முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெண்கள் பலாத்காரம் செய்தால்? (3)


1)   ஹேரியட் மேலினோவிட்ஸை பலாத்காரம் செய்ய முயன்ற ஒரு உலகப் புகழ் பெற்ற பெண்ணியவாதி:
Image result for Harriet Malinowitz


ஹேரியட் மேலினோவிட்ஸ் ஒரு ஓரின விழைவாளர்களின் பால்நிலை, பாலஸ்தீன அரசியல், கல்வியியல் குறித்தெல்லாம் உரையாடும் ஒரு அறிவுஜீவி; “Textual Orientations…” எனும் நூலை எழுதியவர். அமெரிக்காவில் உள்ள லாங் ஐலாண்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். MeToo இயக்கம் போர்க்கொடி உயர்த்தி படை அணிவகுத்து முன்னேறிய வேளையில் இவரும் அதைக் குறித்து கவனம் கொண்டிருக்கிறார். அப்போது அவருக்கு தன் வாழ்வில் நடந்த ஆக மோசமான பாலியல் அத்துமீறல் எது எனும் கேள்வி எழுந்ததுதன்னை உளவியல் ரீதியாய் சிதைத்த, வாழ்வின் மீதான பல நம்பிக்கைகளை குலைத்த அந்த பாலியல் வன்முறையை அவர் மீது நிகழ்த்தியவர் ஒரு ஆண் அல்ல, ஒரு பெண், அதுவும் நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஒரு உயர்ந்த பெண்ணியவாதி மற்றும் போராளி. இந்த முரணை அவரால் புரிந்து கொள்ளவோ எளிதில் ஏற்கவோ முடியவில்லை. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் MeToo சித்தரிப்பது போல எளிதானவையோ ஒற்றைபட்டையானவையோ அல்ல. நேரடி எதிரிகளை அடையாளம் கண்டு அழிப்பது MeTooவின் நோக்கம்; ஆனால் கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் உங்கள் வாழ்க்கையை சீர்குலைக்கும் போது ஒரு தனிமனுஷியாக நீங்கள் என்ன பண்ண முடியும்? நீங்கள் நம்பும் பல பெண்ணிய போராட்டங்களுக்கு தலைமை தாங்கக் கூடிய, பல முக்கிய பெண்ணிய நூல்களை எழுதிய ஒரு பெண் உங்களை பலாத்காரம் செய்ய முயன்றால் அதை நீங்கள் எப்படி எதிர்கொள்ள முடியும். இளம் வயதில் உலகை சீர்திருத்தும் நம்பிக்கையோடு தன் வாழ்வை ஆரம்பித்த மேலினோவிட்ஸ் சந்தித்த இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு அவருக்கு நீண்ட காலம் எடுத்தது.




இச்சம்பவம் 40 வருடங்களுக்கு முன் நடக்கிறது. அப்போது மேலினோவிட்ஸ் ஒரு இளம்பெண், ஒரு லெஸ்பியன். மேற்சொன்ன பெண்ணியவாதியுடன் அப்படித் தான் நட்பு உருவாகிறது. எதேச்சையாக நட்பு படுக்கையில் போய் முடிகிறது. ஆனால் பாலுறவாய் அதை வளர்க்க விரும்பாத மேலினோவிட்ஸ் அத்தகைய உறவாடல்களை தவிர்க்கிறார்; வெறும் தோழியாக மட்டுமே இருக்க தான் விரும்புவதாய் பெண்ணியவாதியிடம் கூறுகிறார். இது நடந்து சில மாதங்களுக்குப் பின் இரவில் அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. எடுத்தால் மறுமுனையில் அந்த பெண்ணியாதி பேசுகிறார். தன்னை மேலினோவிட்ஸ் நிராகரித்த வருத்தமும் புறக்கணிப்பு வலியும் கடுமையாய் அழுத்துகிறதுஅந்த காயமும் கோபமும் அந்த பெண்ணியவாதியை வன்மத்துடன் பேச வைக்கின்றன. அவரிடம் இருந்து கடும் வசைகளாய் பொழிகின்றன. நீண்ட நேரமாய் ஜீரணிக்க முடியாத மோசமான வசைச் சொற்களையும் மிரட்டல்களையும் தொடுத்திறார் அந்த பெண்ணியவாதி. ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் மேலினோவிட்ஸ் அழைப்பை துண்டிக்கிறார். ஆனால் சிறிது நேரத்தில் அந்த பெண்ணியவாதி வாசலில் வந்து நின்று கதவை உடைக்க முயல்கிறார். வெறித்தனமாய் கத்துகிறார். உன்னைக் கொல்லாமல் விட மாட்டேன் என மிரட்டுகிறார். மேலினோவிட்ஸ் போலீஸை அழைக்கிறார். ஆனால் இந்த அமளியைக் கண்டு அண்டை வீட்டுக்காரர் ஏற்கனவே 911ஐ அழைத்ததால் போலீஸ் முன்னரே வந்து விட்டது. போலீஸ் வருவதைக் கண்டதும் அப்பெண் நழுவி தன் வீட்டுக்குச் செல்கிறார். அங்கு சென்றவர் மீண்டும் போனில் மேலினோவிட்ஸை அழைத்து கொலை மிரட்டல்களை தொடர்கிறார்; கேட்கக் கூசும் கெட்டவார்த்தைகளால் ஏசுகிறார். மேலினோவிட்ஸ் போலீசிடம் சொல்ல அவர்கள் வந்து போனை எடுத்துக் கேட்டு விட்ட்ஒரு பெண்ணா உங்களை மிரட்டுகிறார்?” என வியக்கிறார்கள். பெண்களால் ஆபத்து வரவா போகிறது என மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க மறுத்து போலீஸ் கிளம்புகிறது. இதை அடுத்து மேலினோவிட்ஸ் தன் கதவில் மேலும் வலுவான பூட்டுகளை பொருத்துகிறார். நிதமும் தான் தாக்கப்படுவோம் எனும் அச்சத்தில் வாழ்கிறார். காலையில் ஒருநாள் அவர் நடைபழகச் செல்லும் போது அப்பெண் பின்னாலே ஓடி வருவதை கவனிக்கிறார். அவர் மேலினோவிட்ஸ் நோக்கி மீண்டும் உச்சக் குரலில் வசைச்சொற்களை கூவியபடியே ஓடி வருகிறார். மேலினோவிட்ஸ் வேகமாய் ஓடித் தப்பிக்க முயல்வதைக் கண்டதும் அப்பெண் மேலும் குஷியாகிறார். அவர் கூடுதல் வன்மத்துடன் மேலினோவிட்ஸை தன் சொற்களால் தாக்குகிறார்.

