்பனீயம்.
give a quick shout out and tell you I really enjoy reading your posts.
Can you recommend any other blogs/websites/forums that cover the
same topics? Thanks for your time!