முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நட்பு எப்போது சாஸ்வதமாகிறது?




என் அப்பாவின் காலத்தில் இருவர் நண்பர்களாக நாற்பது, ஐம்பது வருடங்கள் நீடிப்பது சுலபமாக இருந்தது. இன்று குடும்ப அமைப்பு, சமூக, சாதி, பண்பாட்டு, உற்பத்தி அமைப்புகள் தொடர்ந்து சீர்குலைந்து உருமாறி வருவதை ஒட்டி நட்பும் தற்காலிக உறவாடலாக மாறி வருகிறது. ஒரு பபிள் கம்மைப் போன்று நட்பையும் மென்று துப்பி விடுகிறோம். இன்று ஒருவர் ஆறுமாதத்துக்கு மேலாக நண்பராக நீடிப்பது அரிதாகி விட்டது. ஒருவருடத்துக்கு மேல் நட்பு தொடர்ந்தால் அதை விநோதமாகப் பார்க்கிறார்கள்; ஒருவர் மற்றவரின் சொல்லுக்கு அடிமைப்பட்டுக் கிடப்பதாக மற்ற நண்பர்கள் இந்தஆத்ம பந்தங்களைவிமர்சிப்பார்கள், பிரிக்க முயல்வார்கள். சமூக வலைதளங்கள் இன்று நம்நட்பு வட்டத்தைகற்பனைக்கு அப்பால் பெருக்கி விட்டிருக்கிறது. ஒருவரைப் பார்த்தோ சாட்டில் உரையாடியோ ஐந்தே நிமிடங்களில் அவர் ஆத்ம நண்பர் ஆகிறார், அடுத்து இவர்கள் உடனடியாய் சந்திக்கிறார்கள், பேசுகிறார்கள், ஆனால் இதையடுத்து வேறு பலரும் இவ்வாறு தினந்தினம் நண்பர்கள் பட்டியலில் சேர்வதால் முன்னவரிடம் நம்மால் அதிகம் நேரம் செலவழிக்க முடியாது போகிறது. இதைப் பற்றி இரு தரப்பும் இன்று வருந்துவதில்லை. தமது நண்பர்களின் எண்ணிக்கை பெருகி வருவது பற்றி திருபதிப்பட்டு ஒரு நிறைவை உணர்கிறார்கள்.

 நம் அப்பாவின் தலைமுறையினர் சில்லறை சில்லறையாக உண்டியலில் காசு சேர்த்ததைப் போல நாம் இன்று நண்பர்களை சேர்த்து வருகிறோம். இவ்வளவு நண்பர்கள் சேர்ந்த பின்னும் நம் வாழ்க்கையின் அடிப்படையான தகவல்கள் கூட அவர்களுக்கு தெரிந்திருக்காது என்பது விசித்திரம். நமக்கு புது வேலை கிடைத்தது, புதிய ஊருக்குப் போனது, சினிமா பார்த்தது, போன் தொலைந்தது, போன் வாங்கினது போன்ற சமாச்சாரங்களை தெரிந்து வைத்திருப்பார்கள் - அதாவது நமது நண்பர் அல்லாதவர் சமூகவலைதளம் மூலம் உங்களைப் பற்றி ஐந்து நிமிடத்தில் தெரிந்து கொள்ளுகிற விசயங்களையே நம்முடன் வருடக்கணக்காக இணையத்தில் பழகினவர்களும் தெரிந்து வைத்திருப்பார்கள். இந்த பின்னணியில் தான்சாஸ்வத நண்பர்கள்நம் மத்தியில் தோன்றுகின்றனர். சாஸ்வத நண்பர்கள் பரஸ்பரம் நீண்ட காலமாய் சியாமிஸ் இரட்டையராய் இருப்பவர்கள் மட்டுமல்ல. அவர்கள் நட்புறவை ஒரு கலையனுபவமாக மாற்றியவர்கள்

