வாழைப்பழ நகைச்சுவை: அதாண்ணே இது!
மேலே நான் குறிப்பிட்டதற்கு ஒரு நல்ல உதாரணம் செந்தில்-கவுண்டமணியின் வாழைப்பழ ஜோக் (”கரகாட்டக்காரன்”). கவுண்டமணி செந்திலிடம் ஒரு ரூபாய் கொடுத்து
இரண்டு பழங்கள் வாங்கி வர கேட்கிறார். செந்தில் கடைக்கு சென்று கடைக்காரரிடம்
”பழம் எவ்வளவுங்க?” என்கிறார். கடைக்காரர் “ஒரு ரூபாய்க்கு ரெண்டு பழம்” என செந்திலோ பதிலுக்கு “ரெண்டு பழம் ஒரு ரூபாய்க்கு” என முரண்டு பிடிக்கிறார். ரெண்டு பேரும் சற்று நேரம் இதையே பிடித்துத்
தொங்க, கடைக்காரர் “ரெண்டும் ஒண்ணு தாங்க” என செந்திலோ இல்லை ரெண்டு பழம் ஒரு ரூபாய்க்கு
என்பதே சரி எனக் கூற ஒருவழியாய் அவர் பணத்தை வாங்கிக் கொண்டு செந்திலை பழங்களை எடுக்கச்
சொல்கிறார். ஜோக் இங்கேயே துவங்கி விடுகிறது.
“ஒரு ரூபாய்க்கு ரெண்டு பழமும்” “ரெண்டு பழம் ஒரு ரூபாயும்” ஒன்றா? நேரடிப் பொருளில் ஒன்றே, ஆனால் ஆழமாய் உள்நோக்கினால் நிச்சயமாக
இல்லை. முதல் சொற்றொடரில் “ரூபாய்” முதலில் வருகிறது. ”ரூபாய்” செந்திலிடம் இல்லை. ”ரூபாய்” கவுண்டமணியிடம் உள்ளது. அவரிடம் இருந்து செந்தில் வழியாய் “ரூபாய்’ கடைக்காரரிடம் செல்கிறது. அதற்கு ஈடாய் கிடைக்கும் பழம் மட்டுமே
செந்திலிடம் “தற்காலிகமாய்” வருகிறது. தன்னிடம் “ரூபாய்” இல்லை என்பதே அவர் “ரெண்டு பழம் ஒரு ரூபாய்” என ரூபாயை இரண்டாவதாகவும் பழத்தை முதலாவதாகவும்
சொற்றொடரில் அடுக்க அடுக்க காரணம். கவுண்டமணியும்
கடைக்காரரும் பணப்பரிமாற்றத்தில் ஈடுபடும் அதிகாரம் கொண்டவர்கள் என்பதால் அவர்கள் ஒரே
போல “ஒரு ரூபாய்க்கு ரெண்டு பழம்” என்கிறார்கள். அடுத்து, இரண்டு பழங்களை குலையில் இருந்து பிடுங்கிக்
கொண்டு கிளம்பும் செந்தில் அவற்றில் ஒன்றை அவசரமாய் முழுங்கி விட்டு கவுண்டமணியிடம்
வந்து “இந்தாங்கண்ணே” எனக் கொடுக்கிறார். இதை அடுத்து தான், அந்த பிரசித்தமான உரையாடல் வருகிறது. கவுண்டமணி கேட்கிறார்:
“நான் உங்கிட்ட எவ்வளவு ரூபாய் கொடுத்தேன்?”
செந்தில் பணிவாய் சொல்கிறார், “ஒரு ரூபாய்ண்ணே”
“ஒரு ரூபாய்க்கு எவ்வளவு பழம்?”
“ரெண்டு பழம்ணே”
“ஒண்ணு இங்கே இருக்கு. இன்னொண்ணு
எங்கே?”
“அதாண்ணே இது”
கவுண்டமணி கடுப்பாகி செந்திலை அடிக்கப் போகிறார். பிறகு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு மீண்டும்
அதே வகையான கேள்விகளை படிப்படியாய் கேட்க செந்தில் அதே பதிலை அளிக்க சண்டை வலுத்திட, கரகாட்ட குழுவின் வேறு கலைஞர்கள் தலையிட்டு “கண்ணு அண்ணன் உன்ன என்ன வாங்கி வர சொன்னாரு?” என விசாரணையை தொடர செந்தில் அதே வகையில்
பதில் கூற அனைவரும் முடியை பிய்த்துக் கொள்கிறார்கள்.
