முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

#metoo பிரச்சாரம்: பெண்ணியம் என்பது ஆண்களை வேட்டையாடுவதா? (4)


ஆணின் அதிகார தோரணையே பெண்ணை ஈர்க்கிறது என்றால், அதிகாரமிக்க பதவியில் உள்ள ஆண்கள் பெண்களை இச்சிப்பது இயற்கை தானே? அவர்கள் நேரடியாய் வன்முறை பிரயோகிக்காத வரை நாம் எப்படி அவர்களை குற்றம் காண முடியும்?

இரண்டு உதாரணங்கள்:
1)   பாலு மகேந்திரா-ஷோபா உறவு. ஷோபாவின் தற்கொலைக்கு இயக்குநரையே குற்றம் சொல்பவர்கள் உண்டு. ஆனால் அதை ஒரு உன்னதமான காதல் என ஏன் பார்க்கக் கூடாது? ஆம், பாலுமகேந்திராவின் அதிகாரமிக்க ஆளுமை ஷோபாவை ஈர்த்திருக்கலாம். அது பரஸ்பர விருப்பத்தின் அடிப்படையிலான உறவு என்றாலும் கூட அங்கு ஒருவித அதிகார துஷ்பிரயோகம் உள்ளது தானே? அவர் ஷோபாவின் வயதைக் கருதி உறவில் இருந்து பின்வாங்கி இருக்கலாம் தானே? ஆனால் எந்த உறவிலும் அறம் முக்கியமல்ல என்பதே இதற்கான பதில். காதலில் எதுவும் தகும். அதிகாரம் கூட. இவர்களைப் போன்றே காதலித்து சேர்ந்து வாழ்ந்த வேறு இயக்குநர்-நடிகை ஜோடிகளும் உண்டு. அவர்களின் உறவும் ஒரு கட்டத்தில் முறிந்துள்ளது. தனது அதிகாரத்தை பயன்படுத்தி இயக்குநர் தன்னை பயன்படுத்திக் கொண்டார் என அப்பெண் ஒரு காலத்தில் பின்னர் நினைக்கலாம் தானே? அப்போது அவர் மீடியாவில் தோன்றி இந்த ஆள் என்னை தன் அதிகாரத்தைக் கொண்டு தவறாக பயன்படுத்தினார்என குற்றம் சுமத்தினால் அது நியாயமாகுமா?
2)   எம்.ஜி.ஆர்ஜெயலலிதா உறவு. எம்.ஜி.ஆர் எம்.ஜி.ஆர் அல்லாவிடில், ஒரு எளிய வயதான மனிதராக, வெறும் ராமச்சந்திரனாக, இருந்திருந்தால் அந்த உறவு எப்படி அமைந்திருக்கும்? எம்.ஜி.ஆர் ஒரு தோல்வியுற்ற, வயதான குணச்சித்திர நடிகர் எனில் ஜெயலலிதா அவருடன் உறவில் இருந்திருப்பாரா? ம்ஹும். எம்.ஜி.ஆரின் அதிகாரமே அந்த உறவின் துவக்கம் என்பதும், அவரது அக்கறையும் ஆளுமையும் அதன் அடித்தளம் என்பது வெளிப்படை. இப்போது இதில் அதிகார துஷ்பிரயோகம் உள்ளதா? தன் நாயக அந்தஸ்தை, செல்வாக்கை பயன்படுத்தி அவர் தன்னை விட முப்பது நாற்பது வயது குறைவான பெண்ணுடன் உறவை அமைத்தது துஷ்பிரயோகம் ஆகாதா? ஆம் எனில் அதனால் ஜெயலலிதா பயனுறவில்லையா? ஜெயலலிதாவுக்கு வேறு சாய்ஸே இருக்கவில்லை என நீங்கள் கூற முடியுமா? முடியாது. ஜெயலலிதா ஈர்க்கப்பட்டது இந்த அதிகார துஷ்பிரயோகத்தை நோக்கித் தானே? ஏன் அவர் தனக்கு இணையான ஒருவரை தேர்ந்து கொள்ளவில்லை? இதில் பெண்ணுக்கு பலனே இல்லை, அவள் பாதிக்கப்படுகிறவள் மட்டுமே எனக் காண்பது பாசாங்கான சிந்தனை அல்லவா?
 நாம் நேரடியான அதிகார துஷ்பிரயோகம் பற்றிப் பேசும் இத்தகைய மறைமுக துஷ்பிரயோகங்களையும் கருத்திற்கொள்ள வேண்டும். ஏன் உறவுக்குள் ஒரு சமயம் அதிகாரத்துக்கு உடன்படும் பெண் மற்றொரு சமயம் திடீரென அதை எதிர்த்து கசப்பை வெளிப்படுத்துகிறாள்? அந்த உறவுக்குள் நேரும் அதிகாரப் போட்டி கசந்ததே இதன் காரண்மாய் இருக்கும்.
ஆண்-பெண் உறவு என்பதே நேரடியான / மறைமுகமான அதிகார துஷ்பிரயோகம் கொண்டது எனில், அதிகாரத்தில் இருக்கும் ஆண் ஏன் ஒரு பெண்ணை அடைய தன் அதிகாரத்தை செலுத்திப் பார்க்கக் கூடாது? நேரடியான வற்புறுத்தல் / வன்முறை இல்லாதபட்சத்தில் இதில் தவறில்லை தானே? ஒரு கற்பனையான உதாரணம்: முகேஷ் அம்பானியைப் போன்ற ஒருவர், அவர் தன் செகரெட்டரியை வெளியே அழைத்து சென்று ஜொள்ளு விட விரும்பினால் அதில் தவறில்லை என்பதே என் தரப்பு. அப்பெண்ணுக்கு இதில் விருப்பமில்லை, ஆனால் அம்பானிக்கு எப்படி இல்லை எனச் சொல்வது எனும் பதற்றத்தில் உடன்பட்டாள் எனில் அங்கு பழியை முழுக்க அம்பானியின் மீது சுமத்தல் ஆகாது. அம்பானியுடன் ஒரு காதல் உறவை பேணுவதில் அப்பெண்ணுக்கு ஒரு மறைமுக மகிழ்ச்சியும் அனுகூலமும் இருக்கும் தானே? அவளுக்கு நெருக்கடி இருக்கும் என்றாலும் மறுக்கும் சுதந்திரமும் உண்டு தானே! ஒருவேளை இப்பெண் இந்த உறவை ஒரு எல்லைக்குள் வைத்துக் கொள்ளலாம் என முடிவெடுக்கலாம்; ஆனால் அம்பானி இதை அறியாமல் அவளை அணைத்துக் கொள்கிறார். அப்போது அப்பெண்ணுக்கு இது ஒரு பலாத்கார முயற்சி எனத் தோன்றலாம். அவள் கொந்தளிக்கலாம். “நான் வெறுமனே அலுவலக ரீதியாய் தானே உங்களுடன் வெளியே வந்தேன். என்னிடம் தகாத முறையில் எப்படி நடந்து கொள்ளலாம்?” என அவர் கேட்கலாம். ஆனால் அப்பெண் வகுத்த எல்லை என்ன, அதை எப்போது இவர் கடந்தார் என்பதையெல்லாம் அறியாமல் நாம் எப்படி தீர்ப்பளிக்க முடியும்?
 அம்பானியை இங்கே வில்லனாக்க முடியுமா? எந்த உறவிலும் எல்லைகள் தொடர்ந்து அகன்று கொண்டு தான் இருக்கும் என நாம் அறிவோம் தானே? இன்று அணைப்பதை விரும்பாத பெண்ணே நாளை உங்களை வந்து அணைக்கலாம் தானே? இப்படியான உறவுகளில் ஆண் கண்ணைக் கட்டி விட்டது போலத் தானே இருக்கிறான். அவனை மட்டுமே ஒரு வேட்டை மிருகம் போல சித்தரிப்பது நியாயமா?
 சினிமாவில் காஸ்டிங் கவுச் விவகாரத்தைக் கூட நாம் இந்த கோணத்தில் காண முடியும். பாதிப்புக்குள்ளாகிறவர் × பாதிப்பை ஏற்படுத்துகிறவர் என இருமை எப்போதும் மிக மிக சிக்கலானது. நாம் பேசும் விசயத்தில் இரு சாராருக்கும் ஒரு கண்ணுக்கு புலனாகாத கொடுக்கல் வாங்கல் இருந்தபடியே தான் இருக்கும். இவ்வளவு கோடி பணம் புழங்கும் சினிமாத் துறையில் யாரும் அப்பாவி அல்ல. காஸ்டிங் கவுச் விசயத்தை ஒரு கௌரவமான விபச்சாரம் எனச் சொல்பவர்கள் உண்டு. ஆனால் எனக்கு உடன்பாடில்லை. உடலை பயன்படுத்தி உறவுகளுக்குள் நிகழும் அதிகார பேரமாகவே நான் பார்க்கிறேன். விபச்சாரம் என்பது சம்மந்தமில்லாமல் இருவர் பத்து நிமிடம் பணத்துக்காக இணைந்திருப்பது. ஆனால் வாய்ப்புக்காக பத்து நிமிடம் படுக்கிற விசயமாய் நான் காஸ்டிங் கவுச்சை பார்க்கவில்லை. ஏனெனில் பல நாயகிகள் தொடர்ந்து ஒரே நாயகன் அல்லது இயக்குநருடன் பணியாற்றுகிறார்கள். இவர்கள் இடையே உயிர்ப்பான உறவு ஒன்று இருக்கிறது. ஆண் அப்பெண்ணின் உடலை, அவளது அருகாமை தரும் அகந்தையை, ஆறுதலை விரும்புகிறான் என்றால் அப்பெண் வேறு விசயங்களை அவ்வுறவில் விரும்பலாம். இதை மற்றெல்லா உறவுகளுக்கு இணையாகப் பார்க்கவே விரும்புவேன், அந்த ஆணும் பெண்ணும் வெளிப்படையாக காதலர்களாக தம்மை காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் கூட. காமத்தில் எப்போதும் இரு சாராரும் உடலை மட்டுமே விரும்புவதில்லை. செக்ஸ் என்பது உடல் இச்சை சம்மந்தப்பட்டது மட்டும் இல்லை. ஒரு உடலுறவில் ஒரு ஆணின் பிம்பம் மட்டுமே (உடல் அல்ல) ஒரு பெண்ணுக்கு வெகுவான உவகை அளிப்பதாய் அமையலாம். சிலநேரம் அவனது சொற்கள், அவனது குரல் மட்டுமே அவளுக்கு போதுமானதாக இருக்கும். சில நேரம் அவன் கட்டியெழுப்பும் ஒருவித கனவில் பங்கேற்பதே அவளை உடலுறவில் திளைக்க வைக்கும். வெளியில் இருந்து நோக்கும் போது இதில் ஏமாற்றும் பயன்படுத்தலும் உண்டெனப் படலாம். ஆனால் ஏமாற்றலும் சுரண்டலும் கற்பனைகளும் மிகையும் பொய்ப்புனைவுகளும் உடல் உறவின் முக்கிய பகுதியே. ஒரு ஆணும் பெண்ணும் பரஸ்பரம் சமமாய் உடல் இச்சை கொள்வதும் அதை நிறைவேற்றுவதும் அல்ல உடலுறவு. உடலுறவு பல்வேறு சிடுக்குகளைக் கொண்டது. காந்தியை அவரது வயோதிக காலத்தில் நேசித்த பெண்கள் உண்டு. அவர்களில் ஒருவரை காந்தி அன்று ஏற்றிருந்தால் அது பாலியல் சுரண்டல் என இன்று வகைப்படுத்தி இருப்போம். ஆனால் காமத்தில் எந்த சுரண்டலும் இல்லை. ஏனெனில் காமம் எனப்து இயல்பிலேயே சமநிலையின்மையில் திளைப்பது.
