முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இன்றைய படங்களில் ஏன் பெண் பார்ப்பதில்லை?



 Related image
1993இல் வெளியான படம் “ஏர்போர்ட்”. மலையாள இயக்குநர் ஜோஷி எடுத்தது. மட்டமான அலுப்பூட்டும் படமே. ஆனால் எதேச்சையாய் அதைப் பார்த்த போது ஒரு விசயம் சிந்தனையை தூண்டியது: பெண் பார்க்கும் சடங்கு.

அப்படத்தின் நாயகன் சத்யராஜ். சத்யராஜிடம் அவரது அம்மா தங்கைக்கு (அழகான சுஜித்ரா) வரன் பார்த்துள்ளதாய் சொல்கிறார். தங்கை ஊமை. அவரை பெண் பார்க்க வந்தவர்களுக்கு பிடித்து விட்டது; எத்தனையோ பேர் பார்த்து நிராகரித்த பின் இப்போது இது நடந்திருக்கிறது; ஆகையால் எப்படியாவது இத்திருமணத்தை நடத்தி விட வேண்டும். சத்யராஜ் தனக்கு விமான ஓட்டியாக பதவி உயர்வு கிடைத்ததும் நிச்சயமாய் தங்கை திருமணத்தை நடத்தி விட முடியும் என உறுதியளிக்கிறார்.

Image result for மாயி வடிவேலு
மாயி: “சாய்ச்சுப்புட்டா மச்சான்”
இதே போன்ற தங்கச்சி செண்டிமெண்ட், தங்கைக்கு திருமணம் நடத்த வேண்டிய அண்ணனின் நெருக்கடி, வறுமையில் அல்லாடும் குடும்பங்கள் என எண்பது, தொண்ணூறுகள் வரையிலான எல்லா படங்களிலும் திரும்பத் திரும்ப வரும். இப்படங்களில் பெண்கள் எல்லா விதங்களிலும் ஆண்களை சார்ந்திருப்பார்கள். நாயகன் வீழ்ந்தால் மொத்த குடும்பமே நடுத்தெருவுக்கு வரும். “பராசக்தியில்” தங்கை ஆதரவற்று தெருவுக்கு வந்து அங்கு கோயிலில் தஞ்சம் புகுந்து பூசாரியால் கற்பழிக்கப்படும் நிலைக்கு கிட்டத்தட்ட வந்து சேர்கிறாள். எண்பது, தொண்ணூறுகளின் படங்களில் தான் காதலியின் அப்பா மற்றும் அண்ணன்கள் வில்லன்களாய் சித்தரிக்கப்படும் தேய்வழக்கும் வலுப்பெற்றது (”அலைகள் ஓய்வதில்லை”, “சின்னத்தம்பி”). குறிப்பாய், சாதி வேறுபாட்டை, பொருளாதார பாகுபாட்டைக் கடந்து உருவாகும் காதலைப் போற்றும் படங்களில். தொண்ணூறுகளுக்குப் பிறகு சாதி வெறியை ஒரு சமூக அவலமாய் சித்தரிக்கும் காதல் படங்களில் இந்த அண்ணன், சித்தப்பா, அப்பா மற்றும் உறவினர் கூட்டணி மற்றொரு வடிவம் எடுத்தது (“காதல்” துவங்கி “பரியேறும் பெருமாள்” வரை). பெண்ணைக் காப்பாற்றுவது துவங்கி பெண்ணின் பொருட்டு பல சமூக அவலங்களை நிகழ்த்துவது வரை ஆண் வர்க்கமே இப்படங்களின் இயக்குவிசை. தமக்கென முடிவெடுக்கும் அதிகாரம் பெண்கள் வசம் கிட்டத்தட்ட இப்போது வரை தமிழ் திரை சித்தரிப்புகளில் இல்லை.
“கொம்பன்”, “படிக்காதவன்”, “துப்பாக்கி”, "ஒருநாள் கூத்து" போன்ற படங்களில் பெண் பார்க்கும் காட்சிகள் வந்தாலும், முந்தைய படங்களில் போல இவை அழுத்தமான திருப்புமுனைக் காட்சிகள் அல்ல (இப்படங்களை குறிப்பிட்ட நண்பர்களுக்கு நன்றி).