இந்த காட்சியை முதலில் பார்க்கிறவர்கள் செந்தில் தந்திரமாய்
ஏமாற்றுவதாய் எண்ணலாம். ஆனால் கவனித்துப்
பார்த்தால் செந்தில் உண்மையைத் தான் சொல்கிறார் எனப் புரியும். ஆனால் அவர் உண்மையை தன் பாணியில் சொல்கிறார்
என்பது தான் இதை அபாரமான நகைச்சுவையாக்குகிறது.
செந்திலிடம் கவுண்டமணி இரண்டு பழங்கள் வாங்கி வரச்
சொல்கிறார். அவற்றில் ஒன்றை அவர் தின்று விட்டு “இன்னொன்றை” கொண்டு வந்து கவுண்டமணியிடம் கொடுக்கிறார். கவுண்டர் கேட்க அந்த “இன்னொன்று” தான் அதுவென சொல்கிறார். கவுண்டர் சொல்லும் “இன்னொன்று” செந்தில் தின்ற பழம்; செந்தில் குறிப்பிடும் “இன்னொன்று” கவுண்டரிடம் அவர் கொடுக்கும் பழம். ஆனால் ”இன்னொன்று” என்பதிலேயே ஒரு பூடகம் உள்ளதல்லவா?
”இன்னொன்று” என்றால் என்ன? மற்றும் ஒன்று. அதாவது ஒன்று அல்லாத மற்றொன்று. முதலில் வரும் ஒன்று எதுவென தெரியாத பட்சத்தில் “இன்னொன்று” என சுட்டுப்பெயர் எதைக் குறிக்கிறது என
நாம் அறிந்து கொள்ள முடியாது. இங்கு ஒரு
பழத்தை செந்தில் தின்று விட்டபடியால் “இன்னொன்று” என்பது “இன்மையா” அல்லது “இருப்பா” எனும் குழப்பம் இயல்பாகவே ஏற்படுகிறது. எப்போதுமே ”இன்னொன்று” என்பது மற்றமை தான். ”அந்த இன்னொரு ஆள் உன் கூட வந்தாரே… யார் அவர்” எனக் கேட்கும் போது எப்போதுமே “இன்னொரு ஆள்” நாமாக இருப்பதில்லை. ஒரு பழக்கடையில் அழுகின பழம் வேண்டாம்
என மறுக்கையில் “இன்னொண்ணு கொடுங்க” என்போம். அப்போது கையில் உள்ளது “ஒரு பழம்”, கையில் இல்லாதது “இன்னொரு பழமாக” இருக்கிறது. இன்மைக்கும் இருப்புக்குமான விளையாட்டே
செந்திலின் இந்த அட்டகாசமான நகைச்சுவையின் ஆதாரம்.
நம் மொழியில் உள்ள குழப்பத்தை, பூடகத்தை இந்த காட்சி சுட்டுவதாலே நம்மில்
பலருக்கும் ”இது” மிகவும் பிடித்தது.
“அவுரு இல்லீங்க இவரு.”
“இவரா?”
“இவரில்லீங்க, அவருங்க. அதோ அவரு.”
“மொத இவருன்னே இப்போ அவருங்கிறே. உனக்கு யாரு தான் வேணும்?”
இது போன்ற உரையாடல் வேடிக்கைகள் அன்றாடத்தில்
நாம் திரும்ப திரும்ப சந்திப்பது தானே. நாம் இவற்றை ஜாலியாக கடந்து போகும் போது, எப்படி ஒன்றின் மீது அர்த்தத்தை சூட்டி
தீர்மானமாய் புரிந்து கொள்கிறோம் என யோசிப்பதில்லை. இவ்வளவு குழப்படிகள் மத்தியில் நமது மொழியின்
பரிவர்த்தனைகள் நமக்கு அத்தனை தெளிவாய் புரிகிறது என்பது மிக வியப்பான காரியம். தெரிதா நம்மை இதைக் கண்டுணர சொல்கிறார்.
கருத்துகள்