முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பைத்தியக்கார மருத்துவர்கள்



நான் சொல்வது மனநல மருத்துவர்களைப் பற்றி அல்ல, மனநல சிகிச்சை தேவைப்படுகிற டாக்டர்களைப் பற்றி. இவர்களை மோசமான மருத்துவர்கள் என்கிற அடைப்புக்குறிக்குள்ளும் வைக்க முடியாது. பகுத்தறிவுக்கு அப்பால் போய் செயல்படுகிற பைத்திய மருத்துவர்கள் எனலாம். சந்திரமுகியில் ரஜினி ஜோதிகாவுக்கு மாந்திரிக சிகிச்சை மூலம் உளவியல் பிரச்சனையை குணப்படுத்துவாரே அப்படியானவர்கள்.

14 ஆண்டுகளாக நான் நீரிழிவுடன் போராடி வருகிறேன். எந்த காரணத்தாலும் பொதுநல மருத்துவர்களிடம் நீரிழிவினால் விளையும் தொந்தரவுகளைக் கொண்டு போகக் கூடாது என அனுபவம் எனக்கு சொல்லித் தந்திருக்கிறது. ஏனென்றால் அவர்களில் பெரும்பாலானோருக்கு நீரிழிவு பற்றியோ அதன் விளைவுகள் பற்றியோ ஒன்றும் தெரியாது. ஆனால் அதை ஒப்புக் கொள்ளவும் மாட்டார்கள், அவர்களிடம் காட்டினால் ஏதாவது சம்மந்தமில்லாத சிகிச்சையை தந்து உங்களை பைத்தியமாக்கி விடுவார்கள்.