Image result for roja movieரோஜா

இந்த மாற்றங்களினூடே மாறாத ஒன்று பெண்களின் ஆதரவற்ற நிலை – ஆணை சார்ந்திருக்கும் நிலை. இதில் மாறி வந்துள்ள ஒன்று பெண் பார்க்கும் படலத்தில் மறைவு.கடந்த பத்தாண்டுகளின் படங்களில், நான் கவனித்த வரையில், பெண் பார்க்க வரும் காட்சியே பெரும்பாலும் இல்லை. அப்படி இருந்தாலும் அவை முக்கியமாய் சீரியசாய் திரைக்கதையில் திருப்புமுனையாய் வருவதில்லை. ("ஜோக்கர்" ஒரு விதிவிலக்கு) ஆனால் “மௌனராகம்”, “ரோஜா” போன்ற படங்களில் பெண் பார்க்கும் காட்சி தான் திருப்புமுனை. பெண் பார்க்கும் நிகழ்வில் இருந்து தப்பிக்கும் பொருட்டு பெண்கள் என்னவெல்லாமோ செய்வார்கள். “தூறல் நின்று போச்சு” போன்ற படங்களில் பெண் பார்க்கும் நிகழ்வின் போதான சிக்கல்களை மொத்த கதையையும் நகர்த்தும். ஆனால் இன்றைய படங்களில் ஏன் இந்த கதையமைப்பு உத்தி பிரசித்தம் இல்லை?
இன்றைய தமிழகத்தில் பெண் பார்க்கும் சடங்குகள் இல்லையா? உண்டு. இன்றும் பெண்கள் பார்க்கப்பட்டு தேர்வு செய்யப்படுகிறார்கள். அறிந்தோர் தெரிந்தோர் உறவினர் இணையதளங்கள் வழி பெண் பார்க்கப்பட்டு, டீ / காப்பி வழங்கப்பட்டு தான் இறுதியில் தீர்மானமாகிறது. அப்படி இருந்தும் இந்த காட்சி ஏன் சினிமாவில் காணாமல் போய் விட்டது? / முக்கியத்துவம் இழந்து விட்டது?
இது எனக்குத் தோன்றும் காரணம்:
வணிகப் படங்கள் சமூக எதார்த்தத்தை அப்படியே பிரதிபலிப்பதில்லை. பொது சமூகத்தின் அடிப்படையான பயங்கள், கேள்விகள், கோபங்களை பிரதிபலிப்பதும் கையாள்வதும் அவற்றுக்கு தீர்வு சொல்வதுமே வணிக சினிமாவின் பார்முலா. தொண்ணூறுகள் வரையிலான படங்களில் பெண் என்பவள் முழுக்க ஒரு குடும்பத்தின் பொறுப்பாய் இருக்கிறாள்; அவளை கரையேற்ற வேண்டிய கவலையும் அழுத்தமும் ஆண்களை நெருக்குகிறது. ஆகையாலே அன்றைய படங்களில் இது முக்கியமான அழுத்தமான முத்திரைக் காட்சி ஆகிறது. தன் பெண்ணைப் பற்றி கவலை கொண்டு கண்ணீர் விடும் நெகிழ்வான உறுதியான தியாக சொரூபியான அப்பா (பூர்ணம் விஸ்வநாதன்) பாத்திரமும் அக்காலத்தைய படங்களில் மீள மீள வரும் பாத்திரம். ஆனால் இன்று பெண் பார்க்கும் படலத்துடன் இந்த அப்பாவும் மெல்ல மெல்ல பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டார். இன்றைய அப்பா என்பவர் காதலுக்கு எதிரி / மகளுக்கு நண்பன் / அலங்காரப் பொருள். ஆக, இன்றைய தமிழ் (ஆண்) சமூகத்துக்கு பெண்ணை பாதுகாத்து கரையேற்றும் கவலை வெகுவாய் குறைந்து விட்டது என்பதை இது காட்டுகிறது.
இன்றைய பெண்கள் நன்றாய் படித்து வேலைக்கு சென்று சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றுகிறவர்களாகவும் தம்மை சுயமாய் பார்த்துக் கொள்கிறவர்களாகவும் உருமாறி இருக்கிறார்கள். எந்த வேலையிடத்துக்கு சென்றாலும் முக்கிய பொறுப்புகளிலும் மேலாளர்களாகவும் பெண்கள் அதிக எண்ணிக்கையில் தோன்றுகிறார்கள். ஆக இப்பெண்கள் குறித்த கவலைகள் இன்று மாறி விட்டன. “கரையேற்றும் கவலை” என்பது மணமுடித்துக் கொடுப்பது என்பதில் இருந்து கீழ்சாதியினரிடம் இருந்து காப்பாற்றுவது என சில படங்களில் மாறி இருக்கிறது; இன்னும் சில படங்களில் ஹீரோ (போலீசாக) வில்லன்களை நொறுக்கும் போது, சொந்த சாதிசனத்துக்குள் பகைவரை அழிக்கும் போதும் அவனது ஆண்மையை முன்னிலைப்படுத்த அழகிய பெண்கள் வந்து போகிறார்கள்.
எப்படியோ ஆண்களுக்கு ஒரு கவலை ஒழிந்தது!