இந்த கொடுமைகள் தாளாமல் மேலினோவிட்ஸ் ஒரு பெண்ணியாதி நண்பரிடம் இதைப் பகிர்ந்து கொள்ள அவரோ பெண்ணியவாதி ஒருவரை எதிர்த்து மற்றொரு பெண் புகார் தெரிவிப்பது ஒருவித துரோகம் எனச் சொல்லி பாதிக்கப்பட்ட மேலினோவிட்ஸையே கண்டிக்கிறார். இனி வேறு வழியில்லை என மேலினோவிட்ஸ் ஊரை விட்டே கிளம்புகிறார். அதன் பிறகு நீண்ட பல்லாண்டுகளுக்கு அவருக்கு அந்த பெண்ணால் எந்த தொந்தரவும் இல்லை.

அந்த நாற்பதாண்டு இடைவேளையில் அப்பெண் பல மெச்சத்தக்க சாதனைகளை செய்கிறார். பெண்ணுரிமை குறித்து பேசி எழுதுவது, பாதிக்கப்பட்ட பெண்களை காப்பாற்றும் போராட்டங்கள், யுடியூப்பில் சொற்பொழிவுகள் நிகழ்த்துவது என செயல்பட்டு புகழும் கவனமும் பெறுகிறார். இப்போது அவர் அந்த ரேப்பிஸ்ட் வெறியர் அல்ல முழுக்க வேறொரு ஆள் என மேலினோவிட்ஸ் உணர்கிறார். ஆனாலும் அவரது ஆழ்மனக் காயம் ஆறவில்லையே! மேலினோவிட்ஸ் அப்பெண்ணுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புகிறார். அதில்உங்களது யுடியூப் பேச்சுகளை ரசிக்கிறேன். என்னவொரு நளினம், முதிர்ச்சி. அன்று என்னை அப்படி துரத்தி காயப்படுத்திய அச்சுறுத்திய பெண்ணுக்கும் உங்களுக்கும் தொடர்பே இல்லையே?” இதற்கு பதிலளிக்கும் அப்பெண்இந்த நாற்பதாண்டுகளில் நான் என் தவறை, குற்றத்தை நினைத்து வருந்தாத நாளில்லை. என்னை மன்னியுங்கள்என குற்றமன்னிப்பு கேட்கிறார்.

இதைப் பற்றி இப்போது பரிசீலிக்கும் போது அப்பெண்ணின் நடவடிக்கைகளை விட தன்னை அதிகமாய் காயப்படுத்தியது தனது பெண்ணிய நண்பர் தன்னை கண்டித்தது தான் என்கிறார் மேலினோவிட்ஸ். ஏனென்றால் ஒரு பாதிப்பு ஏற்படும் போது அங்கு அனைவரும் சமமாக பாராட்டப்பட வேண்டும்குற்றத்தை பெண் செய்தால் அங்கு மௌனமாய் இருக்க வேண்டும், பாதிக்கப்பட்டவளை கைவிட்டு விட்டு இயக்கத்தை வலுப்படுத்துவதிலும் பிரச்சாரம் செய்வதிலுமோ ஒருவர் அக்கறை காட்டுவது அக்குற்றத்தை விட மோசமான கொடூரமான அநீதியாகும்.


எனது “MeToo: சில விமர்சனங்கள்” நூலில் இருந்து.

நூலை இணையம் வழி வாங்க:


https://www.udumalai.com/meetoo-vimarsanangal.htm

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...