கடந்த சனிக்கிழமை அன்று எனக்கு ரத்த சர்க்கரை அளவு வெகுவாக குறைந்து விட்டது - முப்பதுக்கும் கீழ். அப்படி ஆகும் போது எனக்கு வலிப்பு வரும். உடம்பு ஒரு பக்கம் இழுக்க கீழே விழுந்து விடுவேன். பற்களால் நாக்கை கடித்துக் கொள்வேன். யாராவது சர்க்கரையோ இனிப்போ உடனடியாக தந்தால் சில நிமிடங்களில் இயல்பு நிலைக்கு மீள்வேன். எனக்கு இந்த சர்க்கரைக் குறைவு தாக்குதல் ஏற்கனவே நான்கைந்து முறை பெங்களூருக்கு வந்த பிறகு ஏற்பட்டிருக்கிறது. நான் என் ரத்த சர்க்கரை அளவை கச்சிதமாக வைக்க முயல்வது இதற்கு ஒரு காரணம். அதாவது உங்களுடைய ரத்த சர்க்கரை 200-300 எனும் அளவில் எப்போதும் இருந்தால் உங்களுக்கு தினசரி வாழ்க்கை பெரிய பிரச்சனைகள் இராது - ஒருநாள் மொத்தமாய் காற்று போய் விடும் என்பது வேறு விசயம். ஆனால் நீங்கள் 100க்குள் ரத்த சர்க்கரையை வைத்திருக்கீறீர்கள், என்றால் அடிக்கடி ரொம்பவே கீழே இறங்கி விட வாய்ப்பு அதிகம். இன்சுலின் எடுத்துக் கொள்ளும் அளவில் தப்பு நேர்ந்தால் அது கன்னாபின்னாவென கீழே இறங்கி விடும். நான் விழிப்பாக இருந்தால் உணவு எடுத்துக் கொண்டு சரி செய்வேன். தூக்கத்தில் இது நடந்தால் தான் ஆபத்து. வலிப்பு வந்து விடும். கடந்த சனிக்கிழமையும் அப்படித் தான் நடந்தது. காலையில் உணவுக்கு ஆம்லெட் சாப்பிட்டேன், அதற்கு ஐந்து யூனிட்டுகள் கூடுதலாக இன்சுலின் எடுத்துக் கொண்டு தூங்க சென்று விட்டேன். தூக்கத்தில் நான் வாயில் நுரை தப்ப துடிக்கத் தொடங்கினேன்.
 எனக்கு வலிப்பு வந்து பல்லவி அதற்கு முன் பார்த்ததில்லை என்பதால் அவள் பயந்து போய் விட்டாள். எனக்கு இனிப்பு சாப்பிடத் தந்து அதிலும் நான் சலனம் காட்டாமல் இருக்க அண்டை வீட்டாரை அழைத்து அவர்கள் ஆம்புலன்ஸை வரவழைத்து நான் இயல்பு நிலைக்கு திரும்பும் முன் என்னை செயிண்ட் ஜோன்ஸ் மருத்துவமனையில் பொதுநலப் பிரிவில் சேர்த்திருந்தார்கள். அங்கு தான் வேடிக்கை ஆரம்பித்தது. என்னுடைய ரத்த சர்க்கரை அப்போது நான் சாப்பிட்டிருந்த ஏராளமான வெல்லம் காரணமாக உயர்ந்திருந்தது. செவிலிகள் என் ரத்த சர்க்கரையை உடனடியாய் பரிசோதித்து அது நார்மலுக்கு அதிகமாக இருப்பதாக தெரிவித்தனர். அடுத்து மருத்துவர் வந்தார். நான் அவரிடம் என்னுடைய 14 ஆண்டு நீரிழிவு வரலாறை விலக்கினேன். அவருக்கு அதைக் கேட்க நேரமில்லை. (ரெண்டே மருத்துவர்கள் சக்கரம் போல் சுழன்று குவியும் நோயாளிகளை கவனித்துக் கொண்டிருந்தார்கள்.) எனக்கு அப்போதைக்கு எந்த சிகிச்சையும் தேவையில்லை, வீட்டுக்கு அனுப்பி விடலாம் என நீரிழிவு சிறப்பு மருத்துவர் ஒருவர் இருந்தால் தெரிந்திருக்கும். ஆனால் அங்கிருந்த மருத்துவரோ என்னை எம்.ஆர். ஸ்கேன் பண்ணுமாறுக் கேட்டார். நான் உடனே சுதாரித்துக் கொண்டேன் - முடியாது என்றேன். ஆனால் எதற்கு இந்த சிகிச்சைகளையெல்லாம் பரிந்துரைக்கிறார்கள் என விளக்குவதற்கு யாருக்கும் அவகாசமில்லை. அதற்கு முன் அவர் எனக்கு சில மாத்திரைகளை எழுதித் தந்திருந்தார். அந்த மாத்திரையை சாப்பிட்டதும் எனக்கு தலைசுற்ற ஆரம்பித்தது. நான் எம்.ஆர். ஸ்கேனுக்கு மறுத்தது மருத்துவருக்குப் பிடிக்கவில்லை. எரிச்சலை வெளிப்படுத்திய அவர் அடுத்த நாள் காலை நரம்பியல் மருத்துவரை வந்து பார்க்குமாறு கேட்டுக் கொண்டார். ஒருவழியாக அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு வந்த பின்னரும் என்னுடைய களைப்பும் தூக்க நிலையும் நீங்கவில்லை. தொடர்ந்து இரவு வரை தூங்கினேன். அதன் பிறகு இரவுணவுக்கு முன்பு மாத்திரை சாப்பிட வேண்டுமே என நினைவுக்கு வர அதை எடுத்து கவனித்தேன். அது என்ன மாத்திரை (levipil) என கூகிள் செய்து பார்த்தால் அது வலிப்பு நோய்க்கு தரப்படும் மாத்திரை எனத் தெரிய வந்தது. கடும் பக்க விளைவுகளைத் தரும் மருந்து அது. அதை ஏன் எனக்குத் தந்தார்கள் என யோசித்த போது தான் அந்த பைத்தியக்கார மருத்துவரின் திட்டம் எனக்கு விளங்கியது.