இவ்வளவு சிக்கலான விசயத்தில் இருந்து ஒரு சின்ன செங்கல்லை மட்டும் உருவி எடுத்து, நாம் எளிமையாய், கறுப்பு-வெள்ளையாய், ஒரு அதிகாரமிக்க ஆண் ஒரு பெண்ணை விரட்டி துன்புறுத்துவதாய் புரிந்து கொள்வது பத்தாம்பசலித்தனம். மேலும் அதிகாரபூர்வ எல்லைகளுக்கு அப்பால் ஆண்-பெண் உறவுகள் நிகழக் கூடாது எனும் ஒழுக்கவாத விருப்பமும் இச்சர்ச்சைகளில் செயல்படுகிறது. இச்சையுடன் ஒரு ஆண் எந்த பெண்ணையும் நெருங்காமல் இருப்பதே நலம் என இந்த பெண்ணிய பிரச்சாரகர்கள் ஒரு கட்டத்தில் கூறுவார்கள் என நம்புகிறேன்.
இந்த பிரச்சாரம் அந்த எல்லைக்கும் சென்று விடக் கூடாதே எனும் அக்கறை பல சிந்தனையாளர்களுக்கும் இப்போது ஏற்பட்டு வருகிறது.

1)   நமது அன்றாட ஆண்-பெண் உரையாடல்களில் ஆண்கள் காட்ட வேண்டிய கவனத்தை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். ஆனால் அதற்காக நாம் அரசியல் சரித்தன்மையுடன், மிக பிரஞைபூர்வமாய் உறவாடல்களில் இருக்கல் ஆகாது.
ஆண்-பெண் நடுவே தொடர்ந்து விருப்ப வெளிப்படுத்தல்களும் காம பரிவர்த்தனைகளும் நடந்து கொண்டே தான் இருக்கும். அதில் வன்முறையும் ஆதிக்கமும் மூர்க்கமும் கண்மூடித்தனமும் இருந்தே தீரும். ஆண்களுக்கு நாம் விழிப்புணர்வு அளிக்கலாம். ஆனால் எந்த பெண்ணிடமும் தன் விருப்பத்தைக் காட்டவோ காம நாட்டத்தை மேற்கொள்ளவோ கூடாது எனக் கோருவது வலதுசாரி ஒழுக்கவாத அரசியலுக்கு ஆதரவாக பெண்ணிய அமைப்புகள் மாற வழிவகுக்கும்.
விருப்பமற்ற பெண்ணிடம் ஒரு ஆண் காதலைக் கோரக் கூடாது என சொல்கிறீர்கள் எனில் அது நடைமுறையில் சாத்தியமல்ல - ஒரு பெண்ணுக்கு விருப்பமுண்டா என்பதே காதலைச் சொல்லி மன்றாடிய பின்பு தானே ஒரு ஆணுக்குத் தெரிய வரும். சேத்தன் பகத் விவகாரத்தில் அவர் மீது தவறே இல்லை என்பது இதனால் தான். ஒரு திருமணமான ஆணுக்கு இன்னொரு பெண்ணிடம் காதல் வரக் கூடாதா? வந்தால் அதை அவர் வெளிப்படுத்தினால் அது பாலியல் அத்துமீறலா? அடக் கடவுளே!

ஆண்களை முழுக்க காயடிப்பது அல்ல பெண்ணியம், ஆண்களுடன் சேர்ந்து சமத்துவத்தை செயல்படுத் போராடுவதே உண்மையான பெண்ணியம். ஆண்களை தனிமைப்படுத்தி, எல்லா பிரச்சனைகளுக்கும் அவர்களை பலிகடா ஆக்குவது அல்ல பெண்ணியம். #metoo சர்ச்சையில் அது தான் நடந்து வருகிறது!

(முற்றும்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...