கருத்துகள்

Manian இவ்வாறு கூறியுள்ளார்…
அன்புள்ள அபிலாஷ் அவர்களுக்கு

சேரன் நடித்து ஜெகன் இயக்கத்தில் 2008இல் வெளியான "ராமன் தேடிய சீதை " படத்தின் மையக்கரு திருமணத்திற்கு பெண் தேடும் படலத்தை அடிப்படையாகக் கொண்டது. பெண் பார்க்கும் நிகழ்வுகள் தொடர்பாக பல காட்சிகள் படத்தில் உண்டு. ஆனால் மற்ற படங்களில் இருந்து ஒரு வேறுபாடு . திருமணத்திற்கு பெண் தேடும் ஒரு ஆணின் சிக்கல்களை பற்றி பேசும் படம். படத்தின் நாயகன் சேரனுக்கு சரளமாகப் பேசமுடியாதபடி சிறிது திக்கும். இதனோடு பன்னிரெண்டாம் வகுப்பில் பாடத்திட்டங்களும் , கல்வி சூழலும் தந்த அதீத மனஅழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டு சிறிது காலம் ஒரு மனநல காப்பகத்தில் சிகிச்சை எடுத்து கொள்கிறார். இந்த இரண்டு காரணங்களின் பொருட்டு அவரில் ஒரு வித தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. ஆயினும் எந்த பெண்பார்க்கும் படலத்திற்குச் சென்றாலும் இவ்விரு விஷயங்களை எந்த ஒளிவு மறைவின்றி அந்த பெண்களிடம் பகிர்ந்து கொள்கிறார். ஆனால் இவ்விரு காரணங்கள் பொருட்டே அனைத்து பெண்களும் இவரை நிராகரிக்கின்றனர். என்றாலும் கூட எங்குமே இவர் இதை மறைப்பதில்லை என்பதில் தீர்மானமாக இருந்து பெண் தேடும் படலத்தை தொடர்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் தன்னை ஒரு பெண் பார்க்கும் படலத்தில் நிராகரித்த பெண்ணோடு பழகும் படி சூழல் உருவாகிறது. சேரன் அந்த பெண் மீது எந்த offense um எடுத்துக் கொள்ளாமல் நட்பாகவே பழகுகிறார். சிறிது கால பழக்கத்திற்குப் பிறகு,அதன் பெண்ணிற்கு பெண் பார்க்கும் படலத்தின் போது சேரன் மீது ஏற்பட்ட எதிர்மறையான அபிப்ராயங்கள் மாறத் தொடங்குகின்றன.ஒரு நேர் மறையான மனிதராக சேரன் தோன்றவே, அவர்பால் அப்பெண் ஈர்க்கப்படுகிறாள். ஒரு கட்டத்தில் அவரை திருமணம் செய்து கொள்ளும் விருப்பத்தை வெளியிட, இருவரின் திருமணத்தோடு படம் சுபமடைகிறது. இப்படத்தின் இறுதியில் அந்த பெண் சொல்லும் ஒரு சிக்கல் கவனிக்க வேண்டியது. "பெண் பார்க்கும் படலத்தின் போது கொடுக்கபடும் குறுகிய கால அவகாசத்தில் ஒரு வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் ஒரு பெரிய முடிவை எடுக்க புறச் சூழல்களால் நிர்பந்திக்கப்படுகிறோம். இந்த குறுகிய நேரத்தில் புற காரணங்களை வைத்து மட்டுமே (தோற்றம் , பொருளாதாரம் ) முடிவு எடுக்க முடிகிறது . இரண்டு மனங்கள் ஓத்து போகிறதா என்பதை இந்த குறுகிய நேரத்தில் அறிவது பெரும்பாலும் இயலாத ஒன்று". என்பது போல ஒரு கருத்தை அந்த பெண் கூறுவாள். இது இரு பாலருக்கும் பொருந்தும். பெரும்பாலும் எடுக்கப்படும் முடிவுகள் ஒரு சூதாட்டத்தை போன்றதே. சிலஇடங்களில் வெற்றி பெறும். சில இடங்களில் தோல்வி அடையும். பல இடங்களில் வெற்றியுமன்றி தோல்வியுமின்றி ஒரு விவரிக்க இயலாத நடுதன்மையில் செல்லும். very Subjective.

மிக்க அன்புடன்
மணியன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

சினிமாவும் சர்வாதிகாரமும்: யோசா சொல்வதென்ன?

  காட்சி ஊடகம் நமக்குப் பொழுதுபோக்க உதவுகிறது என்றாலும் அது அடிப்படையில் மனிதரைச் சிந்திக்க விடாமல் செய்து செயலூக்கத்தை ஒழிக்கிறது, இது சர்வாதிகாரத்தை நோக்கி இட்டுச் செல்கிறது என்று சில மாதங்களுக்கு முன் நான் விஜய்யின் வருகையை ஒட்டி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். இன்று தற்செயலாக மரியோ பார்கஸ் யோசாவின் ஒரு கட்டுரையைப் படித்தால் அதில் அவர் கிட்டத்தட்ட அதே கருத்தைத்தான் சொல்கிறார். காட்சி ஊடகங்களின் ஆதிக்கம் உள்ள சமூகம் சர்வாதிகாரத்துக்கு எதிராகச் செயல்பட முடியாமல் முடங்கும் என்கிறார்: (...) making the present unreal, turning actual history into fiction has the effect of demobilising the citizen, making him or her feel exempt from any civic responsibility, encouraging the conviction that it is beyond anyone's reach to intervene in a history whose screenplay is already written. Along this path we may well slide into a world where there are no citizens, only spectators, a world where, although formal democracy may be preserved, we will be resigned to the kind of lethargy dictatorships asp...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...