நான் அவரிடம் எனது நீரிழிவைப் பற்றி சொல்கிறேன். நீரிழிவு வியாதிஸ்தர்களுக்கு வலிப்பு வரும் என்பது அவர் அவ்வளவாக கேள்விப்பட்டிருக்கவில்லை. மேலும் அவர் வலிப்பு என்றாலே அது நரம்பியல் நோய் என எண்ணம் கொண்டவர். மேலும் உடனடி ரத்த பரிசோதனை முடிவும் அது குறைவாக இருப்பதாகக் காட்டவில்லை. அப்போது அவர் நியாயப்படி என்னுடைய அண்மைக்கால H1BAC பரிசோதனை முடிவைக் கேட்டிருக்க வேண்டும். அதைக் கொண்டு எனக்கு அடிக்கடி ரத்த சர்க்கரை அளவு தாழ்வாகவே இருக்க வாய்ப்புண்டா என முடிவு பண்ணியிருக்கலாம். ஆனால் அவர் முன்முடிவுக்கு வந்தபடியால் எதையும் விசாரிக்க ஆர்வமோ அவகாசமோ இல்லை. இப்படித் தான் சும்மா போகிற என்னைப் பிடித்து வலிப்பு நோயாளி ஆக்கி விட்டார் அந்த ஆள். ஒருவேளை படிப்பறிவில்லாதவர்கள் இத்தகைய மருத்துவர்களிடம் காட்டினால் என்னவாகும்? அந்த levipil மாத்திரையை நீங்கள் தினமும் தின்றால் எந்த வேலையையும் செய்ய முடியாது; இரவு பகலாய் தூங்கிக் கொண்டே இருக்கலாம். அசலான வலிப்பு நோயாளிகளைக் குறித்து எனக்கு மிகவும் வருத்தம் ஏற்பட்டது. இந்த மாதிரி மாத்திரைகளை முழுங்குவதற்கு வலிப்பு வந்து அவதிப்படலாம் என்பேன்.

அந்த மருத்துவமனைக்கு போய் வந்தது எனக்கு ஒரு பெரிய விபத்தில் அடிபட்டு பிழைத்து வந்ததைப் போல இருந்தது. தவறாக கணித்து சிகிச்சை அளிக்கலாம், அதைப் புரிந்து கொள்ள முடியும், ஆனால் பத்து நொடிகளில் நோயை தப்பாய் முடிவு செய்து அடுத்தடுத்து அவசர சிகிச்சைகளுக்கு அப்பாவி நோயாளிகளைத் தள்ளுவது ஒருவித போக்கிரித்தனம். அவ்வளவு அவசரம் என்றால் நீங்கள் மருத்துவ சிகிச்சையே அளிக்கக் கூடாது என்பேன். பத்து நிமிடம் எடுத்துக் கொண்டு என்னிடம் பேசி கூகிள் செய்து படித்திருந்தால் எனக்கு ஏற்பட்டது வலிப்பு அல்ல என அவருக்குப் புரிந்திருக்கும். ஏனென்றால் வலிப்பு எப்போது வேண்டுமெனிலும் வரும் ஒரு நரம்பியல் பிரச்சனை; ஆனால் ரத்த சர்க்கரை குறையும் போது மட்டும் வருவது நரம்பியல் பிரச்சனை அல்ல. அது ரத்த சர்க்கரை கோளாறு மட்டுமே. இப்போது எனக்கு மற்றொரு கேள்வி எழுகிறது: கடுமையான வேலைப்பளு காரணமாய் செயிண்ட் ஜோன்ஸ் போன்ற பொதுமருத்துவமனையின் ஜி.பிகளுக்கு மனப்பிரச்சனைகள் ஏற்படுகிறதா? ஏனென்றால் மனநோய் கொண்டவரக்ள் தான் யோசிக்கவோ அடுத்தவர் யோசனையை காதுகொடுக்க கேட்கவோ தலைப்பட மாட்டார்கள். மருத்துவர்களுக்கே பைத்தியம் பிடித்தால் நோயாளிகளின் கதி என்னாவது?

  

கருத்துகள்

gomathy இவ்வாறு கூறியுள்ளார்…
நீங்கள் மீண்டு வந்ததில் மகிழ்ச்சி. ஆங்கில மருத்துவமுறை, மருத்துவர்கள், மருத்துவமனைகள் மற்றும் இவர்களின்/இவைகளின் செயல்பாடுகளே பல உயிர்கள் போக காரணமாக உள்ளது.
நம்பி வந்தது தப்பாடா என்று யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை.

அன்புடன்,
செல்வராஜ்
கொல்கத்தா
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி