மீண்டும் கோகிலா: நிரம்பி வழியும் தண்ணீர்த் தொட்டி
“மீண்டும் கோகிலா” (1981) ஒரு வித்தியாசமான “சின்ன வீடு” படம். கிட்டத்தட்ட “சதி லீலாவதி”, “பாமா விஜயம்” ஆகிய படங்களின் கதையமைப்பை ஒத்தது என்றாலும், மனைவியை கிளாமராக, இச்சைக்குரியவளாக தொடர்ந்து சித்தரிக்க முயன்றதில் இப்படம் தனித்துவம் பெறுகிறது. இந்த படத்தில் மனைவியாக தோன்றும் ஸ்ரீதேவி பற்றி ஒருமுறை குறிப்பிடுகையில் சுஜாதா “அந்த இடுப்பைப் பார்த்தால் யாருக்குத் தான் கிள்ளத் தோன்றாது?” என்றார். அந்தளவுக்கு படம் முழுக்க ஸ்ரீதேவி மடிசாரில் தன் சிக்கென்ற இடையை காட்டும் வாகிலேயே நின்று கொண்டிருப்பார்; அடிக்கொரு தரம் கணவர் கமல் அவரை கிள்ளிக் கிள்ளிப் பார்த்துக் கொண்டிருப்பார். சரி இவ்வளவு தித்திப்பான பெண் அருகிருந்தும் கணவர் ஏன் நடிகை காமினியிடம் ஈர்க்கப்படுகிறார்?
காமினி வெளிப்படையானவள், துணிச்சலும் நாகரிகமும் படைத்தவள்; கல்மிஷம் இல்லாதவள் – ஒரு நவீன சுதந்திரப் பெண். ஆனால் இவளிடம் ஈர்க்கப்படும் போதும் கணவருக்கு மனைவி மீதுள்ள இச்சை பெருகுகிறதே அன்றி குறைவதில்லை. இந்த படத்தின் பிரசித்தமான ஸ்டில்களில் ஒன்று கமல் இரு பக்கமும் இரு பெண்கள் படுத்திருக்க நடுவே கிடந்து “அட இப்ப என்ன பண்றது?” மகிழ்ச்சிக் குழப்பத்துடன் இருப்பது. படத்தின் ஒரு காட்சியில் காமினி கமலின் வீட்டுக்கு வந்து பார்த்துப் போக மேலே தண்ணீர்த் தொட்டி நிரம்பி வழிகிறது. அதை சட்டகம் முழுக்க சில நொடிகள் காட்டுகிறார்கள். கமல் தான் அந்த தண்ணீர்த் தொட்டி; அவருக்குள் பெண்ணாசை நிரம்பி வழிந்தபடி இருக்கிறது; நீரை அவராக வரவழைக்கவில்லை; அதுவாக அவருக்குள் நிரம்புகிறது, அவரைத் தவிக்க வைக்கிறது, அவரது குடும்பத்தை நிலைகுலைய செய்கிறது.
சின்ன வீடு என்பதை இச்சை பெருக்கெடுக்கையில் தானாகவே முற்றுப்புள்ளி வைக்கத் தெரியாத ஆண் மனத்தின் ஒரு பிரச்சனையாக இப்படம் பார்க்கிறது. பாக்யராஜின் “சின்ன வீடு”, கமல் பின்னர் நடித்த “சதி லீலாவதி” ஆகியவற்றில் மனைவியின் அழகின்மை, (அதனாலே தகுதியின்மை) தான் கணவனை “சின்ன வீட்டை” நோக்கித் தள்ளுகிறது. இறுதியில் மனைவி தனது சாமர்த்தியத்தைக் கொண்டு, குடும்பப் பெண் எனும் பிம்பத்தை ஆயுதமாக கொண்டு கணவனை மீட்கிறாள். இந்த இருமை “மீண்டும் கோகிலாவில்” இல்லை. மாறாக மனைவியை இச்சைக்குரியவளாக்கி, பார்வையாளர்களை கணவனின் இடத்துக்குத் தள்ளி, ஒழுக்கம் குறித்த கேள்விகளை ஆணின் பார்வையில் இருந்து அப்படம் எழுப்புகிறது. “அந்த இடுப்பைப் பார்த்தால் யாருக்குத் தான் கிள்ளத் தோன்றாது?” என ஒவ்வொருவரையும் கேட்க வைத்தது. அப்படி ஒரு இடுப்பிருந்தாலும் சின்ன வீட்டுக்கு கணவன் போவதை தடுக்க முடியாது என்றது. குடும்ப அமைப்பை காப்பாற்ற கண் போன போக்கில் வாழாமல் இருப்பது முக்கியம் என்றது.
பாலசந்தரின் படங்கள்
பாலசந்தரின் பெரும்பாலான படங்கள் பிறழ்வு உறவுகளை மையமாக்கியவை. “சின்ன வீடு” எனும் பொருளை பாலசந்தர் அளவுக்கு விரிவாக தொடர்ந்து பேசிய மற்றொரு இயக்குநர் இல்லை. இங்கு இத்தலைப்பிலான அவரது படங்களில் முக்கியமானவற்றை மட்டும் சுருக்கமாய் பார்ப்போம்.