இந்த சாஸ்வத பட்டியலில் நாம் தமது நட்புறவாடலை கால இருமைகளுக்கு அப்பால் கொண்டு செல்கிறவர்களையும் நாம் சேர்க்கலாம். அதாவது நான் இப்போது உங்களுடன் எனது நிகழ் காலத்தில் இருந்து பேசுகிறேன், இதை நீங்கள் படிக்கையில் அது நிகழ் காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் இடைப்பட்ட ஒரு காலத்தில் இருந்து உங்கள் காதுகளுக்கு ஒலிக்கிறது. ஒரு வாக்கியம் முடிந்து அடுத்த வாக்கியம் வரும் முன்னரே அது வரப்போகிறது நமக்குத் தெரியும். ஒரு வாக்கியம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருந்தாலும் அது தனித்து நிற்பதில்லை. அதில் ஒரு முற்றுப்பெறாத தன்மை இருக்கிறது. ஒரு கதையை / கட்டுரையை / கவிதையை ஒருவர் வாசிக்கையில் நீங்கள் அவரைப் பாதியில் நிறுத்தினால் அவர் கனவில் இருந்து பாதியில் விழித்துக் கொண்டவரைப் போல திடுக்கிட்டு உணர்வார்; ஏனென்றால் எந்த பிரதியும் ஒரு புள்ளியில் துவங்கி மற்றொரு புள்ளியில் முடிவதில்லை. ஒரு பிரதியை நீங்கள் முதன் முதலாய் முதல் வரியில் இருந்து படிக்கிறீர்கள் - ஆனால் அது முற்றிலும் புதிதானது என உங்களுக்குத் தோன்றுவதில்லை. நல்ல படைப்புகள் ஏதோ விட்ட இடத்தில் இருந்து தொடர்வதைப் போலத் தான் உங்களுடன் உரையாடலை ஆரம்பிக்கும். நண்பனுடனான சம்பாஷணையும் இப்படித் தான் அது நிகழும் போதே அது நிகழாத ஒரு காலத்தில் கால் பாதத்தை தொங்க விட்ட படி தலையை நிகழ்கிற காலத்தின் மடியில் வைத்தபடி இருக்கிறது. ஒரு நண்பன் இறந்த பின்னரும் நண்பனாகவே தொடர்கிறான் என தெரிதா சொல்கிறார்.
 இரு சாஸ்வத நண்பர்கள் சந்திக்கையில் அவர்கள் அநாயசமாக எங்கிருந்தோ பேச்சை, இணக்கத்தை, சிரிப்பை, நெகிழ்வை கொண்டு வருவதைப் பார்க்கிறோம். அவர்கள் வந்து அருகருகே அமர்ந்ததுமே இந்த சமாச்சாரங்கள் பச்சைக்கிளிகளாக எங்கிருந்தோ பறந்து வந்து அவர்களின் தோள்களில் அமர்கின்றன. அவர்கள் பேசுவதில்லை, அவை தமக்குத் தாமே பேசிக் கொள்கின்றன. அந்த பேச்சுகளும் நிகழ்ந்த உடனே முடிவதில்லை, அவை ஆரம்பித்த இடத்தில் இருந்து எதிர்காலத்துக்குள் வழிந்தபடி இருக்கின்றன. அதனால் தான் நண்பர்கள் சில நேரம் இரவுபகலாக நேரம் போவதே தெரியாமல் பேசியபடி இருப்பார்கள். பேசிப் பேசி சுற்றிலுள்ள குடும்பத்தையும் காதலன் / காதலிகளையும் கடுப்பேற்றுவார்கள். அவர்கள் பிரிகையில் பேச்சு எந்த புள்ளியிலும் துவங்காமல் எங்கிருந்தோ (ஒருவேளை எதிர்காலத்தில் இருந்தே கூட) துவங்கி பாதியில் முறிந்து போய் நிற்கும். நீங்கள் நண்பனை விட்டு நீங்கும் போது அந்த சொற்கள் உங்கள் கையைப் பற்றிஏன் பாதியில் போகிறாய்?” என விசும்பும்அப்படி நிகழ்கையிலே தான் அது உயிர்ப்பான உரையாடலாகஜாலியாகஇருக்கிறது, அல்லாவிடில் இன்று நண்பனுக்குமூட்சரியில்லை என நினைத்து அகன்று விடுவீர்கள். ஒரு ஆழமான நட்புறவாடல் இப்படி ஒவ்வொரு முறையும் ஒரு கலையனுபவத்துக்கு இணையானதாக இருக்கிறது. ஏனென்றால் நட்புரையாடல் எதிர்காலத்துக்கும் அப்பால் நம்மால் தொட்டுணர முடியாத ஒன்றை நம்மைத் துய்க்க வைக்கிறது. அது தரும் மட்டற்ற திளைப்பை நீங்கள் வேறெதனுடனும் ஒப்பிட இயலாது


தெரிதா நட்பு குறித்த தனது நூலில் காலத்தின் பரப்பில் நட்பு எப்படி எதிர்கொள்ளப்படுகிறது எனப் பேசும் இடம் வெகுசுவாரஸ்யமானது - நண்பன் என்பவன் நிகழ்காலத்தில் மட்டுமே நண்பனாக இருப்பதில்லை - நட்புக்கு என்று ஒரு தெளிவான துவக்கப்புள்ளி உண்டு (முதலில் சந்தித்த நாள், வேளை, சந்தர்ப்பம், இடம்). ஆனால் நண்பர்கள் எப்போதும் தமது நட்பு ஒரு காலமற்ற காலத்தில் துவங்கியதாக நம்பிக் கொண்டிருப்பார்கள். ஏனென்றால் காலப்பரப்பில் நண்பன் என்பவன் ஒரு ஓவியத்தைப் போல வரைந்து அழிக்கப்பட்டபடியே இருக்கிறான். இன்று இப்போது நண்பனாக இருப்பவன் சற்று முன்பு அல்லது அதற்கும் பல மாதங்களுக்கு பல வருடங்களுக்கு முன்பு இதே போல ஒரு நண்பன் அல்ல. அதே போல நாளையும் அவனுடனான நட்புறவு வேறொன்றாக இருக்கும். கடந்த காலப்புள்ளியில் என் நண்பனாக இருந்தவன் இப்போது நானாகிறான், இப்போது நானாகிறவன் நாளை என் நண்பனாகிறான், அப்போது அவன் எதிர்காலத்தில் ஏதோ ஒரு புள்ளியில் மீண்டும் நண்பனல்லாமல் நானாவேன் என நான் நம்புகிறேன்இதனாலே அஞ்சலிக்கட்டுரைகளில் நட்பு தொடர்ந்து உயிருடன் ஒளிவிட்டு நிலைக்கும் என தெரிதா கூறுகிறார். அஞ்சலி என்பது காலத்தின் புயலில் நாம் ஏற்றி வைக்கும் அணையாத மெழுகுவர்த்தி

நன்றி: அங்கே என்ன சத்தம்? (7)


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...