புதுப்புது அர்த்தங்கள் (1989):
பாரதி ஒரு பிரசித்தமான பாடகர்; அழகன்; பல ரசிகைகளைக் கொண்டவர். அப்படியான ஒரு ரசிகை தான் கௌரி. அவர் பாரதியை மணந்து கொண்ட பின் மிதமிஞ்சிய “இச்சையும்” அன்பும் அவரை வெறிகொள்ள செய்கிறது. எந்த பெண்ணும் தன்னிடம் இருந்து பாரதியை பறித்து விடக் கூடாதே எனும் ஆவேசத்தில் அவர் சதா தொல்லை தரும் மனைவியாகிறார். “மீண்டும் கோகிலாவில்” கணவரின் மிதமிஞ்சிய ஆசை அவரை வழிதவற செய்கிறது என்றால் “புதுப்புது அர்த்தங்களில்” மனைவியின் மிதமிஞ்சிய ஆசை கணவரை மற்றொரு பெண்ணை நோக்கித் தள்ளுகிறது. ஆனால் அப்போதும் கணவனுக்கு அவள் மீதுள்ள அன்பு குறைவதில்லை; மிதமிஞ்சிய ஆசை ஏற்படுத்தும் பயம் மட்டுமே அவனை அவளிடம் இருந்து விலக்கி வைக்கிறது.
அழகன் (1991):
”அழகனில்” அழகான இளம் தொழிலதிபராக மம்முட்டி வருகிறார். அவரை மூன்று பெண்கள் காதலிக்கிறார்காள். ஒருவர் தமிழாசிரியர் (கீதா), இன்னொருவர் பதின்வயது துடுக்குப் பெண் (மதுபாலா), மூன்றாமவர் பெயர் பெற்ற நாட்டியக் கலைஞர் (பானுப்ரியா). இவர்களில் பானுப்ரியாவை மம்முட்டி நேசிக்கிறார்; அதன் பிறகு மற்ற இருவரும் அபரிதமாகிறார்கள். ஆனால் அவர்கள் அதை ஏற்க தயாராகாமல் போட்டியிட கதையில் சிக்கல் விளைகிறது. இருவரும் “சின்ன வீடாகத்” தவிக்கும் உபரிப் பெண்களாகிறார்கள் – ஆனால் மற்ற சின்ன வீட்டுப் படங்களில் போல் அல்லாது தமது இயல்பான நன்மையால், அன்பால் அவர்கள் மம்முட்டியை ஈர்க்கப் பார்க்கிறார்கள்.
கல்கி (1996)
“சின்ன வீடாகும்” ஒரு சுதந்திர நவீனப் பெண் தான் கல்கி. அதுவும் அவள் மற்ற சின்ன வீடுகளைப் போல தன் இருப்புக்காக, அடையாளத்துக்காக திருமணமான ஆணை கவர்ந்திழுப்பவள் அல்ல. அவள் ஒரு கலகவாதி. திமிர் பிடித்த ஆண் வர்க்கத்துக்கு பாடம் கற்றுக் கொடுப்பதற்காக சின்ன வீடாக தற்காலிகமாய் இருப்பவள். பொதுவாய் சின்ன வீடு என்பவள் குடும்பத்தை உடைப்பவள் என்றால் கல்கி உடைந்த குடும்பத்தை ஒன்றிணைக்கும் பொருட்டு தன்னை ஒப்புக் கொடுப்பவள். பிரகாஷ் ராஜ் தன் முதல் மனைவி மீது கடுமையாய் அதிகாரம் செலுத்தி ஒடுக்குகிறார். ஒரு கட்டத்தில் அவள் பிரிந்து செல்ல, அடுத்த மணம் செய்து அப்பெண்ணையும் அடிமையாக நடத்துகிறார். இரண்டாம் மனைவிக்கு குழந்தையில்லை என்பது ஒரு பெரும் மனக்குறை. முதல் மனைவியின் சார்பில் கணவனை பழிவாங்கும் பொருட்டும், இரண்டாம் மனைவிக்கு குழந்தை தரும் பொருட்டும் கல்கி பிரகாஷ் ராஜுடன் உறவு கொண்டு குழந்தை பெற்றுக் கொள்கிறாள். பிரகாஷ் ராஜ் திருந்திய பின் கல்கி தன்னை ஆத்மார்த்தமாய் நேசிக்கும் ரஹ்மானிடம் செல்கிறாள். இப்படி சின்ன வீடு என்பவள் இப்படத்தில் தொடர்ந்து விளிம்புநிலையிலேயே இருக்கிறாள். அதனாலே அவளால் குடும்பப் பெண்களை விட அதிக சுதந்திரமும் துணிச்சலும் கொண்டவளாக இருக்க முடிகிறது. (இப்படத்தின் குறை என்பது பெண்ணியத்தை பாலியல் கலகமாய் மட்டும் பார்ப்பது.)
“கல்கி”யின் ஒரு தனித்துவம் என்பது பெண்ணியம் அல்ல, “சின்ன வீடு” இறுதியில் “பெரிய வீடாவது” இப்படத்தில் நிகழ்கிறது. சின்ன வீடு எனும் மற்றமையை நேர்மறையாய் எதிர்பாராத வகையில் பயன்படுத்திய படம் இது.
கருத்துகள்